பாரிய வெகுஜன வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், பிரான்சின் மொரேனோயிட் நிரந்தர புரட்சிக் குழு முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய வெகுஜன ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களும் தொடர்கின்றன. பிரெஞ்சு மக்களில் முக்கால்வாசி பேர் வெட்டுக்களை எதிர்க்கின்றனர், 60 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தை நிறுத்தவும் மக்ரோனை வீழ்த்தவும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை விரும்புகின்றனர். 1936 ஆம் ஆண்டு மற்றும் 1968 ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் பிரான்சில் மிகப் பெரிய இயக்கத்திற்கு மத்தியில், ஜேர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், பெல்ஜியம், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியில் பாரிய வெகுஜன வேலைநிறுத்தங்கள் கட்டவிழ்ந்து வருகின்றன, மேலும் இரத்தம் தோய்ந்த நேட்டோ-ரஷ்யா போர் ஐரோப்பா முழுவதிலும் முழுமையான போராக மாறி வெடிக்க அச்சுறுத்துகிறது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் (ICFI), மற்றும் பல்வேறு போலி-இடது கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்க்க இடைவெளியை இது அம்பலப்படுத்துகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக்கட்சியுமானது (Parti de l’égalité socialiste - PES) புறநிலை புரட்சிகர சூழ்நிலைமையும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. மறுபுறம், போலி-இடது கட்சிகள், சூழ்நிலைமையானது புரட்சிகரமாக இல்லை என்றும், தொழிலாள வர்க்கமானது என்ன விலை கொடுத்தும் முதலாளித்துவ ஆட்சிக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

அர்ஜென்டினாவின்  சோசலிச தொழிலாளர் கட்சி (PTS), ஜேர்மனியின் புரட்சிகர சர்வதேச அமைப்பு (RIO) மற்றும் அமெரிக்காவில் இடது குரல் (Left Voice ) ஆகியவற்றுடன் கூட்டாகவுள்ள மத்தியதர வர்க்க பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து (NPA) பிரிந்து சென்ற மொரேனோயிட் நிரந்தரப் புரட்சிக் (Révolution permanente - RP) குழுவின் நிலைப்பாடும் இதுதான். 'பிரான்ஸ் ஒரு வெகுஜன வேலைநிறுத்தத்தின் விளிம்பில் உள்ளதா?' என்ற தலைப்பில் அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட இரண்டு RP இன் தலைவர்களான ஜுவான் சிங்கோ மற்றும் ரொமாரிக் கோடின் ஆகியோருக்கு இடையிலான சமீபத்திய விவாதத்தின் தலைப்பு இதுவாகும்.

சிங்கோவும் கோடினும் பிரான்சில் மில்லியன் கணக்கான வலிமை வாய்ந்த வேலைநிறுத்தங்களின் எழுச்சியைக் குறிப்பிட்டனர், ஆனால் சூழ்நிலைமையானது புரட்சிகரமாக இல்லை என்று கூறினர். கோடின் கூறினார்: 'இயக்கமானது நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடிய அதன் சொந்த சாத்தியக்கூறுகளை அவசியமாக வெளிப்படுத்தும் என்றாலும் கூட, ஒரு வெகுஜன கிளர்ச்சி என்பது மிகவும் சாத்தியமான கருதுகோள் என்று நான் கருதவில்லை. நிலைத்திருக்கும் மற்றும் ஒரு அடித்தளத்தைக் கொண்ட ஒரு சமூக இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே ஆபத்தில் உள்ளது என்று நான் நம்புகிறேன்.'

'சூழ்நிலைமை புரட்சிகரமானது என்று நான் நினைக்கவில்லை; இந்த கருத்துடன் நான் உடன்படுகிறேன்' என்று சிங்கோ பதிலளித்தார். வேலைநிறுத்த இயக்கமானது முதலாளித்துவத்தை தூக்கியெறியக்கூடாது, மாறாக முதலாளித்துவ ஆட்சியின் கீழ் வேலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்: 'ஒரு பொது வேலைநிறுத்தத்தின் வளர்ச்சி, மற்றும் வெகுஜனங்களின் சுய-அமைப்பு ஆகியவைகள் ஒரே முன்னோக்கை முன்வைக்கின்றன: அதாவது முதலாளித்துவத்தின் அதிகாரத்திற்கு ஒரு உண்மையான எதிர்பலத்தை அபிவிருத்தி செய்வது.'

