மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உலக சோசலிச வலைத் தளம், காஸா பகுதியில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக, நவம்பர் 9, வியாழன் அன்று உலகம் முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு பரந்த ஆதரவையும் பங்கேற்பையும் கோருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், பாலஸ்தீனத்தில் உள்ள தொழிலாளர்கள், பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் மற்றும் பாலஸ்தீனிய இளைஞர் இயக்கம் உட்பட, “பாலஸ்தீனத்துக்காக முடக்குங்கள்” என்பதன் அமைப்பாளர்கள், வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தங்களில் ஈடுபடுமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகின்றனர்.
இனப்படுகொலைக்கு மிகப்பெரிய சர்வதேச தொழிலாள வர்க்க எதிர்ப்பு உள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அதன் அரசுக்கும் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குவதை நிறுத்துவதற்கான தொழில்துறை நடவடிக்கைக்கு ஆதரவும் உள்ளது. இஸ்ரேலிய இராணுவப் பொருட்களை கையாள மறுக்கும் பெல்ஜியம் மற்றும் ஸ்பானிய தொழிற்சங்கங்களின் தீர்மானங்களும், அதே போல் தொழிலாளர்களிடையே பரப்பப்படும் திறந்த கடிதங்கள் மற்றும் தீர்மானங்களும் இதில் அடங்கும்.
உலகெங்கிலும் வெடித்துள்ள எதிர்ப்புகளின் அளவு, அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியா வரை உலகம் முழுவதும் பரவி வரும் தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் அலையை பிரதிபலிக்கிறது. காஸாவில் நடக்கும் சண்டை என்பது இஸ்ரேலிய அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளால் மட்டும் நடத்தப்படவில்லை. ஆதலால், இது ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய போராட்டம் ஆகும்.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், காஸா மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாக இருப்பதுடன், காஸா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு, ஒரு மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டியது தீர்க்கமானதாகும்.
ஏற்கனவே கோடிக் கணக்கான மக்களை உள்ளடக்கிய ஒரு தலைமுறையின் மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், மற்றும் உலகளாவிய எதிர்ப்புக்களுக்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பிரதிபலிப்பு, அதன் இனப்படுகொலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக இருக்கிறது. காஸா பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை இப்போது 10,000 யும் தாண்டியுள்ளது, அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குழந்தைகள் ஆவர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) இரத்தம் தோய்ந்த தரைவழி படையெடுப்பிற்குத் தயாராகும் வகையில், காஸா நகரத்தை முற்றுகையிட்டுள்ளன. காஸா பகுதி முழுவதும், ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடி நிலவுகிறது, ஏனெனில் முழு மக்களும் ஒரு மாதமாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் வேண்டுமென்றே மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுமக்கள் கட்டிடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
காஸாவிற்கு எதிராக அணு ஆயுதங்கள் பாவிக்கப்படுவது ஒரு விருப்பத் தேர்வு என்று தீவிர வலதுசாரி பாரம்பரிய அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் கருஃது உட்பட வெகுஜனக் படுகொலைகள் மற்றும் இனச் சுத்திகரிப்புக்கான அதன் திட்டங்களைப் பற்றி இஸ்ரேலிய ஆட்சிக்குள் மேலும் மேலும் வெளிப்படையாகப் பேசப்படுகிறது, இதிலிருந்து உயிர் தப்பிப்பிழைப்பவர்கள் “அயர்லாந்து அல்லது பாலைவனங்களுக்கு” சிதறடிக்கப்படுவதுடன், மேலும் பாலஸ்தீனிய மக்கள் “பூமியின் முகத்தில் தொடர்ந்து வாழக்கூடாது” என்பது அதன் நோக்கமாக உள்ளது.
