மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நிலப்பிரபுத்துவ சொத்து உறவுகளின் அடிப்படையில் முடியாட்சி மற்றும் பிரபுத்துவ ஆட்சிகளான பண்டைய பிரெஞ்சு ஆட்சியின் அநீதியான ஒடுக்குமுறை அதிகாரத்தை அடையாளப்படுத்திய பாரிஸின் பாஸ்டில் கோட்டை தாக்கப்பட்டு, 234 வது ஆண்டு தினத்தை இந்த ஜூலை 14, வெள்ளிக்கிழமை, குறிக்கிறது. பாரிஸ் வெகுஜன மக்களின் அந்த வெடிப்புக்கு சில மாதங்கள் மற்றும் வாரங்களுக்கு முன்னர், படிப்படியாக நீடித்த அரசியல் நெருக்கடி உருவாகிக் கொண்டிருந்தது. அரசு திவால்நிலைமையும் ஊழல்களும் அந்த அரசாங்கத்தின் மதிப்பு மரியாதைக்குக் குழி பறித்திருந்தன. வெவ்வேறு விதமான “சமூக அடுக்குகளைக்” (estates) கொண்டிருந்த பிரான்சின் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த பிளவுகள் உடைந்து, அரசியல் வாழ்வின் மேற்புறத்திற்கு வந்து கொண்டிருந்தன. வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் பரந்த பெரும்பான்மை மக்களை உள்ளடக்கி இருந்த, “மூன்றாவது சமூக அடுக்கு” (Third Estate), பிரபுத்துவத்தின் இரண்டு அடுக்குகளில் இருந்து சுயாதீனமாகவும், அவற்றை எதிர்த்தும் தன்னை ஒழுங்கமைக்கவும் தொடங்கி இருந்தது.
பாஸ்டில் சுவர்களுக்கு வெளியே நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களைக், கோட்டைக்கு உள்ளிருந்து வந்த பீரங்கிக் குண்டுகள் தாக்கின. ஆனால் அந்த பெருந்திரளான வெகுஜன மக்கள் ஆயுதங்களைத் திரட்டி, அந்நகரின் இராணுவப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவினரைத் தங்கள் பக்கம் வென்றெடுத்தனர். அந்தக் கோட்டைச் சுவர்கள் வெகுஜனங்களால் உடைக்கப்பட்டன. அவர்கள் அதன் பாதுகாவலர்களை இரத்தம் சிந்தப் பழி வாங்கினர். ஜீன் ஜாரஸ் (Jean Jaurès), 1901 மற்றும் 1904 இக்கு இடையே, பிரெஞ்சு புரட்சி பற்றிய அவருடைய சோசலிச வரலாற்றில் பின்வருமாறு எழுதினார்:
பாஸ்டில் கோட்டைக் கைப்பற்றப்பட்டதன் தாக்கம் அளப்பரியதாக இருந்தது. உலக மக்கள் அனைவராலும், மனிதகுலத்தின் சிறைச்சாலை வீழ்த்தப்பட்டதாக பார்க்கப்பட்டது. அது மனித உரிமை பிரகடனத்தை விட பெரியதாக இருந்தது; அது மனித உரிமை சேவையில் மக்கள் பலத்தை எடுத்துக்காட்டிய பிரகடனமாக இருந்தது. அது பாரிஸில் இருந்து உலகெங்கிலுமான ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்த ஒளிப்பிழம்பாக மட்டும் இருக்கவில்லை. அடிமைத்தனத்தின் இருண்ட இரவில் அடைக்கப்பட்டிருந்த மில்லியன் மில்லியன் கணக்கான இதயங்களில், சரியாக அந்த தருணத்தில் விடுதலையின் முதல் விடியல் உதித்தது.
பாரிஸிற்குத் தெற்கே 20 மைல் தொலைவில் உள்ள அவரது வேர்சாய் மாளிகையில் பாதுகாப்பாகப் படுத்திருந்த பதினாறாம் லூயி மன்னருக்கு, அன்று மாலை நித்திரையில் இருந்து எழுந்த போது, அரசவை கோமான் (Duc de la Rochefoucauld-Liancourt) தெரிவிக்கும் வரையில், அந்த கிளர்ச்சி குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. மன்னர் லூயி, பதட்டத்துடன், “அப்படியானால் இதுவொரு கலகமா?” என்று வினவினார். “இல்லை, அரசே,” “இது ஒரு புரட்சி!” என்று அந்த பிரபு பதிலளித்தார்.