இந்தக் கருத்துப் பரிமாற்றமானது பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான கடினநிலையை  வெளிப்படுத்துகிறது. சூழ்நிலைமையானது புறநிலை ரீதியாக புரட்சிகரமானது: அதாவது முதலாளித்துவம் போரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது, அரசாங்கங்கள் மதிப்பிழந்து வருகின்றன, மில்லியன் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் RP போன்ற போலி-இடது கட்சிகள், வேலைநிறுத்தங்கள் மீதான சட்டரீதியான மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிற்கு அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டு, புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. அதற்கு பதிலாக, போரை நடத்துவதற்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை சிதைப்பதற்கும் பொதுமக்களின் அபிப்பிராயத்தை காலில் மிதிக்க உறுதிபூண்டுள்ள மக்ரோன் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் கையாலாகாத பேச்சுவார்த்தைகளுக்கு அவைகள் தொழிலாளர்களை அடிபணிய வைக்கின்றன.

அக்டோபர் புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில், ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் நீடித்த முக்கியத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. 1939ல் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னர், சூழ்நிலைமையானது புரட்சிகரமாக இல்லை என்று RP யைப் போலவே வலியுறுத்திய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர்களை அவர் எதிர்த்தார். இதுதான் முதலாளித்துவ ரடிகல் கட்சியுடனும் (Radical Party) சமூக ஜனநாயகவாதிகளுடனும் ஸ்ராலினிஸ்டுகளின் மோசமான மக்கள் முன்னணி கூட்டணியின் அடிப்படையாக இருந்தது.

அந்த நேரத்தில், நான்காம் அகிலத்தை ஸ்ராலினிசத்திற்கான மார்க்சிச எதிர்ப்பாக ஸ்தாபிக்க ட்ரொட்ஸ்கி போராடிக் கொண்டிருந்தார். 1935ல், உள்நாட்டில் ஹிட்லரிசம் மற்றும் அதிவலது லீக்குகளின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலுக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கி அன்று ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிகர வாதங்களை கிழித்தெறிந்தார். பிரான்ஸ் எங்கே செல்கின்றது என்பதில்ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்: 

'ஜனவரி மாதத்தில், அதிகாரத்திற்கான போராட்டம், முதலாளித்துவ அரசின் பொறிமுறையை அழிப்பது, தொழிலாளர்’ மற்றும் விவசாயிகளது ஜனநாயகத்தை நிறுவுவது, வங்கிகள் மற்றும் கனரகத் தொழிற்துறைகளை கையகப்படுத்துவது ஆகியவை கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை சோசலிஸ்ட் கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழு (CEC) தொடக்கி வைத்தது. ஆனாலும் இன்று வரை, இந்த வேலைத்திட்டத்தை வெகுஜனங்கள் முன் கொண்டுவருவதற்கான இம்மியளவான முயற்சியையும் கூட கட்சி செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் பங்கிற்கு, அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு வெளிவருவதற்கு முற்றிலும் மறுத்து விட்டிருக்கிறது. காரணம்? “புரட்சிகரமான சூழ்நிலைமை இல்லை.”

