காஸாவில் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான தொழிலாள வர்க்கப் போராட்டத்தை பிரெஞ்சு போலி-இடது கட்சிகள் தடுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான, வெகுஜன எதிர்ப்புகளின் உலகளாவிய இயக்கத்தின் தோற்றம் வர்க்கப் போராட்டத்தில் ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் குறிக்கிறது. இந்த இயக்கம் காஸாவிற்கு எதிராக, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவளிக்கும் அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிராக புறநிலையாக இயக்கப்படுகிறது. நேட்டோ ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவுடனும் மற்றும் சிரியாவிலும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை தடுக்க சர்வதேச அளவில் (அமெரிக்கா, பெல்ஜியம், ஸ்பெயின், துருக்கி மற்றும் இத்தாலியில்) தொழிலாளர்களை அணிதிரட்ட அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபேபியன் ரூசல், ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் கைகுலுக்குகிறார். பாரிஸ், திங்கள், ஜூன் 21, 2022. [AP Photo/Ludovic Marin]

வர்க்கப் போராட்டம் தீவிரமடைவதற்கும், முதலாளித்துவ வர்க்கங்கள் மூன்றாம் உலகப் போரில் மூழ்குவதற்கும் இடையே ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இது, இஸ்ரேலை ஆயுதபாணியாக்கும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளிலுள்ள (அமெரிக்கா, ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ்) தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அசையாத தன்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் (ICFI), அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியையும் (PES) குட்டி முதலாளித்துவ போலி-இடது கட்சிகளில் இருந்து பிரிக்கும் அரசியல் பிளவையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

PES உறுப்பினர்கள், பிரான்சில் தொழிற்சங்கங்களின் தலைமையிலான காஸா சார்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற முக்கிய போலி-இடது கட்சிகளின் தலைவர்களை பேட்டி கண்டனர். உலக சோசலிச வலைத் தளத்திற்கான இந்த நேர்காணல்கள், தற்போதைய நெருக்கடியில் இந்தக் கட்சிகளின் தேசிய அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும், ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பிற்போக்குத்தனமான வாதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன:

  1. அவர்கள் இஸ்ரேலின் காஸா மீதான படுகொலைகளை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்த சர்வதேச வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க மறுக்கிறார்கள். அது, அவசியமில்லை அல்லது அவ்வாறு செய்ய அவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்று வாதிடுகின்றனர்.
  2. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட கால, ஒரு நாள் எதிர்ப்பு போராட்டங்களை மட்டுமே அவை முன்மொழிகின்றன. தொழிற்சங்க அதிகாரத்துவங்களோ மக்ரோனின் ஏகாதிபத்திய பொலிஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு இனப்படுகொலை மற்றும் போரை நிறுத்துவதற்குத் தேவையான பிற நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு மாறாக தொடர்புகளை துண்டித்துக்கொள்கின்றன.
  3. 1923ல் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட இடது எதிர்ப்பிற்கு எதிராக ஸ்ராலினால் முன்வைக்கப்பட்ட “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற பொய்யான கோட்பாட்டிலிருந்தோ அல்லது ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொள்வதற்காக ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட கட்சிகளிலிருந்தோ தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்த நோக்குநிலையைப் பெறுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கிறது. இனப்படுகொலை மற்றும் உலகப் போருக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமானது மற்றும் அவசியமானது. பலதேர்தல்களில் மில்லியக்கணக்கான வாக்குகளைப் பெற்றிருக்கும் போது, ​​அவ்வாறு செய்ய முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பதாகக் கூறுகின்ற இந்தக் கட்சிகள், தங்களின் அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்துகின்றன. இதற்கு மாறாக, இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் மற்றும் காஸாவில் அதன் இனப்படுகொலைக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசியல் போராட்டங்கள் மூலம், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட, பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் தயாரிப்பு செய்வதற்கு PES அழைப்பு விடுக்கிறது.

