முன்னோக்கு

மக்ரோனுக்கு எதிரான வர்க்கப் போராட்டமும், பாரிஸ் கம்யூனின் படிப்பினைகளும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வியாழக்கிழமை, மார்ச் 16, 2023இல் பாரிஸ் தேசிய நாடாளுமன்றத்திற்கு அருகே நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், கொன்கார்ட் சதுக்கத்தில் பொலிஸ் போராட்டக்காரர்களைத் தாக்குகின்றனர் [AP Photo/Thomas Padilla]

பாரிஸின் புகழ்பெற்ற பேர் லாசெஸ் கல்லறையில், கம்யூன் உறுப்பினர்களின் சுவர் (Communards Wall) என்றழைக்கப்படும் ஒன்று உள்ளது. அங்கே, மே 28, 1871 இல், 147 கம்யூன் உறுப்பினர்கள் பிரெஞ்சு இராணுவத்தால் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டு, ஒரு பெரிய புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள். இந்த மரண தண்டனைகள் 'இரத்த வாரம்' (Bloody Week) எனப்பட்ட கற்பனைக்கு எட்டாத கொடூரமான மனிதப் படுகொலைகளின் உச்சக்கட்டமாக இருந்தன. அந்த வாரத்தில் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஏறக்குறைய 20,000 தொழிலாளர்களைக் கொன்று, பாரிஸ் கம்யூனை நசுக்கியது.

அரசு எந்திரத்தின் துணையோடு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு கூட நடத்தாமல், பெருவாரியான மக்கள் எதிர்ப்பை மீறி ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க நகர்ந்து வருகின்ற இந்த வேளையில், கம்யூனின் வரலாறும் படிப்பினைகளும் மிகப்பெரியளவில் சமகாலத்திற்கு ஒத்துப் போகின்றன.

அவருடைய சர்வாதிகார நடவடிக்கைகளால், மக்ரோன் மீண்டுமொருமுறை முதலாளித்துவ அரசின் ஜனநாயக முகத்திரையை கிழித்து, அதை வர்க்க ஆட்சியின் ஓர் அப்பட்டமான கருவியாக அம்பலப்படுத்தி வருகிறார்.

ஒரு வாக்கெடுப்புக்கு விடுவதானது நிதியச் சந்தைகளின் ஸ்திரப்பாட்டுக்கு ஒரு சகித்துக் கொள்ளவியலாத அச்சுறுத்தலாகும், “வேண்டாம்' என்ற முடிவை நிதியச் சந்தைகள் ஏற்றுக் கொள்ளாது என்று மக்ரோன் தெரிவித்தார். அவர்  “ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் என் அரசியல் ஆர்வம் மற்றும் என் அரசியல் விருப்பம் … ஆனால் தற்போதைய சூழ்நிலையில், நிதிய மற்றும் பொருளாதார அபாயங்கள் மிக அதிகமாக உள்ளதாக நினைக்கிறேன்” என கூறினார்.

ஓய்வூதிய வெட்டுக்களுக்கு முக்கால்வாசி பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பையும், அந்த வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் மக்ரோன் ஒதுக்கித் தள்ளினார். பிரெஞ்சு அரசியலமைப்பின் நடைமுறையில் இல்லாத வழிவகைகளைப் பயன்படுத்தி, அவர் அரசாங்கத்தைக் கவிழ்க்க நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்படாத வரையில், உத்தரவாணை மூலமாக அவர் அவற்றைத் திணித்து வருகிறார். பிரான்ஸ் எங்கிலும் வெடித்துள்ள போராட்டங்களைத் தாக்க ஆயிரக்கணக்கான கனரக ஆயுதமேந்திய கலகம் ஒடுக்கும் போலிஸை அவர் அனுப்பி வருகிறார்.

பேச்சுவார்த்தைகள் முறிந்து, 'ஜனநாயக' ஆட்சிக்கான வழிவகைகள் மறைந்து வருகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் இடையே ஒரு தீர்க்கமான மோதல் உருவாகி வருகிறது. வங்கிகளின் கணிப்பீடுகளை விளக்குவது கடினம் அல்ல. வங்கி பிணையெடுப்புகளுக்கும் ரஷ்யா மீதான நேட்டோ போருக்கும் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைச் செலவிடுவதற்காக வாழ்க்கைத் தரங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு உழைக்கும் மக்களிடையே மிகப் பெரியளவில் எதிர்ப்பு உள்ளது.