அமெரிக்க காலனிகள் பிரிட்டனை வெற்றி கொண்டதாகப் பதிவு செய்த பாரீஸ் உடன்படிக்கைக்கு வெறும் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தப் பிரெஞ்சுப் புரட்சி, உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அதன் பரந்த அரசியல் இயக்கவியலில், பின்னர் அதை ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, “தங்கள் சொந்த விதியைத் தாங்களே தீர்மானிக்க பெருந்திரளான மக்கள், அந்த ஆட்சி அதிகாரத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததை அது எடுத்துக்காட்டியது.”1
புரட்சி என்பது ஒரு பிரமாண்டமான சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சி காலக்கட்டத்தின் உச்சக்கட்ட அரசியல் விளைவாகும். அறிவொளி என்பதாக, அதை புத்திஜீவிய புரட்சி எதிர்நோக்கியது. இத்தகைய அறிவொளி, மனிதகுலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பகுத்தறிவு பலத்தைக் கொண்டிருந்தது. அந்த சகாப்தத்தின் சிறந்த சடவாத மெய்யியல்வாதிகள், மனித சமூகத்தை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்தும் மற்றும் அராஜகவாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் அநீதிகளையும் மற்றும் அரசர்களின் தெய்வீக உரிமையையும் மதவாத புராணங்களைக் கொண்டு நியாயப்படுத்திய ஒழுங்குமுறையை விமர்சித்தும், சக்தி வாய்ந்த விதத்தில் புத்திஜீவிய தூண்டுதலை வழங்கினார்கள்.
மிகவும் தீவிரமான விதத்தில், இந்த அறிவொளி சிந்தனையாளர்கள், அவர்கள் விமர்சனங்களில் சமூக சமத்துவமின்மை மீதும் மற்றும் செல்வந்தர்களின் தனிச்சலுகைகள் மீதும் ஒருமுனைப்பட்டார்கள்.
“சமூகத்தின் அனைத்து ஆதாயங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் செல்வந்தர்களுக்குமாக இல்லையா?” என்று 1755 இல் ஜோன்-ஜாக் ரூஸ்சோ (Jean-Jacques Rousseau) கேள்வி எழுப்பினார், இந்த வார்த்தைகள் இன்றும் ஒத்துப் போகின்றன. “அனைத்து சொகுசான பதவிகளையும் அவர்கள் மட்டுமே ஆக்கிரமிக்கவில்லையா? அனைத்து தனிச்சலுகைகளும் விலக்குரிமைகளும் அவர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டு இல்லையா? பொது அதிகாரம் முழுமையாக அவர்களுக்குச் சாதகமாக இல்லையா? உயர்மட்ட மனிதர் ஒருவர் வேறு வழியில் அவருக்குக் கடன் வழங்கியவர்களைக் கொள்ளையடிக்கும் போது அல்லது ஏமாற்றும் போது, அவருக்கு எப்போதும் நிச்சயமாக விலக்குரிமை வழங்கப்படுகிறது இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
1762 இல் எழுதப்பட்ட ரூசோவின் சமூக ஒப்பந்தம் (The Social Contract) என்ற மிக பிரபலமான படைப்பு, “மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவன் சங்கிலியால் கட்டப்படுகிறான்,” என்ற வார்த்தைகளோடு தொடங்குகிறது.
அந்த சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களின் சமூக விமர்சனம், உடனடியாக புரட்சியாக மாறிவிடவில்லை. அவர்களின் புத்திஜீவிய உழைப்பின் விளைவுகள், வெகுஜன மக்களின் நடவடிக்கையில் வெளிப்பாட்டைக் காண பல தசாப்தங்கள் தேவைப்பட்டது. ஆனால் பிரெஞ்சு புரட்சி, அது வேகமெடுத்த போது, மக்களின் பரந்த அடுக்குகளை அரசியல் நடவடிக்கையில் கொண்டு வந்து, முன்னெப்போதும் இல்லாதளவில் தீவிர பரிமாணங்களை அடைந்தது. முடியாட்சியின் முடிவு, நிலபிரபுத்துவ தனிச்சலுகைகள் மற்றும் சொத்துறவுகளின் அழிப்பு, ஒரு குடியரசை நிறுவுதல், அரசருக்கு மரண தண்டனை என்பனவற்றை, 1785 இல் கற்பனையும் செய்து பார்க்க முடியாதவையாக இருந்தன, அதைத் தொடர்ந்து வந்த தசாப்தத்தின் முடிவில் இவை யதார்த்தமாக மாறியிருந்தது.