இனப்படுகொலை மற்றும் போரை நிறுத்துவதற்கு சாமானிய தொழிலாளர்களின் அமைப்புகளை உருவாக்க வேண்டும். அத்தோடு, இந்த அமைப்புக்கள் சர்வதேச தொழிலாளர்களின் கூட்டணியை ஏற்படுத்தவேண்டும். இது தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைக்கவும், தொழில்துறையை முடக்கவும், இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களை வீழ்த்தவும் அனுமதிக்கும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மேலாதிக்கம் செலுத்தும் தற்போதைய இயக்கத்தின் அடிப்படையான பலவீனம் என்னவென்றால், ஒவ்வொரு அணிதிரட்டலின் போதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் போதும், அவை மக்ரோன் அல்லது இனப்படுகொலையை ஆதரிக்கும் இதர ஏகாதிபத்திய நேட்டோ அரசாங்கங்களுக்கு எதிராகப் போராட மறுக்கின்றன.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும், பொருளாதாரத்தை முடக்குவதற்கும், இனப்படுகொலையை நிறுத்துவதற்கும், ஒவ்வொரு தேசிய முதலாளித்துவ அரசாங்கத்திலும் உள்ள போர்வெறியர்களிடமிருந்து அதிகாரத்தை அகற்றுவதற்கும் புறநிலை நிலைமைகள் சாதகமாக உள்ளன. இது சர்வதேச சோசலிசப் புரட்சி பற்றிய கேள்வியை எழுப்புகிறது.

எவ்வாறாயினும், இந்த ஆற்றலை உணர, தொழிலாள வர்க்கத்தில் புதிய போராட்ட அமைப்புகளை கட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவங்களுடன் தொடர்புடைய பல்வேறு தேசியவாத அரசியல் போக்குகளுக்கு எதிராக, ஒரு சர்வதேச புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். ஸ்ராலினிசத்திற்கும் போலி-இடது குட்டி முதலாளித்துவ அரசியலுக்கும் எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கைப் பாதுகாக்கும் சோசலிச சமத்துவக் கட்சியானது, இந்த திசையில் கட்டியெழுப்பப்பட வேண்டிய பிரான்சின் முக்கிய அரசியல் போக்கு ஆகும்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பிரான்சின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (PCRF) எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிஸ்டுகளின் பாத்திரம்

பாரிஸில் காஸா ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் போது, உலக சோசலிச வலைத்தளத்தின் (WSWS) பத்திரிகையாளர்கள் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் அவர்களது அரசியல் துணைக்கட்சிகளின் அதிகாரத்துவத்தினரை சந்தித்தனர். PCF ன் செய்தித் தொடர்பாளரும், பாரிஸின் செனட்டருமான இயன் ப்ரோசாட், WSWS இடம் “போர்நிறுத்தத்தின் அவசியத்தை தான் ஆதரிப்பதாகவும் பாலஸ்தீன மக்கள் இப்படி படுகொலை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது” என்றும் கூறினார்.

அமெரிக்கா, பெல்ஜியம், துருக்கி மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாள வர்க்கம், இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தது குறித்து, “அது அவர்களின் பெருமைக்கு உரியது” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

ஆனால், PCF மற்றும் தொழிற்சங்கத் தலைமைகள், பிரான்சில் உள்ள தொழிலாளர்களை இந்த சர்வதேச இயக்கத்தில் சேர்வதற்கு அழைப்பு விடுக்குமா என்று WSWS கேட்டபோது, இயன் ப்ரோசாட் இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்தார். PCF அவ்வப்போது தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்வதில் அவர் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார். “கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருக்கிறோம், அமைதிக்கான போர் நிறுத்தத்தின் அவசியத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும் அனைத்து அணிதிரட்டல்களிலும் நாங்கள் இருப்போம்” என்று அவர் கூறினார்.

