பிரெஞ்சு மொரேனோயிட்டுக்கள் காஸா, ஈரான் மீதான அமெரிக்க-நேட்டோ போர் விரிவாக்கத்தை மூடிமறைக்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அர்ஜென்டினா சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) மற்றும் அமெரிக்காவில் இடது குரல் (Left Voice) ஆகியவற்றுடன் இணைந்துள்ள பிரெஞ்சு மொரேனோயிஸ்டுகளால் நடத்தப்படும் செய்தி தளமான Révolution Permanante (RP) ஆனது, மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய போரை மூடிமறைக்கிறது. காஸா மீதான இஸ்ரேலிய போருக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் சர்வதேச வெடிப்பிற்கு மத்தியில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை திசைதிருப்ப முயற்சிக்கும் அது, வாஷிங்டனை மத்திய கிழக்கில் அமைதிக்கான ஒரு சக்தியாக பொய்யாக சித்தரிக்கிறது.

“பாலஸ்தீனம்: வாஷிங்டன் காஸாவில் நடந்த படுகொலைகளை மறைக்கிறது, அதே நேரத்தில் பிராந்திய மோதலைத் தவிர்க்க முயல்கிறது” என்ற தலைப்பில் ஜூலியன் அன்சாங் மற்றும் வொல்ஃப்காங் மாண்டெல்பாம் எழுதிய கட்டுரை யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. காஸாவுக்கு எதிரான இனப்படுகொலை இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பான அமெரிக்க கொள்கையானது “பிராந்தியத்தில், குறிப்பாக லெபனான் மற்றும் ஈரானில் மோதல் அபாயத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தால் தீர்மானிக்கப்படுகிறது, அதே நேரத்தில் வாஷிங்டனின் முக்கிய மூலோபாய நலன்கள் இப்போது இந்தோ-பசிபிக்கில் உள்ளன” என்று அவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க கடற்படையால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தில், இரண்டு அமெரிக்க விமானப்படை F-35A லைட்னிங் II போர் விமானங்களானது தாக்குதல் கப்பல் USS Bataan மற்றும் வழிகாட்டி ஏவுகணை தாக்குதல் கப்பலான USS Thomas Hudner ஆகிவற்றில் இருந்து, ஓமான் வளைகுடாவில் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 17,2023 அன்று பறக்கின்றன. ஆகஸ்ட் 20,2023 அன்று ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சமீபத்திய நாட்களில் பாரசீக வளைகுடாவின் குறுகிய முகத்துவாரமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக Bataan கடந்து சென்றது. [AP Photo/U.S. Navy via AP]

இந்த சுயதிருப்தியான மற்றும் பொய்யான பகுப்பாய்வு பிரான்சிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மையப் பிரச்சினையை மூடிமறைக்கிறது: அதாவது ஏகாதிபத்திய போரின் ஒரு பாரிய பிராந்திய மற்றும் உலகளாவிய விரிவாக்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வாஷிங்டன் மற்றும் பாரிஸ் உட்பட அதன் நேட்டோ கூட்டணிகளால் தூண்டிவிடப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலகப் போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பணியாகும். Révolution Permanante (RP) சார்ந்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக சர்வதேச அளவில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அவர்கள் அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

வாஷிங்டனானது சிரியாவில் ஈரானியப் படைகள் மீது குண்டுவீசுவதுடன் ஹெஸ்பொல்லாவை அச்சுறுத்தி வரும் நிலையில், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானை மோதலில் ஈடுபடுத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக, மூடிய கதவுகளுக்குப் பின்னால், காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை பைடென் எதிர்க்கிறார் என்று RP கூறுகிறது. அதாவது “ஒரு உடன்பாடு அல்லது பேச்சுவார்த்தையைத் தேடி, இஸ்ரேலிய தாக்குதலைத் தணிக்க பைடென் எந்த விலை கொடுத்தாவது முயல்கிறார்” என்று கட்டுரை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