“பண்பட்ட முதலாளித்துவத்தின் காலடியில் நசுக்கப்பட்ட சமூகத்தின் அடித்தளமே கிளர்ந்தெழுந்து, பெரும் உணர்ச்சியோடு உயிர் பெற்று வருவதைப் போல தோன்றியது” என்று லியோன் ட்ரொட்ஸ்கி அவருடைய ரஷ்யப் புரட்சியின் வரலாற்றில் பிரான்ஸ் சம்பவங்களைக் குறித்து எழுதினார். “அசையாமல் கிடந்தவர்களுக்கு மேலே மனித தலைகள் தலைதூக்கின, உழைத்து காய்த்துப் போன கரங்கள் மேலே உயர்ந்தன, கரகரப்பான ஆனால் தைரியமான குரல்கள் கர்ஜித்தன! பாரிஸ் மாவட்டங்கள், புரட்சியை நடத்திய கேடுகெட்டவர்கள், அவர்களின் சொந்த வாழ்வை வாழத் தொடங்கினர். அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள் — அவர்களை அங்கீகரிக்காமல் இருப்பது சாத்தியமா! — பகுதிகளாக மாறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சட்டப்பூர்வத் தன்மையின் எல்லைகளை உடைத்து, அடிமட்டத்தில் இருந்து புதிய இரத்த ஓட்டத்தைப் பெற்று, உரிமை இல்லாதவர்களுக்கும், ஆதரவற்ற அடிமட்டத்தினருக்கும் (sans-culottes) ஏற்ற சட்டத்தில் அவர்களின் பதவிகளை உருவாக்கினர்.”
அந்தப் புரட்சி, பிற்போக்குவாதிகளின் வெறித்தனமான வெறுப்பைச் சந்தித்தது. புரட்சியின் “மிதமிஞ்சிய செயல்பாடுகளை” பழமைவாதிகளும் மிதவாதிகளும் கண்டித்தனர். ஆனால் மிகவும் முற்போக்கான சிந்தனையாளர்கள் அதன் பாதுகாப்பிற்காக அணி சேர்ந்தனர். பதினாறாம் லூயி மன்னர் கொல்லப்பட்டதையும் மற்றும் புரட்சியைப் பாதுகாப்பதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரங்களையும் கண்டித்தவர்களுக்குத் தோமஸ் ஜெபர்சன் பதிலளித்து கூறுகையில், “பாதி உலகமே பாழானாலும்”, புரட்சியின் தோல்வியைக் காண்பதை விட அதைக் காணவே அவர் விரும்புவதாக கூறினார். “ஒவ்வொரு நாட்டிலும் ஆதாமும் ஏவாளும் மட்டுமே விடுபட்டு இருப்பார்கள் என்றால்,” “இப்போது இருப்பதை விட அது எவ்வளவோ மேல்,” என்று அவர் எழுதினார்.
இன்றைக்கும் பிரெஞ்சுப் புரட்சி பொருந்துகிறதல்லவா? நிச்சயமாக நாம் முதலாளித்துவ ஜனநாயக யுகத்தில் இல்லை, ஆனால் சோசலிச, புரட்சியின் யுகத்தில் இருக்கிறோம். ஆனால் சமத்துவமின்மை, வறுமை மற்றும் ஸ்தாபக ஒழுங்கமைப்பு மீதான புரட்சிகர விமர்சனத்தின் சாராம்சம், முதலாளித்துவ சீரழிவு மற்றும் நெருக்கடி நிலைமைகளின் கீழ் அளப்பரிய பலத்தைப் பெறுகிறது.
அனைத்திற்கும் முதலாவதாக, அதே வீதிகளில், பாரீஸ் இந்தாண்டு வெகுஜன போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் கண்டுள்ளது என்ற உண்மை வெளிப்படையாக உள்ளது. பிரெஞ்சு தொழிலாளர்கள் இதுவரை முதலாளித்துவத்தைச் சிதறடிக்கவில்லை என்றாலும், அவர்கள் போராட்டங்களின் உள்ளடக்கம் நேரடியாக “செல்வந்தர்களின் அதிபர்” இமானுவல் மக்ரோனுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தின் தேவையையும், தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கைத் தூக்கி எறிவதற்கான அவசியத்தையும் எழுப்புகிறது. ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பொலிஸ் வன்முறை மீதான போராட்டங்களுக்கு எதிரான அவரின் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையில் இருந்து பெற்ற புத்துணர்ச்சியோடு, மக்ரோன், அளப்பரிய வறுமை மற்றும் அவலநிலை கொண்ட ஒரு சமூகத்தை ஆட்சி செய்யும், குஜராத்தின் பாசிச கொலைக்காரர், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு நேற்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்.
