முன்னோக்கு

சிலிக்கன் வெலி வங்கியின் பிணையெடுப்பும், முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க வரலாற்றில் பெயரளவுக்கான வரையறைகளில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியின் தோல்வி, அதாவது சிலிக்கன் வெலி வங்கியின் (SVB) பொறிவும், வங்கி அமைப்புமுறையில் நிகழ்ந்து வரும் கொந்தளிப்பும், இன்னும் வங்குரோத்துக்கான சாத்தியக்கூறு அதிகரித்து வரும் நிலையில், இது அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியின் மற்றொரு வெளிப்பாடாகும்.

இந்த ஆழமடைந்து வரும் அழுகிய சிதைவு, அமெரிக்க மற்றும் உலக அரசியலில் ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு அபிவிருத்திகளின் அடித்தளத்திலுள்ள உந்திசக்திகளால் ஏற்படுகிறது. அவையாவன: ஒன்று, மூன்றாம் உலகப் போரை நோக்கிய வேகமான விரிவாக்கம், இரண்டாவது, ஆளும் வர்க்கங்கள் அவற்றின் காலாவதியான மற்றும் பிற்போக்குத்தனமான இந்த தனியார் இலாப அமைப்புமுறையின் உயிர்பிழைப்புக்கான நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய முயன்று வருகின்ற நிலையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிரமாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவை ஆகும்.

மார்ச் 13, 2023, திங்கட்கிழமை, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சிலிக்கன் வெலி தனியார் வங்கியின் கிளையை ஒரு பாதசாரி கடந்து செல்கிறார். [AP Photo/Jeff Chiu]

நிதி முதலீட்டாளர்கள், ஊக வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களின் பணத்தையும் மற்றும் செல்வவளத்தையும் பாதுகாக்க 'தேவையான அனைத்தையும்' செய்ய பைடென் நிர்வாகம் ஏற்றுள்ள அர்ப்பணிப்பு, ஆளும் நிதிய தன்னலக்குழுவின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு நிர்வாகக் குழுவாக, முதலாளித்துவ அரசாங்கங்களின் உண்மையான தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 

நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் இல்லாதளவில் மிக மோசமான பணவீக்கத்தால் இப்போது பாதிக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான சுகாதாரம், கல்வி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு அங்கே பணம் இல்லை. ஆனால் நிதிய தன்னலக்குழுவின் செல்வத்தைப் பாதுகாக்க ஒரே இரவில் பில்லியன்களும், ட்ரில்லியன்களும் கிடைக்கின்றன.

அதே நேரத்தில், உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரை நடத்துவதற்குத் தேவையான வழிவகைகளை முன்னெடுப்பதில் எந்தச் செலவும் குறைக்கப்படவில்லை. ரஷ்யாவை உடைத்து துண்டாடுவது மற்றும் அமெரிக்கா அதன் முக்கிய உலகளாவிய போட்டியாளராக கருதும் சீனாவுக்கு எதிரான போரை முன்னெடுப்பது ஆகியவையே இப்போரின் நோக்கமாகும்.

சிலிக்கன் வெலி வங்கியின் வீழ்ச்சிக்கும், நிதிய அமைப்புமுறையில் உள்வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்கும், மற்றும் போர் முனைவுக்கும் இடையே ஓர் ஆழ்ந்த இயற்கையான தொடர்பு உள்ளது.

இதிலிருந்து படிப்பினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக நெறிமுறை கண்காணிப்பு அமைப்புகளும் நிதிய ஆணையங்களும் கூறினாலும், தொடர்ந்து நிதிய நெருக்கடிகள் வெடிப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது பொருளாதார பலத்தின் வரலாற்று வீழ்ச்சியின் ஒரு வெளிப்பாடாகும். அதை இராணுவ வழிமுறைகள் மூலமாக தீர்க்க அது முயல்கிறது.

1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனமான பகுப்பாய்வு இப்போது நினைவுக்கு வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான தன்மை, அதன் வளர்ச்சியடையும் நிலைமைகளை விட அதன் வரலாற்று வீழ்ச்சி நிலைமைகளின் கீழ் மிகவும் வெளிப்படையாகவும், மிகவும் அப்பட்டமாக வக்கிரமாகவும் வெளிப்படும் என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்.

