இலங்கையில் ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனி வேலைச் சுமையை அதிகரிக்க கொழுந்து பறிக்கும் போட்டியைப் பயன்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனி, 27 பெப்ரவரி 2023 அன்று, அதன் 2023 “சிறந்த தேயிலை அறுவடையாளர்” போட்டியை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தலவாக்கலை, ரதல்லை மைதானத்தில் நடத்தியது. இது நிறுவனத்தின் இரண்டாவது வருடாந்த கொழுந்து பறிக்கும் போட்டியாகும். ஹேலிஸ் கம்பனிக்கு சொந்தமான ஏனைய தோட்டங்களான களனிவெலி பெரும்தோட்டங்கள், தலவாக்கலை தேயிலை தோட்டம் மற்றும் ஹொரண பெரும்தோட்டங்களைச் சேர்ந்த 44 பெண் தொழிலாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நோக்கம் இந்த குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களின் வியத்தகு திறன்களைக் கொண்டாடுவது அல்ல. மாறாக உற்பத்தியை அதிகரிக்கவும், கொடூரமான சுரண்டல் முறையான 'வருமானப் பங்கீட்டு முறைமையை' திணிக்கவும் ஹேலிஸ் மற்றும் ஏனைய பெருந்தோட்டக் கம்பனிகளால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகியவற்றின் உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்கள் கொழுந்து பறிக்கும் போட்டியை ஆதரித்து அதனை ஒழுங்கமைக்க உதவினார்கள்.

இலங்கையின் தலவாக்கலையில் உள்ள ஹேலிஸ் பெருந்தோட்டத்தின் சமர்செட் தோட்டத்திலிருந்து 'சிறந்த தேயிலை அறுவடையாளர்' பரிசை வென்ற ஆர். சீதையம்மா.

தேயிலை கொழுந்துகளை பறிக்க போட்டியாளர்களுக்கு 20 நிமிட கால அவகாசம் வழங்கப்பட்டது. வெற்றியாளரான தலவாக்கலை தோட்டக் கம்பனியின், சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர். சீதையம்மா, ஒதுக்கப்பட்ட நேரத்தில் 10.42 கிலோகிராம்களைப் பறித்து சிறந்த அறுவடையாளருக்கான பரிசைப் பெற்றார். அவருக்கு 400,000 ரூபாய் ($US1,288.77) மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளருமான ரொஷான் இராஜதுரை, 'தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைச் சார்ந்து' தேயிலை கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதே நிறுவனத்தின் நோக்கமாகும் என அறிவித்தார். சிறந்த தேயிலை அறுவடை போட்டியானது, 'எங்கள் மக்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், ஆதரிக்கவும் மற்றும் ஊக்குவிக்கவும் நாங்கள் முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) நிருபர்கள், கடந்த வாரம் சமர்செட் தோட்டத்திற்கு சென்றிருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்காக முன்னெடுத்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

தொழிற்சங்கங்கள் கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் கருவிகளாக மாற்றமடைந்துள்ளன என்பதை சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு விளக்கியது. சம்பளங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீது, அரசாங்கமும் முதலாளிகளும் நடத்தும் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாளர்கள் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் விடயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓல்டன் மற்றும் கிளனுகி தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே இந்த முயற்சியை எடுத்து தமது தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்கியுள்ளனர்.

சமர்செட் தொழிலாளர்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கொழுந்து பறிக்கும் போட்டி பற்றி உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசினர். இந்தப் போட்டியானது ஒரு 'காட்சிப் பொருளாக' இருந்ததாகவும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலையை மூடிமறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

சமர்செட் தோட்டத் தொழிலாளி அவரது லயன் அறைக்கு வெளியில் நிற்கின்றார்.

போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஹெக்டயர் நிலம் மிகவும் வளமானதாகவும், குறிப்பாக போட்டிக்காக தயார்படுத்தப்பட்டதாகவும் தொழிலாளர்கள் விளக்கினர். பெரும்பாலான தோட்டங்களில் நல்ல அறுவடை கிடைக்கின்ற, குறிப்பாக பருவநிலை சாதகமான நேரத்தில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

“தோட்டத்தின்  ஏனய பகுதிகள் அவ்வளவு வளமானவை அல்ல. வரட்சிக் காலத்திலோ அல்லது அதிக மழை பெய்யும் காலத்திலோ, தினசரி 20 கிலோகிராம் இலக்கை கூட எங்களால் அடைய முடியாது,” என்று ஒரு தொழிலாளி கூறினார்.

கொழுந்து பறிக்கும் போட்டியில் உரையாற்றிய ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனியின் முகாமைத்துவ இயக்குனர் இராஜதுரை, 'நாங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை வழங்குகிறோம், அதே நேரத்தில் தரமான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்து, சமூகத்தையும் அதன் இளைஞர்களையும் மேம்படுத்துகிறோம்.'  எனக் கூறினார். 

இது முழுக்க முழுக்க பொய். 44 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களைக் நிர்வகிக்கின்ற இலங்கையின் மிகப்பெரிய விவசாய வியாபாரங்களில் ஒன்றான ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனி நடத்தும் தோட்டங்களில் வேலை மற்றும் சமூக நிலைமைகள் மிகவும் கடுமையானவை மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய தோட்டங்களுடன் ஒப்பிட்டால் எந்த வேறுபாடும் அற்றவை.

ஹேலிஸ் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான 10 அடி அகலம் 12 அடி நீளத்தைக் கொண்ட லைன் அறைகளில் வாழ்வதுடன் அவற்றில் பெரும்பாலானவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சில தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை புனரமைத்து அல்லது விரிவுபடுத்தி இருந்தாலும், அதுவும் அவர்களின் ஓய்வூதிய நிதியில் இருந்தோ அல்லது தோட்டங்களுக்கு வெளியே கொழும்பு அல்லது பிற நகரங்களிலும் வேலைசெய்யும் தோட்ட இளைஞர்கள் தங்கள் குடும்பங்களுக்கு வழங்கிய பணத்தின் மூலம் மட்டுமே சாத்தியமானது.

இலங்கையில் சமர்செட் தேயிலை தோட்டத்தில் உள்ள லைன் என்று அழைக்கப்படும் வரிசை வீடுகள்.

தோட்ட லைன் அறைகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்ற முறையான வசதிகள் இல்லை. தோட்டங்களில் பிள்ளைகளுக்கான கல்வி சேவைகள் தரம் குறைந்தவை. வறுமைக் கோட்டுக்கு கீழான ஊதியம் மற்றும் மாற்று வேலை வாய்ப்புக்கள் இல்லாமையினால் தோட்ட இளைஞர்கள் இலங்கையின் பிரதான நகரங்களுக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் அல்லது வெளிநாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயர்கின்றனர்.

எமது நிருபர்களுடன் பேசிய சமர்செட் தோட்டத்தின் பல தொழிலாளர்கள், அவரது கம்பனி தங்கள் நிலைமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்ற இராஜதுரையின் கூற்றுக்களை அப்பட்டமாக நிராகரித்தனர்.

“எங்களுடைய உற்பத்தி இலக்குகளை அடைய முடியாவிட்டால் தோட்ட நிர்வாகம் எங்களின் சம்பளத்தை வெட்டுவதுடன், எமது அறுவடையை எடைபோடும் போதும் எங்களை ஏமாற்றுகின்றது. பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்துகள் ஒரு நாளைக்கு மூன்று முறை நிறுக்கப்படுகின்றன, உதாரணமாக, ஈரப்பதத்தை  காரணமாக காட்டி ஒவ்வொரு முறையும் இரண்டு கிலோ வெட்டப்படுகின்றது. இப்போது அவர்கள் பழைய தராசுக்கு பதிலாக, டிஜிட்டல் தராசுகளைப் பயன்படுத்துகிறார்கள், எனவே புதிய டிஜிட்டல் இயந்திரங்களின் அளவீடுகளை எங்களால் வாசிக்க முடியாது. எங்களிடம் இருந்து தினமும் எத்தனை கிலோ திருடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று ஒரு தொழிலாளி கூறினார்.