சகிக்கவியலாத வாழ்க்கை நிலைமைகள் உலகெங்கிலும் சமூகப் போராட்டத்தின் எழுச்சியை உருவாக்கி வருகின்றன. ஒரு சிலவற்றை மட்டும் கூறுவதானால், இந்தாண்டு பிரிட்டனில் தபால்துறை தொழிலாளர்கள், மருத்துவத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் மற்றும் பிற போராட்டங்களையும் கண்டுள்ளது; இஸ்ரேலில் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிரான வெகுஜன போராட்டங்கள் நடந்துள்ளன; கனடாவில் 1,400 தேசிய எஃகுத்துறை கார் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் மற்றும் 7,400 துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடந்துள்ளது, இரண்டாவது வேலைநிறுத்தம் அரசாங்கத்தின் தலையீடு மூலமாக இந்த வாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது; சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையில் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன.
அமெரிக்காவில், 11,000 எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், பத்தாயிரக் கணக்கான நடிகர்களின் வேலைநிறுத்தம் அமெரிக்கத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி உற்பத்தியின் வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கி உள்ளது. இது கல்வித்துறை தொழிலாளர்கள், கிளாரியோஸ் மற்றும் CNH உற்பத்தி ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இது இந்தாண்டு இரண்டாம் பாதியில் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி வெடிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கும் UPS தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் அபிவிருத்தி அடைந்து வரும் போராட்டங்களுக்கு மிகப் பெரும் தூண்டுதலை வழங்கும்.
தவிர்க்கவியலாமல், தொழிலாள வர்க்கத்தின் நனவு ஆரம்பத்தில் அவர்கள் முகங்கொடுக்கும் உடனடி நிலைமைகள் மற்றும் உடனடி பிரச்சினைகளிலேயே மூழ்கி இருக்கும். ஆனால் இந்த அனைத்து போராட்டங்களின் தர்க்கம், அவசரமான ஒழுங்கமைப்பு பிரச்சினைகளை, அதாவது தொழிற்சங்க எந்திரத்தின் இரும்புப் பிடியில் இருந்து உடைத்துக் கொள்ள சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்கான அவசியத்தை மட்டும் உயர்த்துவதில்லை, மாறாக அது பகுத்தறிவற்ற சமூக உறவுகள் மற்றும் சமூகத்தின் தேவைகளோடு அவை பொருந்தாமல் இருக்கும் பிரச்சினைகளையும் உயர்த்துகிறது.
முதலாளித்துவம் அது உயிர் வாழ்வதற்கான உரிமையையும், ஆளும் உயரடுக்கு ஆட்சி செய்வதற்கான அதன் “உரிமையையும்” இழந்து விட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக பெற்ற டிஸ்னி தலைமை செயலதிகாரி பாப் இகர் (Bob Iger), “நடைமுறைக்கு சாத்தியமில்லாத ... எதிர்பார்ப்பு மட்டம்” கொண்டிருப்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வரும் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கண்டிக்கிறார், இது பதினாறாம் லூயி மன்னர் மற்றும் பிரெஞ்சு பிரபுத்துவத்துடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது. சமகால பெருநிறுவன மற்றும் நிதிய எஜமானர்களுடன் ஒப்பிடுகையில், மரி அன்துவாநெத் (Marie Antoinette) கிட்டத்தட்ட பரோபகாரியாகத் தெரிகிறார். அந்த பிரெஞ்சு அரசி, “இனிப்பு பலகாரத்தை உண்ணட்டும்,” என்று வெகுஜனங்களுக்கு கூறினார். இன்றைய பெருநிறுவன முதலாளிகள் அப்படி இல்லை, அவர்கள் மக்களின் ஒரு கணிசமான பிரிவினரை பட்டினியில் வாட விடுவார்கள்.