சிலிக்கன் வெலி வங்கி பொறிவின் முழு விளைவுகளையும் இனிமேல் தான் தெரியவரும் என்கின்ற நிலையில், அதன் வீழ்ச்சியும் நிதிய அமைப்பு முறை மூலம் அது அனுப்பி வரும் அதிர்ச்சி அலைகளும், இப்போது செயல்பாட்டில் உள்ள அமெரிக்க முதலாளித்துவத்தின் இன்றியமையா இயக்கவியலின் மற்றொரு வெளிப்பாடாகும். இதை ஒருவர் இயக்க விதி என்றும் கூறலாம்.

கடந்த 50 ஆண்டுகால வளர்ச்சிகளைப் பின்தொடர்ந்து பார்த்தால், இந்த இயக்கவியல் தெளிவாகப் பார்வைக்கு வருகிறது: ஆளும் வர்க்கமும் அதன் அரசும் ஒரு கட்டத்தில் நெருக்கடியைத் தடுக்கவோ அல்லது தணிக்கவோ எடுத்த நடவடிக்கைகள், இன்னும் பயங்கரமான வடிவத்தில் மற்றொரு வெடிப்புக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கி உள்ளன.

ஆகஸ்ட் 1971 இல், அமெரிக்க முதலாளித்துவம் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் அந்தஸ்து வீழ்ச்சி அடைந்ததற்கு விடையிறுப்பாக, அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நாணய பரிவர்த்தனை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தங்கத்துடனான அமெரிக்க டாலரின் பிணைப்பைத் திரும்பப் பெற்றார்.

1980கள் முழுவதும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வழக்கமான செயல்பாடாக அதிகரித்தளவில் குணாம்சப்பட்டிருந்த நிதிய ஊகவணிகத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்ததே, அமெரிக்காவின் நிலையை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட அந்த முடிவின் விளைவுகளில் ஒன்றாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு அடித்தளத்தை உருவாக்கி இருந்த தொழில்துறையின் ஒட்டுமொத்த அடித்தளமும் இதனால் அழிக்கப்பட்டது.

அக்டோபர் 1987 இல், இந்த நடவடிக்கைகள் உருவாக்கிய ஆழமடைந்து வந்த நெருக்கடி வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் வடிவத்தில் வெடித்தது. இன்றும் இதுவே வோல் ஸ்ட்ரீட் வரலாற்றில் ஒரு நாளில் ஏற்பட்ட22 சதவிகிதத்திற்கும் அதிகமான சரிவாக உள்ளது.

இந்த நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் அளித்த உத்தரவாதத்தின்படி (இது கிரீன்ஸ்பான் புட் (Greenspan put என்று அறியப்பட்டது) அமெரிக்க மத்திய வங்கி நிதிய சந்தைகளுக்கு முட்டுக்கொடுப்பதாக இருந்தது. அது அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு ஊகவணிகத்தைப் பரவலாக விரிவாக்கியதோடு, 2008 இல் அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதிய நெருக்கடி வெடிப்பதற்கு இட்டுச் சென்றது.

வேலைவாய்ப்பின்மை விகிதம் இரண்டு இலக்கங்களுக்கு அதிகரித்து, தொழிலாள வர்க்க குடும்பங்கள் அவர்களின் வீடுகளை இழந்து, வேலைத்தள நிலைமைகள் மோசமடைந்த போது, பெடரலும் அமெரிக்க அரசாங்கமும் பின்னர் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வங்கிகளின் பிணையெடுப்புக்காக ஏற்பாடு செய்தன. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஒபாமா நிர்வாகம் இரண்டடுக்கு சம்பள முறைகளை விரிவாக்க ஏற்பாடு செய்ததும் இதற்கு காரணமானது.

இந்த நெருக்கடியை அடுத்து, பெடரல் ரிசர்வ் வங்கி பணத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடும் அதன் திட்டத்தைத் தொடங்கி, கருவூலப் பத்திரங்கள் மற்றும் அடமானத்துடன் கூடிய பத்திரங்கள் மூலமாக நிதிய அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியது. 2008 பொறிவைத் தூண்டிய பரந்த ஊகவணிகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, முதலாளித்துவ அரசின் தலைமை நிதி அங்கமான இந்த மத்திய வங்கி கூடுதலாக அதற்கு எரியூட்டியது.