இந்த ஆண்டு கொழுந்து பறிக்கும் போட்டியில் வென்ற ஆர். சீதையம்மா, தனது சக தொழிலாளர்களைப் போலவே தனக்கும் தினசரி வேலையின் போது 20 முதல் 22 கிலோகிராம் வரை மட்டுமே பறிக்க முடியும் என்றார். நல்ல பருவ காலங்களில் மாத்திரமே அதிகளவு கொழுந்து பறிக்க முடியும், அவர் மேலும் தெரிவிக்கையில், ஆண் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கொழும்பிற்கு வேலை தேடி இடம்பெயர்ந்துள்ளதால் ஆள் பற்றாக்குறையால் தோட்ட நிலங்களை சுத்தப்படுத்துவது தற்போது மிகவும் சிரமமாக உள்ளது, என்றார்.

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் கூறியதாவது: “கடந்த காலங்களில் 20 கிலோகிராம் என்ற தினசரி இலக்கை அடைவது கூட மிகவும் கடினமாக இருந்தது. ஒரு நாளைக்கு மூன்று கிலோகிராம் பறிக்க முடியாத சில பருவங்கள் இருந்தன, ஆனால் அந்த நாட்களில் எங்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், அப்போதும் கூட, வருமானம் எங்களின் அன்றாடச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. கம்பனிகள் தோட்டங்களை கையகப்படுத்திய பிறகு, நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.”  

இலங்கையின் உயர்ந்து வரும் பணவீக்க விகிதங்கள் மற்றும் உயர் வாழ்க்கைச் செலவையும் குறிப்பிட்டு, ஓய்வுபெற்ற தொழிலாளி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் தினசரி சம்பளம் மூன்று வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை என்று விளக்கினார். “இறைச்சி, மீன் அல்லது முட்டை சாப்பிடுவதைப் பற்றி நாம் சிந்திக்க முடியாது, இந்நிலையில் வேலை செய்வதற்கு போதுமான ஆற்றலைப் பெறுவது எப்படி? எங்கள் பிரிவில் சுமார் 30 தொழிலாளர்கள் தற்காலிக குடிசைகளில் வசித்து வருகின்றனர்,” என அவர் கூறினார்.

2021 ஏப்ரலில், முன்னாள் அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்த நிலையில், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு கட்டளையிடும் வர்த்தமானியை வெளியிட்டார். இது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் பாரிய அமைதியின்மையைத் தணிக்கும் என இராஜபக்ஷ நம்பினார். பெருந்தோட்ட முதலாளிகள், இந்த அற்ப அதிகரிப்பையும் எதிர்த்தனர்.

உற்பத்தித்திறன் மற்றும் சுரண்டலை அதிகரிக்கத் தீர்மானித்துள்ள தோட்டக் கம்பனிகள் இப்போது முழுத் துறையிலும் 'வருமானப்  பங்கீட்டு முறைமையை' திணிப்பதற்கு முயற்சிக்கின்றன. இதற்கு விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் உள்ள இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரிக்கின்றன.

இந்த அமைப்பின் கீழ், சுமார் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலை செடிகளைக் கொண்ட ஒருபகுதி நிலம் ஒரு தொழிலாளிக்கு ஒதுக்கப்படுகிறது, அவர் தனது குடும்பத்தின் ஆதரவுடன், அந்த செடிகளை பராமரிக்க வேண்டும். அதாவது நிலத்தை சுத்தம் செய்தல், தேயிலை செடிகளை நடுதல், களை அகற்றுதல் மற்றும் உரம் இடுதல் மற்றும் கொழுந்து பறிப்பதையும் செய்ய வேண்டும். ஆனால் இந்த நிலத்தில் அவர்களுக்கு சட்டப்படி உரிமை இல்லை.

