கேனனின் "பகிரங்க கடிதம்" எழுதப்பட்டு எழுபது ஆண்டுகள்

உலகம் முழுவதிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் - நவம்பர் 16, 1953

James P. Cannon

இன்றிலிருந்து எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 16, 1953 அன்று, அமெரிக்காவின் சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) உலகம் முழுவதிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு “பகிரங்க கடிதம்” ஒன்றை வெளியிட்டது. SWP இன் தேசிய செயலாளரான ஜேம்ஸ் பி. கேனனால் எழுதப்பட்ட இந்தக் கடிதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அமைப்பதற்கான வேலைத்திட்ட அடிப்படையை உருவாக்கியது. அந்த நேரத்தில் SWP ஆனது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அமெரிக்கப் பிரிவாக இருந்தது.

1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ், நான்காம் அகிலம் அடித்தளமாக கொண்டிருந்த இன்றியமையாத அரசியல் கொள்கைகளைப் பாதுகாப்பதும், ஒரு சுயாதீனமான புரட்சிகர அமைப்பாக அது உயிர்வாழ்வதும் ஆபத்தில் இருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பப்லோவாதம் என்று குறிப்பிடப்படும் ஒரு வடிவ திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இந்தச் சொல் அதன் முதன்மைத் தலைவரும் அதற்காக வாதாடுபவருமான மிஷல் பாப்லோவினுடைய பெயரால் உருவானது, அவர் அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.

அதன் சாராம்சத்தில், டேவிட் நோர்த்தினுடைய படைப்பான நாம் காக்கும் மரபியத்தில் விளக்குவது போல், “அனைத்திற்கும் மேலாக, பப்லோவாதம் என்பது கலைப்புவாதமாக இருந்தது (மற்றும் அது இருக்கிறது): அதாவது, சோசலிசப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று பாத்திரத்தின் நனவான வெளிப்பாடாக நான்காம் அகிலத்தின் உண்மையான சுயாதீனமான இருப்பையும் பப்லோவாதம் நிராகரிக்கிறது.”

கேனனின் பகிரங்கக் கடிதத்திலிருந்து ஒரு சுருக்கமான பகுதியை கீழே வெளியிடுகிறோம். முழுக் கடிதத்தையும் இங்கே பார்க்கலாம். பப்லோவாதத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய விரிவான ஆய்வு மற்றும் கேனனின் “பகிரங்கக் கடிதம்” நாம் காக்கும் மரபியத்தில் உள்ளது.

***

அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும்!

அன்புள்ள தோழர்களே!

அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 25வது ஆண்டு நிறைவு நாளில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியக் குழுவின் நிறைபேரவை (Plenum) உலகம் முழுவதிலும் உள்ள மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவருக்கும் புரட்சிகர சோசலிச வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரால் இயற்றப்பட்ட ஜனநாயக விரோத சட்டங்களால் சோசலிச தொழிலாளர் கட்சியானது (Socialist Workers Party), சமுக ஜனநாயகவாதிகளின் இரண்டாம் அகிலத்தாலும் ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் அகிலத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நிறைவேற்றுதற்கும் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிச புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தில் இணையாமல் இருந்தாலும் நமது அர்ப்பணிப்புள்ள தலைவரின் வழிகாட்டுதலில் உருவான உலக ரீதியான அமைப்பின் நலன்களில் அக்கறை கொள்கின்றோம்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் முன்னோடி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினர் கிரெம்ளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட கொள்கைகளை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதற்கூடாக ஸ்ராலினிஸ்டுகளின் அரச நிர்வாக எந்திரத்தின் மூலம் ட்ரொட்ஸ்கியை கடுமையாக அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்தியதை முறியடித்ததுடன் நான்காம் அகிலத்தை அமைப்பதற்கான அடிப்படையை அமைத்தனர். அதன் பின்னர் ட்ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார். அதிலிருந்து அவரது மரணம் வரை ட்ரொட்ஸ்கிக்கும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்குமிடையே நெருக்கமான நம்பிக்கையான நட்புறவு நீடித்தது.