“தொழிலாளர் குடிமக்கள்படை? தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது? தொழிலாளர்களது’ கட்டுப்பாடு? தேசியமயமாக்கத் திட்டம்? எதுவும் சாத்தியமில்லை. ஏனென்றால் “புரட்சிகர சூழ்நிலைமை இல்லை.” அப்படியானால் நாம் என்ன செய்யலாம்? மதகுருமார்களிடம் கனமான மனுக்கள் தயாரித்துக் கொடுக்கலாமா, வெற்றுப் பேச்சில் ரடிக்கல் (கட்சி) உடன் போட்டி போட்டுவிட்டு பின் காத்திருக்கலாமா? காத்திருப்பது என்றால் அது எத்தனை காலம்? சூழ்நிலைமை அதுவாய் தானாகப் புரட்சிகரமாகிக் கனிந்து வருகின்ற வரைக்குமா? கம்யூனிச அகிலத்தின் மருத்துவ மேதைகளிடம் ஒரு தெர்மோமீட்டர் இருக்கிறது, அதை அவர்கள் வரலாறு என்கிற வயதான மூதாட்டியின் நாக்குக்குக் கீழ் வைக்கிறார்கள், இதன்மூலம் புரட்சிகர வெப்பநிலை என்னவாயிருக்கிறது என்பதை அவர்கள் பிழையின்றி கண்டுகொள்கிறார்கள். ஆனால் அந்தத் தெர்மோமீட்டரை அவர்கள் யாருக்கும் காண்பிப்பதேயில்லை.

“நாம் சொல்கிறோம்: கம்யூனிச அகிலத்தின் நோயறிதல் ஆய்வு முற்றிலும் தவறானது. சூழ்நிலைமை புரட்சிகரமாக இருக்கிறது, அது எத்தனை புரட்சிகரமாக இருக்க முடியுமோ அத்தனை புரட்சிகரமாக இருக்கிறது, தொழிலாள-வர்க்கக் கட்சிகளின் கொள்கைகள் தான் புரட்சிகரமற்றவையாக இருக்கின்றன. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், சூழ்நிலைமை புரட்சிக்கு முந்தைய சூழ்நிலைமையில் இருக்கிறது. அதனை அதன் முழு முதிர்ச்சி நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் சோசலிசத்தின் பெயரால் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற முழக்கத்தின் கீழ் உடனடியாகவும், முழுமூச்சுடனும், விட்டுக்கொடுக்காமலும் பரந்த வெகுஜனங்கள் அணிதிரட்டப்பட்டாக வேண்டும். புரட்சிக்கு முந்தைய ஒரு சூழ்நிலைமையானது ஒரு புரட்சி சூழ்நிலைமையாக மாற்றப்படுவதற்கு இது ஒன்றே ஒரே வழி ஆகும். இன்னொரு பக்கத்தில், நாம் தொடர்ந்து காலம் குறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், புரட்சிகர சூழ்நிலைமைக்கு முந்தைய சூழ்நிலைமையானது தவிர்க்கவியலாமல் எதிர்ப்புரட்சியாக மாற்றப்பட்டு, அது பாசிசத்தின் வெற்றியைக் கொண்டுவரும்.“

“தற்போது, “புரட்சிகரமற்ற சூழ்நிலைமை” என்கிற சொற்றொடரை தாராளமாக உச்சரிப்பதானது செய்யக் கூடியதெல்லாம் தொழிலாளர்களின் மூளைகளை நசுக்கி, அவர்களது விருப்பத்தை முடக்கிப் போட்டு, அவர்களை வர்க்க எதிரியிடம் ஒப்படைக்கின்ற வேலையாகவே இருக்கிறது. பழமைவாதமும், அசமந்தமும், முட்டாள்தனமும் மற்றும் கோழைத்தனமும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை கைப்பற்றுகின்றன, அத்துடன் ஜேர்மனியில் நடந்தது போல, பேரழிவுக்கான அடித்தளம் இடப்படுவதும் தான் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களின் மறைப்பின் கீழ் நடைபெறுவதாகும்.“

ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையானது வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது. சூழ்நிலைமையானது புரட்சிகரமாக இருந்தது: அதாவது தெளிவாக அவர் அந்த வரிகளை எழுதிய ஒரு வருடத்திற்குப் பிறகு, தொழிலாள வர்க்கம் 1936 ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்தத்தில் கிளர்ந்தெழுந்தது. ஸ்ராலினிச கொள்கையின் காரணத்தினால் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து, 1936 ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்தத்தை விற்றுத்தள்ளியதுடன் முதலாளித்துவ ஆட்சியை பாதுகாத்தமையானது பேரழிவுக்கு வழிவகுத்தது. சோசலிசப் புரட்சியின் மூலம் உலகப் போரைத் தவிர்ப்பதற்கான கடைசி பெரும் வாய்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அது மற்றொரு பாசிச வெற்றிக்கு வழிவகுத்தது.

