இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஒக்டோபர் 19 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் வகையில் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (இலங்கை) வெளியிட்ட துண்டுப் பிரசுரம் பின்வருமாறு.
உக்ரேன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ யுத்தம் தீவிரமடைதல், அதிகரித்துவரும் சூழலியல் பேரழிவுகள், தாங்க முடியாத சமூக நிலைமைகள், கோவிட்-19 வைரசின் மற்றொரு சுற்று பரவல், பரவலான வேலையின்மை மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளை நோக்கிய ஆளும் உயரடுக்கின் விரைவான நகர்வுகளதும் மத்தியில், இலங்கையில் உள்ள இளைஞர்களும் மாணவர்களும், உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகளைப் போலவே, 2023 இன் கடைசி காலாண்டில் அடியெடுத்து வைக்கின்றனர்.
உலக முதலாளித்துவ இலாப முறைமையால் இளைஞர்களுக்கு போரையும் சமூக அவலத்தையும் மட்டுமே வழங்க முடியும் என்பதை கடந்த ஆண்டு சக்தி வாய்ந்த முறையில் நிரூபித்துள்ளது.
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் போராடுவதன் மூலம் மட்டுமே இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என்று அறிவிக்கிறது.
உக்ரேனில் போரை நிறுத்து!
2022 பெப்ரவரியில் தொடங்கிய உக்ரேன் போர் இப்போது ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஜூன் மாதம் தொடங்கப்பட்ட, பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய படையினர்கள் கொல்லப்பட்ட உக்ரேனின் 'வசந்தகால தாக்குதல்' என்று அழைக்கப்படுவது ஒரு தோல்வியாகும். அமெரிக்கா மற்றும் நேட்டோவின் கைப்பாவையாக செயல்படும் ஜனாதிபதி செலன்ஸ்கியின் ஆட்சி, ஏற்கனவே 200,000 படையினர்களின் உயிர்களை பலிகொடுத்துள்ளது.
போரைத் தூண்டிவிட்டு, உக்ரேனுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி செய்யும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யாவை அடிபணியச் செய்து, அதை துண்டாடி அதன் பிரமாண்டமான இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது என்ற ஒரு கொள்ளை நோக்கத்தைக் கொண்டுள்ளன. ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நலன்களை முன்னேற்றுவதற்காக பாசிச ஆதரவு பெற்ற செலன்ஸ்கி ஆட்சியைப் பயன்படுத்தும் அதே நேரம், உக்ரேனின் 'ஜனநாயகம்' மற்றும் 'இறையாண்மையை' பாதுகாப்பதாக இந்த சக்திகள் கூறிக்கொள்வது பொய்யாகும்.
அமெரிக்கா, எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டாலும் உக்ரேன் போரில் தோல்வியை ஏற்காது. ஏனெனில் அது ஏற்கனவே மோசமடைந்துள்ள அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை மேலும் கீழறுக்கும். பைடன் நிர்வாகமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யாவிற்கு எதிரான மோதலை அதிகரிக்க பில்லியன் கணக்கான டொலர்களையும் நவீன ஆயுதங்களையும் கொட்டி, பூமியில் அனைத்து மனித இனத்துக்கும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான ஒரு புதிய உலகப் போரின் ஆபத்தை முன்கொணர்ந்துள்ளன.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆரம்பத்தில் இருந்தே உக்ரேனில் நடக்கும் போரையும், ரஷ்ய தன்னல ஆளும் கும்பலின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டின் ஆட்சியின் பிற்போக்கு படையெடுப்பையும் எதிர்த்து வருகின்றது.
* ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் சேருமாறும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ளவர்கள் உட்பட சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போர்-எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுமாறும் நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
போரும் முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியும்
ஒருபுறம் உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியான தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான, மறுபுறம் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் இடையிலான முரண்பாடுகளான, முதலாளித்துவ முறைமையின் அடிப்படை முரண்பாடுகளிலேயே ஏகாதிபத்திய போர் உந்துதல் வேரூண்றியுள்ளது. வர்த்தகம், இயற்கை வளங்கள் மற்றும் கடல் பாதைகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்கான பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான போட்டி, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை விட மிகவும் கடுமையானது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது மேலான இராணுவ சக்தியை ஆக்கிரோஷமாக பயன்படுத்த முயல்கிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் அதே வேளை, அமெரிக்கா சீனாவிற்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களையும் இராணுவக் கட்டமைப்பையும் அதிகரித்து வருகிறது.
இந்த இராணுவ தயாரிப்புகளுக்கு ஏற்ப, வாஷிங்டன் இந்தியாவை சீனாவிற்கு எதிரான முன்னரங்க நாடாக மாற்றியுள்ளது. பெய்ஜிங்குடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு கோரி, சீனாவுக்கு எதிரான தங்களது புவி மூலோபாய நடவடிக்கைகளை இலங்கையும் மற்ற தெற்காசிய நாடுகளும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாஷிங்டனும் புது டெல்லியும் விரும்புகின்றன. இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் பல தசாப்தங்களாக ஒரு பெரிய கடற்படை தளத்தை அமெரிக்கா பராமரித்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நிர்வாகம் உட்பட கொழும்பில் உள்ள அரசாங்கங்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு 'நடுநிலைக் கொள்கையை' கடைப்பிடிப்பதாக வலியுறுத்தி வரும் அதே வேளை, இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு பதிவுகள், அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் நிலையற்ற, மோசடியானவை என்பதைக் காட்டுகிறது.
