முன்னோக்கு

அமெரிக்காவில் குழந்தை தொழிலாளர் முறை திரும்புகிறது: ஒரு சமூகம் பின்னோக்கி நகர்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த 1911 ஆம் ஆண்டு புகைப்படம், பென்சில்வேனியாவின் பிட்ஸ்டனில் உள்ள ஹக்ஸ்டவுன் போரோ நிலக்கரி நிறுவனத்தில் பணி புரிந்த சிறுவர்களைக் காட்டுகிறது. [Photo: Department of Commerce and Labor. Children's Bureau]

கடந்த வாரம் அயோவா மாநில செனட் சபை, அம்மாநிலத்தின் குழந்தைத் தொழிலாளர் முறை மீதுள்ள பல கட்டுப்பாடுகளை அகற்றும் ஒரு சட்டமசோதாவை முன்வைத்தது. இது குழந்தைகளைச் சட்டப்பூர்வமாக நியமிக்கும் வேலைகளை விரிவாக்குவதுடன், அதிகபட்ச பணிநேரங்களை நீடிக்கவும் மற்றும் தொழில் நிறுவனங்கள் நள்ளிரவு வரை அவர்களைப் பணியில் ஈடுபடுத்தி வைத்திருக்கவும் அனுமதிக்கும்.

அயோவா மாநிலத்தின் குழந்தைத் தொழிலாளர் சட்டங்களை 'நவீனப்படுத்துவதற்காக' என்ற அடிப்படையில், குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள அம்மாநில சட்டமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் இது ஒரு பாரிய சமூகப் பின்னடைவை நோக்கிய ஆரம்ப அறிகுறியாகும். உலகிலேயே மிகப் பணக்கார நாடான அமெரிக்கா, 'ஜனநாயகம்' மற்றும் 'மனித உரிமைகள்' பற்றி மற்றவர்களுக்குப் பாடம் நடத்துவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால், முன்னேறிய தொழில்மயமான குறைந்தபட்ச நாடுகளில், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டு விட்டதாக ஒரு காலத்தில் கருதப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை என்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல், 'பழகிப் போன சோம்பேறித்தனம் மற்றும் சீரழிவைத் தடுக்கும்' என்பதோடு, 'தொழில்துறை பழக்கங்களைப்' பயிற்றுவிக்கும் என்ற அடித்தளத்தில், முதலாளித்துவவாதிகள், 1800 களில், குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதை நியாயப்படுத்தியதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. இன்று, குழந்தைத் தொழிலாளர் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதை நியாயப்படுத்த கிட்டத்தட்ட அதே மாதிரியான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'அது நல்ல அனுபவம்,' என்று அயோவா மாநில ஆளுநர் கிம் ரெனால்ட்ஸ் இம்மாத தொடக்கத்தில் கூறினார். 'உங்களுக்குத் தெரியும், இது குழந்தைகளுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. மேலும் அவர்களுக்கு இதைச் செய்ய நேரம் கிடைத்தால், அவர்கள் சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்க விரும்பினால், நாம் அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,' என்றார்.

பொருளாதாரக் கொள்கை அமைப்பின் (EPI) தகவல்படி, அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 மாநிலங்கள் குழந்தைத் தொழிலாளர் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான மசோதாக்களைப் பரிசீலித்துள்ளன. இந்தாண்டு இதுவரை எட்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானத் தளங்களில் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் மினசோட்டாவின் ஒரு மசோதாவும் இதில் உள்ளடங்கும். மற்றொரு மசோதா சமீபத்தில் ஆர்கன்சாஸில் கையெழுத்திடப்பட்டது.

2015 மற்றும் 2022 க்கு இடையே குழந்தை தொழிலாளர் சட்ட மீறல்களில் சம்பந்தப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 1,012 இல் இருந்து 3,876 ஆக கிட்டத்தட்ட 400 சதவீதம் அதிகரித்திருந்ததாக அதே EPI ஆய்வு குறிப்பிட்டது. அலபாமா வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையில் ஏறக்குறைய 12 வயதான டசின் கணக்கான குழந்தைகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள் மற்றும் விஸ்கான்சின் மாமிச பதப்படுத்தும் ஆலையில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் ஆபத்தான வேலைகளில் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள் என்பது உட்பட, பல உயர்மட்ட ஊழல்களும் இதில் உள்ளடங்கும். இந்த இரண்டு சம்பவங்களிலும், இந்த குழந்தைகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளின் ஒரு பிரிவினரில் உள்ளடங்குவர்.