1936 ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்தத்தை ஸ்ராலினிஸ்டுக்கள் விற்றுத்தள்ளி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மக்கள் முன்னணி (Popular Front) வீழ்ச்சியடைந்து இரண்டாம் உலகப் போர் வெடித்தது. 1940 இல் பிரான்சின் இராணுவத் தோல்விக்கு மத்தியில், மக்கள் முன்னணி கட்சிகள் வெறுக்கத்தக்க பாத்திரத்தை வகித்தன. போரின் முதல் இரண்டு ஆண்டுகளில் ஹிட்லருடனான ஸ்ராலினின் சமாதான  உடன்படிக்கையை பிரெஞ்சு ஸ்ராலினிச தலைமை ஆதரித்த அதே வேளையில், சமூக-ஜனநாயக மற்றும் ரடிக்கல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக ஜூலை 10, 1940 அன்று நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானுக்கு முழு அதிகாரங்களுக்காகவும் வாக்களித்தனர்.

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வானது, 88 ஆண்டுகளுக்குப் பின்னர், RP இன் அகமகிழ்வான, முதலாளித்துவ-சார்பு முன்னோக்கின் மீதான ஒரு குற்றச்சாட்டாக நிற்கிறது. உக்ரேனில் ஏற்கனவே அணுஆயுத நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு இரத்தக்களரி போரில் நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஐரோப்பா முழுவதிலும் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அரசியல்ரீதியாக குற்றவியல் அகமகிழ்வுடன், பாட்டாளி வர்க்கத்தின் விருப்பத்தை முடக்குவதற்கும் நேட்டோ-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் மக்ரோனுக்கும் இடையிலான 'சமூக உரையாடலுக்கு' அதை அடிபணியச் செய்வதற்கும் மாபெரும் ஆபத்து மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் RP ஆனது கிளம்புகிறது. 21 ஆம் நூற்றாண்டில் புதிய பேரழிவுகளுக்கு அடித்தளம் அமைக்க அது தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

தொழிலாளர்கள் 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் அனுபவங்களை உருவாக்குங்கள்' என்று RP கோருகிறது

சோசலிச சமத்துவக் கட்சி (PES) விளக்குகிறது: தொழிலாளர் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் வெகுஜனங்களை ஒரு தீவிரமான மற்றும் இடைவிடாத அணிதிரட்டல்தான் தேவை. தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச புரட்சிகர சக்தியாக ஐக்கியப்படுத்துவதற்கும் முதலாளித்துவ-சார்பு அதிகாரத்துவங்களின் அந்நிய வர்க்க செல்வாக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய நடவடிக்கைக் குழுக்களில் ஒழுங்கமைக்குமாறும் அது தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களானது உற்பத்தியின் மீது கட்டுப்பாட்டை செலுத்தவும், பெரும் பெருநிறுவனங்களை தொழிலாளர்களால் ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்படும் பொதுப் பயன்பாடுகளாக தேசியமயமாக்கவும், அதிவலது கும்பல்கள் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அழைப்புக்கள் விடுவதை RP இன் நிர்வாகிகள் கேலி செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தொழிலாளர்களின் 'சுய அமைப்பை' ஆதரிப்பதாகவும் சிங்கோ கூறுகிறார். எவ்வாறெனினும், அவர் அத்தகைய அமைப்புக்களுக்காக சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக அல்ல, மாறாக ஒரு தேசிய அடிப்படையில் 'ஜனநாயக' முதலாளித்துவ அரசுக்கு அடிபணிந்த ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்கிறார்.