இதன் அர்த்தம் என்னவென்றால், 2020 இன் தொடக்கத்தில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட போது, ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் ட்ரம்ப் நிர்வாகம், அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது ஊகவணிக குமிழியை உடைத்து விடும் என்று அஞ்சி, அவற்றை மேற்கொள்ள மறுத்தது.

அதற்குப் பதிலாக, மார்ச் 2020 இல் சில நாட்களுக்கு உலகின் மிகவும் பாதுகாப்பான நிதிய சொத்திருப்பாக கருதப்படும் அமெரிக்க அரசு கடனுக்குச் சந்தை இல்லாமல் போனதால் அப்போதைய நிதி உறைவுக்குப் பின்னர் இன்னும் கூடுதலாகப் பணத்தைப் பாய்ச்சியது. இவ்விதமாக அது இன்னும் கூடுதலாக ஊகவணிகம் மற்றும் நிதிய ஒட்டுண்ணித்தனத்திற்கு எரியூட்டியது.

ஆனால் இந்த செயல்பாடு உண்மையான பொருளாதாரத்தில் தாக்கங்களைக் கொண்டிருந்தது. கோவிட் ஐ ஒழிக்க மறுத்தமை, நிதிய அமைப்புமுறையில் 4 ட்ரில்லியன் டாலர் உட்செலுத்தியமை, கட்டுக்கடங்காத ஊகவணிகம், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவுப்பொருள்களுக்கான பிரமாண்டமான பெருநிறுவனங்கள் இலாபங்களுக்காக செய்த மோசடிகள், இத்துடன் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ தாக்குதல் ஆகியவை சேர்ந்து நான்கு தசாப்தங்களில் இல்லாதளவில் பணவீக்க விகிதத்தை அதிகரித்தன.

நிதிய அமைப்புமுறையின் எதிரிகளான தொழிலாள வர்க்கத்தின் சம்பள உயர்வுக்கோரிக்கையின் மேலெழுச்சின் விளைவுகளுக்கு அஞ்சி, பின்னர் பெடரல் அதன் போக்கை மாற்றி, அதைக் குறைக்கும் முயற்சியில் 1980 களின் ஆரம்பத்தில் இருந்து இல்லாதளவில் வட்டிவிகிதங்களைப் படிப்படியாக உயர்த்தத் தொடங்கியது.

இப்போது இந்த நடவடிக்கைகள், சிலிக்கன் வெலி வங்கியின் பொறிவில் பார்க்க முடிந்ததைப் போல, ஒரு புதிய நிதி நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன. மற்ற பல வங்கிகள் மற்றும் நிதிய பெருநிறுவனங்களைப் போலவே, கலிபோர்னியாவில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறையுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டுள்ள சிலிக்கன் வெலி வங்கி 2020 மற்றும் 2021 இல் பெடரல் வழங்கிய மலிவு பணத்தை விழுங்கியது.

அது அதன் கையில் இருந்த நிறைய பணத்தில் பெரும் பங்கை அதிக பாதுகாப்பான சொத்திருப்புகளாகக் கருதப்பட்ட கருவூலப் பத்திரங்கள் மற்றும் அடமானக் கடன் அடிப்படையிலான பத்திரங்களில் முதலீடு செய்ய இருந்தது.

பணவீக்கத்தைத் தடுப்பதற்காக என்று கூறி, ஆனால் யதார்த்தத்தில் அவசியமானால் மந்தநிலை மூலமாகவாவது தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கும் நோக்கில், பெடரல் அதிக வட்டிவிகித முறைக்குத் திரும்பிய நிலையில், இந்த நிலைமை கூர்மையாக தலைகீழாக மாறியது.