WSWS பிரான்சின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (PCRF) இரண்டு உறுப்பினர்களான பிராங் மற்றும் மேரி ஆகியோரையும் பேட்டி கண்டது, அவர்கள் PCF இலிருந்து பிரிந்து கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் (KKE) இணைந்தனர். மாஸ்கோ விசாரணைகள் மற்றும் பழைய போல்ஷிவிக்குகளின் படுகொலைகள், 1936-1938ல் சோவியத் யூனியனில் மார்க்சிஸ்டுகளின் பாரிய சுத்திகரிப்பு மற்றும் 1940ல் ட்ரொட்ஸ்கியின் படுகொலை போன்ற ஸ்ராலினின் குற்றங்களை PCRF பாதுகாக்கிறது.  இதன் விளைவாக, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சிக்கும் அரசியல் செயலின்மைக்கான அதன் ஆதரவை PCRF நியாயப்படுத்துகிறது.

“காஸா மற்றும் மேற்குக் கரையில் நடைபெறும் பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். பொதுவாக பிரெஞ்சு முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசைப் போலவே மக்ரோன் அரசாங்கமும் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கிறது” என்று பிராங் கூறினார். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்ற அழைப்பையும் அவர் வெளிப்படையாகப் பாராட்டினார். “இந்த விநியோகங்கள் நிகழாமல் இருக்க, புழக்கத்தில் உள்ள துறைகளைப் போலவே ஆயுத உற்பத்தித் துறைகளிலும் நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்ட வடிவங்கள் இவை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், காஸா இனப்படுகொலைக்கான ஆயுதக் கப்பலைத் தடுக்கும் சர்வதேச இயக்கத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைத் தவிர்த்துவிட்டு, தொழிலாளர்களை அழைக்கும் சாத்தியம் பற்றிக் கேட்டபோது, அது சாத்தியமற்றது என்று பிராங் வலியுறுத்தினார். “நாங்கள் நிறுவப்பட்ட பல உள்ளாட்சிகளிலுள்ள, தொழிற்சங்கத் தலைமைகளுடன் கலந்துரையாடியுள்ளோம். ஆனால், இது உள்ளூர் மட்டத்தில் தொழிற்சங்க தலைமைகளுடன் அதிகமாகும் ... CGT யின் தேசிய கூட்டமைப்புத் தலைமையுடன் விவாதிக்க முயற்சிப்பது போன்ற பாசாங்கு எங்களுக்கு இருக்கப் போவதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

“தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின்” ஸ்ராலினிச கோட்பாட்டை மேற்கோள் காட்டி, காஸா இனப்படுகொலைக்கு இந்த சரணாகதியை நியாயப்படுத்த மேரி முயன்றார். ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தினை கட்டியெழுப்புவதை நிராகரித்த அவர், “நாங்கள் ட்ரொட்ஸ்கிசத்தின் ஆய்வறிக்கைகளுக்கு எதிரானவர்கள்... ஒவ்வொரு நாட்டிலும் தேசிய புரட்சிகளுக்காக நாங்கள் இருக்கிறோம், அதே நேரத்தில் இது உலக அளவில் மட்டுமே நடக்கும் என்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கூறுகிறார்கள், நாங்கள் இல்லை என்று சொல்கிறோம், ஆனால், சில நாடுகளில் இது நடக்கலாம்” என்று மேரி குறிப்பிட்டார்.

மேரி

1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற கோட்பாட்டின் செல்லுபடியாகும் தன்மை பற்றிய அவரது கருத்தைக் கேட்டதற்கு, மேரி ஸ்ராலினிசத்தை பாதுகாத்தார். சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு எதிரான ஸ்ராலின் மேற்கொண்ட பாரிய கொலைகள் குறித்து 1956 ஆம் ஆண்டு, சோவியத் தலைவர் நிகிதா குருச்சேவின் பகுதியளவு விமர்சனத்தின் தவறுதான் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்று அவர் கூறினார்.

“1956 இல் குருச்சேவின் அறிக்கையிலிருந்து, நாங்கள் கீழ்நோக்கிய சரிவில் இருந்தோம். இப்போது சோவியத் யூனியனில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறோம்... ஸ்ராலினைப் பற்றி நிறைய பொய்கள் கூறப்பட்டு வருகின்றன, அவர் சோசலிசத்தை செயல்படுத்துவதை வீழ்த்த முயற்சித்தோம். அவர் சரியான பாதையில் இருந்தார்” என்று மேரி குறிப்பிட்டார்.

PCRF மற்றும் PCF இன் இந்தக் கருத்துக்கள், இறுதிப் பகுப்பாய்வில், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகள், போல்ஷிவிக் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிராக ஸ்ராலினால் நடத்தப்பட்ட அரசியல் இனப்படுகொலைக்கான தேசியவாத ஆதரவிலேயே வேரூண்றியுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) ஆகியவற்றின் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு பாத்திரம்

காஸா ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் தலையிடும் அனைத்து அமைப்புகளும் அத்தகைய வெளிப்படையான ஸ்ராலினிச மற்றும் தேசியவாத நிலைப்பாட்டை பாதுகாக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள், ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டு பல்வேறு குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் கல்வித்துறையில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுடன் நெருக்கமாக இருக்கும் இந்த சக்திகள், போருக்கும் மக்ரோனுக்கும் காஸாவில் இனப்படுகொலைக்கும் எதிரான போராட்டத்தைத் தடுக்க செயல்பட்டு வருகின்றன. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) ஆகியவற்றில் இது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.

1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து பிரிந்த மைக்கேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான சக்திகளில் இருந்து NPA உருவானது. ஸ்ராலினிசத்தின் எதிர்-புரட்சிகர பாத்திரம் பற்றிய ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வை நிராகரித்த பப்லோவாதிகள், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பாசிச ஆட்சிகளின் வீழ்ச்சியின் போது ஒரு சோசலிசப் புரட்சியைத் தடுப்பதற்காக, ஸ்ராலினிச எந்திரம் எவ்வாறு தொழிலாளர் குழுக்களையும் எதிர்ப்பு சக்திகளையும் கலைத்தது என்பதை பப்லோவாதிகள் மறைத்தனர். பப்லோவும் மண்டேலும் ஸ்ராலினிச மற்றும் தேசியவாத அமைப்புகளுக்குள் “ஆழமான நுழைவு” மூலம் நான்காம் அகிலத்தை கலைக்க அழைப்பு விடுத்தனர்.

2009 இல் NPA ஐ நிறுவிய பப்லோவாத ஆர்வலர்கள், ட்ரொட்ஸ்கிசத்துடன் முற்றிலும் அடையாளமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் கூட, ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக அல்லது அராஜகவாத தலைவர்களை தங்கள் அமைப்பில் சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுத்தனர்.

WSWS ஒரு ரயில்வே தொழிலாளியும் NPA இன் தேசிய தலைமை உறுப்பினருமான டமியனை பேட்டி கண்டது. “காஸாவில் நடப்பது ஒரு கொடூரமான படுகொலை, எப்படி இருந்தாலும் நாம் மட்டும் அதைக் கண்டிக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான மக்கள் கூட நடந்து வரும் படுகொலைகளை கண்டித்து வருகின்றனர். உறுதியாக, இது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை... இந்த பூகோளத்தில் உள்ள அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களைப் போலவே, மக்ரோன் அரசாங்கமும் இதற்கு உடந்தையாகவும், பொறுப்பாகவும் இருக்கிறது. நெதன்யாகுவின் கொள்கைகளை ஆதரிப்பதற்காகவே அவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார்” என்று அவர் குறிப்பிட்டார்.

டமியன், NPA யின் தலைமை உறுப்பினர்

காஸா இனப்படுகொலைக்கு எதிராக, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அழைப்புகள் பற்றி கேட்டதற்கு, “இந்த முயற்சிகளுக்கு நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்த [எதிர்ப்பு போராட்டங்களின்] வீடியோக்கள் ஒவ்வொரு முறையும் உலகம் முழுவதும் செல்கின்றன” என்று டமியன் கூறினார்.

எனினும், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர்களின் ஒற்றுமையை பிரகடனப்படுத்திய அவர், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) புரோசட்டைப் போலவே, இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட அழைப்பு விடுக்க மறுத்துவிட்டார். தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் அழைக்கப்பட்ட ஆங்காங்கே நடக்கும் தெரு ஆர்ப்பாட்டங்களை முன்மொழிவதோடு, அவர் தன்னைத்தோனே மட்டுப்படுத்திக் கொண்டார். “எவ்வாறாயினும், நடந்துகொண்டிருக்கும் அனைத்து அணிதிரட்டல்களிலும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம். எனவே, நிச்சயமாக, தெருக்களில் மொத்தமாக எல்லோரும் வெளியே வர வேண்டும்.... இந்த ஆர்ப்பாட்டங்களை இன்னும் பெரியதாக ஆக்குவதுதான் நமக்கு முன்னால் உள்ள படியாகும். இதுதான் நாம் இருக்கும் நிலை” என்று குறிப்பிட்டார்.

இதே நிலைப்பாட்டை 1956 இல் நிறுவப்பட்ட ஒரு குழுவான தொழிலாளர் போராட்டம் (LO) கொண்டிருக்கிறது. இது, பிரான்சில் ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்ப வாதிடுகிறது. நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பை நிராகரிக்கின்ற LO, இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் நாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்களில் தலையிட்ட பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளை இன்னமும் கண்டிக்கிறது. 1953ல் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களை நோக்கியிருந்த பப்லோவாத போக்குகளுக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு, கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றும் LO வலியுறுத்துகிறது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனியப் போராட்டத்திற்கு விரோதமாகவும், அதை இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் அட்டூழியங்களுடன் ஒப்பிட்டும், நிலைப்பாட்டை எடுத்த LOவின் தலைவரான பாஸ்கலை WSWS நேர்காணல் செய்தது. “அக்டோபர் 7 அன்று ஹமாஸின் மோசமான தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலிய அரசாங்கத்தின் பதில் ஒரு போர்க்குணமானது. காஸாவில் நடக்கின்ற படுகொலைகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்” என்று அவர் WSWS இடம் கூறினார்.

காஸாவில் ஒரு இனப்படுகொலை நடைபெறுவதை பாஸ்கல் திட்டவட்டமாக மறுத்தார். “நாங்கள் படுகொலை பற்றி பேசுகிறோம், இன்று காஸாவில் 11,000ம் பேர்கள் இறந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தின் ஆதரவுடன் குடியேற்றவாசிகளுடன் மோதல்கள் உள்ளன, அவ்வளவுதான். நான் இனப்படுகொலை பற்றி பேசமாட்டேன், ஆனால் படுகொலை பற்றி பேசுவேன்” என்று குறிப்பிட்டார்.

பாஸ்கல், பாரிஸ் பிராந்தியத்தில் LO இன் தலைவர்

நேட்டோ சக்திகளின் போர்க் கொள்கையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட பாஸ்கல், ஆயுத உற்பத்தியாளர்களின் நிதி நலன்களுக்கு மட்டுமே போர் காரணம் என்று கூறினார், “மக்ரோன் இஸ்ரேல் அரசுக்குப் பின்னால் நிற்கிறார், அவர் அமைதியைப் பற்றி பேசுகிறார், ஆனால் அவர், தனது கன்னையை தேர்ந்தெடுத்துள்ளார். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் உள்ளது, அது இஸ்ரேல் அரசுக்கு முழு ஆதரவாக உள்ளது. ... வெளிப்படையாக, ஆயுத வியாபாரிகள் மோதல்களின் இருப்பில் வாழ்கின்றனர்” என்று பாஸ்கல் குறிப்பிட்டார்.

ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏன் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதைத் தடுக்க வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று WSWS கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது. இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன​​” என்று பாஸ்கல் பதிலளித்தார்.

எனினும், இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை தடுக்க LO அதன் மில்லியன் கணக்கான வாக்காளர்களை அணிதிரட்டலாம் என்ற கருத்தை அவர் உறுதியாக நிராகரித்தார். “நாங்கள் தேர்தலில் வாக்குகளைப் பெறுகிறோம், ஆனால் இறுதியில் நாங்கள் ஒரு சிறிய கட்சியாக இருக்கிறோம். பிரான்சில் தொழிலாள வர்க்கம் நாளை போராடுவதற்கும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் எங்களிடம் ஒரு உயர் நடவடிக்கைகள் இல்லை” என்று அவர் கூறினார்.

உண்மையில், ஜனாதிபதித் தேர்தல்களில் NPA மற்றும் LO இரண்டும், அந்த நேரத்தில் முதலாளித்துவ ஊடகங்கள் தங்கள் வேட்பாளர்களை “ட்ரொட்ஸ்கிஸ்டுகள்” என்று பொய்யாகக் காட்டி, மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்றன. இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களில் இந்த ஆதரவைத் திரட்டி, அவர்கள் போராட மறுப்பது, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும், மக்ரோனின் பொலிஸ் அரசுக்கும் இடையிலான “சமூக உரையாடல்” கட்டமைப்பிற்குள் அவர்கள் தங்கள் அரசியலை நடத்துகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் காஸாவில் போர் மற்றும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர, துல்லியமாக இந்த குறுகிய மற்றும் அழுகி நாற்றம்கண்ட தேசிய கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்.

லாம்பேர்ட்டிசமும் ஜோன்-லூக் மெலன்சோனுடைய அடிபணியாத பிரான்சும்

இறுதியாக, பாலஸ்தீனிய சார்பு அணிதிரட்டல்களில் லம்பேர்ட்டிஸ்ட் போக்கின் பல தலைவர்களை WSWS பேட்டி கண்டது.

இந்தக் கட்சிகள் 1953 முதல் 1971 வரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவாக இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (OCI) இருந்து தோன்றியவையாகும். இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சி இருக்கிறது. 1971 இல், OCI நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து பிரிந்து, ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டு, பிரான்சுவா மித்திரோனின் முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் PSக்கும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) இடையிலான இடதுகளின் ஒன்றியம் ஆகியவற்றை ஒரு தேசிய முன்னோக்கில் கட்டியெழுப்புவதில் பங்கு வகித்தன. அதன் உறுப்பினர்களில் ஒருவரான லியோனல் ஜோஸ்பன், 1997 முதல் 2002 வரை PS-PCF மற்றும் பசுமைக்கட்சியின் சிக்கன நடவடிக்கையை திணித்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஆனார்.

OCI இன் மிக முக்கியமான முன்னாள் உறுப்பினரும், ஜோஸ்பன் அரசாங்கத்தின் முன்னாள் மந்திரியுமான ஜோன் லூக் மிலோன்சோன், இப்போது அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் (LFI) தலைவராக உள்ளார். நகர்ப்புற தொழிலாள வர்க்க வாக்காளர்கள், மக்ரோன் மற்றும் நவ-பாசிச வேட்பாளர் மரீன் லு பென் ஆகிய இருவருக்கும் எதிரான மாற்றீட்டை நாடியதால், 2022 ஜனாதிபதித் தேர்தலில் மிலோன்சோன் கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றார்.

காஸா சார்பு அணிதிரட்டலின் போது, ​​லாம்பேர்ட்டிஸ்ட் சுதந்திர தொழிலாளர் கட்சியின் (POI) உறுப்பினரும், பாராளுமன்றத்தில் LFIயின் உறுப்பினருமான ஜெரோம் லூகாவ்ரை WSWS பேட்டி கண்டது.