மக்ரோனும் பாராளுமன்றமும் பொதுமக்களின் அபிப்பிராயத்தின் மீது முரட்டுத்தனமாக நடந்து கொண்டு, ஓய்வூதிய வெட்டுக்களை திணித்து, பல்லாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை போர் செலவினங்களுக்கு திசை திருப்புவதற்காக மக்களை வறுமையில் தள்ளினாலும், சிங்கோ 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை' பாராட்டுகிறார். மக்ரோனின் ரப்பர் முத்திரையான (ஆராயாது ஏற்றுக்கொள்ளும்) பாராளுமன்றம் மற்றும் அவரது பொலிஸ்-அரசு எந்திரத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சவாலானது RP க்கு எந்த சாத்தியமும் இல்லை என்பதாக உள்ளது. சிங்கோ கூறுகிறார் இடதுசாரி சக்திகள்,

'புரட்சிகர ஜாகோபின் பாரம்பரியத்தின் மிகச் சிறந்தவற்றுடன் அல்லது, நல்லது, பாரிஸ் கம்யூனுடன் அவர்களின் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அத்தகைய ஜனநாயக வேலைத்திட்டத்தின் கூறுகளை அபிவிருத்தி செய்ய வேண்டும், சட்டமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஒற்றை சபை நாடாளுமன்றத்தைக் கட்டமைத்தல். ... இவை அனைத்தும் உண்மையில் வெகுஜன இயக்கத்திற்கு முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் அனுபவங்களை உருவாக்கவும், சுய-அமைப்பின் தேவை குறித்த நனவை வளர்க்கவும் உதவும், இது எனது பார்வையில் ஒரே சாத்தியமான ஜனநாயக முன்னோக்கை உருவாக்குகிறது.'

சிங்கோ முன்வைக்கும் அரசியல் நடவடிக்கைக்கான வேலைத்திட்டம் என்ன? பிரெஞ்சு பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் ஒரே சபையாக இணைக்க வேண்டும் என்பது மட்டுமே அவர் முன்வைக்கும் ஒரே உறுதியான கோரிக்கையாகும், என்ற போதிலும் இரு சபைகளும் முதலாளித்துவ பிற்போக்குவாதிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 1789 ஆண்டுப் புரட்சி மற்றும் 1871 ஆண்டு பாரிஸ் கம்யூன் ஆகியவைகளை முன்னிறுத்துவதன் மூலம் இந்த தேசிய, முதலாளித்துவ-சார்பு கொள்கையை 'இடது' நற்சான்றிதழ்களுடன் வழங்குவதற்கான சிங்கோவின் முயற்சி அரசியல் ரீதியாக தவறானது.

1789-1794 ஆண்டு புரட்சியாளர்கள் சிங்கோவின் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையைப் பின்பற்றினர். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையை அவர்கள் ஏற்கவில்லை, ஏற்கனவேயுள்ள நிலப்பிரபுத்துவ-முடியாட்சி, ஆட்சியின் நாடாளுமன்ற அமைப்புகளின் பின்னணியில் வேலை செய்தனர். அரசியல் நிர்ணய சபை (1792 இல் பெருங்குழுப் பேரவை (Convention) என மறுபெயரிடப்பட்டது) மற்றும் ஆயுதமேந்திய விவசாயிகளும் நகரவாசிகளும் நிலப்பிரபுத்துவ சொத்துக்களை கைப்பற்றி ஒழித்தனர், வரம்பற்ற முடியாட்சியை தூக்கி எறிந்தனர், அரசரை தூக்கிலிட்டனர், நிலப்பிரபுத்துவ ஆட்சியை மீட்டெடுக்க முயன்று படையெடுத்த ஐரோப்பிய படைகளை நசுக்கினர்.

19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை முதலாளித்துவம் மற்றும் மார்க்சிசத்தின் தொடக்கத்திலிருந்து, தொழிலாள வர்க்கம் உண்மையில் போதுமான அனுபவத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக பிரான்சில், 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகம்' குறித்ததாகும்.

