முன்னோக்கு

காஸாவைப் பாதுகாக்கும் ஒற்றுமை போராட்டங்களை சட்டவிரோதமாக்குவதை எதிர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டனில் உள்ள ஆப்ரகாம் லிங்கன் நினைவிடத்தில் பாலஸ்தீனத்திற்கான தேசிய அணிவகுப்பின் போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகளின் புகைப்படங்களை பாலஸ்தீனியர்களின் ஆதரவாளர்கள் கைகளில் வைத்திருக்கின்றனர். மே 29, 2021, சனிக்கிழமை [AP Photo/Jose Luis Magana]

காஸாவில் பாலஸ்தீனிய மக்களின் எழுச்சிக்கு எதிராக, பெஞ்சமின் நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசாங்கத்தின் தாக்குதலானது, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. பதிலுக்கு ஏகாதிபத்திய அரசாங்கங்கள் இந்த எதிர்ப்பைக் குற்றமாக்குவதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதற்கும் நகர்ந்து வருகின்றன.

இஸ்ரேல், காஸாவுக்கு உணவு மற்றும் தண்ணீரைத் துண்டித்து, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் ஒரு தரைவழிப் படையெடுப்பைத் தயாரித்து வரும் நிலையில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அரசாங்கங்கள், இப் பாரிய தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்கின்றன.

ஜேர்மன் பொலிசார், பேர்லின் மற்றும் பிராங்பேர்ட்டில் போராட்டங்களைத் தடை செய்துள்ளனர். பேர்லின் பொலிசார், இந்த நடவடிக்கையை X/Twitter இல் பாதுகாத்ததுடன், “எதிர்ப்பு போராட்டங்கள், யூத எதிர்ப்பு கோபத்தில் வெடித்தெளுதல், மற்றும் வன்முறையை மகிமைப்படுத்துதல் என்பன, வன்முறைக்கு வழிவகுக்கும்” என்று கூறினர். பாலஸ்தீனக் கொடியுடன் பள்ளிக்கு வந்த ஒரு மாணவனை ஆசிரியர் உடல்ரீதியாகத் தாக்கியதைத் தொடர்ந்து, திட்டமிட்ட பள்ளி வன்முறைக்கு எதிரான பேர்லின் போராட்டத்தையும் ஜேர்மன் அதிகாரிகள் தடை செய்தனர். இந்த மாணவர் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் “தூண்டுதல்” மற்றும் “யூத எதிர்ப்பு”  அறிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறினர்.

ஜேர்மனியின் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) எதிர்ப்பு போராட்டங்களைத் தடை செய்வதற்கும் அமைப்புகளைத் தடை செய்வதற்கும் உரிமை கோருகிறது. SPD பொதுச் செயலாளர் கெவின் குஹ்னெர்ட் கூறுகையில், “எதிர்ப்பு போராட்டங்கள் மீதான தடை என்பது இப்போது தேவையான அறிகுறியாகும், துல்லியமாக இந்த நியாயத்துடன், நகரத்தில் பொது ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது” என்று குறிப்பிட்டார். குஹ்னெர்ட் மேலும் பாலஸ்தீனிய கைதிகளின் ஒற்றுமை வலையமைப்பு Samidoun ஐ தடை செய்ய அழைப்பு விடுத்தார், “இந்த குழுவை இப்போது தடை செய்ய ஏதேனும் சட்ட வாய்ப்பு இருந்தால், அதை விரைவில் பயன்படுத்த வேண்டும்”  என்று கூறினார்.

பிரான்சில் உள்துறை அமைச்சகம், “பொது ஒழுங்கை சீர்குலைக்கும் அபாயங்களை” மேற்கோள் காட்டி பாரிஸ், லியோன் மற்றும் மார்சேயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஸாவுடனான ஒற்றுமை ஆர்ப்பாட்டங்களை தடை செய்துள்ளது. மேலும் கூடுதலாக, காசாவின் எழுச்சிக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிடுவது குற்றம் என்று பிரெஞ்சு அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. இது போன்ற அறிக்கைகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது வழக்குத் தொடர அரசாங்கம் அனுமதித்துள்ளது.