ஆனால், இஸ்ரேல் ஒரு சுதந்திரமான நடிகர் அல்ல. அது 1948 இல் நிறுவப்பட்டதிலிருந்து, உலக ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது. கடந்த செவ்வாயன்று, தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி மீண்டும் மீண்டும் கூறிய போல் இஸ்ரேலுக்கு “சிவப்பு கோடுகள் இல்லை” என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக டசின் கணக்கான போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவத்தினர்களின் வருகையுடன் முழு மத்திய கிழக்கையும் சுற்றி வளைத்து வருகிறது.
அமெரிக்க-நேட்டோ சுழலச்சில் உள்ள மற்ற சக்திகளுடன் சேர்ந்து, அமெரிக்கா, காஸா மீதான தாக்குதலை ஒரு வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரில் ஒரு முனையாக மட்டுமே பார்க்கிறது, அதை அவர்கள் வேண்டுமென்றே தூண்டி வருகிறார்கள்.
இனப்படுகொலையை அமெரிக்கா ஆதரிப்பதன் காரணம், அது ஈரானுக்கு எதிரான போருக்கு, வெளிப்படையான தயாரிப்புகளுடன் பெருகிய முறையில் பிணைந்திருப்பதே ஆகும் கடந்த வாரம் ஈராக்கிற்கு, வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் பயணமானது, ஈரானில் உள்ள ஒவ்வொரு பெரிய நகரத்தையும் அழிக்கும் திறன் கொண்ட ஓஹியோ-வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்துவதன் மூலம், மத்திய கிழக்கில் போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தும் வாஷிங்டனின் முயற்சிக்கு, பாலஸ்தீன மக்கள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
உக்ரேனில் நடந்தவருகின்ற போர், மூன்றாம் உலகப் போரின் மற்றொரு பெரிய போர் முனையாகும். அதன் மக்கள்தொகையை, அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் பீரங்கிக்கு இறையாக்கி வருகின்றன. காஸாவில் இனச் சுத்திகரிப்புக்கான அமெரிக்க மற்றும் நேட்டோவின் ஆதரவு, இந்தப் போரின் உண்மையான இலக்குகள், உக்ரேனின் இறையாண்மை அல்லது “மனித உரிமைகள்” மீதான அக்கறையுடன் எந்தவகையிலும் தொடர்புபட்டதல்ல, மாறாக, யூரேசியப் பிரதேசத்தின் மேலாதிக்கம் மற்றும் அதன் பிரதான மூலோபாய போட்டியாளர்களின் அழிவுடனும் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது.
1939ல், இரண்டாம் உலகப் போர் வெடித்ததில் இருந்து, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் மிகத் தீவிரமான நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பிதிபலிப்பே இந்தப் போர் ஆகும். சமீபத்தில் அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்புக்கான மூலோபாய உந்துதல்களை மிக அப்பட்டமாக விளக்கிய ஜனாதிபதி பைடன், “நாங்கள் 50 ஆண்டுகளாக போருக்குப் பிந்தைய காலத்தில் இருந்தோம், அந்த உலக ஒழுங்கு நன்றாக வேலை செய்தது, ஆனால் அது ஆவியாகி விட்டது, அந்த உலக ஒழுங்கைப் போல, ஒரு புதிய உலக ஒழுங்கு தேவை” என்று குறிப்பிட்டார்.
ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறுவப்பட்ட பழைய உலக ஒழுங்கைப் போலவே, ஒரு புதிய உலக ஒழுங்கானது, ஒரு வழியில் மட்டுமே நிறுவப்பட முடியும்: அது, பாரிய இராணுவ மோதலினாலேயே ஆகும். அணு ஆயுதங்களின் யுகத்தில் இது பூகோளத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் உயிரையும் அச்சுறுத்துகிறது. முடிவில்லா தேசிய மோதல்கள் மற்றும் பூகோள வளங்களின் மீதான மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்தியப் போராட்டங்களுடன் முதலாளித்துவ அமைப்பு முறை காலாவதியாகிவிட்டதோடு மட்டுமன்றி மனித நாகரீகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் உள்ளது என்பதை இதைத் தவிர வேறு எதுவாலும் தெளிவாகக் காட்ட முடியாது.
காஸாவைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். ஆனால், இந்த எதிர்ப்புக்களின் சக்தியும், இனப்படுகொலையை நிறுத்துவதற்கான அவற்றின் திறனும், தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலின் அளவிலும், இஸ்ரேலிய ஆட்சி மற்றும் அதன் ஆதரவாளரான ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி சமூக மற்றும் அரசியல் சக்தியாக வெளிப்படுதலின் அளவிலும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, போருக்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருப்பதும், முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சர்வதேச சோசலிச தன்மையை தெளிவாக பெறுவதும் இன்றியமையாததாகும். ஒரு தார்மீக கட்டாயத்தின் நிலைப்பாட்டில் இருந்து மட்டுமன்றி, முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான மற்றும் உலகத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்குமான அதன் போராட்டத்தில் உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் பாலஸ்தீனிய மக்களின் நலன்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போர், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு உலகளாவிய போரின் தன்மையைக் கொண்டுள்ளதுடன் உழைக்கும் மக்களுக்கு எதிரான அத்தகைய யுத்தத்தின் பிரதான போர்முனை அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் சொந்த நாடுகளுக்குள்ளேயே இருக்கிறது. முதலாளித்துவம், போருக்குத் தேவையான டிரில்லியன் கணக்கான டாலர்களை செலுத்துவதற்கும், அதே போல் தள்ளாடும் நிதிய அமைப்புக்கு முண்டுகொடுப்பதற்கு தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் குழுக்களை தடைசெய்வது மற்றும் சியோனிசத்திற்கு எதிராக முன்நிற்கும் நபர்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளபடி, ஆளும் வர்க்கம் அனைத்து வகையான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் குற்றமாக்குவதற்கு போர் வெறியைத் தூண்ட முயற்சிக்கிறது.
நீண்ட காலமாக ஏகாதிபத்தியப் போர் மற்றும் CIAயின் சூழ்ச்சிகளை ஆதரித்து வரும் தொழிற்சங்க எந்திரம், உள்நாட்டில் “தொழிலாளர் அமைதியை” நிலைநாட்டுவதில் பிரதான வகிபாகம் ஆற்றி தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் மேலும் மேலும் வெளிப்படையாக ஒன்றிணைந்து வருகின்றது.
சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் முதல் இரயில்வே தொழிலாளர்கள், UPS தொழிலாளர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் வரை ஒவ்வொரு முக்கிய தேசிய தொழிலாளர் ஒப்பந்தத்திலும், ஜனாதிபதி பைடென் தனிப்பட்ட முறையில் மற்றும் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும், வேலைநிறுத்தங்களைத் தடுக்கவும் அல்லது மட்டுப்படுத்தவும், ஊதிய உயர்வைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பாரிய வேலை இழப்புகளுக்கு வழி வகுக்கும் ஒப்பந்தங்களைத் திணிக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வேண்டுமென்றே வேலை செய்து வருகின்றன.
தொழிலாள வர்க்கத்தில் பாலஸ்தீனியர்களுக்கு பரவலான அனுதாபமும், போருக்கு எதிர்ப்பு இருந்தாலும், AFL-CIO தொழிற்சங்கமானது, கடந்த மாதம் பாலஸ்தீனிய “பயங்கரவாதத்தை” கண்டித்து இஸ்ரேலுக்கு அதன் ஆதரவை தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டது. AFL-CIO தலைவர் லிஸ் ஷுலர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளூர் தொழிற்சங்க அமைப்புகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் இஸ்ரேலிய போர் இயந்திரத்திற்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு தொடர்ந்து அனுமதித்தது. எடுத்துக்காட்டாக, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் (UAW), பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான ஜெனரல் டைனமிக்ஸில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. சமீபத்திய உரையில், (இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ஆயுத உற்பத்திக்கான சொற்பொழிவு) UAW தலைவர் ஷான் ஃபைன், அமெரிக்க போர் இயந்திரத்திற்கு ஆதரவாக “ஜனநாயகத்திற்கான புதிய ஆயுதக் களஞ்சியத்திற்கு” அழைப்பு விடுத்தார். இந்த உரையில், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு அதிக வேலைகள் மற்றும் சிறந்த ஊதியம் கிடைக்கும் என்று பொய்யாகக் கூறினார்.
காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஏகாதிபத்திய-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள தொழிலாளர்களின் போராடுவது அவசியமாகும். தொழிற்சங்க எந்திரத்தை சீர்திருத்தாமல், அதை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கடந்த ஆண்டு, UAW தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சோசலிச வாகனத் தொழிலாளியான வில் லெஹ்மன், இஸ்ரேலுக்கு உபகரணங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைத் தடுக்க தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இது ஒரு சர்வதேச நிகழ்வாகும்: தொழிலாளர்கள், எந்த போராட்ட இயக்கத்தையும் தடுப்பதில் உறுதியாக உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களை எதிர்கொள்கின்றனர். இங்கிலாந்தில் TUC முதல் பிரான்சில் CGT மற்றும் ஜேர்மனியில் IG Metall வரை, ஒவ்வொரு நாட்டிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தங்கள் ஏகாதிபத்திய அரசாங்கங்களுடன் இணைந்துள்ளன.
இந்தப் போராட்டம் அரசாங்கங்கள் மீது அழித்தம் கொடுப்பதை அன்றி, அவை அனைத்துக்கும் எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் ஒரு தீர்க்கமான பங்கு வகிக்கவேண்டியுள் அதே நேரம், மத்திய கிழக்கிலேயே பல்வேறு முதலாளித்துவ ஆட்சிகளின் பிரதிபலிப்பு முற்றிலும் உடந்தையானதாக உள்ளது.
இனப்படுகொலையானது, ஒரு யூத அரசின் சியோனிச முன்னோக்கின் வரலாற்று திவால்நிலையை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியத்தின் கொள்கையற்ற இராஜதந்திர சூழ்ச்சிகளில் பாலஸ்தீனிய மக்களை பல தசாப்தங்களாக பகடைக்காய்களாகப் பயன்படுத்திய முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் திவால்நிலையையும் அம்பலப்படுத்துகிறது.
இப்போது பாலஸ்தீனியர்களுக்காக அவர்கள் முதலைக் கண்ணீர் விட்டாலும், மத்திய கிழக்கில் உள்ள இந்த முதலாளித்துவத் தலைவர்கள் அனைவரும், இஸ்ரேலின் குற்றவியல் தாக்குதலை எதிர்ப்பதை விட, தங்கள் சொந்த நாடுகளில் உருவாகும் ஒரு வெகுஜன இயக்கத்தைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள்.
உலகில் சமத்துவமின்மையின் மிக உயர்ந்த மட்டத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக உள்ள, விரைவாக வெளிப்படையான பொலிஸ் சர்வாதிகார ஆட்சிக்கு மாறி வருகின்ற இஸ்ரேலின் தொழிலாள வர்க்கத்தினுள்ளேயே எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய இயக்கத்தின் முன்னோக்கு, சியோனிசத்தை முற்றிலுமாக நிராகரிப்பது, இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவது, மற்றும் மத்திய கிழக்கிலும் உலகம் முழுவதிலும் சோசலிச குடியரசுகளை ஸ்தாபிப்பதன் ஒரு பகுதியாக, ஒரு பன்னாட்டு அரசை நிறுவுவதையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
மனிதகுலத்தின் தலைவிதி பின்வரும் கேள்விக்கான பதிலால் தீர்மானிக்கப்படும்: விரைவாக அபிவிருத்தியடையப் போவது எது ? உலகப் போர் மற்றும் அணு ஆயுத அழிவை நோக்கிய உந்துதலா அல்லது போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கமா? அந்தக் கேள்விக்கான பதில், தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச அளவில் ஒன்றுபட்ட புரட்சிகர சக்தியாக அணிதிரட்டுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் முன்னெடுக்கப்படுகின்ற தீவிரமான போராட்டத்தில் இருந்தே கிடைக்கும்.
