மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பவும், கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை எதிர்கொள்ளவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது என்று பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் ஒப்புக்கொண்டதானது, அணுசக்தி சக்திகளுக்கு இடையிலான நேரடிப் போருக்கு உலகம் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியின் மூலம் இதற்கு விடையளிக்கப்பட வேண்டும்.
ஷாப்ஸின் முன்மொழிவுகள் பேரழிவை அச்சுறுத்துகின்றன. உக்ரேனில் பிரிட்டிஷ் இராணுவப் படைகளை வெளிப்படையாக நிலைநிறுத்துவதற்கு ஒரே ஒரு சாத்தியமான நோக்கம் உள்ளது: அதாவது நேட்டோ இராணுவப் படைகளின் தியாகத்தின் மூலம் ஒரு போர்த் தூண்டுதலைத் செய்வதாகும். ஒரு மூன்றாம் உலகப் போர் ஒன்றுதான் தர்க்கரீதியான விளைவாக்குவதாக இது இருக்கிறது.
சண்டே டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'பிரிட்டன் துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பும் கிராண்ட் ஷாப்ஸ் இன்' திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தின் சாலிஸ்பரி சமவெளி பயிற்சி மைதானத்திற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்தும், இதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன் பிரட்டனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஜெனரல் சேர் பேட்ரிக் சாண்டர்ஸ் கலந்துரையாடி, உக்ரேனிலிருந்து திரும்பிய பின்னரும் இந்த திட்டங்கள் வெளிவருகிறது. பயிற்சியை அதிகரிப்பது மற்றும் உக்ரேனில் உள்ள தனியார் நிறுவனங்களால் ராணுவ உபகரணங்களை தயாரிப்பது குறித்து இராணுவத் தலைவர்களிடம் பேசி வருவதாக ஷாப்ஸ் கூறினார்.
'பயிற்சியை இறுதியாக உக்ரேனுக்கும் கொண்டு வருவது பற்றி, நான் பேசும் ஒரு புள்ளி இன்று இருப்பதாக நினைக்கிறேன்.... பயிற்சி மட்டுமல்ல, எடுத்துக்காட்டாக BAE [பாதுகாப்பு நிறுவனம்] 'நாட்டில்' உற்பத்திக்கு நகர்வதையும் நாங்கள் காண்கிறோம்' என்று குறிப்பிட்டார்.
அரசியல் ஆசிரியர் எட்வர்ட் மால்னிக் மேலும் கூறுகையில், 'தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களை ரஷ்யா அதிகளவில் குறிவைத்து வரும் கருங்கடல் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க, பிரிட்டன் மிகவும் சுறுசுறுப்பான பாத்திரத்தை வகிக்க தயாராகி வருவதாக திரு. ஷாப்ஸ் பரிந்துரைத்தார்.'
ரஷ்யாவுடன் முழுமையான போர் அச்சுறுத்தல்
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ், பிரிட்டிஷ் இராணுவப் பயிற்சிகளை உக்ரேன் பிராந்தியத்திற்கு மாற்றுவது 'உங்கள் பயிற்றுவிப்பாளர்களை எங்கள் ஆயுதப்படைகளுக்கான சட்டபூர்வமான இலக்குகளாக மாற்றும், அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்படுவார்கள் என்பதை நன்கு அறிவார்கள், மேலும் இனி கூலிப்படையினராக அல்ல, ஆனால் துல்லியமாக பிரிட்டிஷ் நேட்டோ நிபுணர்களாக' என்று உடனடியாக எச்சரித்தார்.
'உச்சரிக்க முடியாத குடும்பப் பெயரைக் கொண்ட ஜேர்மன் பாதுகாப்புக் குழுவின் தலைவரான மேரி-ஆக்னஸ் ஸ்ட்ராக்-சிம்மர்மேன் - ரஷ்ய கூட்டமைப்பின் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு உரிமை உண்டு என்று அவர் நம்புவதாகக் கூறினார்... இந்த முட்டாள்கள் நம்மை மூன்றாம் உலகப் போரை நோக்கி தீவிரமாகத் தள்ளுகிறார்கள்' என்று அவர் கருத்து தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் போரைத் தூண்டுவதாக ஷாப்ஸ் அச்சுறுத்துகிறார் என்பதை ஊடகங்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தி கார்டியன் இந்த அறிவிப்பை 'அதிக ஆபத்தானது... பாதுகாப்பு அமைச்சகம் ஒருபோதும் அந்த நாட்டில் நிரந்தர இராணுவ இருப்பை ஒப்புக் கொள்ளவில்லை' என்று விவரித்தது.
