மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வியாழன் மாலை, காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலுக்கும், இந்த கொடூரமான குற்றங்களுக்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவிற்கும் எதிராக ஆயிரக்கணக்கானோர் பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில் (Place de la République) ஒன்று கூடினர். சுற்றுப்புறப் பகுதியில் பலத்த ஆயுதம் ஏந்திய பொலிசாரால் தடை மற்றும் முறையான அச்சுறுத்தல்களையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடை செய்யும் முதல் அறிவிப்பு, புதன்கிழமை பிரான்சில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான ஒற்றுமை அமைப்பினருக்கு கிடைத்தது. இந்த அமைப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டுக்கு எதிராக அபத்தமான முறையில் கடந்த வியாழனன்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், “போலீஸ் அதிகாரி இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்ததன் மூலம், கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடல், மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றின் மீது கடுமையான மற்றும் வெளிப்படையான சட்டவிரோதத் தாக்குதலை ஏற்படுத்தவில்லை” என்று அபத்தமாக அறிவித்தார்.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கண்ணீர்ப்புகை குண்டுகள், தண்ணீர் பீரங்கி மூலம் தாக்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு முன்பு, பாரிஸ் போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பத்து பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 24 பேருக்கு 135 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்களின் வன்முறை ஒடுக்குமுறையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்த BRAV-M படைப் பிரிவுகள் வியாழன் மாலை பாரிஸில் நிலைநிறுத்தப்பட்டன. நஹெல் மெர்ஸூக்கின் பொலிஸ் படுகொலைக்குப் பின்னர் வெடித்த எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கும், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களின் போதும் BRAV-M அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்கினர். மற்றும் மோதல்கள் குறித்து பத்திரிகையாளர்கள் செய்தியாக்குவதைத் தடுத்தனர்.


BRAV-M அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய எதிர்ப்பாளர்களைக் கைது செய்ய ஒரு உணவகத்தையும் தாக்கினர்.

பிரெஞ்சு போலீஸ் அதிகாரிகளுக்கு எழுதிய குறிப்பில், உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின் அறிவித்தார்: “பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்கள், பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், அவை தடை செய்யப்பட வேண்டும், மேலும் இந்த தடைசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வது கைதுகளுக்கு வழிவகுக்கும்” என்று கூறினார். எவ்வாறாயினும், உள்ளூர் மாகாணங்கள் ஏற்கனவே கடந்த வாரத்தின் தொடக்கத்தில் போராட்டங்களை சட்டவிரோதமாக்குவதற்கான முன்முயற்சியை எடுத்துள்ளன.
வியாழனன்று பிரான்ஸ் இண்டர் மீதான தனது அடக்குமுறை உத்தரவை நியாயப்படுத்திய உள்துறை அமைச்சர், “100 யூத-விரோத செயல்களை” மேற்கோள் காட்டி, “24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார். இதுபற்றி கூடுதல் விவரங்களை வழங்காமல், இந்த செயல்களில் எத்தனை பிரெஞ்சு யூதர்களுக்கு எதிரான இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள் என்பதும், மக்ரோனின் அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக சியோனிச அரசின் குற்றங்களுக்கு யூத-விரோதமாக தவறாக வகைப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பு எத்தனை என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
“தாக்குதல்களை பாராட்டி, அவற்றை இஸ்ரேலுக்கு நியாயமான எதிர்ப்பாக முன்வைக்கும் அறிக்கைகள் யூத-விரோத குற்றங்களாகும்” என்று நீதி அமைச்சர் எரிக் டுபோன்ட் மோரேட்டி புதன்கிழமை எச்சரித்தார்.
ஏற்கனவே 500 குழந்தைகள் உட்பட 1,500 பேர் கொல்லப்பட்டுள்ள காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்க்கும் அமைப்புகள் அல்லது தனிநபர்கள் கூடி அதை பகிரங்கமாக வெளிப்படுத்துவது இப்போது பிரான்சில் சட்டவிரோதமானது. பாரிஸில் போராட்டக்காரர்களை பொலிசார் தாக்கியபோது, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு தொலைக்காட்சி தேசிய உரையில் இஸ்ரேலின் உரிமைக்காக தனது முழு ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிரான ஜனநாயக விரோத ஒடுக்குமுறைக்கு மத்தியில், வியாழன் மாலை பாரிஸ் எதிர்ப்பு போராட்டத்தின் மீதான பிரெஞ்சு போலீஸ் அரசின் அடக்குமுறை நடந்தது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவால் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் ஜிரோண்ட் மாகாணத்தால் தடை செய்யப்பட்டது. திங்கள் மாலை திட்டமிடப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் லியோனில் தடை செய்யப்பட்டது. மார்சேயில், மாகாண பொலிஸ் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையையும் மீறி 200 பேர் செவ்வாயன்று நகரின் பழைய துறைமுகத்தில் ஒன்று கூடினர். பாலஸ்தீனியர்களை பாதுகாக்கும் போராட்டங்கள் பிரிட்டன் மற்றும் ஜேர்மனியிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
மக்ரோன் அரசாங்கம், அதன் ஐரோப்பிய சகாக்களைப் போலவே, வாழ்க்கைத் தரத்தின் மீதான அதன் தாக்குதல்கள், ஒரு அதிதீவிர வன்முறையான பொலிஸ் அரசைக் கட்டமைத்தல் மற்றும் எட்டு மில்லியன் பிரெஞ்சு முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் இனவெறித் தாக்குதல்களுக்காக பிரெஞ்சு சமூகத்தால் ஆழமாக வெறுக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மற்றும் பரவலாக வெறுக்கப்பட்ட மக்ரோன் பிரெஞ்சு மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில், 62 சதவீத மக்கள் மக்ரோனை தோற்கடிக்க ஒரு நீண்ட பொது வேலைநிறுத்தத்தை விரும்பினர். ஜனாதிபதி பிரெஞ்சு அரசியலமைப்பின் 49.3 ஜனநாயக விரோத விதியின் மூலம் அவரது செல்வாக்கற்ற வெட்டுக்கு தள்ளப்பட்டார். ஆகஸ்ட் மாதம், நாஹெல் பொலிசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்களின் கலவரத்தை அடக்க நாடு முழுவதும் 40,000 போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.
பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்புக்களைத் தடை செய்வதும் ஒடுக்குவதும், ஆண்டு முழுவதும் பிரான்சில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மக்ரோன் மிருகத்தனமாக ஒடுக்கியதன் தொடர்ச்சியாகும். இந்த வார கைதுகளுக்கு முன், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், மற்றும் ஜூலை மாதம் 17 வயதான நஹெல் பொலிசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வெகுஜன போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் 8,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் தாக்குதல்களாலும், ஃபிளாஷ் பிளாஸ்டிக் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியதாலும் டசின் கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் மீதான அதன் அடக்குமுறையானது, பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கான மக்ரோனின் ஆதரவிற்கு உள்நாட்டில் உள்ள எதிர்ப்பு, பிரான்சில் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் நடந்த பாரிய சமூகப் போராட்டங்களை மீண்டும் தூண்டிவிடும் என்ற மக்ரோன் அரசாங்கத்தின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் கழுத்தை நெரிக்கும் மக்ரோனின் ஜனநாயக விரோத முயற்சியை தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்க்க வேண்டும்.