அக்டோபர் 6-7 எழுச்சிக்குப் பிறகு இஸ்ரேல் உடனடியாக காஸா மீது படையெடுக்கவில்லை. ஏனென்றால், “காஸாவிலுள்ள நிலைமை முழு பிராந்தியத்தையும் ஒரு வெடிப்பைத் தூண்டும் என்ற அச்சம், குறிப்பாக ஈரான் ஆதரவுடன் ஹெஸ்பொல்லாவின் முழுமையான அர்ப்பணிப்பு விடயத்தில், மோதலில் [தலையிட]... ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக மோசமாக இருந்ததால், வாஷிங்டனின் தற்போதைய முன்னுரிமை ஒரு ஈரானிய முன்னணி போர் அரங்கைத் திறப்பதைத் தவிர்ப்பதாகும், அதே நேரத்தில் அமெரிக்காவின் இராணுவ வளங்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் உக்ரேனை நோக்கி நிலைநிறுத்தப்படுகின்றன.”

உண்மையில், பைடன் “என்ன விலை கொடுத்தும்” அமைதியை விரும்பவில்லை, மாறாக போரை விரும்புகிறார். அக்டோபர் 13 அன்று, ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகையானது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஒரு அறிவுறுத்தல் குறிப்புக் குறித்து செய்தி வெளியிட்டது. “பதற்றத்தை குறைத்தல் / போர்நிறுத்தம்”, “வன்முறை / இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி” மற்றும் “அமைதியை மீட்டெடுப்பது” ஆகிய சொற்களை பத்திரிகை வெளியீடுகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அது அவர்களுக்கு அறிவுறுத்தியது.

மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியதிலிருந்து, பைடென் இஸ்ரேல் மற்றும் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்க 105 பில்லியன் டாலர்கள் நிதி கோரினார். புதன்கிழமை, பைடென் இஸ்ரேல் தரைவழி படையெடுப்பை தாமதப்படுத்துமாறு “கோரவில்லை” என்பதை உறுதிப்படுத்தினார், இருப்பினும் ஒரு தரைவழி படையெடுப்பு தொடங்கினால், ஒரு இனப்படுகொலையைத் தடுக்க, ஈரானும் ஹெஸ்புல்லாவும் இராணுவ ரீதியாக தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளன. வெள்ளியன்று, வாஷிங்டன் சிரியாவிலுள்ள இராணுவத் தளங்கள் மீது குண்டுவீசியதுடன், அவைகள் ஈரானின் புரட்சிகர காவலர் படையால் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியது.

டிசம்பர் 4, 2022 அன்று சிரியாவிலுள்ள கொனோகோவில் தாக்குதல் திட்ட உதவித் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த M777 howitzer பீரங்கியால் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.   [Photo: US Department of Defense/ Army Sgt. Julio Hernandez]

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் அல்-அஹ்லி மருத்துவமனை மீது குண்டுவீசியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க மறுப்பதற்கு ஆதரவு அளிப்பது ஒரு எச்சரிக்கையாகும்: அதாவது இஸ்ரேலிய ஆட்சியால் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தக் குற்றமும் நேட்டோவை ஆதரிக்க முடியாத அளவுக்கு கொடூரமானதாக இருக்காது.

அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகளாலும் ஒரு பெரிய இராணுவ விரிவாக்கத்திற்கான உடனடி தயாரிப்புகளைப் புறக்கணித்துவிட்டு, அன்சாங்கும் மண்டேல்பாமும் அமைதிக்கான அமெரிக்காவின் விருப்பம் சீனாவின் மீது கவனம் செலுத்துவதிலிருந்து வருகிறது என்று கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்:

இறுதியில், அமெரிக்கா கவனம் செலுத்த விரும்புவது உக்ரேன் அல்லது மத்திய கிழக்கு அல்ல. வாஷிங்டனின் மூலோபாயமானது மோதலில் அதன் அனைத்து இராஜதந்திர மற்றும் இராணுவ வளங்களையும் மீண்டும் ஒன்று குவிப்பது அதன் முக்கிய எதிரியான, சீனா. .... 

எனவே பைடெனுக்கும், அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கும், பரந்த அர்த்தத்தில், மத்திய கிழக்கு வெடித்துச் சிதறாமல், ஆப்கானிஸ்தானில் இருந்து அவர்கள் திரும்பிச் சென்ற பிறகு மீண்டும் காலடி வைக்க மாட்டோம் என்று சபதம் செய்த ஒரு பிராந்தியத்தில் மீண்டும் போரில் ஈடுபட அமெரிக்காவை “கட்டாயப்படுத்தவில்லை”.

இந்தக் கூற்றுகளில் ஒன்று கூட உண்மை இல்லை. அமெரிக்கா மத்திய கிழக்கில் “மீண்டும் போரில் ஈடுபட” தேவையில்லை: ஏனெனில் அது முதலில் ஒருபோதும் அங்கிருந்து பின்வாங்கவில்லை. அக்டோபர் 7 பாலஸ்தீன எழுச்சிக்கு முன்னர் ஈராக்கில் 2,500 அமெரிக்க துருப்புக்களும் சிரியாவில் 900 துருப்புக்களும் இருந்தன. துருக்கி, எகிப்து, குவைத் மற்றும் பாகிஸ்தானில் தளங்களை வாஷிங்டன் வைத்துள்ளது. விமானம் தாங்கி போர்க்கப்பல் அணிகள், ஏவுகணை பாதுகாப்பு தளங்கள் மற்றும் 11,000ம் துருப்புக்களை பிராந்தியத்திற்கு அனுப்புவதன் மூலம், வாஷிங்டன் காஸாவின் பொது மக்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஈரான் உட்பட முக்கிய பிராந்திய சக்திகளுக்கு எதிராகவும் ஒரு பாரிய போர் விரிவாக்கத்திற்கு தயாரிப்பு செய்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கிலோ அல்லது ஐரோப்பாவிலோ அமைதிக்கான ஒரு சக்தியாக மாறவில்லை, ஏனெனில் அது சீனாவுக்கு எதிராக அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. பெல்ட் மற்றும் ரோட் பூகோள உள்கட்டமைப்பு முன்முயற்சியின் (Belt-and-Road global infrastructure initiative) பின்னணியில் ஈரானுடன் ஒரு இராணுவ கூட்டணியில் கையெழுத்திட்டுள்ள சீனாவிடமிருந்து ஈரானை தனிமைப்படுத்துவது உண்மையில் அமெரிக்க-நேட்டோ கொள்கையின் முக்கிய குறிக்கோளாகும். மேலும், இந்தக் கூட்டணியை கருத்தில் கொண்டு, வாஷிங்டன் ஈரானுடன் ஒரு போரை தொடங்கினால், அது சீனாவுடனான போருக்கும் வழிவகுக்கும்.

Révolution Permanante (RP) இன் ஏகாதிபத்திய-சார்பு பொய்கள், வசதியான நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் பல்கலைகழக சுற்றுவட்டச் சூழலில் பணிபுரியும் மாணவ இளைஞர்களின் பொருள்சார் நலன்களைப் பிரதிபலிக்கின்றன. 2021 வரை, இந்த அமைப்பு குட்டி-முதலாளித்துவ பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் (NPA) ஒரு பிரிவாக செயல்பட்டது. இது குறிப்பாக தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை நோக்கியதாக உள்ளது, இந்த வசந்த காலத்தில் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன வேலைநிறுத்த இயக்கத்தின் கழுத்தை பிரான்சின் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நசுக்குவதால் அது ஒரு “புரட்சிகர” நோக்குநிலையை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று அது கூறியது.