பல்வேறு நாடுகளில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிகளை உருவாக்குவதற்கு கூட்டு முயற்சிகள் உட்பட முறையான ஒத்துழைப்பு ஏற்பட்டது. இதனுடைய இறுதிக்கட்ட நடவடிக்கைதான் 1938-ம் ஆண்டு நான்காம் அகிலம் உருவாக்கப்பட்டதாகும். அப்போது ட்ரொட்ஸ்கி அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒத்துழைப்புடன் எழுதியதுதான் இடைமருவு வேலைத்திட்டம் (Transitional Program). இது ட்ரொட்ஸ்கி கேட்டுக்கொண்டதற்கிணங்க அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் இயக்க உருவாக்க மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எந்த அளவிற்கு ட்ரொட்ஸ்கிக்கும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் இயக்கத்திற்கும் இடையே நெருக்கம் இருந்தது என்பதற்கு பேர்ன்ஹாம் மற்றும் சட்மன் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட குட்டி முதலாளித்துவ எதிர்ப்பிற்கு எதிராக மரபுவழி ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடர்பானவற்றை 1939-40ம் ஆண்டு கட்சி ஆவணங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இது, இதனைத்தொடர்ந்த 13 ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியில் முக்கிய ஆதிக்கத்தை கொண்டிருந்தது.

ஸ்ராலினது இரகசிய போலீஸ் கைக்கூலிகள் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்த பின்னர் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி, ட்ரொட்ஸ்கியின் தத்துவங்களை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் முன்னணியில் நின்றது. நாங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டமை தேர்வினால் அல்லாது தேவையினாலாகும். இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பல நாடுகளில் மரபுவழி ட்ரொட்ஸ்கிச அணியினர் தலைமறைவாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறிப்பாக நாஜிக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கூடுதலாக தலைமறைவாக இருக்கவேண்டியிருந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளுடன் இணைந்து எங்களால் முடிந்தவரை கடுமை நிறைந்த போர்க் கால ஆண்டுகளில் மரபுவழி ட்ரொட்ஸ்கிச சித்தாந்தங்களை காப்பாற்றி வந்தோம்.

ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியிருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போர் முடிந்ததும், பகிரங்கமாக வெளிப்பட்டு நான்காம் அகிலத்தை அமைப்பு ரீதியில் சீரமைக்கத் தொடங்கினர். நான்காம் அகிலத்தில் நாங்கள் உறுப்பினர் ஆவதை அமெரிக்க சட்டங்கள் தடுக்கப்பட்டதிலிருந்து ட்ரொட்ஸ்கியின் இயக்கத்தை அவர்விட்டுச் சென்ற உயர்ந்த பாரம்பரியத்தை நிலைநாட்டும் திறமை மிக்க தலைமை உருவாகும் என்று நம்பினோம். ஐரோப்பிய நாடுகளில் நான்காம் அகிலத்திற்கு தலைமை ஏற்ற இளம் புதிய தலைவர்களுக்கு ஆதரவும், முழு நம்பிக்கையும் கிடைக்கவேண்டுமென்று விரும்பினோம். ஐரோப்பிய தோழர்கள் தங்களது பிழையான போக்குகளைத் தாமே திருத்திக்கொள்ள ஈடுபட்ட நேரத்தில், எங்களது செல்லும் திசை நியாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம்.

எவ்வாறிருந்தபோதிலும் நாம் ஏனையோருடன் சேர்ந்து இந்த தலைமையினை கடும் விமர்சனத்திலிருந்து சுதந்திரமாய் விட்டது அதுவே நான்காம் அகிலத்தின் நிர்வாகத்தினுள் ட்ரொட்ஸ்கிச அடிப்படை வேலைத்திட்டத்தைக் கைவிட்ட, கட்டுப்படுத்தமுடியாத இரகசிய தனிப்பட்ட கன்னை (பிரிவு) வலுப்படுத்திக்கொள்வதற்கான வழியை திறந்து விட உதவியது என்பதை நாம் இப்போது ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

பப்லோவை மையமாகக் கொண்டிருந்த இந்தக் கன்னை, பல நாடுகளில் நனவாகவும் திட்டமிட்டும் வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச போராளிகளை குழப்பத்திற்குள்ளாக்கி சீர்குலைத்து வருகின்றதுடன், நான்காம் அகிலத்தை கலைத்துவிடுவதற்கும் முயன்று வருகின்றது.

ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம்

இதனைத் தெளிவுபடுத்துவதற்காக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் தருகின்றோம்:

1. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலமானது மோசமாகிவரும் பொருளாதார மந்தநிலைகள், உலகப் போர்கள் மற்றும் பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடுகளின் மூலம் உலக நாகரீகத்தை ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்களின் வளர்ச்சி இன்று இந்த அபாயத்தை சாத்தியமானளவு அபாயகரமான வழியில் எடுத்துக்காட்டுகின்றது.

2. முதலாளித்துவத்திற்குப் பதிலாக உலக அளவில் சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரமாக மாற்றுவதனூடாக, முதலாளித்துவத்தின் ஆரம்ப காலகட்டங்களில் முதலாளித்துவத்தால் தொடங்கப்பட்ட முன்னேற்றச் சுருளை மீண்டும் தொடங்குதன் மூலம் மட்டுமே பாதாளத்திற்குள் வீழ்வதை தவிர்க்க முடியும்.

3. சமுதாயத்தில் உண்மையான புரட்சிகர வர்க்கமாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு செல்லும் பாதையை எடுப்பதற்கு சமூக சக்திகளின் உலக உறவு இன்று போல ஒருபோதும் சாதகமானதாக இருந்ததில்லை என்றபோதிலும், தொழிலாள வர்க்கமே தலைமைத்துவ நெருக்கடியை எதிர்கொள்கிறது.

4. இந்த உலக-வரலாற்று குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாள வர்க்கம், லெனின் உருவாக்கிய மாதிரியான ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டியமைக்கவேண்டும்; அதாவது, அக்கட்சி ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் திறன் கொண்ட ஒரு போராடும் குணம் மிக்க கட்சியாக இருக்கவேண்டும். அதாவது, முடிவுகளை எடுப்பதில் ஜனநாயகமும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும் இருக்க வேண்டும். உறுப்பினர்களால் கட்டுப்படுத்தக்கூடிய தலைமையையும், எதிரிகளின் தாக்குதலின் கீழும் அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் நடைமுறைப்படுத்தக் கூடிய திறம்படைத்த உறுப்பினர்களையும் கொண்ட கட்சியாக அது இருக்க வேண்டும்.

5. 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் கௌரவத்தைச் சுரண்டி தொழிலாளர்களை தன் பக்கம் ஈர்த்து, பின்னர் அத்தொழிலாளர்களது நம்பிக்கையைக் காட்டிக்கொடுத்து, அவர்களை சமூக ஜனநாயகத்தின் பிடியின் அக்கறையின்மைக்குள், அல்லது மீண்டும் முதலாளித்துவத்திலான மாயைகளுக்குள்ளோ தூக்கிவீசுகின்ற ஸ்ராலினிசம் தான் இதற்கான பிரதான தடைக்கல்லாக இருக்கிறது. இந்தக் காட்டிக் கொடுப்புகளுக்கான தண்டனைகளானது பாசிச அல்லது முடியாட்சி சக்திகளின் ஒருக்கிணைப்பிற்கும், முதலாளித்துவத்தால் ஊக்குவிக்கப்பட்டு தயாரிப்பு செய்யப்படுகின்ற போர்களின் புதிய வெடிப்புகளின் வடிவத்திலும் உழைக்கும் மக்களால் செலுத்தப்படுகின்றன. எனவேதான், நான்காம் அகிலம் சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய பணிகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

