மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த 12ம் திகதியன்று, ஒரு பிரதான நேர தொலைக்காட்சி உரையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் காஸாவில் பாலஸ்தீன எழுச்சி மீது இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் போருக்கு தயக்கமின்றி ஒப்புதல் அளித்தார். பிரெஞ்சு மக்கள் “தேசிய ஒற்றுமையை” வெளிப்படுத்த வேண்டும் என்றும், ஆதரவற்ற வறிய பாலஸ்தீனியப் பகுதியின் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) இடைவிடாத குண்டுவீச்சை ஆதரிப்பதற்கு, தனது சொந்த செல்வாக்கற்ற அரசாங்கத்தின் பின்னால் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மக்ரோனின் உரைக்கு முன்னர், அவரது அரசியல் ஆலோசகர்கள் அவரது நிலைப்பாடு பிரெஞ்சு மக்களிடையே ஆழமான எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும், இந்த எதிர்ப்பு வெடித்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவதாகவும் ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டனர். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காஸா மீது பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்கி, ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் படுகொலை செய்வதற்கான அதன் அச்சுறுத்தல்களைப் பின்பற்ற முயற்சித்தால் இது குறிப்பாக நிகழும். அத்தகைய கொள்கையானது முற்றுகையிடப்பட்ட காசாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களை கணிசமான விகிதத்தில் படுகொலை செய்வதை உள்ளடக்கும்.
மக்ரோனின் முன்னாள் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பின் ஹாரிஸான்ஸ் கட்சியைச் (Horizons Party) சேர்ந்த லோரன்ட் மார்கன்ஜெலி, “இந்த பிரச்சினையின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு நாம் என்ன சொல்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும், கொஞ்சம் பணிவுடன் இருக்க வேண்டும். நிலைமையானது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இஸ்ரேலின் எதிர்வினை எவ்வளவு வலுவானது என்பதைப் பொறுத்து பொதுமக்களின் கருத்தானது கேள்விகளைக் கேட்கத் தொடங்கலாம். உறைநிலை, திகில் மற்றும் வெறுப்புக்குப் பிறகு (இஸ்ரேலிய பாதிக்கப்பட்டவர்களின் படங்களைப் பார்க்கும்போது), இந்த முறை பாலஸ்தீனிய பக்கத்தில் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களின் பிற படங்கள் மக்களை நகர்த்த வைக்கும்” என்று எச்சரித்தார்.
பொலிடிஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான டெனிஸ் சிஃபெர்ட், Le Monde பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “தன்னியல்பான, கட்டுக்கடங்காத ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கக்கூடும் என்பதே அரசாங்கம் எதிர்கொள்ளும் ஆபத்து” என்று மார்கன்ஜெலியின் கருத்துக்களை எதிரொலித்தார்.
மக்ரோன் தனது அதிவலது உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனிடம் அனைத்து காஸா சார்பு ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்யுமாறு கூறியதோடு, அரசியல் நெருக்கடி குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தைகளுக்கு அனைத்து பிரான்சின் பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களையும் அழைத்தார். நவ-பாசிச தேசிய பேரணியின் (RN) மரின் லு பென் முதல் ஜோன்-லூக் மெலோன்சோனின் போலி-இடது அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியைச் சேர்ந்த மானுவல் பொம்பார்ட் வரை, இந்தக் கட்சிகளின் உயர் அதிகாரிகள் அனைவரும் மக்ரோனை சந்தித்தனர். தற்போதைய சூழலில், இந்த சந்திப்பானது மக்ரோன் தனது தொலைக்காட்சி உரையில் நெதன்யாகுக்கு வழங்கிய கட்டுப்பாடற்ற அனுமதி, முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் இதை அங்கீகரிப்பதற்கு சமமாகும்.
பாலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேலிய அரசின் அடக்குமுறையையும், காஸா மீதான அதன் சட்டவிரோத 16 ஆண்டுகால முற்றுகையையும் புறக்கணித்த மக்ரோன், அதற்கு பதிலாக போரை கேலிக்கூத்தாக காட்டி, இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய பயங்கரவாதத்தின் ஒருதலைப்பட்சமான, முற்றிலும் தீய செயலாக சித்தரித்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியை “அதன் வரலாற்றில் மிகவும் துயரமான பயங்கரவாத தாக்குதல்” என்றும் “முழுமையான கொடூரத்தை கட்டவிழ்த்து விடுதல்” என்றும் அவர் கண்டனம் செய்தார்.