காஸாவிற்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் பற்றி கேட்டதற்கு, “எங்கள் கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது, இது ஒரு விவரிக்க முடியாத படுகொலை மற்றும் படுகொலை என்பதைத் தவிர... இன சுத்திகரிப்பு தாக்குதலை நாங்கள் காண்கிறோம். குண்டுவீச்சுக்களின் தொடக்கத்திலிருந்து, உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தவர்களின் பக்கம் நான் முற்றிலும் மற்றும் நிபந்தனையின்றியும் இருக்கிறேன்” என்று லூகாவ்ர் பதிலளித்தார்.

“மக்ரோன் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிக்கும் கொள்கையை முழுவதுமாக நடத்தி வருகிறார்” என்று லூகாவ்ர் மேலும் தெரிவித்தார்.

ஜெரோம் லூகாவ்ர், லம்பேர்ட்டிஸ்ட் சுதந்திர தொழிலாளர் கட்சி உறுப்பினர், LFIயின் பாராளுமன்ற உறுப்பினர்

இனப்படுகொலையை ஆதரிக்கும் அரசாங்கம் சட்டபூர்வமானதாக இருக்க முடியுமா மற்றும் LFI என்ன செய்ய விரும்புகிறது என்று WSWS கேட்டபோது, பாராளுமன்ற நடவடிக்கைக்கு அப்பால் எந்த நடவடிக்கையும் எடுக்க லூகாவ்ர் மறுத்துவிட்டார். ​​“மக்ரோன் அரசின் சட்டபூர்வமான தன்மை குறித்து நிறைய கூற வேண்டும். ... நாங்கள் [அடுத்த ஆர்ப்பாட்டத்தில்] கலந்து கொள்ளாமல் இருப்போம், மேலும் பாராளுமன்றத்தில் மக்ரோனுக்கு எதிராக மற்றொரு தணிக்கைத் தீர்மானத்தை முன்வைப்போம்” என்று அவர் கூறினார்.

LFI இன் தணிக்கை பிரேரணை முறையாக நிராகரிக்கப்படுகின்றன என்று WSWS குறிப்பிட்டது. ஏனெனில் LFI ஆனது, பாராளுமன்றத்தில் ஒரு சிறுபான்மையினரை மட்டுமே கொண்டுள்ளது. பின்னர் போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது என்ற பிரச்சினை எழுப்பப்பட்டது.

போரை நிறுத்த சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்ட பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது, அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஒரு தெளிவான நிலைப்பாடு உள்ளது... அவர்கள் போர்நிறுத்தத்திற்கான வரிசையில் உள்ளனர்” என்று லூகாவ்ர் பதிலளித்தார்.

மெலன்சோன் 8 மில்லியன் வாக்காளர்களைக் கொண்டிருப்பதாக WSWS சுட்டிக் காட்டியபோது, ​​முக்கிய பிரெஞ்சு நகரங்களின் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்தி, இனப்படுகொலைக்கு எதிராக வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள மெலன்சோன் தனது வாக்காளர்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டபோது, “ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டிவிடும் என்பதால், மெலன்சோன் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக உள்ளது, அவர்தான் அதிக தூரம் சென்றுள்ளார்” என்று லூகாவ்ர் பதிலளித்தார்.

வேலைநிறுத்த நடவடிக்கை மற்றும் சர்வதேசப் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் LFI க்கு உள்ள சிரமம், மக்ரோனுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவைக் கோரும் பிரான்சுவா ரஃபின் போன்ற சக்திகளின் இருப்புடன் தொடர்புடையதா என்று WSWS கேட்டபோது, “இதை நான் பின்பற்றவில்லை. இந்த தளத்தில் சர்ச்சைகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், இப்போது மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். எனவே வெளிப்படையாக, இந்த சிறிய சண்டைகளை நான் அற்பமானதாகக் காண்கிறேன், நான் அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. ரஃபினைப் பொறுத்தவரை, நான் அவரைப் பற்றி கவலைப்படவில்லை” என்று லூகாவ்ர் பதிலளித்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான பிளவின் போது, OCIக்கு தலைமை தாங்கிய மறைந்த பியர் லம்பேர்ட்டின் உதவியாளரான டேனியல் குளக்ஸ்டைனையும் உலக சோசலிச வலைத் தளம் சுருக்கமாகப் பேட்டி கண்டது. 2015 இல், POI மெலன்சோனுடன் நேரடி கூட்டணியில் நுழைந்ததால், குளக்ஸ்டைன் POI உடன் பிரிந்து சென்றார். குளக்ஸ்டைனின் ஆதரவாளர்கள், இப்போது POI மற்றும் மெலன்சோனின் இடது பக்கத்தை உள்ளடக்கிய தொழிலாளர் சுதந்திர ஜனநாயகக் கட்சியில் (POID) குழுவாக உள்ளனர்.

டேனியல் குளக்ஸ்டைன், லாம்பேர்ட்டிஸ்ட் POID இன் தலைவர்

உலக சோசலிச வலைத் தளத்தின் பத்திரிகையாளர் ஒருவரை, தான் எதிர்கொள்வதை குளக்ஸ்டைன் உணர்ந்தபோது, ​​அவர் WSWS மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தை, வெறித்தனமாக கண்டனம் செய்ததோடு, நேர்காணலுக்கு மறுத்தார்.

“நான் டேவிட் நோர்த்துக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்! நாங்கள் ஒரு ஜனநாயக மற்றும் தொழிலாள வர்க்க அமைப்பு. நீங்கள் யார்?. நான் டேவிட் நோர்த்துக்கு பேட்டி கொடுக்கமாட்டேன்!” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வெடிப்பானது, குளக்ஸ்டைனின் ஏமாற்று வித்தையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் தங்கள் போர்களையும் காஸாவில் இனப்படுகொலைக்கான தங்கள் ஆதரவையும் தீவிரப்படுத்திவரும் நிலையில், மதிப்பிழந்த முதலாளித்துவ சோசலிசக் கட்சியுடனான அதன் கூட்டணி மற்றும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு சரணடைவு போன்ற லம்பேர்ட்டிசத்தின் வரலாற்றுப் பதிவை பாதுகாப்பது சாத்தியமற்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால் லம்பேர்ட்டிசத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நன்கு அறிந்தவரான குளக்ஸ்டைன், டேவிட் நோர்த் தொடர்பாக ஆவேசமாகவும், பயமாகவும் இருக்கிறார்.

எனினும், குளக்ஸ்டைன் தனது சொந்தக் கட்சிக்குள் அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சனைகள் பற்றிய தீவிர விவாதத்தைத் தடுப்பதற்காக, POID பத்திரிகைகளில் ICFI அல்லது PES பற்றிக் குறிப்பிடுவதை கவனமாகத் தவிர்க்கிறார். அதனால்தான், வெறுமனே நேர்காணலை கேட்கும் ஒரு WSWS நிருபர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதைக் கண்டு அவர் பதட்டமடைந்தார்.

ஒரு புரட்சிகர காலகட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், நிகழ்வுகளின் போக்கானது, குளக்ஸ்டைன் மற்றும் அவரது கூட்டாளிகள் போன்ற, அரசியல் பாசங்கு வேடதாரிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறது. காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கமானது, நேட்டோவால் தொடுக்கப்பட்டுள்ள உலகப் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ் அரசு ஆட்சி ஆகியவை முதலாளித்துவ சார்பு அதிகாரத்துவங்களுடன் ஒவ்வொரு கட்டத்திலும் முரண்படுகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதானது, இந்த அரசியல் பிளவின் மீதான அரசியல் வேலைத்திட்டத்தையும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச புரட்சிகரப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

Loading