ஷீலா ப்ரெமினுடைய (Sheila Brehm) அஞ்சலி உரை

“ஹெலனின் சாதனைகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் நிலைமைகளின் கீழ் இன்று நமது போராட்டத்தில் வாழ்கின்றன.”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஷீலா ப்ரெம், ஹெலன் ஹால்யார்டுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றினார். சோசலிச சமத்துவக் கட்சியும் அனைத்துலகக் குழுவும் டிசம்பர் 3 ஞாயிறன்று நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

ஹெலன் தன்னை அறிந்த அனைவரின் இதயத்தையும் மனதையும் வென்றார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக, அவர் சந்தித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளின் கட்சி உறுப்பினர்கள் மீதும், அத்துடன் அவரை அறிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் அழியாத முத்திரையைப் பதித்தார். ஹெலன் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராக இருந்தார், அவர் எப்போதும் தனது பேச்சைக் கேட்பவர்களுக்கு கல்வி கற்பித்தார் மற்றும் ஊக்கமளித்தார். காங்கிரஸிற்கான கட்சியின் வேட்பாளராகவும், டெட்ராய்ட் மேயராகவும், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகவும் பிரச்சாரம் செய்தபோது, கட்சிக்காக அயராத போராளியாக இருந்தார். தொழிற்சாலை வாயிலில் அவரது விடாமுயற்சிக்காக அவர் நன்கு அறியப்பட்டார் மற்றும் பாராட்டப்பட்டார்; அவர் மிகவும் மதிக்கப்பட்டார்.  அவர் அரசியல் விவாதங்களை நடத்திய அனைவரையும் பாதித்தார், அத்துடன் ஒரு பரந்த தன்மை நிறைந்த விவாதங்களையும் மேற்கொண்டார்.

1992 இல் ஹெலன் ஹால்யார்ட்

கட்சி உறுப்பினர்களின் குழந்தைகள் மீதும், கட்சி உறுப்பினர்களின் குழந்தைகளின் குழந்தைகள் மீதும் ஹெலன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஹெலனின் குடும்பம் அவரது மதிப்புகளையும் அரசியலையும் ஆழமாக மதித்தது. ஹெலனின் மகன் ஜமால், அவரது மருமகள் கென்யட்டா மற்றும் கென்யெட்டாவின் கணவர் மைக் மற்றும் 2019 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு மறக்கமுடியாத பயணத்தை மேற்கொண்ட அவரது அன்பான உறவினர் லோரெய்ன் ஆகியோர் ஹெலனால் ஆழமாக பாதிக்கப்பட்டனர். டானியா, மார்கோ மற்றும் ஏஞ்சல் மற்றும் இன்று கலந்து கொள்ளும் பலருக்கும் இது பொருந்தும்.

ஹெலன் சந்தித்தவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் மீது அவர் எப்போதும் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். இயற்கையாகவே, ஹெலன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மாபெரும் கொள்கைகளையும் நிகழ்காலத்திற்கான அவற்றின் பொருத்தத்தையும் வலியுறுத்துவார், முதலாளித்துவத்திலிருந்து தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் விடுதலைக்காகவும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்திற்காகவும் தனது முழு முதிர்ந்த வயது வாழ்க்கையையும் ஏன் அர்ப்பணித்தார் என்பதை விளக்குவார்.

அவரது திறமைகள் உண்மையானவைகள். பொய்மை, போலித்தனம், பின்தங்கிய நிலை, ஆணவம் ஆகியவை ஹெலனுக்கு அந்நியமானவை. அவர் கட்சியின் கலாச்சாரத்தை உருவாக்க உதவினார், அவரின் உயர்ந்த கோட்பாட்டு மற்றும் அரசியல் மட்டம், அத்துடன் அமைப்பு வேலையில் நுணுக்கமாக கவனம் செலுத்தினார். புரட்சிக் கட்சியின் காரியாளர்கள் மூலம் தொடர்ச்சி நம்மிடையே உயிர் வாழ்கிறது. ஹெலன் இதை எப்போதும் உணர்ந்திருந்தார். முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தமான நமது சகாப்தத்தின் வரலாற்றுத் தன்மையில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அவர் அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறன்களை அடிப்படையாகக் கொண்டார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் புரட்சிகரக் கட்சியான நமது சர்வதேசக் கட்சியைக் கட்டியெழுப்பும் பணிக்காக ஹெலன் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஆற்றலிலும் உற்சாகத்திலும் இது வெளிப்படுத்தப்பட்டது.

ஹெலன் 1971ல் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தபோது, எங்கள் தலைமுறையைச் சேர்ந்த எங்கள் அனைவரையும் போலவே, 1963ல் பப்லோவாதிகளுடன் சோசலிச தொழிலாளர் கட்சியின் மறுஇணைப்பிற்கு எதிரான போராட்டம் இன்னும் மிகவும் புதியதாக இருந்தது— நாங்கள் கட்சியில் சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அது இருந்தது.

ஹெலன் ஹால்யார்ட், 1976ல் இளம் சோசலிஸ்டுகளின் வேலைக்கான அணிவகுப்பை வழிநடத்துகிறார்.

ஹெலனுக்கும் எங்கள் தலைமுறைக்கும் கல்வியினால் ஊட்டப்பட்ட பெரிய பிரச்சினைகள் யாவை? சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அது நம்மை விட மிகப் பெரிய உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், அனைத்துலகக் குழு மட்டுமே ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தது— அதாவது தேசியவாதத்திற்கு எதிராக சர்வதேசியவாதம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம், மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்தில் தொழிலாள வர்க்கத்தை அதன் தீர்க்கமான பாத்திரத்தை எடுப்பதற்குத் தயாரிப்பதில் புரட்சிகரக் கட்சியின் அவசியம் ஆகியவைகளாகும்.

அந்த நேரத்தில், சோசலிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் டசின் கணக்கான கட்சிகளும் அமைப்புகளும் இருந்தன. சோசலிச தொழிலாளர் கட்சியைத் தவிர, மாவோயிஸ்டுகள், அனைத்து வகையான நடுத்தர வர்க்க தீவிரவாதிகள், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, அரசு முதலாளித்துவவாதிகள், கறுப்பின தேசியவாதிகள் மற்றும் பலர் இருந்தனர். ஒரு கட்சியின் தன்மையை வரையறுப்பது அதன் எண்ணிக்கை அல்ல, “செல்வாக்கு மிக்கவர்கள்” உடனான அதன் உறவுகள் அல்ல, மாறாக மாபெரும் கொள்கைகளாகும், ட்ரொட்ஸ்கிசம் மட்டுமே ஒரே மாற்றீடு என்ற புரிதலில் ஹெலன் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் எங்கள் கட்சியை மற்றவர்களிடமிருந்து பிரிப்பதற்கான போராட்டம் ஹெலனை உருவாக்கியது, எங்கள் தலைமுறை, மிகவும் கடுமையாக போராடிய போராளிகள் என்று நான் நினைக்கிறேன்!

தங்களையோ அல்லது தங்கள் சொந்த அமைப்புகளையோ அல்லது அவற்றின் வரலாற்றையோ மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத மற்றய அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் கூர்மையான எதிர்ப்பில், ஹெலன் தான் கட்டியெழுப்பும் கட்சியானது முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதியான நேர்மறையால் வழிநடத்தப்பட்டார்.

குறிப்பாக கட்சியில் இணைந்த இளைய தலைமுறையினரின் அரசியல் கற்பித்தலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அரசியலைத் தவிர, ஹெலன் எப்போதும் இசை, இலக்கியம், கலை ஆகியவற்றில் ஒருவரின் ஆர்வங்களைப் பற்றி கேட்பார், மேலும் அவர்களின் கலாச்சார எல்லைகளை விரிவுபடுத்த ஊக்குவிப்பார். இன்று உங்களில் பலர் ஹெலனுடன் அப்படி விவாதித்திருப்பீர்கள்.

தானும் எங்கள் தலைமுறையினரும் வாழ்ந்ததை மட்டுமல்லாமல், சுறுசுறுப்பான பங்கேற்பாளர்களாக இருந்த அரசியல் போராட்டங்களை அவர் விவரிப்பார். கறுப்பின தேசியவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் அனைத்து வகையான தேசியவாதமும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டது; ரிம் வோல்ஃபோர்த்தின் துரோகத்திற்கு எதிரான போராட்டம்; ரெம் ஹெனெஹானின் அரசியல் படுகொலைக்குப் பிறகு கட்சியின் தலைமையகம் நியூயோர்க் நகரத்திலிருந்து டெட்ராய்டுக்கு மாற்றப்பட்டது; தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவு; உலக சோசலிச வலைத் தளத்தின் தொடக்கம் — இவைகள் ஹெலனை வடிவமைத்த பல நிகழ்வுகளில் சிலது மட்டுமே. அந்த நிகழ்வுகளை வடிவமைப்பதிலும் செல்வாக்கு செலுத்துவதிலும் ஹெலன் முக்கிய பங்கு வகித்தார்.

2006 இல் கனடாவின் வின்ட்சரில் ஹெலன் ஹால்யார்ட் (இடது) மற்றும் ஷீலா ப்ரெம்

ஹெலன் எனக்கு ஒரு சகோதரியைப் போன்றவர், என் குடும்பத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தார், அவர்கள் அவரை அறிந்து நேசித்தார்கள். ஹெலனும் நானும் எங்கள் காலத்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகளும் தொழிலாள வர்க்கத்தில் கட்சியின் வரலாற்று மற்றும் கோட்பாட்டு ரீதியாக வழிநடத்தப்பட்ட அரசியல் பிரச்சாரங்களும் எப்போதும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை காட்டிக்கொடுத்த அனைவரிடமிருந்தும் எங்கள் கட்சியை வேறுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்ற அர்த்தத்தில் ஒன்றாக வளர்ந்தோம்.

நாங்கள் 1971 ஆம் ஆண்டில் சந்தித்தோம், எங்கள் அரசியல் அனுபவங்கள் மற்றும் 52 வருட காலப்பகுதியில் வாழ்க்கை கொண்டு வந்த எங்கள் பகிரப்பட்ட தனிப்பட்ட சோகங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் மூலம் ஒரு நெருக்கமான தனிப்பட்ட பிணைப்பை வளர்த்துக் கொண்டோம். இங்குள்ள எல்லோரையும் போலவே, எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக ஹெலன் இருப்பார், ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் நிலைமைகளின் கீழ் அவரது சாதனைகள் இன்று நமது போராட்டத்தில் வாழும் என்பதை நான் அறிவேன். காஸாவில் ஏகாதிபத்திய இனப்படுகொலைக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக போர் தொடுக்கும் தங்கள் சொந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும் மில்லியன் கணக்கானவர்கள் இப்போது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் போராடி வருகின்றனர், அதே நேரத்தில் அந்த அரசாங்கங்கள் இஸ்ரேலிய ஆட்சிக்கு உடந்தையாக உள்ளன.

இடமிருந்து, ஆன் லோர், ஜோஅன் லாரியர், நான்சி ஹனோவர், ஹெலன் ஹால்யார்ட், லிண்டா டெனன்பாம், ஷீலா ப்ரெம் மற்றும் ஜெனி கூப்பர், 2009 இல்

தோழர் ஹெலனின் வாழ்நாள் போராட்டத்துக்கு நாம் பெற்றுள்ள ஆதரவு, அனைத்துலகக் குழுவின் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனான மிகவும் மாறிய உறவுக்கு சான்றாக உள்ளது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியின் மிகவும் முன்னேறிய கட்டம், ஏகாதிபத்திய இனப்படுகொலை மற்றும் போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆக்கிரோஷமான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒரு சக்திவாய்ந்த ஈர்ப்பு துருவமாக நிலைநிறுத்துகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி, 1938ல் ஸ்ராலினிச GPU முகவர் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியால் அவரது மகன் லியோன் செடோவ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் மகன், நண்பர், போராளி  என்ற நூலை எழுதினார். ட்ரொட்ஸ்கி தனது மகனுக்கு செலுத்திய அஞ்சலி மிகவும் மாறுபட்ட நிலைமைகளின் கீழ் எழுதப்பட்டிருந்தாலும், எனது மிகவும் நேசமான தோழியும் சிறந்த நண்பருமான ஹெலனுக்கு நான் செலுத்தும் அஞ்சலிக்கு ட்ரொட்ஸ்கியின் மேற்கோளை பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை நான் எடுத்துக் கொள்ளலாமா? அதாவது அனைத்து நாடுகளின் புரட்சிகர இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும்! ஒரு சிறந்த உலகத்திற்காக உழைக்கும், துன்பப்படும் மற்றும் போராடும் அனைவரின் இதயங்களிலும் ஹெலன் உண்மையாக வாழ்வார்.

Loading