நீதி மந்திரி எரிக் டுபோன்-மோரெட்டி, இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையேயான போர், பிரான்சில் யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்கு மட்டுமே இட்டுச்செல்லும் என்றும், ஆனால் “தாக்குதல்களை பாராட்டி வெளிவரும் அறிக்கைகள், அவற்றை இஸ்ரேலுக்கு முறையான எதிர்ப்பாக முன்வைக்கிறது” என்றும் குறிப்பிட்டு சுருக்கமாக மூன்று பக்க எச்சரிக்கையை விடுத்தார். இத்தகைய அறிக்கைகள், பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவது அல்லது பயங்கரவாதச் செயல்களை நேரடியாகத் தூண்டுவது போன்ற “யூத-விரோதக் குற்றங்களாகும்” என்று வலியுறுத்துகிறது. அத்தோடு, இத்தகைய நடவடிக்கைகள் “முதன்மையாக சுருக்கமான தீர்ப்பின் மூலம் முறையான மற்றும் உறுதியான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வதற்கு முகம் கொடுக்க வேண்டும்”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின், வழக்குத் தொடரக்கூடிய கட்சிகள் மற்றும் சங்கங்களில், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை நேற்று உறுதிப்படுத்தினார். முந்தைய ஆண்டுகளில் இந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் இதே போன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. பிரிட்டனில், லண்டனில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டம், பலத்த ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் எதிர்கொள்ளப்பட்டது. ஹமாஸுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்டத்தின் முழு பலத்தையும் பயன்படுத்துமாறு பொலிசுக்கு உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநில தொழிற்கட்சி அரசாங்கம் சிட்னியில் இந்த வார இறுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான அணிவகுப்புக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில், ஹார்வர்ட் மாணவர் குழுக்கள் இஸ்ரேலிய குற்றங்களை கண்டித்தும், காஸா எழுச்சியின் வரலாற்று சூழலுக்கு கவனத்தை ஈர்த்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் போராட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நியூயோர்க் பல்கலைக்கழக மாணவர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஊடகங்களில் இடைவிடாத கண்டனங்களுக்கு உட்பட்டுள்ளார் மற்றும் இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிராகப் பேசியதற்காக அவரது வேலை வாய்ப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் மீதான தடைகளை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன. மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமை, தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏகாதிபத்திய அரசாங்கங்களின் கூற்றுப்படி, மக்கள் அதிகாரப்பூர்வமான ஊடகங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ஹமாஸின் நடவடிக்கைகளை ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால், மக்கள் ஊடகங்களின் முற்றிலும் நேர்மையற்ற திரிபுகள் மற்றும் புனைவுகளை எதிர்க்கின்றனர். பிரமாண்டமான விகிதாச்சாரத்தில் ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இடைவிடாத அட்டூழிய பத்திரிகைகளின் பிரச்சாரத்தால் பொதுமக்கள் திகைத்து நிற்கிறார்கள். இஸ்ரேலிய அரசாங்கத்தின் அட்டூழியங்கள் ஒருபோதும் கண்டிக்கப்படுவதில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே நேரத்தில், இஸ்ரேலிய குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்வதற்கு அப்பால், அரசாங்கங்களின் நடவடிக்கையில் அதிகமானவை உள்ளடங்கியுள்ளன. அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் உயரடுக்குகள், தங்கள் போர்க் கொள்கைகளுக்கு, உள்நாட்டு எதிர்ப்பை எதிர்கொள்வதையும், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் வளரும் இயக்கத்தை எதிர்கொள்கிறோம் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். சர்வாதிகார அதிகாரங்களை அரசின் கைகளில் திணிப்பதன் மூலம், அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புகளையும் நசுக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன.

இந்த சர்வாதிகார நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் வாதங்கள் அரசியல் மற்றும் வரலாற்றுப் பொய்களின் ஒரு திசு ஆகும்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் “பயங்கரவாதத்தை” ஆதரிப்பதாக ஆளும் உயரடுக்கு பொய்யாகக் கூறுவதால், இஸ்ரேலிய அரசாங்கம் முழு அளவிலான அரச பயங்கரவாதச் செயலுக்குத் தயாராகிறது.

கடந்த திங்கட்கிழமை, காஸாவை முழுமையாக மூட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உத்தரவிட்டார். “மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவும் இருக்காது. நாங்கள் மனித விலங்குகளுடன் சண்டையிடுகிறோம், அதன்படி செயல்படுவோம்” என்று கேலன்ட் கூறினார். அன்றிலிருந்து, இந்தக் கொள்கை பின்னர் நடைமுறைக்கு வந்தது. இஸ்ரேலிய விமானப்படை தொடர்ந்து மக்கள்தொகை கொண்ட காஸா பகுதியில் குண்டுகளை வீசுகிறது, இது ஏற்கனவே பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களை பலி எடுத்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் உடனடி தரைவழி தாக்குதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மேலும் அச்சுறுத்துகிறது.

இது, இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களின் வாய்வீச்சுக்கள் மற்றும் வழிமுறைகளை நினைவூட்டுகிறது. அவர்கள், எதிர்ப்பிற்கு மிருகத்தனமான கூட்டுத் தண்டனையுடன் பதிலளித்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில், நாஜி ஆக்கிரமிப்புப் படைகள் 1943 இல் வார்சோ சேரிகளில் (கெட்டோ) யூத எழுச்சியையும், 1944 இல் வார்சோ எழுச்சியையும் நசுக்கியதுடன், அப்பகுதியின் முழு சுற்றுப்புறங்களையும் தரைமட்டமாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது. செக் குடியரசில், கிட்லரின் மூன்றாம் குடியரசின் பாதுகாப்பு முதன்மை அலுவலகத்தின் தலைவர் ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாஜிக்கள் லிடிஸ் கிராமத்தின் மக்களை படுகொலை செய்தனர்.