உலகளாவிய பெருந்தொற்றில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பங்குச் சந்தையை எதிர்மறையாக பாதிக்கும் என்று, முதலாளித்துவ அரசாங்கங்கள் வேண்டுமென்றே குற்றகரமாக அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மறுத்ததால், கடந்த மூன்றரை ஆண்டுகளில், அந்தப் பெருந்தொற்று 20 மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாதளவிலான வெப்ப அலைகள் மற்றும் வெள்ளப் பெருக்குகளில் இருந்து, கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்றுள்ள பருவ மழைக்காலம் வரையில், காலநிலை மாற்றம் பேரழிகரமான விளைவுகளை உருவாக்கி வருகின்ற நிலையில், முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
“எவ்வளவு காலம் ஆகிறதோ அதுவரை” ரஷ்யாவுக்கு எதிரான போரை விரிவாக்குவதே பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோவில் உள்ள அதன் கூட்டாளிகளின் முழுமையான முன்னுரிமையாக உள்ளது. யதார்த்தத்தில், உக்ரேனிலும், ரஷ்யா, ஐரோப்பா எங்கிலும் மற்றும் அதைக் கடந்தும் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் கவலையில்லை என்பதே இதன் அர்த்தம் என்பதை நேற்று WSWS குறிப்பிட்டுக் காட்டியது. அனைத்து நேட்டோ அதிகாரங்களும் இராணுவச் செலவினங்களைப் பாரியளவில் அதிகரிக்க உறுதியளித்தன. இது தவிர்க்கவியலாமல் சமூக திட்டங்களில் என்ன எஞ்சியுள்ளதோ அவற்றை அழிப்பதில் இருந்தே கொண்டு வரப்படும்.
எல்லாவற்றுக்கும் அடியில் இருப்பது, பிரெஞ்சு பிரபுத்துவத்தையே வெட்கப்பட வைக்கும் அளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்களாகும். 2023 இன் முதல் பாதியில் 2,460 மிகப் பெரிய செல்வந்தர்கள் 852 பில்லியன் டாலரைக் குவித்துக் கொண்டார்கள், அதேவேளையில் உலகில் சுமார் பாதி மக்கள் நாளொன்றுக்கு 6.25 டாலருக்கும் குறைவான தொகையில் வாழ்கிறார்கள் என்பதோடு, கடந்தாண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்ததால் திக்குமுக்காட விடப்பட்டுள்ளனர்.
தற்போதிருக்கும் சமூக உறவுகள் மேற்கொண்டு சமூகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது புரட்சிகள் வெடிக்கின்றன என்று பிரான்ஸின் அனுபவங்களை உள்ளீர்த்து மார்க்ஸ் விளக்கினார். “வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் சடரீதியான உற்பத்தி சக்திகள், நிலவும் உற்பத்தி உறவுகளுடன் மோதலுக்குள் வருகின்றன அல்லது — இது வெறுமனே சட்ட ரீதியான அர்த்தத்தில் அதே விஷயத்தை வெளிப்படுத்துகிறது — சொத்துறவுகள் இதுவரையில் எந்தக் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு வந்ததோ அவை இனி அவற்றுடன் மோதலுக்குள் வருகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வடிவங்களால், இத்தகைய உறவுகள் அவற்றுக்குத் தளைகளாக மாறுகின்றன. பின் சமூகப் புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது,” என்றார்.
1914 இல் முதலாம் உலகப் போர் வெடிப்பு மற்றும் 1917 இல் அக்டோபர் புரட்சியில் ரஷ்ய முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டதுடன் தொடங்கிய சோசலிச புரட்சி யுகத்தின் உச்சக்கட்டத்தை மனிதகுலம் அணுகி வருகிறது. பெருந்திரளான மக்கள் எதிர்ப்பின் அதிகரிப்பு, காலாவதியான இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் ஆழமாக வேரூன்றிய மற்றும் தீர்க்கவியலாத முரண்பாடுகளால் உந்தப்பட்டு வருகின்றன.
தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து வரும் பாரிய இயக்கத்திற்குள் ஓர் அரசியல் புரிதலையும் திசையையும் அபிவிருத்தி செய்து, இந்த முதலாளித்துவ ஒழுங்கை துடைத்தெறிந்து உண்மையான சமூக சமத்துவத்திற்கான அடித்தளத்தை நிறுவும் ஒரு நனவுப்பூர்வமான சோசலிச இயக்கத்திற்குள் அதை திருப்பி விடுவதே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவம் செய்யும் உலக ட்ரொட்ஸ்கிய இயக்கம் எதிர்கொண்டிருக்கும் பணியாகும்.