இலங்கை, வெகுஜனங்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்க இராணுவத்தை தீவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தளவாட வசதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்ற கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தத்தில் (ACSA) வாஷிங்டனுடன் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையத்துடன் இலங்கை இராணுவமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதோடு இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்கிறது.
* அமெரிக்காவுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களையும் இரத்து செய்!
* எந்தவொரு சீன-விரோத இராணுவக் கூட்டணியும் வேண்டாம்!
* இப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை அகற்று!
என ஐ.வை.எஸ்.எஸ்.இ. கோருகின்றது.
போரும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களும்
2001 இல் 'பயங்கரவாதத்தின் மீதான போர்' தொடங்கப்பட்டதில் இருந்து 2022 இல் உக்ரேன் போர் தொடங்கும் வரை, அமெரிக்கா தனது இராணுவத்துக்கும் போருக்காகவும் 8 டிரில்லியன் டொலர்களை (2,596 டிரில்லியன் ரூபாய்) செலவிட்டுள்ளது. பைடன் நிர்வாகம் பெருவணிகங்களுக்கு சலுகைகள் வழங்குவதோடு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இப்போது நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை உக்ரேன் போரில் கொட்டுகிறது.
பெரிய முதலாளித்துவ கூட்டுத்தாபனங்களை பிணை எடுக்கவும் அவற்றுக்கு வரி சலுகைகளை கொடுக்கவும் தொழிலாள வர்க்கமே எலும்புவரை சுரண்டப்படுகிறது. ஜனவரியில் 'பணக்காரர்களின் உயிர்வாழ்வு' என்ற தலைப்பில் வெளியான ஒக்ஸ்பாம் அறிக்கையின்படி, பணக்கார 1 சதவீதம் பேர், 2020ல் இருந்து உருவாக்கப்பட்ட அனைத்து புதிய சொத்துக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை தனதாக்கிக்கொள்கின்றனர், அதாவது, உலகின் மொத்தத் தொகையில் கீழ்மட்ட 99 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் ஆகும்.
கோவிட்-19 தொற்றுநோய் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியை தீவிரமாக்கிய அதே வேளை, உக்ரேனில் தொடங்கிய போரினால் இது மேலும் ஆழப்படுத்தப்பட்டது. நாட்டிற்கு நாடு, ஆளும் உயரடுக்குகள் ஈவிரக்கமின்றி சிக்கன நடவடிக்கைகளை திணித்து, இந்த நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது திணிக்கின்றன. வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியை நசுக்க அரசாங்கங்கள் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்கின்றன.
அதிகரித்துவரும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பலவீனமான பொருளாதாரம், முன்னெப்போதும் இல்லாத சரிவை எதிர்கொள்கின்ற நிலையில், விக்கிரமசிங்க அரசாங்கம் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான கட்டளைகளின் கீழ், 420 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இப்போது தனியார்மயமாக்கல் அல்லது மூடப்படுவதற்கான ஆபத்தில் உள்ளன. அதாவது இலட்சக்கணக்கான தொழில்கள், சம்பளம் மற்றும் ஓய்வூதியமும் வெட்டப்பட உள்ளதுடன் கடுமையான வேலை நிலைமைகள் திணிக்கப்படுவதைக் இது குறிக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் கோரும் அரச செலவின வெட்டுக்களில் பொதுக் கல்வி மற்றும் சுகாதாரமும் பிரதானமாக குறிவைக்கப்பட்டுள்ளன. அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை உட்பட போதிய வளங்கள் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தனியார் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலீடுகளை அதிகரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில், ஐ.நா.வின் அபிவிருத்தித் திட்ட அறிக்கை ஒன்று, இலங்கையின் சனத்தொகையில் 55.7 வீதமானவர்கள் 'பல பரிமாணங்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள்' என்று வெளிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 500,000 பேர் வேலை இழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் இளம் தொழிலாளர்கள்.
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் பாடசாலை கல்வியை இடைநிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரம், நாட்டின் பல்கலைக்கழக மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவைக் தவிர்க்கின்றனர் அல்லது பகுதிநேர வேலைகளைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை, அவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கிறது.
விக்கிரமசிங்கவின் 'பொருளாதார மீட்சி' பற்றிய கூற்றுக்களை யாரும் நம்பக் கூடாது. அரசாங்கம் ஈவிரக்கமின்றி அரச செலவினங்களைக் குறைத்து, சர்வதேச வங்கியாளர்களுக்கு கொடுக்கவேண்டிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் முதலீட்டாளர்களின் இலாபங்களை அதிகரிப்பதற்கும் சமூக உரிமைகளை நசுக்கி வருகிறது.