1848ல், மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதிய ஒரு வருடத்திற்குப் பிறகு, ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கம் கிளர்ந்தெழுந்தது. பிரான்சில், அரசர் லூயி-பிலிப்பை தொழிலாளர்கள் தூக்கி வீசினர், இரண்டாவது குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. வேலையற்றவர்களுக்கு வேலை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தேசிய பணிமனைகளை (National Workshops) முதலாளித்துவ குடியரசு மூட முயன்றபோது, வறுமை மற்றும் பட்டினியைத் தவிர்ப்பதற்காக தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கினர். ஜெனரல் யுஜென் கவைனாக் (Eugène Cavaignac) ஜூன் நாட்கள் (June Days) என்று அறியப்படும் பாரிய படுகொலையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கினார், இதில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை படுகொலை செய்தார் மற்றும் 25,000 பேரைக் கைது செய்தார்.

மார்ச் 1871 இல், பிரெஞ்சு மூன்றாம் குடியரசு பிரஷ்யாவுக்கு எதிரான பிரான்சின் போருக்கு மத்தியில் தற்காப்புக்காக நகரம் வாங்கிய பீரங்கிகளைத் திருடி பாரிஸை நிராயுதபாணியாக்க முயன்றபோது, புரட்சி மீண்டும் வெடித்தது. தொழிலாள வர்க்க கம்யூன் பாரிசில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. எந்தவகையிலும், சிங்கோ கருதுவது போல, முதலாளித்துவத்தின் கீழ் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு நீடித்த 'எதிர்பலமாக' அது உருவாகவில்லை: அதற்கு மாறாக, முதலாளித்துவ அரசுக்கும், புதிதாக உருவாகும் நிலையிலுள்ள தொழிலாளர் அரசுக்கும் இடையே ஒரு மோதல் உருவானது.

1871 மே மாதம் 21-28 இரத்தக்களரி வாரம் (Bloody Week of May 21-28) என்றழைக்கப்படுவதில் மூன்றாம் குடியரசின் 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்தால்' கம்யூனார்ட்டுகளில் 20,000 பேரைக் கொன்று இரத்த வெள்ளத்தில் அவர்களை மூழ்கடித்தனர். முதலாளித்துவ ஆட்சியின் தலைவரான அடோல்ஃப் தியர்ஸ், மார்ச் 24, 1871 அன்று மூன்றாம் குடியரசின் இராணுவம் பாரிஸை பலவந்தமாக கைப்பற்றி, தொழிலாள வர்க்கத்தை நோக்கிய தனது கொள்கையை முன்வைத்தார். பாரிஸில் தனது இராணுவ நடவடிக்கைகள் குறித்த தேசிய சட்டமன்றத்திற்கு அறிக்கையிட்ட தியர்ஸ், 'நான் இரத்த வெள்ளம் சிந்தினேன்' என்று பெருமையடித்துக் கொண்டார்.

புரட்சியை நிராகரிக்கும் கொள்கைக்கு உத்வேகமாக பாரிஸ் கம்யூனை சிங்கோ மேற்கோள் காட்டுவது மற்றும் தொழிலாளர்களை 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் அனுபவங்களை உருவாக்க' ஊக்குவிப்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான அவரது முழு வெறுப்பை மட்டுமே காட்டுகிறது. லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகள் RP இன் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கிலிருந்து முற்றிலும் நேர்மாறான முடிவுகளை எடுத்தனர்: அதாவது புரட்சிகர நெருக்கடி காலங்களில், இரக்கமற்ற போராட்டத்தின் மூலமே தொழிலாள வர்க்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், சோசலிசப் புரட்சிக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும் .

ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பப்லோவாதத்தை நிராகரிப்பதில் RP இன் வேர்கள் உள்ளன

முதலாளித்துவ ஆட்சியை RP ஆனது அங்கீகரிப்பதும் சோசலிசப் புரட்சியை நிராகரிப்பதும் அதன் பப்லோவாத தோற்றுவாயில் வேரூன்றியுள்ளது. 2009ல் பப்லோவாத NPA தொடங்கப்பட்ட பின்னரான ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, RP இன் உறுப்பினர்கள் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு (NPA) கட்சியில் பணியாற்றினார்கள், இது மிசல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான குட்டி முதலாளித்துவ சக்திகளின் வழித்தோன்றலாகும், இது 70 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) பிளவுபட்டது. 1953ல், ட்ரொட்ஸ்கிசம் அல்ல, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத சக்திகள் தான் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்கும் என்று பப்லோவும் மண்டேலும் வாதிட்டனர்.