உரம், கலைகொல்லி, இரசாயனங்கள் மற்றும் உபகரணங்களை மட்டுமே கம்பனி வழங்கும். பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை ஒரு கிலோகிராம் 40 முதல் 50 ரூபாய்க்கு கம்பனி கொள்முதல் செய்கிறது. கம்பனி அது வழங்கிய பொருட்களின் செலவைக் கழித்த பிறகு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. கொள்வனவு செய்யும் வெளியார் தேயிலைக்கு கிலோவுக்கு அதிக விலை கொடுக்க முடியும் என்றாலும், தொழிலாளர்கள் தங்கள் அறுவடையை விற்க உரிமை இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தோட்டத் தொழிலாளர்கள் நவீன கால குத்தகை விவசாயிகளாக மாற்றப்படுகிறார்கள்.  

ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின் இணையதளத்தின் கூற்றின்படி, மொத்தம் 207.7 ஹெக்டேர்களை 605 தனித்தனி தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து அது நடத்திவரும் தோட்டங்கள், இந்த இரக்கமற்ற முறையில் சுரண்டும் முறையைப் பயன்படுத்துகின்ற ஒப்பந்தத்தின் கீழ் உள்ளன. 2022 ஆம் ஆண்டில், ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனி தனது தோட்டங்களில் வரிக்குப் பிந்தைய வருடாந்த இலாபத்தை 69 சதவீதம் அதாவது 2.62 பில்லியன் ரூபாயாக ($8.60 மில்லியன்) அதிகரித்துக்கொண்டது. அடைய முடியாத தினசரி உற்பத்தி இலக்குகளை திணிப்பதன் மூலம், வேலைச்சுமைகளை அதிகரிப்பதன் மூலமும், ஊதியத்தை குறைப்பதன் மூலமும் இந்த இலாபம் பெறப்படுகின்றது. 

சமர்செட் தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம், தொழிற்சங்கங்கள் 'இறந்துவிட்டன' என்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவை போராடவில்லை, ஆனால் நிர்வாகத்தை ஆதரிக்கின்றன என்றும் கூறினார்கள். “ஒவ்வொரு உள்ளூர் தொழிற்சங்கத் தலைவருக்கும் தொலைபேசி வசதி உள்ளது, அதனால் அவர் நேரடியாக முகாமையாருடன் தொடர்பு கொள்ள முடியும். முகாமையாளரின் அறிவுறுத்தல்களின்படி வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்,” என்று ஒரு தொழிலாளி கூறினார்.

மஸ்கெலியாவிற்கு அருகில் அமைந்துள்ள ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகம் கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 2021 ஏப்ரலில், ஹேலிஸ்க்கு சொந்தமான ஹொரண பெரும்தோட்டத்தின் கீழ் உள்ள ஓல்டன் தோட்டத்தில் 1,000 ரூபாய் தினசரி சம்பளம் கோரி வேலைநிறுத்தம் செய்த போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நிர்வாகம் துன்புறுத்துவதை எதிர்த்து நின்ற 38 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது. இந்தத் தொழிலாளர்களில் 22 பேர் மற்றும் இரண்டு தோட்ட இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். தன்னை உடல்ரீதியாக தாக்கியதாக பொய்யாகக் கூறிய தோட்ட முகாமையாளருடன் சேர்ந்துகொண்டு பொலிசார் இவர்களை கைது செய்தனர்.   

இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்யத் தவறியதால் நீதிமன்ற வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. வேலையிழந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்கின்றனர்.  இ.தொ.கா இந்த பழிவாங்கலில் பொலிசுடன் நேரடியாக ஒத்துழைத்த அதே நேரம், ஏனைய அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்க சுண்டு விரலைக் கூட உயர்த்த மறுத்துள்ளன.

2021 ஏப்ரலில் உருவாக்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவும், சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே போலிக் குற்றச்சாட்டுகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் கோரும் ஒரே அமைப்புகளாகும்.    

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!

இலங்கை தோட்டத் தொழிற்சங்கத் தலைவர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்

வேலை நீக்கம் செய்யப்பட்ட சக ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Loading