மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஸ்ட்ராஸ்பேர்க் ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியதற்காக பிரெஞ்சு யூத அமைதிக்கான யூனியன் (UJFP) உறுப்பினரான ஜோன்-குளூட் மெயரை பிரெஞ்சு காவல்துறை கைது செய்தது. மற்றொரு UJFP உறுப்பினரான பெரின் என்ற பெண்மணியும் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்துக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, அப் பெண்மணி விடுவிக்கப்படவில்லை. இஸ்ரேலிய அரசு காஸா மீது தரைவழியான ஆக்கிரமிப்புக்கு தயாராகி வரும் நிலையில், பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ட்ராஸ்பேர்க் பேரணியில் மொத்தம் 13 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பொலிஸ் தலைவர்களுக்கு வழங்கிய குறிப்பாணைக்கு இணங்க, உள்ளூர் பொலிஸ் நிர்வாகத்தினால், பேரணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. “பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், பொது ஒழுங்கிற்கு இடையூறுகளை உருவாக்கும் என்பதால், அவை தடை செய்யப்பட வேண்டும், மேலும் இந்த தடைசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வது கைதுகளுக்கு வழிவகுக்கும்” என்று அந்த குறிப்பாணை கூறுகிறது.
ஜோன்-குளோட் மற்றும் பிற எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் UJFP வெளியிட்ட அறிக்கையில், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலை ஆதரிப்பதில் மக்ரோனின் கொலைகார பங்கையும், அது கட்டவிழ்த்துவிட்ட மக்கள் கோபத்தையும் சுட்டிக்காட்டியது.
“பாலஸ்தீனத்துக்கு ஒற்றுமையைக் காட்ட, மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் (பல இளையவர்கள் உட்பட) எதிர்கொள்ளும் நியாயமான உணர்ச்சி, மீண்டும் ஒருமுறை கொலைகார வன்முறையின் சுழல் தீக்கு இரையாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் குண்டுவெடிப்பு மற்றும் காஸா பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்கொள்கின்றனர். எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகத் தோன்றும் ஒரு கலக்கமடைந்த சக்தி [பிரான்ஸ்] இஸ்ரேலிய அதிதீவிர வலதுசாரிகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது, அது, துன்பப்படும் பாலஸ்தீனியர்களின் குரலைக் கேட்பதை அனுமதிக்க மறுக்கிறது, மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் சிறிதளவு அனுதாபத்தையும் கூட தடை செய்கிறது”.
இஸ்ரேலிய தாக்குதலை வெள்ளையடிப்பதில் பிரெஞ்சு ஊடகங்களின் பங்கையும் அதற்கு உத்தியோகபூர்வ பிரெஞ்சு ஆதரவையும் அறிக்கை விமர்சித்தது. “உத்தியோகபூர்வ ஊடகங்களில் ஒரு வார்த்தையும் இல்லை, போரின் தீவிரத்தை குறைக்கும் திசையில் அதிகாரிகளிடமிருந்து ஒரு சைகையும் இல்லை, மாறாக ஒரு ஒற்றுமை இயக்கத்திற்கான அவமதிப்பின் வெளிப்பாடானது, பாலஸ்தீனிய சார்பு அமைப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அமைதிக்கான யூத ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தெரிவித்த ஒரே பிரெஞ்சு ஊடகம் பிராந்திய செய்திப் பக்கமான Grand-Est de France3 ஆகும். இந்த வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்களின் போது, நூற்றுக்கணக்கான மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர், இருப்பினும் உள்துறை அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.
கடந்த சனிக்கிழமையன்று காஸாவுக்கான மற்றொரு ஒற்றுமை ஆர்ப்பாட்டத்தின் போது, பிரபல இடதுசாரி பத்திரிகையாளரும், அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் முன்னாள் உறுப்பினருமான தாகா பௌஹாஃப்ஸை பொலீசார் கைது செய்து, அவரை எதிர்ப்பு போராட்டத்திலிருந்து அகற்றினர். இருப்பினும் அவர் தனது பத்திரிகைத்துறை நற்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டை பொலீசாரிடம் காட்டினார். பின்னர் அவர் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரான்சில், குறிப்பாக வெளிநாட்டினர் மத்தியில் அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்கும், அவர்கள் மீது அதிக நடவடிக்கைகளைத் திணிப்பதற்கும், பழைய சம்பவமான, உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்த டொமினிக் பெர்னார்ட்டை ஒரு செச்சினிய இளைஞன் கொடூரமாகக் கொன்றதை அமைச்சர் டார்மானின் பயன்படுத்திக் கொண்டார். வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குப் பிறகு, பிரெஞ்சு பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை “அவசரகால தாக்குதலுக்கு” உயர்த்தப்பட்டது, இது மிக உயர்ந்த மட்டமாகும். பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான கூடுதல் போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உளவுத்துறையால் ஆபத்தானதாகக் கருதப்படும் … எந்த ஒரு வெளிநாட்டவரையும் திட்டமிட்ட முறையில் வெளியேற்றுவதாக டார்மானின் உறுதியளித்தார். நாட்டில் இருக்கும் மக்களை [வெளிநாட்டவர்களை] மதிப்பிடுவதற்கும், அவர்களை ஆபத்தானவர்கள் என வகைப்படுத்துவதற்கும், வெளிப்படையாக அவர்களை வெளியேற்றுவதற்கும், அனைத்து அரச சேவைகளிலும், அரச முகவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை முதல் பிரான்சில் 189 யூத-விரோதச் செயல்கள் நடந்ததாகவும், அதில் 65 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் டர்மானின் கூறினார். இணைய வழியில், அநாமதேயமாகப் புகாரளிக்கக்கூடிய பிரெஞ்சு அரசாங்க வலைத்தளமான ஃபரோஸ் (Pharos), யூத எதிர்ப்பு அறிக்கைகள் அல்லது இணையத்தில் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவது குறித்து 2,449 புகார்களைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாலஸ்தீனிய மக்களுடன் பகிரங்கமாக ஒற்றுமையை வெளிப்படுத்தும் எவரும் கைது செய்யப்பட்டு யூத-விரோதமாக வகைப்படுத்தப்படலாம் என்பதால், இந்த சம்பவங்களில் எத்தனை உண்மையான யூத எதிர்ப்பு மற்றும் எத்தனை பாலஸ்தீனிய ஆதரவுக்கு எதிரான அரச அடக்குமுறையின் ஒரு பகுதி என்பதை அறிய முடியாது. இந்த புள்ளிவிவரங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களும் உள்ளதா என்பது தெளிவாக இல்லை.
கடந்த வார இறுதியில், அரசியல் எதிர்ப்பு மீதான பிரெஞ்சு அரசின் ஒடுக்குமுறையின் தீவிரம் ஆளும் வட்டங்களில் உள்ள தீவிர பதட்டத்தை பிரதிபலிக்கிறது. அதாவது, காஸா மீதான இஸ்ரேலிய படுகொலைக்கான அவர்களின் முழு ஆதரவு, பிரான்சில் வர்க்கப் போராட்டத்தை மீண்டும் தூண்டிவிடும் என்ற பதட்டமாகும். அடுத்த வாரம், 1961ல் பாரிஸ் படுகொலையில் பொலிசாரால் கொல்லப்பட்ட 200-300 அல்ஜீரியர்களின் நினைவேந்தல் உட்பட மேலும் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
ஜோன்-குளூட் மெயர் மற்றும் கைது செய்யப்பட்ட இதர பாலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் அரசியல் கைதிகள் ஆவர். அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை, அமைதியான முறையில் தங்கள் அரசியலை வெளிப்படுத்தியதற்காக மட்டுமே கைது செய்யப்பட்டனர். இனப்படுகொலையை கண்டித்ததற்காக யூதர்கள் அரசியல் கைதிகளாக மாற்றப்படும் ஒரு உள்நாட்டு சூழ்நிலை, ஒரு பாசிச பொலிஸ் அரசை திணிக்க ஆளும் வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய தயாரிப்புகளைச் சுட்டிக்காட்டுகிறது.
உலகெங்கிலும் உள்ள அனைத்து யூதர்களின் நலன்களையும் இஸ்ரேலிய அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற பிற்போக்குத்தனமான அரசியல் பொய்யை மேயரின் கைது அம்பலப்படுத்துகிறது. மாறாக, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள பாலஸ்தீனிய மக்களுடன் யூத ஒற்றுமையின் கொள்கை ரீதியான வெளிப்பாடுகள், இஸ்ரேலிய ஆட்சியின் மிருகத்தனமான கொள்கைகளுக்கு யூத மக்களின் பரந்த எதிர்ப்பை காட்டியுள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, அனைத்து அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் கீழ், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் முறையாக ஒரு பாசிச பொலிஸ் அரசை கட்டியெழுப்பியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சம், நாஜி-ஒத்துழைப்பு விச்சி-பிரெஞ்சு ஆட்சியில் இருந்து வந்த மரின் லு பென்னின் அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணியை (RN) மேம்படுத்துவதாகும். மற்றொரு அம்சமாக, பொலிஸ் அடக்குமுறைக்கு ஆதரவாக ஒருமித்த உத்தியோகபூர்வ கருத்தை வெளிப்படுத்தவதாகும்.
மக்ரோனின் உள்துறை மந்திரியான டார்மானின், அதிதீவிர வலதுசாரி மன்னராட்சிவாத Action Française அமைப்பின் அனுதாபியாக இருப்பதோடு, பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பாசிச பரிணாமத்தை வெளிப்படுத்துகிறார். 1899 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது, அப்பாவி யூத அதிகாரியான ஆல்பிரட் ட்ரேபோஸ் என்பவரை சிறையில் தள்ளுவதை ஆதரித்ததுடன், இரண்டாம் உலகப் போரில் நாசிசத்துடன் ஒத்துழைப்பதற்கான முக்கிய கருத்தியல் ஆதரவு அமைப்பாகவும் மாறியது. இதன் அனுதாபியான டார்மானின், பதவிக்கு வந்தவுடன் கோஷர் மற்றும் ஹலால் (யூதர்கள் மற்றும் அரேபியர்களின்) உணவைக் கண்டித்தார்.
கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், அவர் இஸ்லாம் மீது “மென்மையானவர்” என்று நவ-பாசிசத் தலைவர் மரீன் லு பென்னை வலதுபுறத்தில் இருந்து தாக்கினார்.
2021 இல், பிரிவினைவாத-எதிர்ப்புச் சட்டத்திற்கான அரச பிரச்சாரத்திற்கு டர்மானின் தலைமை தாங்கினார். இந்த சட்டமானது, அதன் இதர ஜனநாயக விரோத விதிகளுக்கு மத்தியில், பிரான்சின் 8 மில்லியன் முஸ்லிம்கள் தேசிய ஒற்றுமை மற்றும் பொது ஒழுங்கிற்கு கட்டுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. காஸா மக்களை முழு உலகத்தின் முன்னிலையில் படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசுக்கான மக்ரோனின் ஆதரவை எதிர்க்கும் அனைவருக்கும் இந்த சட்டம் நீட்டிக்கப்படுகிறது.
காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைத் தாக்குதலை எதிர்க்கும் யூதர்களை பிரெஞ்சு பொலிஸ் கைது செய்வது மற்றும் காஸா ஒற்றுமைப் போராட்டங்களைத் தடை செய்வது ஆகியன, யூத மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற பொய் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகிறது. அத்தோடு, இவை அனைத்தும், இஸ்ரேலிய ஆட்சியின் பாரிய கொலைக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பது உட்பட, பெருகிவரும் மக்கள் எதிர்ப்பிலிருந்து பிரெஞ்சு பொலிஸ் அரசைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்ரோனின் பாரிய செல்வாக்கற்ற அரசாங்கம், வெளிநாட்டில் ஏகாதிபத்திய போர் மற்றும் உள்நாட்டில் பொலிஸ் அடக்குமுறை மூலம் அதிகாரத்தில் உள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போரில் பாசிச-ஆக்கிரமிப்பு உக்ரேனிய ஆட்சியை ஆதரிப்பதற்கும் பிரான்சிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், மறுஆயுதமயமாக்கல் திட்டத்திற்கும் அவரது அரசாங்கம் பில்லியன் கணக்கான யூரோக்களை அர்ப்பணித்துள்ளது. இது மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறது. பொலிஸ் வன்முறை மற்றும் இணங்கிப்போகும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவின் கலவையின் மூலம், அவரது பெரும் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களில் இருந்து அவரது ஆட்சி தப்பியது. காஸாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பின் வெடிப்பானது, இந்த அழுகிப்போன அரசியல் கட்டிடத்தை தகர்த்துவிடும் என்று ஆளும் வட்டாரங்கள் தெளிவாக அஞ்சுகின்றன.
காஸா மீதான தாக்குதலுக்கு மத்தியில் ஜோன்-குளூட் மெயரின் கைது, நாசிசத்துடன் பிரெஞ்சு ஒத்துழைப்பின் குற்றங்களை நினைவுகூரும் அனைத்து சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 1940களைப் போலவே, முதலாளித்துவ அமைப்பு ஒரு கொடிய அரசியல் நெருக்கடிக்குள் நுழைந்துள்ளது. இதற்கான எதிர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் வடிவத்தை எடுக்க வேண்டும், மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஊழல் பீடித்த தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக செயல்பட வேண்டும்.