எவ்வாறெனினும், 2018ல் இருந்து வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பார்ந்த வளர்ச்சி மற்றும் 'மஞ்சள் சீருடை' போராட்டங்களுக்கு மத்தியில் NPA இன் மறுக்கவியலாத எதிர்ப்புரட்சிகர பாத்திரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அம்பலப்படுத்தப்பட்டதால், RP ஆனது முன்னணிக்கு வந்தது. லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ போர்களை NPA தழுவியது குறித்தும், சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோனுக்கு எதிரான 'மஞ்சள் சீருடை' போராட்டங்கள் மீதான NPA இன் தாக்குதல்கள் குறித்தும் RP ஆனது தந்திரோபாய விமர்சனங்களை முன்வைத்தது. இந்த அடிப்படையில், RP ஆனது தனிக்கட்சியாக செயல்படுவதாக, கடந்த ஆண்டு அறிவித்தது.

பிரெஞ்சு செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் RP ஐ ஒரு 'ட்ரொட்ஸ்கிச' கட்சியாக சந்தைப்படுத்த முயன்றாலும், உண்மையில் அது ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு NPA இன் பப்லோவாத நோக்குநிலையுடன் முறித்துக் கொள்ளவில்லை. அர்ஜென்டினாவில் PTS உடன் ஒரு கூட்டணியை வளர்ப்பதன் மூலம் RP ஆனது இந்த நோக்குநிலையை மறைக்க முயன்றது. 1953ல் பப்லோவாதிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து செயற்பட்ட நஹுவேல் மொரேனோ தலைமையிலான சக்திகளிலிருந்து PTS இன் வழித்தோன்றல் இருக்கிறது, ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், 1963ல் பப்லோவாதிகளுடன் கொள்கையற்ற மறுஒருங்கிணைப்பை அது நாடியது.

ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் குறித்து தீர்க்கமான பிரச்சினையில், RP ஆனது ஒரு பப்லோவாத நோக்குநிலையை பேணி வருகிறது. CGT தொழிற்சங்கத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அணிகளின் ஊடாக உயர விரும்பும் ஒரு தலைமுறை இளம் தொழிற்சங்க அதிகாரிகளை உள்வாங்குவதன் மூலம் வளர்ந்த ஒரு போக்கு என்று அது தன்னை விவரிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், RP ஆனது அதன் உறுப்பினர்களை ஈர்த்த சூழலை விவரிக்கையில், RP ஆனது யூத-விரோத, தீவிர வலதுசாரி பிராங்கோ-கேமரூனிய பாடகர் டியூடோனே மற்றும் அவரது வெறுப்பூட்டும் 'குவெனெல்லே' சைகைகள் (நாஜி வணக்கத்தின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு) மீதான அதன் ஆர்வத்தையும் குறிப்பிடுகிறது. RP எழுதுகிறது:  

'தொழிலாளர் இயக்கமானது அத்தகைய அமைப்பைக் கட்டமைக்க உதவும் ஒரு புதிய தலைமுறையின் உருவாக்கத்தைக் கண்டுள்ளது. 2014 ஆண்டு இரயில்வே வேலைநிறுத்தத்தில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ஆளுமையை  பகிர்ந்துகொள்ளாதவர்கள் வெளியேறியதை நாங்கள் முதல் முறையாகக் கண்டோம், அல்லது  டியூடோனே போன்ற குழப்பமான நபர்களை நனவற்று பகிர்ந்து கொண்டதை நாங்கள் பார்த்தோம் (இது 'குவெனெல்' நிகழ்வின் உச்சகட்டம்), அவர்கள் பெரும்பாலும் தீவிர இடது போராளிகளால் புறக்கணிக்கப்பட்டனர். 