உண்மையில், குழந்தைத் தொழிலாளர் முறை அமெரிக்காவில் ஒருபோதும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதோடு, கிராமப்புறங்களில் இன்னமும் பரவலாக உள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 500,000 குழந்தைகள் வேளாண் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றோரின் அனுமதியுடன் வேலை செய்ய அனுமதிக்கும் விதத்தில், பண்ணை வேலைகளில் விதிவிலக்குகள் உள்ளன. மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதிய முறையில் இருந்து விவசாயத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள மலிவுழைப்பு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இலாபம் ஈட்டுகின்றன. 2020 இல், உலகளவில் 160 மில்லியன் குழந்தைகள், அதாவது அண்மித்து 10 இல் ஒருவர், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்ததாகவும், இவர்களில் பாதி பேர் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவிக்கிறது. தொழிலாளர் சக்தியில் குழந்தைகளின் சதவீதம் வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், 2016 இல் இருந்து அது தேக்கமடைந்து நின்றுள்ளது. தற்போது குழந்தை தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதத்தில், 16 முதல் 24 வயதுடையவர்களின் விகிதத்தில் கூர்மையான வீழ்ச்சி இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே குழந்தைத் தொழிலாளர் சட்டங்களை ஒழிக்கும் முனைவுக்குப் பின்னால் உள்ள முக்கிய பரிசீலனையாக உள்ளது என்று EPI இன் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விகிதம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 10 சதவீத புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. இது 'மிகவும் மோசமான வீழ்ச்சி' என்று மளிகை தொழில் தரகர் ஒருவர் அயோவா செனட் விசாரணையின் போது வாதிட்டார். இந்த மசோதா இந்தப் போக்கை மாற்றுவதற்கு உதவும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

நிறைய இளைஞர்கள் எந்த வாய்ப்புகளும் இல்லாத முட்டுச்சந்து வேலைகளில் தொடர்ந்து பணியாற்றுவதை விட, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிப் பட்டம் பெறுவதைத் தேர்வு செய்வதை ஆளும் வர்க்கத்தால் சகித்துக் கொள்ள இயலவில்லை. சுமாரான ஊதிய உயர்வுக்கு வழிவகுத்துள்ள ஓர் இறுக்கமான வேலைச் சந்தையை எதிர்கொள்ள நிறைய இளைஞர்கள் மலிவூதிய வேலைகளுக்குத் தள்ளப்பட வேண்டும். இதைவிட தொந்தரவூட்டுவது என்னவென்றால், இது தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பு மனநிலையை எழுந்துள்ளது. இவர்கள் ஒரு தொழில்துறை மாற்றி ஒரு தொழில்துறையில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தமளித்து வருகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் சட்டங்களை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தைக் குடியரசுக் கட்சியினர் தான் முன்னெடுக்கின்றனர் என்றாலும், இது பைடென் நிர்வாகம் மற்றும் பெடரல் ரிசர்வ் பொருளாதாரக் கொள்கையின் பாகமாக உள்ளது. இவர்கள் பாரிய வேலையின்மையை ஏற்படுத்துவதற்கும் மற்றும் சம்பளங்களைக் குறைப்பதற்கும் வட்டி விகித உயர்வைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இளைஞர்களுக்கான பாதுகாப்புகளை அகற்றுவதில் அமெரிக்க ஏகாதிபத்திய போர்க் கொள்கையும் பரிசீலனையில் இல்லாமல் இல்லை. உக்ரேனில் அமெரிக்க பினாமி போருக்காகவும் அத்துடன் தைவான் விவகாரத்தில் சீனாவுடனான போருக்கு அதிகரித்தளவில் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வரும் தயாரிப்புகளுக்காகவும் வழமையாக ஒதுக்கப்படும் பில்லியன்களுக்கும், ட்ரில்லியன் கணக்கான டாலர் இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கும் மிகப் பெரும் சுரண்டல் போர் பொருளாதாரத்தை உருவாக்குவது அவசியமாகிறது. நூறாயிரக் கணக்கான இளைஞர்களை அணுஆயுத சக்திகளுக்கு எதிரான தொலைதூர போர்க்களங்களில் போரிட்டு மடிவதற்கு அனுப்பும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை ஏற்கனவே வகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது பொருளாதார சிரமங்களை ஏற்படுத்துவதன் மூலமாக உள்ளே நுழைக்கப்படலாம்.