போரின் தொடக்கத்தில், 'உக்ரேனிய துருப்புக்களுக்கு பயிற்சியளிக்க பிரிட்டிஷ் துருப்புக்கள் பயன்படுத்திய முக்கிய முகாம்களில் ஒன்றான மேற்கு உக்ரேனில் உள்ள தவோரிவ் இராணுவத் தளம், படையெடுப்புக்கு சில வாரங்களுக்குப் பிறகு பல சர்வதேச தன்னார்வலர்கள் உட்பட குறைந்தது 61 பேரைக் கொன்ற பேரழிவுகரமான ஏவுகணைத் தாக்குதலால் தாக்கப்பட்டது' என்று அது குறிப்பிட்டது.
ஆத்திரமூட்டும்-தலைமையாக பிரிட்டனின் பங்கு
எந்தவொரு வெகுஜன ஆதரவும் இல்லாமல் ஒரு பேரழிவுகரமான போரை தீவிரப்படுத்துவதற்கு வெகுஜன எதிர்ப்பைத் தூண்டிவிடக்கூடும் என்ற அச்சம், பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டன் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான உடனடி திட்டங்களை மறுப்பதற்கு வழிவகுத்தது, இது 'நீண்ட காலத்திற்கான ஒன்று, தற்போதைக்கானது அல்ல' என்று பத்திரிகைகளிடம் கூறினார். 'சண்டே டெலிகிராப் தவறுதலாக ஒரு தலைப்பை எழுதியது, அதில் எந்த ஆவணமும் அல்லது விவாதிக்கப்பட்ட எதற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று ஷாப்ஸ் கன்சர்வேட்டிவ் என்ற ஊடகத்திடம் கூறினார்.
பிரிட்டனின் குற்றவியல் திட்டங்கள் பற்றிய ஷாப்ஸின் வெளிப்பாட்டை புதைக்க அரசாங்கம் இப்போது ஒரு அடிமை ஊடகத்தை நம்பியுள்ளது: அதாவது 'அவர்கள் அதை உடனடியாக சரிசெய்தனர், வேறு யாரும் அதை எழுதவில்லை,' என்று அவர் கன்சர்வேடிவ் ஊடகத்திடம் கூறினார். ஆனால் என்ன மறுப்புகள் கூறப்பட்டாலும், பைடென் நிர்வாகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன், பிரிட்டன், முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் ஆத்திரமூட்டல்களுக்கு தயாராகி வருகிறது என்பதை பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த திங்களன்று உலக சோசலிச வலைத் தளம், 'இந்த யதார்த்தம் ஷாப்ஸ் அல்லது சுனக்கின் அறிக்கைகளிலிருந்து மட்டுமல்ல, நிலைமையின் இராணுவ தர்க்கத்திலிருந்தும் எழுகிறது. அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேன் போரின் விளைவு குறித்து தங்கள் நம்பகத்தன்மையை பணயம் வைத்துள்ளன... ரஷ்யாவுடனான மோதலில் உக்ரேனுக்கு மனிதப் பீரங்கி தீவனம் தீர்ந்துவிட்ட நிலையில், விளையாட்டை மாற்றுவதற்கான ஒரே வழி, இதுவரை உக்ரேனிய இராணுவத்திற்கு ஆயுதங்கள், உளவுத்துறை, தளவாடங்கள் மற்றும் கட்டளை கட்டமைப்புகளை வழங்கும் நேட்டோ படைகள், மோதலில் நேரடியாக தலையிடுவதாகும்' என்று எச்சரித்தது.