6. நான்காம் அகிலத்தின் பல பிரிவுகள் மற்றும் அதன் வேலைத்திட்டத்திற்கு ஆதரவுள்ள கட்சிகள் அல்லது குழுக்கள் எதிர்கொள்ளும் நெகிழ்வான தந்திரோபாயங்களின் தேவையாக இருப்பது, ஸ்ராலினிசத்திற்கு அடிபணியாமல் ஏகாதிபத்தியத்தையும் அதன் அனைத்து குட்டி-முதலாளித்துவ முகமைகளையும் (தேசியவாத வடிவாக்கங்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்றவை) எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை அவர்கள் அறிவது மிகவும் இன்றியமையாததாக ஆக்குகிறது; மறுதிசையில், ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் ஸ்ராலினிசத்தை (இறுதி பகுப்பாய்வில் இது ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி-முதலாளித்துவ முகமை) எதிர்த்துப் போராடுவது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படைக் கோட்பாடுகள் அதிகரித்துவரும் சிக்கலான மற்றும் எளிதில் மாறுபடுகின்ற இன்றைய உலகின் அரசியலின் மத்தியில் தனது செல்தகைமையை இன்னும் கொண்டிருக்கின்றன. உண்மையில் ட்ரொட்ஸ்கி முன்கூட்டிப் பார்த்தவாறு எல்லா வகையிலும் புரட்சிகர சூழ்நிலைகளுக்கான சந்தர்ப்பங்கள் உருவாவதுடன், அந்த நேரத்தின் வாழும் யதார்த்தத்துடன் தொடர்பற்றதாகவும், ஏதோ தொலைதூரத்துக்கு உரியதாக ஒரு நேரத்தில் தோற்றமளித்தவை இப்பொழுதுதான் முற்றும் சரியானதாக வந்திருக்கின்றது. உண்மை என்னவெனில் அரசியல் ஆய்விலும், அரசியல் நடைமுறை செயல்பாட்டின் போக்கைத் தீர்மானிப்பதிலும் இந்தக் கோட்பாடுகள் அதிகரிக்கும் பலத்துடன் இப்பொழுது முக்கியமானதாகின்றன.

பப்லோவின் திருத்தல்வாதம்

இந்தக் கொள்கைகள் பப்லோவால் கைவிடப்பட்டிருக்கின்றன. புதிய காட்டுமிராண்டித்தனத்தின் அபாயத்தை வலியுறுத்துவதற்கு மாறாக, சோசலிசத்தை நோக்கிய பாதை ‘’பின்நோக்கி செல்லமுடியாதது’’ எனக் கூறிய பப்லோ, இருந்தும் நமது தலைமுறையிலோ அல்லது வரவிருக்கும் சில தலைமுறைகளிலோ சோசலிசம் வருவதை அவர் பார்க்கவில்லை. அதற்கு பதிலாக ‘’எழுச்சியுறும்’’ புரட்சிர அலைகளினால் ஒரு ‘’ஊனமுற்ற’’ அதாவது ஸ்ராலினிச வடிவிலான தொழிலாளர் அரசுகள் உருவாகி இவை ‘’பல நூற்றாண்டுகளுக்கு’’ நீடிக்கும் என்ற கருத்துருவை முன்னெடுத்திருக்கிறார்.

இது தொழிலாள வர்க்கத்தின் ஆற்றல் பற்றிய அவரது அதிஉயர் ஐயுறவுவாதத்தை வெளிப்படுத்துவதுடன், சுயாதீனமான புரட்சிகர சோசலிச கட்சிகளை கட்டுவதற்கான போராட்டம் பற்றி பின்னர் அவர் குரல் கொடுத்திருப்பதை அது முற்றாக எள்ளி நகையாடுகிறது. சுயாதீனமான புரட்சிகர சோசலிச கட்சிகளை கட்டுவதை சகல தந்திரோபாய முறைகளிலும் முக்கியமாக முன்வைப்பதைவிட்டு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மூலம் இது சாத்தியமாகும் என அவர் கருதுகின்றார். அல்லது ஸ்ராலினிசத்தின் ஒரு பிரிவாவது தன்னை திருத்திக்கொண்டு, அழுத்தங்களுக்கு அடிபணிந்து ட்ரொட்ஸ்கிசத்தின் ‘’கருத்துக்களையும்’’ ‘’வேலைத்திட்டத்தையும்’’ ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டார். பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள ஸ்ராலினிச முகாமில் உள்ள தொழிலாளர்களை அணுகுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைளில் தேவைப்படும் இராஜதந்திரத்தின் பாவனையின் கீழ், அவர் இப்பொழுது ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்களை மூடிமறைக்கிறார்.

இந்தப் போக்கின் சீரழிவான வேலைகளின் காரணமாக ட்ரொட்ஸ்கிச அணிகளில் இருந்து ஸ்ராலினிச முகாமிற்கு சீரிய விட்டோடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றது. இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஸ்ராலினிசத்திற்கு ஆதரவாக பிளவு ஏற்பட்டிருப்பது, ஸ்ராலினிசம் தொடர்பாக பப்லோ உருவாக்கியுள்ள பிரமைகளின் துயரம்தோய்ந்த விளைவுகள் பற்றி எங்கும் உள்ள அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பப்லோவின் திருத்தல்வாதம் பற்றிய விரிவான ஆய்வை மற்றொரு ஆவணத்தில் நாம் முன்வைக்கின்றோம். இந்தக் கடிதத்தில், பப்லோ எந்த அளவிற்கு ஸ்ராலினிசத்துடன் சமரசவாதத்தில் சென்றிருக்கிறார் என்பதையும், இந்நடவடிக்கைகள் நான்காம் அகிலத்தின் இருப்பிற்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் தீர்க்கமான செயல் புலத்தில் காட்டும் சில அண்மைய சோதனைகளுக்கு எம்மை நாம் மட்டுப்படுத்திக்கொள்வோம்.

ஸ்ராலினின் மரணத்திற்குப் பின்னர், சோவியத் யூனியனில் கிரெம்ளின் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இவற்றில் எந்த சலுகையும் அரசியல் தன்மை கொண்டவை அல்ல. இந்த சலுகைகள், தகாவழி பற்றிய அதிகாரத்துவத்தை, மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சூழ்ச்சி நடவடிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை மற்றும் ஸ்ராலினுக்குப் பின்னர் மற்றொருவர் அதிகாரத்துவத்தின் சார்பில் ஆட்சிக்கு வருவதற்கு ஏற்பாடு என்று பண்பிடுவதற்குப் பதிலாக, பப்லோவாத கன்னை (பிரிவு) இத்தகைய சலுகைகளை நல்ல விடயங்களாக எடுத்துக்கொண்டு, அவற்றை அரசியல் சலுகைகளாக வண்ணம்பூசி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தொழிலாளர்களுடன் ‘’அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்படலின்” சாத்தியம் பற்றி முன்னிலைப்படுத்தவும் கூட செய்தது. (Fourth International January-February, 1953, p. 13.)

பப்லோ வழிபாட்டின் முக்கியமான மதகுருவான கிளார்க்கால் (Clarke) இந்த ‘’அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளல்’’ என்ற கருத்து மிகவும் வெளிப்படையாக பரப்பப்பட்டது. இது மறைமுகமாக பப்லோவால் சமயக் கொள்கைபோல் அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் ஒரு முக்கிய கேள்வியை நோக்கி இட்டுச்சென்றது. அதாவது, ஸ்ராலினிச ஆட்சிகளின் கலைப்பானது, ‘’பின்னோக்கி செல்லாவிட்டாலும், இதுகாறும் உள்ள தமது நிலையைப் பாதுகாத்துக்கொள்ள முயலும் பிரிவுகளுக்கிடையே ஒரு பலாத்காரமான அதிகாரத்துவ போராட்டங்களை உருவாக்குவதுடன், அவர்களின் பல பிரிவுகள் மக்களின் பலமான அழுத்தங்களுக்கு இழுக்கப்படும் வடிவத்தை எடுக்குமா?’’ என பப்லோ கேட்கிறார். (Fourth International, March-April, 1953, p. 39.)

இச் செயல் திட்டம், மரபுவழி ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டமான ஒரு அரசியல் புரட்சி மூலம் கிரெம்ளின் அதிகாரத்துவத்தை தூக்கி வீசுதல் என்ற வேலைத்திட்டத்திற்கு ஒரு புதிய உள்ளடக்கத்தை வழங்கியது. அதாவது இந்த திருத்தல்வாத நிலைப்பாடானது ட்ரொட்ஸ்கிசத்தின் ‘’வேலைத்திட்டமும்’’, ‘’கருத்துக்களும்’’ அதிகாரத்துவத்திற்குள் வடிகட்டப்பட்டு ஊடுருவிக் கலக்கும், அல்லது அதன் தீர்க்கமான ஒரு பகுதி இவ்வாறு முன்கூட்டிப் பார்க்கமுடியாத ஸ்ராலினிசத்தை ‘’தூக்கிவீசும்’’ என்பதாகும்.

கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய அரசாங்கத்திற்கு எதிராக, ஜூன் மாதம் தொழிலாளர்கள் திரண்டெழுந்தமை ஜேர்மனியின் வரலாற்றில் நடந்த மாபெரும் போராட்டங்களுள் ஒன்றாகும். சோவியத் யூனியனில் ஸ்ராலினிஸ்டுகள் தங்களது, அதிகாரத்தைப் பறித்துக்கொண்டு அதனை வலுப்படுத்திக் கொண்ட பின்னர், அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் முதல் தடவையாக வெளிப்படுத்திய எழுச்சி இதுவேதான். பப்லோ இந்த சகாப்த காலகட்டத்தின் நிகழ்ச்சி பற்றி எவ்வாறு பதிலளித்தார் என்பதைப் பார்ப்போம்?

கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களின் புரட்சிகர அரசியல் அபிலாஷைகளை தெளிவாகக் குரல்கொடுப்பதற்குப் பதிலாக, பப்லோ, கிழக்கு ஜேர்மன் எழுச்சியை ரஷ்ய படைகள் மூலம் ஸ்ராலினிச கொடுங்கோலர்கள் ஒடுக்கியதை மூடிமறைத்தார். (’’ஜேர்மனியின் நிகழ்ச்சிகளின் ஆழமான அர்த்தத்தை சோவியத் தலைவர்களோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, இதர ‘’மக்கள் ஜனநாயகங்களின்” தலைவர்களோ பொய்மைப்படுத்தவோ அல்லது அலட்சியப்படுத்தவோ இனியும் முடியாது போனது. மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடாது தவிர்க்கும் வகையிலும், பரந்துபட்ட மக்களிடம் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளும் ஆபத்து நேர்வை தவிர்க்கும் வகையிலும், இன்னும் அதிக தாராளமாக மற்றும் உண்மையான சலுகைகளைக் கொண்ட பாதை வழியே தொடர்வதற்கு அவர்கள் கடப்பாடு கொண்டிருக்கின்றனர். இப்பொழுது முதல் அவர்களால் இதை பாதிவழியில் நிறுத்திக்கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனடியான எதிர்காலத்தில் பாரிய வெடிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளவும், இயலுமானால் ஒரு ‘கடுமையான முறையில்’ தற்போதை நிலைமையில் இருந்து மக்களால் சகித்துக்கொள்ளக்கூடிய ஒரு நிலைமைக்கு ஒரு சில சலுகைகளை வழங்க கடைமைப்பட்டனர்.”) (Statement of the International Secretariat of the Fourth International published in The Militant July 6..)

ஸ்ராலினிச அரசாங்கங்களை தாங்கிப் பிடித்திருந்த ஒரே சக்தியான சோவியத் துருப்புக்களை ஜேர்மனியில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டுமென்று, கோரிக்கைவிடுப்பதற்கு பதிலாக, பப்லோ பிரமைகளை ஊட்டினார். கிரெம்ளினின் இராணுவ அதிகாரிகளிடம் இருந்து “உண்மையான மேலும் அதிக அளவிலான, சலுகைகள்” வரும் என்ற ஒரு பொய் தோற்றத்தை பப்லோ தொழிலாளர் மத்தியில் உருவாக்கினார். இதன் மூலம் கிரெம்ளின் தலைவர்களது பயங்கர நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பப்லோ செயல்பட்டார். கிளர்ச்சியில் ஈடுபடும் தொழிலாளர்களை “பாசிஸ்டுகள்” மற்றும் ‘’அமெரிக்க ஏகாதிபத்திய ஏஜெண்டுகள்’’ என முத்திரை குத்தவும், அவர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை அலையைத் திறந்து விடவும் அந்த நிகழ்வுகளின் ஆழமான அர்த்தத்தை பழியார்ந்த முறையில் பொய்மைப்படுத்துதற்கும் அது மேற்செல்லுகையில், மாஸ்கோ இதைவிட சிறந்த ஆதரவை வேண்டி இருந்திருக்கக் கூடுமோ?