இளைஞர்கள் உட்பட மிகவும் நலிந்த பிரிவினர் எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்பதே ஒரு சமூகம் முன்னோக்கி நகர்கிறதா அல்லது பின்னோக்கி நகர்கிறதா என்பதற்கான ஓர் அடிப்படை பரிசோதனை முறையாகும். ஆகவே ஓர் ஆழ்ந்த தீர்க்கவியலாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியால் உந்தப்பட்டு, வேகமாக பின்னோக்கிய நிலைமைக்கு நகர்ந்து வரும் ஒரு நாட்டின் சித்திரம் அமெரிக்காவில் உருவெடுத்து வருகிறது.

உண்மையில், ஆளும் வர்க்கம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைத் திட்டமிட்டு தாக்கி வருகிறது. ஆனால், பெருந்தொற்று கட்டவிழ்த்து விட்ட பாரியளவிலான நெருக்கடியால் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டு, ஒருவர் பெற்றுள்ள உணர்வு நிச்சயமாக மாறுபட்ட ஒரு புள்ளியை எட்டியுள்ளது.

குழந்தைப் பருவ வாழ்வுக்கான குழந்தைகளின் உரிமையும், அத்துடன் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் பெறப்பட்ட ஒவ்வொரு சமூக வெற்றிகளும் கடுமையான போராட்டத்தின் மூலம் மட்டுமே பெறப்பட்ட சமூக சாதனையாகும். இவை இப்போது அகற்றப்பட்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் அதிகரித்தளவில் 19 ஆம் நூற்றாண்டுக்கு நிகரான நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதில் உள்ளடங்குபவை:

[bulllet list]

  • எட்டு மணி நேரம் மற்றும் வாரத்திற்கு ஐந்து நாள் வேலை முறை. அமெரிக்கா முழுவதிலுமான தொழிற்சாலைகளில், ஒரு நாள் விடுமுறை கூட இல்லாமல் அல்லது 12 மணி நேரம் அல்லது 16 மணி நேர ஷிப்ட்களில் தொழிலாளர்கள் வாரக்கணக்கில் தொடர்ந்து பணியில் அமர்த்தப்படுவது வழக்கமாகி உள்ளது. இரயில் ஓட்டுனர்கள் 24/7 'எப்போதும் அழைக்கப்படும்' நிலையில் வைக்கப்பட்டிருப்பதால், அவர்களால் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியாத நிலை உள்ளது.

  • பணியிட பாதுகாப்பு நெறிமுறைகள். இவை அழிக்கப்பட்டுள்ளன. ஒழுங்குமுறை ஆணையங்கள் நிதியுதவியின்றி விடப்பட்டுள்ளன. இதனால் உருகிய உலோக கொதிகலனில் தொழிலாளர்கள் விழுந்து இறப்பது, இயந்திரங்களில் சிக்கி இறப்பது, வாயுக்களில் மூச்சுமுட்டி மரணிப்பது, பாரிய இரசாயன கசிவுகளால் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாவது போன்ற பயங்கரமான பல தொழில்துறை விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

  • கல்வி பெறுவதற்கான உரிமை. அரசுப் பள்ளி அமைப்புமுறை, சார்ட்டர் பள்ளிகள் வடிவில் தனியார் துறைக்குள் தள்ளப்படுகிறது. இந்தத் துறை ட்ரில்லியன் கணக்கிலான டாலருக்கு வளரும் துறையாக மதிப்பிடப்படுகிறது. டெட்ராய்ட் மற்றும் நியூ ஆர்லியன்ஸ் நகரங்களில், பெரும்பாலான பள்ளிகள் இப்போது சார்ட்டர் பள்ளிகளாக உள்ளன. இதற்கிடையே, நாடெங்கிலுமான பள்ளி மாவட்டங்கள் அவற்றின் கல்வித்திட்டங்களை அகற்றி பள்ளிகளை மூடி வருகின்றன.