'இந்த தலைமுறையில் தீவிர தொழிற்சங்கத் தலைவர்கள் இருந்தனர், அவர்களின் தோற்றம் மிகவும் குறிப்பிட்ட நிலைமைகளில் நிகழ்கிறது. புதிய உறுப்பினர்களை சேர்க்க போராடும் CGT க்குள் PCF தனது செல்வாக்கை இழந்து வருவதால், இளம் தொழிற்சங்க உறுப்பினர்கள் விரைவில் பெரிய தொழிற்சங்க அமைப்புகள் அல்லது அதிகாரத்துவங்களை வழிநடத்துவதைக் காணலாம். அனைத்திற்கும் மேலாக, 'மஞ்சள் சீருடை'க்கு பிந்தைய சூழலில் அவை உருவாகி வருகின்றன, இது தொழிற்சங்கங்களை நெருக்கடிக்குள் தள்ளியது, அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரத்துவத்தின் திறனை பலவீனப்படுத்தியது, மற்றும் இந்த புதிய தலைமுறை தொழிலாள வர்க்க போராளிகளை வடிவமைத்தது.”

'பெயருக்குத் தகுதியான எந்தவொரு புரட்சியாளரும் இந்த நிகழ்வுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் இந்த புதிய தலைமுறையுடன் சேர எந்த விலை கொடுத்தாவது முயற்சிக்க வேண்டும்.'

ஸ்ராலினிச CGT அதிகாரத்துவத்தை நோக்கிய RP இன் நோக்குநிலையும், டியூடோனே போன்ற பிற்போக்குவாதிகள் மீதான அதன் அனுதாபங்களும் ஒரு  புரட்சிகரக் கட்சி என்ற அதன் பாசாங்குத்தனங்களை அம்பலப்படுத்துகின்றன. இது தொழிலாளர்களை CGT அதிகாரத்துவத்துடன் பிணைக்க முயல்கிறது, இது (CGT) 1936 மற்றும் 1968 பொது வேலைநிறுத்தங்களை விற்று தள்ளுவதற்கு தலைமை தாங்கியது மற்றும் இப்போது முன்னெப்போதையும் விட வியத்தகு முறையில் வலது பக்கம் பரிணமித்துள்ளது. இன்று CGT தலைமையானது மக்ரோனின் வெட்டுக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதோடு, உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போரில் நேட்டோவை அங்கீகரித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிடுகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களின் 'சுய அமைப்பிற்கு' RP இன் அழைப்புகள் ஒரு மோசடி என்பதையும் இது காட்டுகிறது. RP இன் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு உயர்மட்ட தொழிற்சங்க தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. RP ஐப் பொறுத்தவரை, அது CGT அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவை விட சற்று அதிகமாகும். அதன் 'ஜனநாயக' வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தை சிக்கன நடவடிக்கைகள் மற்றும் மக்ரோனுடனான போர் குறித்த அதிகாரத்துவத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு அடிபணிய வைக்கும் ஒரு கொள்கைக்கான ஒரு மெல்லிய, போலி-இடது போர்வை மட்டுமே ஆகும்.

RP க்கு எதிராக, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் சாமானிய நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க சோசலிச சமத்துவக் கட்சி (PES) அழைப்பு விடுக்கிறது. மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்தவும், நேட்டோ-ரஷ்யா போரை நிறுத்தவும், தொழிலாளர்கள் மீதான சமூக தாக்குதல்களை திசைமாற்றியமைக்கவும், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் போராட்டத்தில் அணிதிரளும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து சோசலிசத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்ப தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஒரே வழி இதுதான்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் போலி-இடது பாதுகாவலர்களால் முன்வைக்கப்படும் எதிர்ப்புரட்சிகர தடையை தகர்த்து, அவர்களின் பாத்திரம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்வது அத்தகைய அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான முன்நிபந்தனையாகும். இதற்கு பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சி (PES) மற்றும் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவதும், சுயாதீனமான தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும் ஒரு உலகளாவிய சோசலிச சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுவது அவசியமாகும்.

Loading