வங்கிகள் கோரும் கொள்கைகளை மக்கள் எதிர்ப்பதால், முதலாளித்துவ அரசு ஜனநாயகத்தின் பொறி முறைகளைக் கைவிட்டு, அதன் விருப்பத்தைப் பலவந்தமாக மக்கள் மீது திணிக்கும். பாரிஸ் நடைமுறையளவில் ஓர் ஆயுத முகாமாக மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்தின் எந்தவொரு அறிகுறியையும் அடக்குவதற்கு கனரக ஆயுதமேந்திய துணை இராணுவ பொலிஸ்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பாரிஸ் கம்யூன் நிறுவப்பட்ட ஆண்டுதினத்தில் மக்ரோன் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது மார்ச் 18, 1871 இல் பிராங்கோ-புரூஷ்ஷிய போரின் இரத்தக்களரிக்கு மத்தியில் 152 ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரயிறுதியில் பாரிஸில் அதிகாரத்தை கைப்பற்றியது. தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசை அமைத்தது வரலாற்றிலேயே அது தான் முதல்முறையாக இருந்தது. கம்யூனின் சாதனைகளும் ஆனால் அது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கு மிகப் பெரும் அனுபவங்களாக உள்ளன.

கார்ல் மார்க்ஸூம் அவரது தலைச்சிறந்த சக-சிந்தனையாளர் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸூம், பின்னர் விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகளும் அரசு குறித்து கம்யூனிடம் இருந்து அழிக்கமுடியாத படிப்பினைகளைப் பெற்றனர். கம்யூன் குறித்து மார்க்சின் தொல்சீர் படைப்பான பிரான்சில் உள்நாட்டுப் போர் (The Civil War in France ) என்பதற்கு ஏங்கெல்ஸ் 1891 இல் எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்:

[கம்யூனால் தூக்கியெறியப்பட்ட] முந்தைய அரசின் பண்பு என்னவாக இருந்தது? சமூகம், நிஜத்தில் சாதாரண உழைப்பு பிரிவினையின் மூலம், அதன் பொதுவான நலன்களைக் கவனிக்க அதன் சொந்த அமைப்புகளை உருவாக்கி இருந்தது. ஆனால் அரசு அதிகாரத்தின் தலைமையில்  இருந்த இந்த அமைப்புகள், காலப்போக்கில், அவற்றின் சொந்த தனிநலன்களைப் பின்தொடர்வதில், சமூகத்தின் சேவகர்கள் என்பதில் இருந்து சமூகத்தின் எஜமானர்களாக மாறின. உதாரணத்திற்கு, இதனை பரம்பரை முடியாட்சியில் மட்டுமல்ல மாறாக அதேபோல் இதை ஜனநாயகக் குடியரசிலும் காண முடியும்.

முதலாம் உலகப் போரின் ஏகாதிபத்திய படுகொலைகளுக்கு மத்தியில், லெனின் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கான அடித்தளத்தை விவரிக்க எழுதி கொண்டிருந்த போது, அவர் கம்யூன் பற்றிய மார்க்ஸினதும், ஏங்கெல்ஸினதும் படைப்புகளை ஆய்வு செய்தார்.

அரசை சமரசமற்ற வர்க்க விரோதங்களின் விளைபொருளாகவும், சமூகத்தின் மீது ஆளும் வர்க்கம் அதன் கட்டளைகளைத் திணிப்பதற்கான ஒரு கருவியாகவும் குறிப்பிட்ட ஏங்கெல்ஸின் வரையறையே லெனின் முன்னோக்கின் மையத்தில் இருந்தது. ஆளும் வர்க்கத்தின் எதிர்புரட்சிகர வன்முறையை அடக்குவதற்கும், சமூக சமத்துவத்தை ஏற்படுத்த சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வர்க்கப் பிரிவினையிலிருந்தே அரசு தோன்றுகிறது என்பதால் வர்க்கங்களாக சமூகம் பிளவுபடுவதைக் கடந்து செல்வதற்கும், அரசு அதிகாரத்தை தொழிலாளர்களே கட்டமைத்த சோவியத்களுக்கு (கவுன்சில்கள்) மாற்ற வேண்டும் என்று லெனின் அழைப்பு விடுத்தார். அவர் பின்வருமாறு எழுதினார்:

ஏங்கெல்ஸ் 'அதிகாரம்' என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். அரசு என்றழைக்கப்படும் இந்த அதிகாரம் சமூகத்தில் இருந்து தோன்றினாலும் அதற்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மேலும் மேலும் அது சமூகத்திலிருந்து அன்னியப்படுகிறது. இந்த அதிகாரம் என்பது முக்கியமாக எதை உள்ளடக்கி உள்ளது? இது சிறைச்சாலைகள் மற்றும் இதர பிறவற்றை வைத்துள்ள, தனது கட்டளையின்படி செயல்படும் ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புகளை உள்ளடக்கி உள்ளது. …

ஓர் அரசு உருவாகையில் ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புக்களை உருவாக்கிறது, ஒரு சிறப்பு அதிகாரம் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு புரட்சியும், அரசு எந்திரத்தை அழிப்பதன் மூலம், அப்பட்டமான வர்க்கப் போராட்டத்தை நமக்குக் எடுத்துக் காட்டுகிறது. ஆளும் வர்க்கத்திற்காக சேவையாற்றும் ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புகளை மீட்டமைக்க ஆளும் வர்க்கம் எவ்வாறு போராடுகிறது என்பதையும், சுரண்டுபவர்களுக்காக அல்லாமல் சுரண்டப்படுபவர்களுக்காக சேவையாற்றும் இந்த வகையான புதிய அமைப்புகளை உருவாக்க ஒடுக்கப்படும் வர்க்கம் எவ்வாறு போராடுகிறது என்பதையும் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

தலைச்சிறந்த மார்க்சிஸ்டுகள் விளங்கப்படுத்தியதை பிரான்சின் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன: அதாவது, அரசு என்பது, நாடாளுமன்ற-ஜனநாயக வடிவத்தில் இருந்தாலும் கூட, அது ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கான ஓர் இயங்குமுறையாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அமைப்புகளைக் கட்டியெழுப்பி, ஒரு சோசலிச புரட்சியில் அரசு அதிகாரத்தை இந்த அமைப்புகளுக்கு மாற்றுவதற்கான போராட்டமே முதலாளித்துவ அரசுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள முன்னோக்கிய பாதையாகும்.

ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டு வரும் அமெரிக்க-நேட்டோ போர், கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பு, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் நிதிய நெருக்கடி, அனைத்திற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி உட்பட தொடர்ச்சியாக விரிவடைந்து வரும் இந்த நெருக்கடிகளுக்கு மக்ரோன் எதிர்வினையாற்றி வருகிறார். போர் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான சமூக கோபமும் வேலைநிறுத்தங்களும் முன்னெப்போதும் இல்லாதளவில் தீவிரமடைந்து வருகின்றன.

இதற்கு விடையிறுப்பாக, மக்ரோன் விஷேட ஆணைகள் மூலமாக ஆட்சி செலுத்த திரும்பி வருகிறார். இந்த வரலாற்று நெருக்கடிகளில் இருந்து அரசியல் மற்றும் மூலோபாய முடிவுகளை எடுப்பதே தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் முக்கிய கேள்வியாகும். சோசலிச புரட்சி நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்ற ஒரு இன்றியமையாத அரசியல் யதார்த்தத்திற்கு இது சாட்சியமளிக்கிறது.

பாராளுமன்றம் மூலமாக சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அங்கே முன்னோக்கிய பாதை இல்லை. பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மீதோ அல்லது ஜோன்-லூக் மெலென்சோன் போன்ற போலி-இடது அரசியல்வாதிகள் மீதோ தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. போராட்ட வேலைநிறுத்தங்கள் மக்ரோனின் மனதை மாற்றிவிடும் அல்லது பிரெஞ்சு பிரதம மந்திரி எலிசபெத் போர்னின் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்ற நாடாளுமன்றத்தை வாக்களிக்க வைக்கும் என்று அவர்கள் அனைவரும் வெறும் பிரமைகளைப் பரப்புகிறார்கள்.