காஸாவிலுள்ள ஹமாஸ் கட்சியை ஒரு “பயங்கரவாத இயக்கம்” என்று முத்திரை குத்திய மக்ரோன், “சிடுமூஞ்சித்தனமான மற்றும் குற்றவியல்ரீதியாக காஸா மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக” மக்ரோன் அதைக் கண்டித்தார். உண்மையில் சிடுமூஞ்சித்தனமும் குற்றச்செயல்களும் மக்ரோனின் பக்கமே உள்ளன. உண்மையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் 16 ஆண்டுகால காசா முற்றுகையின் சகிக்க முடியாத நிலைமைகளால் தூண்டப்பட்ட எழுச்சிக்கு எதிராக, மக்ரோன் தானே அங்கீகரித்துள்ள IDF இன் இனப்படுகொலைத் தாக்குதலின் அச்சுறுத்தலை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்று மக்ரோன் அறிவிக்கவில்லை.
இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் தாக்குதலில் 14 பிரெஞ்சு மக்கள் இறந்ததற்கு சுருக்கமாக இரங்கல் தெரிவித்த மக்ரோன், ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 17 பிரெஞ்சு மக்களை விடுவிக்க பாடுபடுவதாக உறுதியளித்தார். வடக்கு இஸ்ரேலின் எல்லைக்கு அப்பால் ஷியாட் ஹெஸ்புல்லா போராளிகள், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுடன் (IDF) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள நிலைமையில், முன்னாள் பிரெஞ்சு காலனியான லெபனானுக்குள்ளும் சண்டை பரவக்கூடாது என்று அவர் கோரினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு “இரு-அரசு தீர்வுக்கு” மக்ரோன் தனது ஆதரவை சுருக்கமாக குறிப்பிட்டாலும், அவரது முக்கிய கவலை உள்நாட்டில் பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக இருந்தது. பிரெஞ்சு முதலாளித்துவ அரசு காஸா மீதான அனுதாபத்தை ஒரு குற்றமாகக் கருதும் என்பதை அவர் தெரியப்படுத்தினார். “பாலஸ்தீன பிரச்சினையை பயங்கரவாதத்துடன் கலப்பவர்கள் ஒரு தார்மீக தவறை செய்கிறார்கள்” என்று கூறிய அவர், பிரான்சில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் வெளிப்படக்கூடிய “அனைத்து அத்துமீறல்கள், அனைத்து தார்மீக நகர்வுகள், அனைத்து வெறுப்புகளையும்” பிரெஞ்சு போலீசும் இராணுவமும் அடக்கும் என்று உறுதியளித்தார்.
மக்ரோன் பாசாங்குத்தனமாக “பிரான்சின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய குரலை” பாராட்டி முடித்தார், பிரெஞ்சு மக்கள் “சமாதானம் மற்றும் நம்பிக்கையின் செய்தியைச் சுமக்க ஒன்றுபட்டிருக்க” மற்றும் “நமது வரலாறு நிர்ணயித்த தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க” அவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும் என்று கோரினார்.
1789 பிரெஞ்சுப் புரட்சியின் மரபுகளைக் குறிப்பதாகக் கருதப்படும் மக்ரோனின் வெற்றுச் சொல்லாட்சியை, காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களுடன் சமரசம் செய்வது சாத்தியமற்றது. 18 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகப் புரட்சியானது, யூதர்கள், புராட்டஸ்டன்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினருக்கு மனித சமத்துவக் கோட்பாட்டின் பிரகடனத்தின் அடிப்படையில், முழு சட்ட உரிமைகளை வழங்கியது. மறுபுறம், மக்ரோன் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை ஆதரிக்கிறார், இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பாசிச மற்றும் இனப்படுகொலை தன்மையை எடுத்து வருகிறது.