வட்டி விகிதங்கள் அதிகரித்ததால் சிலிக்கன் வெலி வங்கி வசமிருந்த பத்திரங்களின் சந்தை மதிப்பு, மதிப்பிடப்பட்டுள்ள அளவில், பெடரல் நிதி விகிதத்தின் ஒவ்வொரு 25 அடிப்படை புள்ளிக்கும் (0.25 சதவீத புள்ளிகள்) அதன் பத்திரங்களில் 1 பில்லியன் டாலரை இழந்தது. இப்போது பெடரல் நிதியின் விகிதம் சுமார் 450 அடிப்படை புள்ளிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் சொத்திருப்புகளின் அடித்தளத்தில் ஏற்பட்ட இந்த சரிவு அந்த வங்கியில் இருந்து 42 பில்லியன் டாலர் வெளியேற வழிவகுத்து, அதன் விளைவாக அதன் பொறிவு ஏற்பட்டுள்ளது.

சிலிக்கன் வெலி வங்கியின் சூழல்நிலைகளே எல்லாவிடங்களிலும் இருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மேலாதிக்க சக்தியாக உள்ள நிதிய அமைப்புமுறையின் எல்லா பகுதிகளும், இந்த மலிவு பணம் வருகையால் மிகவும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதால், அவை வட்டி விகித உயர்வுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவுகள் வெறுமனே அவர்களை உணர வைக்கத் தொடங்கியுள்ளன.  

இதன் பின்விளைவுகள் என்ன? அவை நிதி மூலதனத்தின் இயல்பிலிருந்தே வருகின்றன.

முதல் பார்வைக்கு, இது பணத்தைக் கொண்டு அதிகளவு பணத்தைத் திரட்ட முடியும் என்பதாக தெரியலாம்.

ஆனால் இந்த தோற்ற வடிவம் ஓர் ஆழமான யதார்த்தத்தை மறைக்கிறது. நிதி மூலதனம் கூடுதல் மதிப்பையோ அல்லது புதிய மதிப்பையோ உருவாக்குவதில்லை. பகுப்பாய்வின் இறுதியில், இது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுபோக்கில் உருவாக்கப்படும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெறப்பட்ட உபரி மதிப்பின் மீதான உரிமைகோரல் ஆகும்.

இவ்வாறு, அது தொடர்ந்து பணமானது அதிகப் பணத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு பகுதிக்குத் தப்ப முயலும் அதேவேளையில், நிதி மூலதனமோ எப்போதும், அனைத்திற்கும் மேலாக நெருக்கடி காலக்கட்டத்தில், 2008 இன் அனுபவம் மிகவும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியதைப் போல, தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்த முயல்கிறது.

அதே நேரத்தில், ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் உந்தப்பட்டு, உள்நாட்டில் அரசாங்கமும் முதலாளித்துவ அரசும் சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்கள் மூலமாக போருக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்கிறது.

ஒவ்வொரு நெருக்கடியிலும், சமூகத்தின் இரண்டு முக்கிய வர்க்கங்களும் தங்களை மேலும் மேலும் நேரடியாக அவற்றின் அடிப்படை பொருளாதாய நலன்களில் இணைத்துக் கொள்கின்றன. ஆளும் வர்க்கத்தின் வேலைத்திட்டம் அதற்கேற்ப அபிவிருத்தி செய்யப்படும்: அதாவது, நிதிய தன்னலக்குழுவிற்கான மீட்பு நடவடிக்கைகள், போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சியுடன் இணைந்து செல்லும்.

அதே போல தொழிலாள வர்க்கமும் முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒட்டுமொத்த எந்திரத்துடனும் ஒரு மோதல் போக்கிற்கு தள்ளப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த போராட்டம் வெற்றி பெற, ஆளும் வர்க்கமும் அதன் அமைப்புமுறையும் எவ்வளவு ஆழமான நெருக்கடியாக இருந்தாலும் சரி, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு தெளிவான வேலைதிட்டம் மற்றும் முன்னோக்குடன் அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக இருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, அது அதன் தலைமையில் ஒரு புரட்சிகர கட்சியைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே சிலிக்கன் வெலி வங்கியின் பொறிவும் அது வெளிப்படுத்தும் முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அனைத்துலகக் குழுவையும் அதன் பிரிவுகளையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு தெளிவான அழைப்பாக உள்ளன.

Loading