ஆனால் மக்ரோனுக்குப் பின்வாங்கும் எண்ணம் இல்லை. பிரான்சில் நாளை ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கம் நிறுவப்பட்டாலும் கூட, அதுவும், அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் ஆதரிக்கும் நேட்டோவின் போருக்கும், ஐரோப்பிய ஒன்றிய வங்கிப் பிணையெடுப்புகளுக்கும் நிதி ஒதுக்குவதற்காகத் தொழிலாளர்களைச் சூறையாட முயலும். அதுவும் விரைவிலேயே தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முன்னணியில் தன்னை மீண்டும் காணும்.

நிலைமை புரட்சிகரமாக இருப்பதை மறுப்பவர்கள், அல்லது முதலில் தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ ஜனநாயகத்தில் கூடுதல் அனுபவங்கள் வேண்டும் என்பவர்கள் இந்த இயக்கத்தைத் தடம் புரளச் செய்ய முயலும் பிற்போக்குவாதிகள் ஆவர். “முதலாளித்துவ ஜனநாயகத்தில்' தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதல் அனுபவம் தேவையில்லை; முதலாளித்துவ சர்வாதிகாரத்திலேயே அவர்களுக்கு அனுபவம் உள்ளது. உண்மையான ஜனநாயகம் முதலாளித்துவத்துடன் ஒத்துப் போவதில்லை என்ற அனுபவத்தை அவர்கள் பெற்றுவருகிறார்கள்.

இது குறிப்பாக பிரான்சில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் வெளிப்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் கோபத்திற்கு  முகங்கொடுத்துள்ள உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசுகள், தங்களுக்குதாங்களே இன்னும் அதிக சர்வாதிகார அதிகாரங்களை வழங்கி கொள்கின்றன. கடந்த ஆண்டு இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய எழுச்சி ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷவைப் பதவியிலிருந்து இறக்கிய நிலையில், தற்போது, முதலாளித்துவ அரசு வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதிக்கவும், போராட்டங்களைச் சட்டவிரோதமாக்கவும், அரசியல் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைக்கவும் சிறப்பு அதிகாரங்கள் கோரி ஓர் அவசரகால ஆட்சியின் வடிவத்தை எடுத்து வருகிறது. கடந்தாண்டு அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இரயில்வே தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கி அவர்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைத் திணிக்க செயலாற்றிய சக்திகளோடு இணைந்தனர்.

பிரான்சில் வளர்ந்து வரும் போராட்டம் முழுவதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste – PES) மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுத்துள்ளன. அத்தகைய அமைப்புகளால் மட்டுமே வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் பொலிஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் முடியும். பெருந்திரளான வெகுஜனங்களை முதலாளித்துவ அரசுக்கு அடிபணியச் செய்யும் 'சமூக பேச்சுவார்த்தைகளுக்கு' உறுதிபூண்டுள்ள அமைப்புகள் வர்க்கப் போராட்டங்கள் மீது திணிக்கும் கட்டளைகளை உடைக்க முடியும்.

அதே நேரத்தில், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலையிடத்திலும் மற்றும் குடியிருப்புப் பகுதியிலும் தொழிலாளர்களின் அமைப்புகளைக் கட்டியெழுப்புவது, முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஆயுதமேந்தியவர்களின் அமைப்புகளது அதிகாரத்திற்காக அல்ல, அது தொழிலாளர்களின் அரசுக்காக அதிகாரத்தின் ஒரு புதிய வடிவத்திற்கு அடித்தளத்தை நிறுவுவதற்கான அஸ்திவாரமாகும்.

ஆனால் தொழிலாள வர்க்கம் இந்த பாத்திரத்தை வகிக்க வேண்டுமானால், அதன் பணி ஒரு நாடாளுமன்ற பாதையைக் காண்பதல்ல மாறாக ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்ப அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும் என்ற நனவு அதற்குள் ஊறியிருக்க வேண்டும். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனின் மாபெரும் போராளிகள் தொடங்கிய வரலாற்று சர்வதேச போராட்டத்தை தொடர்கிறோம் என்ற நனவோடு அது வர்க்கப் போராட்டத்திற்குள் செல்ல வேண்டும்.

Loading