உக்ரேன் போர் முழுவதும் பிரிட்டனின் பங்கு முன்னணி ஆத்திரமூட்டுபவரின் பங்காக இருக்கிறது. 'உலகில் உள்ள ஒவ்வொரு கூட்டாளியையும் பற்றி... நாங்கள் முதலில் உதவினோம், நாங்கள் முதலில் உபகரணங்கள் வழங்கினோம், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தோம், நாங்கள் அதிக பயிற்சி மற்றும் நுண்ணறிவை வழங்குகிறோம்' என்று ஷாப்ஸ் டெலிகிராப்பிடம் பத்திரிகையுடன் பெருமையடித்துக் கொண்டார்,
ஜனவரி 2023 இல், பிரிட்டன் உக்ரேனுக்கு 14 சேலஞ்சர் II முக்கிய போர் டாங்கிகளை வழங்குவதாக அறிவித்தது, இது லியோபார்ட் டாங்கிகளை வழங்கும் பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்புவது குறித்த தடையை உடைத்தது. ரஷ்யாவின் எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர Storm Shadow ஏவுகணைகளை உக்ரேனுக்கு முதலில் வழங்கியது பிரிட்டன் ஆகும். அத்துடன், பிரிட்டன் தலைமையிலான ஆபரேஷன் இன்டர்ஃப்ளெக்ஸின் (Operation Interflex) ஒரு பகுதியாக, உக்ரேனின் ஆயுதப்படைகளில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் பிரிட்டனில் பயிற்சி பெற்றுள்ளனர், இதில் ஜெட் போர் விமானிகளும் அடங்குவர் - உக்ரேன் நீண்ட காலமாக கோரிய எஃப் -16 போர் விமானங்களை ஒப்படைப்பதற்கான வழியைத் தயார் செய்கிறது.
கருங்கடலில் ரஷ்யக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நேட்டோவின் ஆத்திரமூட்டுபவராக பிரிட்டனின் பங்கு தொடர்கிறது. ஜூன் 2021 இல், நேட்டோவின் Sea Breeze கடற்படை மற்றும் வான் பயிற்சி நடவடிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் நாசகார போர்க் கப்பலான HMS Defender ரஷ்யாவால் உரிமை கோரப்பட்ட கிரிமியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, அதன் எச்சரிக்கை குண்டுகளை எதிர்கொண்டது.
ரஷ்யாவுடன் போருக்குத் தயாராவது என்பது பிரிட்டனின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கையாகும். 2018 ஆம் ஆண்டில், முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சேர் நிக்கோலஸ் கார்ட்டர், பிரிட்டிஷ் இராணுவம் 'சுமார் 2,000 கி.மீ தூரத்திற்கு தரைத் திறனைக் காட்ட வேண்டும்' என்று முன்மொழிந்தார், இன்றைய நடவடிக்கைகளை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட நாஜி அழிப்புப் போருடன் நேரடியாக ஒப்பிட்டார்.
கடந்த கோடையில் ரோயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் (RUSI- Royal United Services Institute) வருடாந்திர 'தரைப் போர் மாநாட்டில்' தனது முக்கிய உரையில், ஜெனரல் சேர் பேட்ரிக் சாண்டர்ஸ், ஷாப்ஸுக்கு விளக்கமளித்தை மேற்கோள் காட்டி, தாக்குதல் போர்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதப்படைகளை பலப்படுத்துமாறு கோரினார். 'பிரிட்டிஷ் இராணுவம் அதன் மிக வலிமையான போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்' என்று சாண்டர்ஸ் வலியுறுத்தினார்.
15 ஆண்டுகளில் முதல் முறையாக ரோயல் விமானப்படை லேக்ன்ஹீத்தில், பிரிட்டன் தனது மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போகிறது என்று செப்டம்பரில் வெளியான தகவலில் எதிர்பார்க்கப்படும் வன்முறையின் அளவு, மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் போரை ஊக்குவிக்கின்றன
ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர்வதும் மற்றும் விரிவாக்கமும் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதில், தொழிற்சங்கங்கள் மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்புக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதில் தொழிற் கட்சி ஆற்றுகின்ற சேவைகளில் தங்கியுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக, நெருக்கடியில் மூழ்கியுள்ள பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் இப்போது உக்ரேனில் அமெரிக்கா தலைமையிலான போர்களுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளது. இது, அதன் முக்கிய ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு எதிராக அதன் உலகளாவிய நலன்களை முன்னிறுத்துவதற்கான முதன்மை அரசியல் பொறிமுறையாக உள்ளது. இது பிரிட்டனின் உலக நிலைப்பாட்டில் பிரெக்ஸிட்டின் பேரழிவுகரமான தாக்கத்தால் வலுப்படுத்தப்பட்ட கொள்கையாக உள்ளது. ஆனால் கோவிட் பெருந்தொற்று நோயின் கொடூரமான தாக்கத்திற்குப் பின்னர் வந்த போரை நோக்கிய திருப்பம் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவது, வாழ்க்கைச் செலவு நெருக்கடியை உருவாக்கியுள்ளது, இது கடந்த கோடையில் தொடங்கிய வேலைநிறுத்த அலையின் வெடிப்புக்கு வழிவகுத்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தங்களை திறம்பட தடை செய்து, குறைந்தபட்ச சேவை சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இதற்கு டோரிகள் பதிலிறுத்துள்ளனர். ஆனால் ரயில், தபால், தொலைத்தொடர்பு, கல்வி, உள்ளூர் அதிகாரம் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்ட சுகாதார சேவை வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் திணிக்கப்பட்ட துரோகங்களை அவர்கள் இதுவரை நம்பியிருக்கிறார்கள்.
பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் வீழ்ச்சியைக் கண்ட ஒரு அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில், லிஸ் ட்ரஸ் பதவி பறிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுனக் நியமிக்கப்பட்டார், மற்றும் இரயில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் 'புட்டினின் கைக்கூலிகள்' என்று ஊடகங்களில் கண்டனம் செய்யப்பட்ட நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவமானது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் அதன் போர் உந்துதலையும் அச்சுறுத்திவந்த பொது வேலைநிறுத்தத்திலிருந்து பாதுகாத்தது.
செப்டம்பரில், உக்ரேனில் நடந்துவரும் போரை பெருமளவில் ஆதரித்து வரும் தொழிற்சங்க காங்கிரஸ் (TUC), 'பிரிட்டனில் இருந்து நிதி மற்றும் நடைமுறை உதவிக்கு' அழைப்பு விடுத்தது. கடந்த ஆண்டு TUC காங்கிரஸ் 'பிரிட்டனில் பாதுகாப்பு செலவினங்களில் உடனடி அதிகரிப்புக்கான துணை நிறுவனங்களின் பிரச்சாரங்களை ஆதரிப்பதற்கு' வாக்களித்தது, 'காங்கிரஸ் ... புட்டினின் ஆட்சியின் மிருகத்தனமான தாக்குதலின் கீழ் உள்ள உக்ரேனிய மக்களுக்கு உதவுவதற்கான பிரிட்டனின் திறனை பாதுகாப்பு உற்பத்தி வெட்டுக்கள் தடுத்துள்ளன என்பதை அது அங்கீகரித்துள்ளது.'
தொழிற்சங்கத் தலைவர்கள், இப்போது தொழிலாளர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், தொழிற்கட்சி அரசாங்கத்தை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று வலியுறுத்துகின்றனர். சேர் கெய்ர் ஸ்டேர்மர் வேலைநிறுத்தங்களுக்கு குரோதப் போக்கை அறிவித்த போதிலும், ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் டோரிகளின் சிக்கன நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அதை இன்னும் திறமையாகச் செய்யும் என்றும் அவர் வலியுறுத்திய போதிலும் இது நடந்துள்ளது. உக்ரேன் போருக்கு தொழிற்கட்சியின் முழு ஆதரவையும் அவர்கள் வெளிப்படையாக ஆதரிக்கின்றனர், இது 'நேட்டோவின் கட்சி' என்று ஸ்டேர்மர் பெருமை பேசுகிறார்.
ஸ்டார்மரையும் அவரது வலதுசாரி போர் வெறியர்களையும் தொழிற்கட்சியின் தலைமைக்கு உயர்த்தியது ஜெர்மி கோர்பனின் அரசியல் பொறுப்பாகும். ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருந்த பாரிய மக்கள் ஆதரவை அணிதிரட்ட அவர் மறுத்தார், இது ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு தயாரிப்பு செய்வதற்கான இன்றியமையாத முன்நிபந்தனையாக இருந்தது.
2015 செப்டம்பரில் கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், சண்டே டைம்ஸ் ஒரு 'மூத்த சேவைத் தளபதி' வெளியிட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது, அவர் பிரதமரானால் 'கலகம்' ஏற்படும் என்று எச்சரித்தது. சிரியாவில் போர், நேட்டோ உறுப்புரிமை மற்றும் பிரிட்டனின் அணுஆயுதத் திட்டத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட ஒவ்வொரு முக்கிய பிரச்சினையிலும் கோர்பினின் பதில் இருந்தது.
