இலங்கை IYSSE பகிரங்க விரிவுரை: வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய ஒரு அறிமுகம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்புக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தினால் மார்க்ஸிசம் பற்றிய பகிரங்க விரிவுரைத் தொடரை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய ஓரு அறிமுகம்” என்ற தலைப்பில் முதலாவது விரிவுரை, ஒக்டோபர் 26, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் நடைபெறவுள்ளது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (1848) முதல் மூலதனம் நூலின் மூன்று தொகுதிகள் வரை அவர்களின் படைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட சமூக அபிவிருத்தி பற்றிய அறிவியல் கோட்பாடு ஆகும். இந்த கோட்பாட்டின் அடிப்படை முன்மொழிவுகளை, கார்ல் மார்க்ஸ், தனது அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு (1859) (A Contribution to the Critique of Political Economy - 1859) என்ற நூலுக்கான முன்னுரையில் சுருக்கமாக முன்வைத்தார்:

'மனிதர்கள் தங்கள் இருப்புக்கான சமூக உற்பத்தியில், அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாட்பட்டதும், அவர்களின் பொருள் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியின் போதான ஒரு கொடுக்கப்பட்ட கட்டத்திற்கு பொருத்தமானதுமான திட்டவட்டமான உறவுகளுக்குள் தவிர்க்க முடியாமல் நுழைகிறார்கள்… அவற்றின் அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருள் உற்பத்தி சக்திகள், தற்போதுள்ள உற்பத்தி உறவுகளுடன் முரண்படுகின்றன அல்லது –சட்டப்பூர்வமான வார்த்தைகளில் சொல்வதெனில்- அவர்கள் இதுவரை செயல்பட்ட கட்டமைப்பிற்குள் உள்ள சொத்து உறவுகளுடன் முரண்படுகின்றனர். உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியின் வடிவங்களிலிருந்து இந்த உறவுகள் அவற்றின் விலங்குகளாக மாறுகின்றன. அதன் பின்னரே சமூகப் புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது.”

முதலாளித்துவத்தின் தற்போதைய மேலோங்கிய சமூக-அரசியல்-பொருளாதார நெருக்கடியை இந்தக் கோட்பாட்டின் மூலம் மட்டுமே விரிவாகப் பகுப்பாய்வு செய்ய முடியும். அதன் முன்னெப்போதும் இல்லாத தொழில்நுட்ப சாதனைகள் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஒருபுறம் இருக்க, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பை சுரண்டுவதன் மூலம் இலாபத்தைக் கறப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த பொருளாதார முறைமை, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சமூக அவலத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் முதலாளித்துவத்தின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு ஒரு பேரழிவுகரமான உலகப் போரை நோக்கிச் செல்வதன் மூலம் விடையிறுத்துள்ளன. அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்த ஒரு வர்க்கப் போரை நடத்தி வருகின்றன. அது வர்க்கப் போராட்டத்தில் ஒரு எழுச்சியைத் தூண்டுகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நிரூபிப்பது போல், இந்த பிரமாண்டமான நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வை முன்வைக்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். அதுதான் தேசிய அரசு அமைப்பு, உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை ஆகியவற்றின் அடிப்படையிலான முதலாளித்துவ முறைமையை புரட்சிகரமாக தூக்கியெறிந்து, உற்பத்திச் சாதனங்களை தொழிலாள வர்க்கத்தின் பொதுவான உரிமையில் வைப்பதை அடிப்படையாகக் கொண்ட உலக சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரையில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் இந்த அடிப்படைப் புள்ளிகள் விரிவாக விளக்கப்படும். தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் எங்கள் விரிவுரையில் கலந்துகொண்டு புரட்சிகரக் கோட்பாடு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பணிகள் குறித்த இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: விரிவுரை மண்டபம் எண். 86, அரசியல் விஞ்ஞானத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

நாள் மற்றும் நேரம்: அக்டோபர் 26 மாலை 4.00 மணி.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையை பாரதூரமானதாக எடுத்துக்கொள்வதுடன் எங்கள் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களதும் ஏனையோரதும் சுகாதாரப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு KN95 முக கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்கிறது.

Loading