யூத எதிர்ப்பைப் பொறுத்தவரை, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் யூத-விரோதத்தை ஊக்குவிப்பவர்கள் அல்ல. ஆனால், ஏகாதிபத்திய அரசாங்கங்கள், நெதன்யாகு ஆட்சியின் குற்றவியல் கொள்கைகளுடன் யூத மக்களை கூட்டாக தொடர்புபடுத்த முயற்சிக்கின்றன.

காஸாவுடனான ஒற்றுமையை, யூத எதிர்ப்பு என்று முத்திரை குத்தி அவதூறு செய்யும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய அரசாங்கங்கள், அதிதீவிர வலதுசாரி சக்திகளை வெளிப்படையாக அடித்தளமாகக் கொண்டுள்ளன. அதிதீவிர வலதுசாரி ஆக்ஷன் ஃபிரான்சைஸின் (Action Française) நெருங்கிய ஆதரவாளரான பிரான்சின் உள்துறை அமைச்சர் டார்மானின், கோஷர் மற்றும் ஹலால் உணவுகள் மீதான அவரது பொதுத் தாக்குதல்களுக்கு இழிபுகழ் பெற்றவர் ஆவர்.

இத்தாலியை பாசிச அரசியல்வாதியும் முசோலினியின் அபிமானியுமான ஜியோர்ஜியா மெலோனி வழிநடத்துகிறார். ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) என்ற ஒரு பாசிசக் கட்சியை உருவாக்கி வருகிறதுடன், பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற கல்வியாளர்களைப் பாதுகாக்கிறது. இந்த கல்வியாளர்கள், ஹிட்லர் மற்றும் நாஜிக்களின் குற்றங்களை பகிரங்கமாக குறைத்துக்காட்டி பாதுகாத்து வருகின்றனர்.

உக்ரேனில் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ள நிலையில், முக்கிய நேட்டோ சக்திகள் ஸ்டீபன் பண்டேரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களைக் கொண்டாடும் உக்ரேனிய ஆட்சியை ஆதரித்து ஆயுதங்களை கொடுக்கின்றன மற்றும் அசோவ் பட்டாலியன் போன்ற நவ-நாஜி ஆயுதக் குழுக்களை அணிதிரட்டுகின்றன. கடந்த செப்டம்பரின் இறுதியில், முழு கனேடிய பாராளுமன்றமும், அனைத்து G7 நாடுகளின் தூதர்கள் முன்னிலையில், ஹிட்லரின் Waffen SS படையின் மூத்த மற்றும் நாஜி போர்க் குற்றவாளியான யாரோஸ்லாவ் ஹன்காவுக்காக எழுந்து நின்று கைதட்டியது.

நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை உக்ரேனில் போர், இராணுவ மறுசீரமைப்பு மற்றும் பணக்காரர்களுக்கான வரிக் குறைப்புகளுக்குத் திருப்புவதற்காக, உண்மையான ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளைக் குறைத்து, வாழ்க்கைத் தரங்களில் ஆழமான வெட்டுக்களைச் சுமத்துவதால், தாங்கள் பரவலாக வெறுக்கப்படுவதை இந்த அரசாங்கங்கள் அனைத்திற்கும் தெரியும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி தங்களின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் பணவீக்கத்திற்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்கள் நடந்தன. அதே நேரத்தில் பிரெஞ்சு மக்களின் விருப்பத்தை வெளிப்படையாக மீறும் வகையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திணித்த பாரிய செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக, பிரான்சில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க ஆளும் வர்க்கம் பல தசாப்தங்களில் காணப்படாத ஒரு வேலைநிறுத்த அலையை எதிர்கொள்கிறது, தொழிற்சங்க எந்திரம் அதைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது.

எதிர்ப்பு போராட்டங்களை தடைசெய்ய ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டுவரும் முயற்சியை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொறுப்பற்ற மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கைகளில் மூழ்கிவரும் அவர்கள் ஜனநாயக உரிமைகளை அகற்றி, சர்வாதிகார ஆட்சியை திணிப்பதற்கு நகர்கின்றனர்.

இஸ்ரேலிய படையெடுப்பை நிறுத்தவும், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஆதரவு தேவைப்படுவது போல், சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய ஏகாதிபத்தியத்தின் கீழ்நோக்கிய சுழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாலஸ்தீனியர்களின் சோசலிசப் பாதுகாப்பில் தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் அணிதிரள வேண்டும்.

Loading