மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதால், பிரான்ஸ் முழுவதும் போராட்ட எதிர்ப்புகள் விரிவடைகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின்  மதிப்பிழந்த ஓய்வூதிய வெட்டுக்களை திணித்ததுக்காக பிரதமர் எலிசபெத் போர்னின் அரசாங்கத்தை பாராளுமன்றம் கண்டிக்கத் தவறியதை அடுத்து நேற்று இரவு பிரான்ஸ் முழுவதும் எதிர்ப்புகள் வெடித்தன. பலத்த ஆயுதம் ஏந்திய பொலிஸாருக்கும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் பிரான்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் இரவு வரை தொடர்ந்தன.

279 பிரதிநிதிகள் மட்டுமே வலதுசாரி பாரளுமன்ற பிரதிநிதி சார்லஸ் டி கூர்சனால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்தனர். மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணி (RN) மற்றும் ஜோன்-லூக் மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) ஆகிய கட்சிகள் இதற்கு ஆதரவளித்தன. 577 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு ஒன்பது குறைவாக இருந்தது. 1958 பிரெஞ்சு அரசியலமைப்பின் பிரிவு 49,3 இன் ஷரத்து இரகசியமான மற்றும் பிற்போக்குத்தனமான விதிமுறைகளின் கீழ், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் முறையாக சட்டமாக நிறைவேற்றப்படுகின்றன.

இந்த நிகழ்வுகள் ஒரு வரலாற்று வெளிப்பாடாக முதலாளித்துவ தன்னலக்குழுவின் வர்க்க சர்வாதிகாரமான அரசை அம்பலப்படுத்துகின்றன. முக்கால்வாசி பிரெஞ்சு மக்கள் மக்ரோனின் வெட்டுக்களை எதிர்க்கின்றனர், மேலும் மூன்றில் இரண்டு பங்கு பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் பொது வேலைநிறுத்தத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர். ஆனால் பாராளுமன்றம் மக்களின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்துள்ளது. நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் ஓய்வூதியங்களை வெட்டுவதில் முனைந்துள்ள ஆளும் வர்க்கம், பணக்காரர்களுக்கான வங்கிப் பிணை எடுப்பு மற்றும் ரஷ்யாவுடன் போருக்கு நிதியளிப்பதற்காக பிரெஞ்சு மக்களைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க எந்த பாராளுமன்ற வழியும் இல்லை.

இந்த வாக்குகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் LFI போன்ற போலி-இடது கட்சிகளின் பேரழிவையும் அம்பலப்படுத்துகிறது. பல வாரங்களாக இவர்கள், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்ட எதிர்ப்புக்களில், மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிராக பாராளுமன்றத்தை நம்பவைக்க முடியும் என்று கூறினர். போர்ன் அரசாங்கம் அல்லது ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு வாக்களிக்க பெரும்பான்மை இல்லாத பாராளுமன்றத்தில் கணிக்கக்கூடிய முடிவு, இந்த மாயைகளை பரப்பிய அரசியல் சாணக்கியர்களை அம்பலப்படுத்துகிறது.

மாறாக, தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ பொலிஸ்-அரசு இயந்திரத்திற்கும் இடையே ஒரு நேரடி மோதல் உருவாகி வருகிறது, ஆளும் வட்டங்களில் வளர்ந்து வரும் மற்றும் வெளிப்படையான அச்சத்திற்கு மத்தியில் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விமான, இரயில் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மத்தியில் தொழில்துறை நடவடிக்கை தொடர்கிறது, அவர்களின் வேலைநிறுத்தம் தென்கிழக்கு பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்ரோனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உயர்நிலைப் பள்ளியில், இறுதிப் பள்ளித் தேர்வை நடத்துவதை நிறுத்த ஆசிரியர்கள் மத்தியில் ஒரு இயக்கமும் வளர்ந்து வருகிறது.

மார்ச் 23 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு வேலைநிறுத்தம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உத்தியோகபூர்வ ஊடகங்களில் கூட அந்தத் தேதிக்குப் பிறகு வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் கட்டுப்பாடற்ற சமூக வெடிப்பை தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

நேற்றிரவு, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தன்னிச்சையான எதிர்ப்புக்கள் ஐந்தாவது இரவாக வெடித்தன மக்ரோன் நிர்வாகம் நாடு முழுவதும் போராட்டங்கள் மீது, மீண்டும் ஒரு மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது. பிளாஸ்டிக் கேடயங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய கலகப் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை எதிர்ப்பாளர்கள் மீது வீசினர் மற்றும் பெண்கள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்லுகளால் கடுமையாக தாக்கினர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

துலூஸ் நகரிலுள்ள ஜோன் ஜூரஸ் நிலையத்தைச் சுற்றியும், ஸ்ட்ராஸ்பேர்க் நகரிலுள்ள கிளேபர் சதுக்கத்தைச் சுற்றியும், லில் நகரிலுள்ள குடியரசு சதுக்கத்தை சுற்றியும் மற்றும் லியோன் நகரிலுள்ள பெல்கூர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறையினருடன் மோதல்கள் நடந்தன. ஸ்ட்ராஸ்பேர்க்கில், பொலிசார் குறுகிய தெருக்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அடைத்து வைத்து அவர்கள் மீது பல கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மூச்சுத் திணறல் மற்றும் புகையிலிருந்து வெளியேறத் தள்ளப்பட்டனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பாரிஸில், பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள வௌபன் சதுக்கம், பின்னர் செயின்ட் லாசார் ரயில் நிலையம் மற்றும் சாத்லே மற்றும் பாஸ்டில் சதுக்கங்கள் உட்பட நகரம் முழுவதும் கூடிய போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். பாரிசிலுள்ள பாஸ்டில் சதுக்கத்தில் இருந்து அணிவகுத்துச் சென்ற எதிர்ப்பாளர்கள் 1789 பிரெஞ்சுப் புரட்சியில், 'நாங்கள் மன்னர் பதினாறாம் லூயியின் தலையை துண்டித்தோம், நாங்கள் மீண்டும் அதனை செய்யலாம் என்று மக்ரோன் அஞ்சுகிறார்' என்று முழக்கமிட்டனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பெரும் ஆயுதம் ஏந்திய காவல்துறையின் பெரிய குழுவினர்கள் மத்திய பாரிஸ் வழியாக முன்னும் பின்னுமாக போராட்டக்காரர்களை தாக்கினர். போராட்டங்கள் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும் சில போலீசார் தாக்கினர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பிரான்சில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசு இயந்திரத்துடன் நேரடி மோதலில் நுழைவதால் புறநிலை ரீதியாக ஒரு புரட்சிகர சூழ்நிலை உருவாகி வருகிறது. ஐரோப்பா முழுவதும், ஜேர்மனி, பிரிட்டன், போர்த்துக்கல், கிரீஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் அதற்கும் அப்பால் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சிக்கன நடவடிக்கை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரான வேலைநிறுத்த அலைகளுக்கு மத்தியில் இது நடைபெறுகிறது. வர்க்கப் போராட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முன்வைக்கப்படும் முக்கியமான கேள்வி என்னவென்றால், மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தை எந்த முன்னோக்கில் நடத்தலாம் என்பதுதான்.

பாராளுமன்ற 'ஜனநாயக' எதிர்ப்பின் பாதை மூடப்பட்டால், தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சியின் பாதையில் போராடத் தள்ளப்படுகிறது என்று அர்த்தமாகும். இதன் பொருள், முதலாவதாக, மக்ரோனுடனான 'சமூக உரையாடல்' (social dialog) முன்னோக்கின் மூலம் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசு இயந்திரத்துடன் கட்டிப்போடும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளின் கைகளில் இருந்து போராட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தோடு, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடும் முன்னோக்கில், அதன் சொந்த போராட்ட சாமானிய தொழிலாளர் அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும்.

தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் போலி-இடது அரசியல்வாதிகளின் குழப்பமான மற்றும் பீதியுடன் கூடிய கருத்துக்கள், வாக்கெடுப்பு நடந்த தினம் மக்ரோனைப் பற்றிய மாயைகளை பரப்பியவர்கள், அவர்கள் தலைமை தாங்க முற்படவில்லை, மாறாக அரசியல் எந்திரத்திற்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தை தடம் புரளச் செய்ய முயல்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

'நாங்கள் ஆட்சியின் நெருக்கடியில் இருக்கிறோம், அறியப்படாத அரசியல் தருணத்தில் நாம் மூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்' என்று பிரான்ஸ் செய்தி ஸ்தாபனத்துக்கு பசுமைக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாண்ட்ரின் ரூசோ அறிவித்தார். 1958 இல் நிறுவப்பட்ட 'ஐந்தாவது குடியரசின் முடிவில்' பிரான்ஸ் உள்ளது என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், மெலன்சோன் தலைமையிலான புதிய மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியத்தில் (NUPES) உள்ள ரூசோவின் கூட்டாளிகள், மக்ரோன் அல்லது அரசியல் வலதுபுறத்தில் உள்ள மற்ற சக்திகளுடன் பேரம் பேசும் முன்னோக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தலைவர் பேபியன் ரூசெலைப் போலவே, LFI கட்சியின் அதிகாரியான பிரான்சுவா ரஃபினும் மக்ரோனிடம் 'நாட்டை அமைதிப்படுத்த' 'ஓய்வூதிய வெட்டுக்களை பிரகடனப்படுத்த வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

‘’ஒரு சில வாக்குகளால் தோல்வியடைந்த தணிக்கைப் பிரேரணை எதையும் மாற்றாது!’’ … என்றும், அநியாயமானது, நியாயமற்றது மற்றும் மிருகத்தனமானது என்று அனைவரும் கருதும் ஓய்வூதியக் குறைப்பை நிராகரிப்பதற்கான தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உறுதியை எதுவும் தடுக்க முடியாது என்றும் ஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) ஒரு அறிக்கையை வெளியிட்டது. மார்ச் 23ம் தேதி 'அதற்குப் பிறகு, இது அவசியமானால்' அதன் ஆர்ப்பாட்ட எதிர்ப்பில் தொழிலாளர்கள் பங்கேற்குமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களித்த கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்களை அணிதிரட்ட இந்த நெருக்கடியின் போது எந்த நேரத்திலும் மெலன்சோன் அழைப்பு விடுக்கவில்லை. பிரான்சின் மிகப் பெரிய நகரங்களில், பெரும்பாலான தொழிலாள வர்க்கப் பகுதிகளில் அவரது வாக்காளர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அவர் அத்தகைய முறையீடு எதுவும் அவர்களுக்கு செய்யாததுடன், சொந்த பிரேரணையக் கூட பாராளுமன்றத்தில் முன்வைக்க கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக வலதுசாரி டி கூர்சன் தலைமையிலான தீர்மானத்துக்கு 'கட்சி கடந்து' ஆதரிக்க முடிவு செய்தார்.

நேற்றிரவு, மிலோன்சோன் மீண்டும் ஒரு நாள் எதிர்ப்புக்கள் மக்ரோனை தனது சட்டத்தை திரும்பப் பெறச் செய்யும் என்ற மாயையை வெளிப்படுத்தினார்: 'பாராளுமன்ற தணிக்கை செயல்முறை வேலை செய்யாததால், மக்கள் தணிக்கை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரபலமானது. இந்த தணிக்கை எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பாரியளவில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் சட்டத்தை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்த அது நம்மை அனுமதிக்கிறது... சமூக ஜனநாயக வழிமுறைகள் மூலம் தான் இந்த முடிவை மாற்ற வேண்டும். மக்கள் இதில் ஈடுபட்டு அதனைச் செய்ய  வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக வெடிக்கும் சம்பவங்களுக்குப் பிறகு எதுவும் மாறவில்லை என்ற கூற்றுக்களில் எதுவும் உண்மையில்லை. பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு, மக்ரோனின் ஜனநாயக விரோத ஓய்வூதிய வெட்டுக்களின் திணிப்புக்கு பாராளுமன்றம் சரணடைந்ததோடு, பாரிய பொலிஸ் வன்முறையை நாடியது என்பன பிரான்சின் முதலாளித்துவ பொலிஸ் அரசை நிரந்தரமாக இழிவுபடுத்தியுள்ளன. தொழிலாள வர்க்கம் 'சமூக ஜனநாயக' வழிமுறைகளில் ஈடுபடவில்லை, மாறாக ஒரு சக்திவாய்ந்த, ஆரம்பக் எழுச்சி இயக்கத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த எழுச்சி இயக்கம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சாராமல் அதன் சொந்த சுயாதீனமான போராட்ட அமைப்புகளைக்  கட்டியெழுப்புவதையும், பிற்போக்கு முதலாளித்துவ பொலிஸ் அரசு இயந்திரத்தில் இருந்து தொழிலாளர் அமைப்புகளுக்கு ஒரு சோசலிசப் புரட்சியில் அரச அதிகாரத்தை மாற்றுவதையும் தவிர வேறு வழியில்லை.

Loading