1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலகட்டத்தில், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) Révolution Permanante (RP) ஐ பிரிக்கும் வர்க்க பிளவு தெளிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தின் தொடக்கத்தில், பனிப்போர் சகாப்தத்தில் எதிர்ப்புரட்சிகர சோவியத் அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக கூட்டணி வைத்திருந்த CGT அதிகாரத்துவங்கள் வெளிப்படையாக ஏகாதிபத்தியத்தை ஆதரிக்க மறுத்தன. இரண்டாம் உலகப் போரில் நாஜிசத்தைத் தோற்கடிப்பதில் முக்கியப் பங்காற்றிய சோவியத் ஒன்றியத்தின் நண்பர்கள் போல அவர்கள் காட்டிக் கொண்டனர்.

எவ்வாறெனினும், கடந்த மூன்று தசாப்தங்களில், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சந்தாத் தொகையின் அடித்தளம் வீழ்ச்சியடைந்து, அவைகள் பெருநிறுவன நிதியை முன்னெப்போதையும் விட அதிகமாகச் சார்ந்திருந்தபோது, அவற்றின் போலி-இடது அரசியல் கூட்டாளிகள் ஏகாதிபத்தியத்தை இன்னும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டனர். “ஜனநாயகப் புரட்சி” என்று கூறும் போராட்டத்தின் பாகமாக 2011 இல் தொடங்கிய லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ போர்களை NPA அங்கீகரித்தது. NPA மற்றும் RP இரண்டும் உக்ரேனில் ரஷ்யாவுடனான அடுத்தடுத்த நேட்டோ போரை அங்கீகரித்தன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (PES) மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே ஏகாதிபத்தியத்திற்கான NPA-RP ஆதரவை அம்பலப்படுத்துவதிலும் எதிர்த்தும் இருந்தன. இது ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கில் இருந்து வந்ததாகும்: அதாவது ட்ரொட்ஸ்கி எச்சரித்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பானது முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியை தீர்க்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டில் புரட்சிகரப் போராட்டங்களின் போக்கில் அதன் நேரடி அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வேறு எந்த நிலப்பரப்பையும் மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கும் ஏகாதிபத்தியத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (PES) சமரசமற்ற எதிர்ப்பை பேணி வருகிறது.

காஸா மீதான நேட்டோ ஆதரவு இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் ஈரான் மீதான ஒரு பரந்த நேட்டோ போரை எதிர்க்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. அணுஆயுத சக்திகள் சம்பந்தப்பட்ட மூன்றாவது உலகப் போர் வெடிப்பதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அல்லது RP போன்ற நடுத்தர வர்க்கக் குழுக்கள் அத்தகைய போராட்டத்தை ஒழுங்கமைக்கும் வரை காத்திருக்க முடியாது, அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். யுத்தத்தை எதிர்ப்பவர்கள் சுயாதீனமாக, வேலையிடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில், யுத்தத்தால் முன்வைக்கப்படும் பாரிய ஆபத்துக்கள் குறித்து தொழிலாள வர்க்கத்தை முடிந்தவரை பரந்தளவில் எச்சரிக்க வேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் வெடித்துச் சிதறும் வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு RP இன் ஏகாதிபத்திய-சார்பு சுயதிருப்தியை நனவுடன் எதிர்ப்பது அவசியமாகும். அதனுடைய பெயர் சிடுமூஞ்சித்தனமாக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டைக் குறிக்கிறது, ஆனால் RP ஆனது பிரெஞ்சு தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் இணைந்து ஒரு இயக்கத்தைக் கட்டமைப்பது அல்ல, மாறாக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சியைத் தடுப்பதற்காக வேலை செய்கிறது. NPA மற்றும் RP பிரதிநிதித்துவப்படுத்தும் போலி-இடது அரசியலுக்கு எதிராக பிரான்சில் கட்டியெழுப்பப்பட வேண்டிய ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு சோசலிச சமத்துவக் கட்சியாகும் (PES).

Loading