2020 இல் கோர்பினுக்குப் பதிலாக ஸ்டார்மர் நியமிக்கப்பட்டது 'தொழிற்கட்சி இடதின்' இறுதி வீழ்ச்சியையும் அதன் தலைமைத்துவத்தில் பெயரளவிலான போர்-எதிர்ப்புப் போக்கையும் அடையாளம் காட்டியது. கடந்த ஆண்டு ஸ்டார்மர் போரை நிறுத்துவதற்கான கூட்டணியை ஆதரிக்கும் அல்லது நேட்டோவை ஒழுங்கு நடவடிக்கை மூலம் விமர்சிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அச்சுறுத்தியபோது, நேட்டோவையும் ரஷ்யாவையும் விமர்சித்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்திற்கு அழைப்பு விடுக்கும் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்ட 11 பேரும் உடனடியாக தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். கோர்பனின் முன்னாள் நிழல் சான்சுலர் ஜோன் மெக்டொனால் தலைமையிலான சோசலிச பிரச்சாரக் குழுவின் (SCG) எஞ்சியுள்ளவற்றில் பெரும்பாலானவை இப்போது பகிரங்கமாக போரை ஆதரிக்கின்றன.
ஒரு வெகுஜன, சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு!
சோசலிச சமத்துவக் கட்சி, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு கோருகிறது, இது பிரிட்டன் மற்றும் முழு உலக மக்களுக்கும் எதிரான ஒரு சதியாக நடத்தப்பட்டு, அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எந்த விவாதமும் இல்லாமல் திணிக்கப்படுகிறது.
தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால், நேட்டோ சக்திகள் ரஷ்யா மற்றும் சீனாவுடன் நேரடி இராணுவ மோதலை நோக்கி தள்ளும் ஒரு மோதலைத் தூண்டிவிட்டுள்ளன, இது அணுஆயுத அழிவிற்கு அச்சுறுத்துகிறது.
பிரிட்டிஷ் தொழிலாளர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் போருக்கு குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பு உள்ளது. ஆனால், இந்த எதிர்ப்புக்கு ஒரு வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் இல்லை. நேட்டோ சக்திகள் உட்பட ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த புட்டின் மற்றும் செலென்ஸ்கி ஆட்சிகளின் திவாலான தேசியவாதத்திற்கு எதிராக ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டில் போர் என்றால் உள்நாட்டில் வர்க்கப் போர் என்று பொருள். ஷாப்ஸ் தனது டெலிகிராப் பத்திரிகைப் பேட்டியைப் பயன்படுத்தி இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உயர்த்தக் கோரினார். இராணுவ இயந்திரத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் முன்னெப்போதையும் விட கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி திரும்புவதன் மூலம் திணிக்கப்படும். எனவே போரை எதிர்ப்பது என்பது ஒரு சோசலிச மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தால் உந்தப்பட்ட வர்க்கப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுப்பதாகும். சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியுள்ளபடி:
ஏகாதிபத்தியப் போர் என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளிலிருந்து, பூகோளப் பொருளாதாரத்திற்கும், உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை வேரூன்றியுள்ள போட்டி தேசிய அரசுகளாக உலகம் பிளவுபடுவதற்கும் இடையே எழுகிறது. எவ்வாறெனினும், இதே முரண்பாடுகள் உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தை உருவாக்குகின்றன. ஏற்கனவே, போரின் விளைவுகள் உலகெங்கிலும் சமூக மோதல்களை பாரியளவில் உக்கிரப்படுத்தி வருகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கம், வாகனத்துறை தொழிலாளர்கள், விமானத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள், சேவைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இன்னபிற பிரிவுகளிடையே வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பது உட்பட வர்க்கப் போராட்டத்தை உந்தித் தள்ளுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியானது, பிரிட்டன், முழு ஐரோப்பிய-நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. முழு ஆளும் வர்க்கத்திற்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திலுள்ள அதன் சேவகர்களுக்கும் மற்றும் அதன் இரண்டு கட்சிகளான டோரி மற்றும் தொழிற்கட்சிக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் மூலமே போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதாவது ஒவ்வொரு பணியிடத்திலும் வர்க்கப் போராட்டத்தின் சுயாதீனமான அங்கங்களான சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதாகும்.
பிரிட்டனில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியானது, ரஷ்யா மற்றும் உக்ரேன் உட்பட, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளர்களை போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் ஐக்கியப்படுத்தும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள (ICFI) எமது சர்வதேச சக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்புகளுடன் இணைந்து கட்டியெழுப்பப்பட வேண்டும்.