...

என்ன செய்ய வேண்டும்

சுருக்கமாக சொல்வதென்றால், பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக ஆழமானவை. எனவே, அரசியல் ரீதியிலோ அல்லது அமைப்பு அடிப்படையிலோ எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை உண்மையில் பிரதிபலிக்கும் ஜனநாயக முறையிலான முடிவுகளை அனுமதிக்கபோவதில்லை என்பதை பப்லோ கன்னை நிரூபித்துள்ளது. தங்களது கிரிமினல் கொள்கைக்கு முழுமையாக அடிபணிய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நான்காம் அகிலத்திலிருந்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவரையும் விரட்டிவிட அல்லது வாய்மூடப்பண்ண மற்றும் கைவிலங்கிட அவர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது திட்டம் ஸ்ராலினிசத்துடனான சமரசத்தை சிறிதுசிறிதாக உள்ளே புகுத்தவேண்டும் மற்றும் அதேபோல சிறிது சிறிதான பாணியில், என்ன நடக்கிறது என்று அறிய வருகின்றவர்களை மற்றும் ஆட்சேபனைகளை எழுப்புகின்றவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இதுதான் பப்லோவாத சூத்திரப்படுத்தல்களின் பலவற்றுக்கும் இராஜதந்திர மழுப்புதல்களுக்குமான விளக்கமாகும். இதுவரை பப்லோ கன்னை இந்த கோட்பாடற்ற மற்றும் மாக்கியவெல்லிய சூழ்ச்சிகளுடன் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால், மாற்றத்தின் பண்புரீதியான தருணம் வந்துவிட்டது. அரசியல் பிரச்சினைகள் சூழ்ச்சி நடவடிக்கைகள் மூலம் முறிக்கப்பட்டிருக்கின்றன மற்றும் போராட்டம் இப்பொழுது ஒரு திட்டவட்டமான சச்சரவு ஆகிவிட்டது.

நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்கு நாம் கூறும் ஆலோசனை என்னவென்றால், செயல்படவேண்டிய, மற்றும் தீர்மானகரமாக செயல்படவேண்டிய வேளை வந்துவிட்டது என்பதுதான். நாம், நான்காம் அகிலத்தின் கீழ்மட்ட அணிகளுக்கு, வெளியில் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலிருந்து ஆலோசனை வழங்குகின்றோம். நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது.

பப்லோவையும் அவரது கையாட்களையும் பதவியிலிருந்து அகற்றுவதன் மூலமாக நான்காம் அகிலத்தின் விவகாரங்களை நிர்வகித்தலைப் பாதுகாக்க வேண்டியுள்ளதுடன், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தை உயர்த்திப் பிடிப்பது எப்படி என்பதைத் தாங்கள் அறிவர் என்று செயலில் நிரூபித்த காரியாளர்களை அந்த இடத்தில் மாற்றீடு செய்வோம் மற்றும் இயக்கத்தை அரசியல் ரீதியில் மற்றும் அமைப்பு ரீதியில் இருவகையிலும் சரியான பாதையில் வைப்போம்.

தோழமை ட்ரொட்ஸ்கிச வாழ்த்துக்களுடன்,

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசியக் குழு

***

டேவிட் நோர்த் எழுதிய நாம் பாதுகாக்கும் மரபியம் பற்றி மேலும் வாசிப்பதற்கு:

•         The Origins of Pabloism

•         The Metaphysics of Nationalized Property

•         The Nature of Pabloite Opportunism

•         Cannon’s Struggle Against the Cochranites

•         The Split in the Fourth International

•         James P. Cannon’s “Open Letter”

Loading