ஐ.நா. சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ள காஸா மீதான அதன் 16 ஆண்டுகால முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலிய அரசு, காஸாவுக்கான அனைத்து உணவு, எரிபொருள், எரிசக்தி மற்றும் மனிதாபிமான உதவிகளையும் துண்டித்து, 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடர்த்தியான பகுதி மீது குண்டுவீசி வருகிறது, அவர்களில் பாதி பேர் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களை “விலங்குகள்” என்று இழிவுபடுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு மக்ரோன் ஒப்புதல் அளித்திருப்பது, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியலின் இரத்தம் தோய்ந்த, மிகவும் பிற்போக்குத்தனமான பாரம்பரியங்களை ஆளும் வர்க்கம் சட்டபூர்வமாக்குவதற்கு, பிரிக்கவியலாத வகையில் பிணைந்துள்ளது. பாரிய இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்) மறுப்பாளரும், நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியை ஊக்குவிப்பவருமான ஜோன்-மேரி லு பென்னின் மகளும், அவரது அரசியல் வாரிசுமான மரின் லு பென்னின் கருத்துக்களில் இது வெளிப்பட்டது. விச்சி மற்றும் பாரிய இனப்படுகொலைக்கு (ஹோலோகாஸ்ட்) தனது தந்தையின் ஆதரவை ஒருபோதும் கண்டிக்காத மரின் லு பென், காஸாவின் மக்கள்தொகையில் பெரும் பகுதியை கொலை செய்யவும், பாலஸ்தீனியர்களிடமிருந்து காஸாவை இனரீதியாக சுத்திகரிக்கவும் வாதிட்டார்.
“பயங்கரவாதமானது கோழைத்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் மிக மோசமான வடிவமாகும்,” என்று லு பென் கடந்த ஞாயிறன்று தீவிர வலதுசாரி சி-நியூஸ் தொலைக்காட்சியிடம் கூறினார், “ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலை நாம் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதற்குப் பின்னர் லு பென், இஸ்ரேலிய படைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் பாரியளவில் படுகொலை செய்வதற்கும், காஸாவில் இருந்து மற்ற அனைத்து பாலஸ்தீனியர்களையும் வெளியேற்றுவதற்கும் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதாவது “பாலஸ்தீனிய மக்களில் ஒரு பகுதியினர் ஹமாஸை ஆதரிக்கிறார்கள். ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பணயக் கைதிகள். எனவே பாலஸ்தீன மக்கள் காஸாவை காலி செய்ய ஒரு புகலிடத்தை திறக்குமாறு சர்வதேச சமூகம் எகிப்திடம் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்த பாசிச வெடிப்பிற்குப் பின்னர் லு பென்னை சந்திக்க மக்ரோனும் பிற பிரெஞ்சு நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களும் எடுத்த முடிவு, நாசிசத்துடனான பிரெஞ்சு ஒத்துழைப்பில் லு பென்னின் அரசியல் மூதாதையர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். இந்த அரசியல் தற்செயலானது அல்ல. முதலாவதாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய ஆளும் வட்டாரங்கள் செயல்படுத்தத் திட்டமிடும் கொள்கை வகையை லு பென் கோடிட்டுக் காட்டினார். மேலும், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமானது, 1991 ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய ஆண்டுகளில், நவ-பாசிசத்தை சட்டபூர்வமாக்க உடன்பட்டுள்ளது.
தொழிலாள வர்க்கத்திற்கும் முழு ஆளும் வர்க்கத்திற்கும் இடையே ஒரு வெடிக்கும் மோதல் உருவாகி வருகிறது. இந்த வசந்த காலத்தில், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்ததுக்கு பின்னர், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு வெகுஜனங்களின் அச்சத்தில் சிக்கியுள்ளது. இந்த கோடையில் நஹெல் போலிஸ் படுகொலைக்குப் பின்னர், பெருவாரியான மக்களின் எதிர்ப்பு மற்றும் பாரிய கலவரங்களையும் மீறி தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான ஒரு ஒப்பந்தம் மூலம், அவர் ஓய்வூதிய வெட்டுக்களை திணித்தார். தொழிலாள வர்க்கத்தில் ஆழமான, வரலாற்றுரீதியாக வேரூன்றிய எதிர்ப்பை முகங்கொடுக்கும் இனச்சுத்திகரிப்பு அல்லது வெகுஜனப் படுகொலைக் கொள்கைகளை சட்டபூர்வமாக்குவதில் அவர் வெற்றிபெறவில்லை.
மக்ரோனுக்கு எதிராக வெடிக்கும் புதிய வர்க்கப் போராட்டங்களில், தொழிலாள வர்க்கமானது போரை எதிர்க்கும் மற்றும் காஸா மீதான தாக்குதலை நிறுத்தும் பணியை எதிர்கொள்ளும். அவரது பாசிச நிலைப்பாடான பாலஸ்தீனத்தில் இரத்தக்களரி ஒரு எச்சரிக்கையாகும்: அதாவது மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை, தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான போராட்டத்தில் அவரது அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும்.