விக்கிரமசிங்கவின் ஆட்சி ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை வேகமாக முன்னெடுக்கின்றது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட அதன் இணைய பாதுகாப்பு மசோதா மற்றும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை பயங்கரவாதச் செயல்கள் என வரையறுத்து, அவர்களுக்கு கடுமையான சிறைத் தண்டனைகள் வழங்குவதற்கான புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதா ஆகியவை இதில் அடங்கும்.
அரசாங்கத்தை பற்றி பாசாங்கு கண்டனங்களை தெரிவித்தபோதிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளன.
போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) மற்றும் தொழிற்சங்கங்களும் இந்த தாக்குதல்களை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூறி, தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் தடம்புரளச் செய்கின்றனர். எவ்வாறாயினும், எந்த அழுத்தமும் நெருக்கடியில் உள்ள முதலாளித்துவத்தின் கொள்கைகளை மாற்றாது.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. இளைஞர்களையும் மாணவர்களையும் முதலாளித்துவ கட்சிகள், போலி இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கொள்கைகளை நிராகரிக்குமாறு வலியுறுத்துகிறது.
* கல்வி, சுகாதாரம் உட்பட எதையும் தனியார்மயமாக்காதே!
* கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்! அனைவருக்கும் இலவச பொதுக் கல்வி மற்றும் சுகாதாரம் வேண்டும்!
* கொடூரமான இணைய பாதுகாப்பு மசோதா மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்திடு!
தொழிலாள வர்க்கத்தின் பக்கமும் 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சியமான ட்ரொட்ஸ்கிசத்தின் பக்கமும் திரும்புங்கள்!
போரைத் தூண்டும் முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி உலக சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகிறது. இந்த ஆண்டு பிரான்சில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் அரசாங்கத்தின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக போராட நடவடிக்கை எடுத்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனங்களில் 150,000க்கும் அதிகமான வாகனத் தொழிலாளர்கள், கண்ணியமான சம்பளம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை வென்றெடுப்பதற்காக வேலைநிறுத்தம் செய்ய எடுக்கும் முயற்சிகளை, பைடன் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வரும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க அதிகாரத்துவம் தடுத்து வருகின்றது.
இலங்கை போன்று, லெபனான் மற்றும் அர்ஜென்டினா உட்பட நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பலம் வாய்ந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களையும் உள்ளடக்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு வெகுஜன எழுச்சியால் இலங்கை அதிர்ந்தது. அவரது ஆட்சி சரிந்ததால் இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகத் தள்ளப்பட்டார்.
முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும் தலைவர்கள் மற்றும் ஏனைய போலி-இடது குழுக்களினதும் ஆதரவுடன், தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தன. அவை ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யும் விடுத்த அழைப்புகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களை திசை திருப்பிவிட்டன. இந்த அரசியல் துரோகமே விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது.
இலங்கை உட்பட உலகெங்கிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொழிலாள வர்க்கம் மட்டுமே சமூகத்தில் புரட்சிகர சக்தி என்பதை நிரூபித்துள்ளன. இந்தப் புரட்சிகர வர்க்கத்தால் மட்டுமே முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தலைமை தாங்க முடியும்.
தங்களை 'இடது' அமைப்புகளாகவும் அரசியல் கட்சிகளாகவும் போலியாக சித்தரித்துக்கொண்டுள்ள, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்ட், கிரேக்கத்தில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ் மற்றும் இலங்கையில் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்து, ஏகாதிபத்திய போரினதும் முதலாளித்துவ கட்சிகளதும் ஆதரவாளர்களாக செயல்படுகின்றன.
ஏகாதிபத்திய போர், பாசிசம் மற்றும் சோசலிசப் புரட்சி ஆகிய கடந்த நூற்றாண்டின் அனைத்து மைய அரசியல் பிரச்சினைகளும் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலைமையிலான உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே, இந்த மூலோபாய அரசியல் மற்றும் வரலாற்று அனுபவங்களை ஆழமாக ஆய்வு செய்து, முதலாளித்துவத்துக்கு முடிவுகட்டவும் ஒரு சோசலிச எதிர்காலத்தை மேம்படுத்தவும், அனைத்துலக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக ஒரு சர்வதேச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தையும் அபிவிருத்தி செய்கின்றது. ஐ.வை.எஸ்.எஸ்.இ. என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் இயக்கமாகும்.
போருக்கும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டம் பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும். இது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டமாகும். இன்று, இது ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமாகும்.
* 21ஆம் நூற்றாண்டின் மார்க்சியமான ட்ரொட்ஸ்கிசத்தைப் படியுங்கள்!
* உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் திரும்புங்கள்!
* சோசலிசத்திற்காகப் போராடுங்கள்!
* ஐ.வை.எஸ்.எஸ்.இ.ஐக் கட்டி எழுப்புங்கள்!
பைடெனின் ஐ.நா. போர் உரை ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு வழி வகுக்கிறது
இலங்கை அரசாங்கம் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியை கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளது
'தொழில் சட்ட சீர்திருத்தம்' பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது
