இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
“உக்ரேனில் போர், அதை நிறுத்துவது எப்படி?” என்ற தலைப்பில் அது நடத்தும் கூட்டத்திற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் உள்ள சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரினால் கோபமடைந்திருந்த மாணவர்களிடம் பேசியது.
சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச அளவில் நடத்தப்படும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டங்களின் ஒரு பகுதியாக, அக்டோபர் 19 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் நடைபெறும். “ஐ.வை.எஸ்.எஸ்.இ. (இலங்கை) போருக்கு எதிராக ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்ப மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது!” என்ற அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகளை ஐ.வை.எஸ்.எஸ்.இ. விநியோகித்து வருகிறது.
அக்டோபர் 12 அன்று, ஐ.வை.எஸ்.எஸ்.இ./சோ.ச.க. குழுவினர் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பிரச்சாரம் செய்தனர். “நெதன்யாகுவின் அரசாங்கத்தை வீழ்த்து! காசாவிற்கு எதிரான ஏகாதிபத்திய ஆதரவு சியோனிச தாக்குதலை நிறுத்து!” என்ற தலைப்பிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகளையும் அவர்கள் விநியோகித்தனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 12 அன்று, பல மாணவர்கள் எங்கள் பிரச்சாரகர்களுடன் நின்று பேசினார்கள். உக்ரேன் போர், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக காசா பகுதியில் இஸ்ரேலின் கொடூரமான போர்க்குற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் பலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முகாமைத்துவ மாணவர் பாமுது கூறியதாவது: “சில செய்தி இணையதளங்கள் மூலம் உக்ரேன் போர் குறித்து தெரிந்து கொண்டேன். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஏன் ஒரு போரைத் தொடங்கியது என்பது புரிந்துகொள்ளத்தக்கது: அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டை நேட்டோவில் ஒருங்கிணைக்க அதிகளவில் திட்டங்களைச் செய்து வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் உக்ரேனை தங்கள் பக்கம் கொண்டு வருவதில் வெற்றி பெற்றால், ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போர் ஏவுதளமாக அதை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பதை நன்கு அறிந்துள்ளனர். இந்த வாய்ப்புக்கு பயந்து, மாஸ்கோ அதை ஏற்றுக்கொள்ளாமல் உக்ரேனுக்கு எதிராக போர் தொடுத்தது.
“புட்டின் அரசாங்கம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாக ரஷ்யாவின் ஊழல் நிறைந்த முதலாளித்துவ தன்னலக்குழு பற்றியே அக்கறை காட்டுகின்றது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்ய பிராந்தியத்திற்குள் உள்ள பாரிய கனிம, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை சூறையாடும் முயற்சியில் ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கு அமெரிக்கா உக்ரேனை ஒரு பினாமியாக பயன்படுத்த விரும்புகிறது என்பது தெளிவாகிறது. இலட்சக் கணக்கான உக்ரேனிய இளைஞர்கள் போரில் பீரங்கிக்கு இறையாக்கப்பட்டதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அது கேட்பதற்கு பயங்கரமான செய்தி.
“பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு மிகவும் பயங்கரமானது, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த இனவெறி ஆட்சியைக் கண்டிக்க வேண்டும். வரலாற்றைப் பார்க்கும்போது, 1940களின் இறுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சியால் இஸ்ரேலிய அரசு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது, அதன் பிறகு அவர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்து, பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து வருகின்றனர். இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் வாழும் நரகமாகவும் திறந்த சிறையாகவும் மாறியுள்ள காசா பகுதியிலிருந்து துன்பகரமான செய்திகள் வருவதை என் சிறுவயது முதல் நான் பார்த்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன்.
“இந்த இரத்தக்களரி வரலாற்றை ஒருவர் பார்க்க முடிந்தால், கடந்த தசாப்தங்களில் இஸ்ரேலால் நடத்தப்பட்ட முடிவற்ற இரத்தக்களரி தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரச்சனை என்னவென்றால், அந்தப் பக்கத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை, இப்போது அவர்கள் அனைவரும் ஹமாஸை பயங்கரவாதிகள் என்று கண்டித்து விரல் நீட்டுகிறார்கள். இந்த வரலாறு பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்பதுதான் இங்குள்ள பிரதான பிரச்சினை என்று நினைக்கிறேன். ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் உண்மையைச் சொல்வதில்லை.
“இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இஸ்ரேலின் இரத்தக்களரி ஆக்கிரமிப்பு குறித்து முற்றிலும் மௌனம் காக்கும் அதேவேளை, பாலஸ்தீனியர்களை கண்டித்தார். போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, ஹமாஸை கண்டித்து ஒரு சுவரொட்டியை பேஸ்புக்கில் பதிவிட்டதோடு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக பழைய இரு நாடு கோட்பாட்டை ஊக்குவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது அபத்தமானது. அது எப்படி இருக்க முடியும்? இரத்தம் தோய்ந்த ஆட்சியால் சூழப்பட்ட ஒரு திறந்த சிறை இருக்கும் போது அமைதியான தீர்வு கிடைக்குமா? இதை நான் தீர்வாக நினைக்கவில்லை.
“ஆனால் தீர்வாக நீங்கள் விளக்கியது சிறப்பானது என்று நான் நினைக்கிறேன்: மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இஸ்ரேல் தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்த இஸ்ரேலின் இரத்தக்களரி படையெடுப்பிற்கு எதிராக முன்வர முடியும். இந்த பிரச்சனைக்கு இது மட்டுமே சாத்தியமான தீர்வு என்று தோன்றுகிறது.”
மருத்துவ பீடத்தின் கல்விசாரா தொழிலாளியான குமார கூறியதாவது: “அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் ரஷ்யாவை தாக்க உக்ரேனை ஒரு பினாமியாக பயன்படுத்துகின்றன என்பது மிகவும் தெளிவாக உள்ளது. கடந்த இரண்டு உலகப் போர்களின் போது நாம் கண்டது போல் இதுதான் காலனித்துவம். இருப்பினும், நீங்கள் விளக்கியது போல், அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்புவது பற்றி வெளிப்படையாக பேசுவதால், இந்தப் போர் இனி ஒரு பினாமி போராக இருக்க முடியாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஏற்கனவே உக்ரேனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பியுள்ளன, இது ரஷ்யாவைத் தூண்டிவிடுவதற்கான திட்டமிட்ட முயற்சியாகும்.
“உலகப் போரில் மில்லியன் கணக்கான மனிதர்களை இழப்பதைப் பற்றி ஏகாதிபத்திய நாடுகள் கவலைப்படுவதில்லை. மூன்றாம் உலகப் போரின் ஆபத்து உலக மக்களின் பார்வையில் அதிகரித்து வருகிறது. இந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் என்று சிலர் கூறினாலும், இந்நாட்டு மக்கள் ஏற்கனவே எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்குமான தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி போன்ற அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும், அணுவாயுத யுத்தத்தின் வெடிக்க் கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்த சிறிய தீவை விட்டுவைக்கப் போவதில்லை.
“காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து: பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய இரத்தக்களரி போர்க்குற்றங்களை நான் முற்றிலும் கண்டிக்கிற அதேநேரத்தில் ஹமாஸின் கைகளில் இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்த வழிவகுத்த விடயம், காசாவில் இஸ்ரேலின் பல தசாப்தங்களாக இரத்தக்களரி அடக்குமுறையுடன் மிகவும் பிணைக்கப்பட்டுள்ளது.
“உண்மையில், நான் உங்களுடன் பேசுவதற்கு முன்பு, இந்த போரை நிறுத்த ஒரு வழி இருப்பதாகவும் உழைக்கும் மக்களால் மட்டுமே சக்திவாய்ந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்த முடியும் என்பதையும் நான் தெரிந்திருக்கவில்லை. அது சரியானது. தொழிலாள வர்க்கம் அத்தகைய அளப்பரிய சக்தியைக் கொண்டுள்ளது. உண்மையில், அமெரிக்க தொழிலாள வர்க்கம் வேலை செய்வதை நிறுத்தினால் அது போரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் சக்தியை அறியவில்லை. இதை நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.”
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான கனிஷ்க, அக்டோபர் 5 அன்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்களுடன் பேசினார்.
“உக்ரேன் போரில் இலட்சக்கணக்கான படையினர் இறந்துள்ளனர். இந்தப் பேரழிவு இருந்தபோதிலும், அமெரிக்கா இந்தப் போரைத் தொடர விரும்புகிறது. இது மேலும் மேலும் நாடுகளை இந்த மோதலுக்குள் இழுத்துப் போடும். சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் எந்த நேரத்திலும் அதை ஒரு பரந்த போராக மாற்றலாம். இந்தப் போர் தானாகத் தீவிரமடைந்துவிடும் என்று நாம் நினைக்க முடியாது. போரை எதிர்க்க ஒரு உலகளாவிய தொழிலாள வர்க்க இயக்கத்தை நாம் உணர்வுபூர்வமாக கட்டியெழுப்ப வேண்டும். அந்த வகையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன், அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
போரினால் நாசமாக்கப்பட்ட இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில், திமுத்து என்ற விஞ்ஞானப் பீட மாணவர், கொழும்பு அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் செய்துள்ள இராணுவ உடன்படிக்கைகளை எதிர்த்தார்.
“அமெரிக்கப் படைகள் நமது நாட்டை ஒரு இராணுவத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுமானால், அது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் என்று வரும்போது, வெளிநாடுகளில் அவர்களின் இழிவான சரித்திரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருப்பதையும் கருத்தில் கொண்டல்ல, அது நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.
“இலங்கை அங்கம் வகிக்கும் இராணுவ உடன்படிக்கைகளை மட்டுமல்ல, எந்தவொரு இராணுவ உடன்படிக்கையையும் நாம் எதிர்க்க வேண்டும். அவை ஆளும் உயரடுக்கின் நலனுக்கு மட்டுமே சேவை செய்கின்றன. உக்ரேனில் நடக்கும் போரைப் பாருங்கள். நாங்கள் அமெரிக்க-நேட்டோ பக்கத்தையோ அல்லது புட்டினின் ஆட்சியையோ ஆதரிக்க முடியாது.
“தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ் தேசியவாத கட்சிகளுடனும் நிர்வாகத்துடனும் மூடிய கதவுகளுக்குள் சதி செய்யும் மாணவர் சங்கத்தால் பயமுறுத்தப்படுவதால், மாணவர்கள் முன்வருவதில்லை. இங்கு பேச்சு சுதந்திரம் இல்லை. இருப்பினும், போர் ஏற்பாடுகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”
தமிழ் பேசும் மாணவர் ஒருவர் கூறியதாவது: “ஏகாதிபத்திய சக்திகள் உலக வளங்களை சுரண்டவும், தங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும் இந்தப் போரை நடத்துகின்றன. சர்வதேச நாணய நிதிய கொள்கைகள் மூலம் இங்கும் அதுவே செய்யப்படுகிறது. அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு, நம் நாட்டில் உள்ள வளங்கள் சர்வதேச முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
“இந்தப் போரையும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில், ஒரு மாணவனாக, நான் எந்த பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நம்பவில்லை. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சொந்த நலனுக்காக செயல்படுகின்றன. தற்போது, இந்த தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக ஏகாதிபத்திய போர் உந்துதலின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.
நெதன்யாகு அரசை வீழ்த்து! காஸா மீதான ஏகாதிபத்திய ஆதரவு சியோனிச தாக்குதலை நிறுத்து!
இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடக்கும் வன்முறைக்கு யார் பொறுப்பு?
காஸாவைப் பாதுகாக்கும் ஒற்றுமை போராட்டங்களை சட்டவிரோதமாக்குவதை எதிர்!