  • பொது சுகாதாரம். பெருந்தொற்றுக்கான உத்தியோகபூர்வ விடையிறுப்பைக் கைவிட்டதால், அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டன. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மருத்துவ விஞ்ஞான வளர்ச்சிகளைப் பயன்படுத்தி இருக்கலாம். நோயாளிகளின் தடம் அறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நூற்றாண்டுகளாக அறியப்பட்டுள்ள முறைகள் கூட, “பொருளாதாரத்திற்கு” “மிகவும் விலை கொடுப்பதாக” இருக்கும் என்ற அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

[/bulllet list]

ஒரு புள்ளிவிவரம் ஒட்டுமொத்த விளைவுகளுக்கான ஓர் அறிகுறியை வழங்குகிறது. முதன்முதலில் தொழிற்சாலை வேலைக்கு வரும் ஒரு இளம் அமெரிக்கரின் கூலி, வாகனத் தொழில்துறையில் வழமையாக பின்பற்றப்படும், மணிக்கு 16 டாலரில் தொடங்குகிறது. இது நிஜமான அர்த்தத்தில் 1944 இல் அமெரிக்காவில் சராசரி உற்பத்தித் தொழிலாளருக்குக் கிடைத்ததை விட மிகவும் குறைவாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த அதிகரிப்புகளும் இளம் தலைமுறையினருக்குத் தலைகீழாக ஆக்கப்படுகிறது.

இந்த சமூக எதிர்ப்புரட்சிக்கான முக்கிய ஒத்துழைப்பைத் தொழிற்சங்க அதிகாரத்துவம் வழங்குகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவம், முழுமையாக நிறுவனத்தின் நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் சொந்த பதவிகளையும், தொழிலாளர்கள் வழங்கும் சந்தா பணத்திலிருந்து பெறும் ஆறு இலக்க சம்பளங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த கால சாதனைகள் அனைத்தையும் விட்டுக்கொடுக்க பேரம்பேசுகின்றனர். உண்மையில் சொல்லப் போனால், தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுகள் தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களை விட மிகவும் குறைவாக உள்ளன.

இதற்கிடையே பெருநிறுவனங்களின் இலாபங்களோ சாதனையளவுக்கு அதிகரித்துள்ளன. வங்கிகளின் ஊகவணிக செயல்பாடுகள் தோல்வியடைய அச்சுறுத்தும் போதெல்லாம், அவற்றுக்கு உடனடியாக ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்படுகின்றன. வேலையின்மை அதிகரிப்புக்குக் கூடுதலாக, வட்டிவிகித உயர்வுகளானது, ஜேபிமோர்கன் சேஸ் போன்ற பெரும் வங்கிகளுக்குச் சாதனையளவுக்கு இலாபங்களை ஏற்படுத்தி உள்ளன. ஜேபிமோர்கன் அதன் கடைசி நிதிய காலாண்டில் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இலாபத்தைக் குவித்துக் கொண்டுள்ளது.

முதலாளித்துவத்தின் கீழ் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லை. இந்த சமூக அவலம் தொடர்ந்து இருப்பது, கடந்த காலத்தின் அனைத்து சமூக மற்றும் கலாச்சார சாதனைகளை முழுங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது. தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியை வைத்து பார்க்கையில், மனிதகுலம் நீண்ட காலத்திற்கு முன்னரே வறுமை, போர், பெருந்தொற்றுக்கள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பிற சமூக பிரச்சனைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் இன்று முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறை என்ற ஒரேயொரு காரணத்தின் அடிப்படையில் பழிவாங்கும் தன்மையோடு மீண்டும் உருவெடுத்து வருகின்றன.

மனித முன்னேற்றத்தை மீண்டும் தொடங்கி வைக்கும் பாதையைச் சீரமைப்பதற்காக, முதலாளித்துவச் சுரண்டலை ஒழித்து நம் பூமியை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இளைஞர்களுக்கான தீர்வாகும். அத்தகைய ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் வருடாந்தர மே தினப் பேரணியை நடத்துகிறது. சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்! மே தின பேரணியில் கலந்து கொள்ளுங்கள், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள்! என்று நம் இளம் வாசகர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading