விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக மோடி அரசாங்கம் பாரிய போலீஸ்-இராணுவ ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான, தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கம் ஏற்கனவே 100,000ம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் இணைந்துள்ள விவசாயிகள் போராட்டத்தை நசுக்க ஒரு பிரமாண்டமான அரசு பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த அடக்குமுறையில் பல்லாயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் துணை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் மிகப் பெரிய பல அடுக்கு தடுப்புகளை அமைத்தல் மற்றும் ஆளில்லா விமான மூலம் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றையும் மேற்கொண்டுள்ளது.

அடிப்படை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயம் செய்யும் வாக்குறுதியை மோடி அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வாக்குறுதியை 2020-21 ஆம் ஆண்டில் “விவசாயிகளின்“ டெல்லிக்கு செல்வோம்” (டெல்லி சலோ) என்ற ஒரு வருட கால போராட்ட இயக்கத்தின் முடிவில் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டனர். அன்று, பதின்மூன்று மாதங்களாக, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தியாவின் தேசியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் முகாமிட்டு, அப்போது இயற்றப்பட்ட மூன்று விவசாய-வணிக சார்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரினர். இறுதியில், அரசாங்கம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் சில சட்டங்களை ரத்து செய்வதாகவும் உறுதியளித்தது. ஆனால், அதற்கு பிறகு அந்த முக்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை, பிப்.13, 2024, அன்று இந்தியாவின் ஷம்புவில் உள்ள பஞ்சாப்-ஹரியானா எல்லைக்கு அருகில் புது தில்லிக்கு அணிவகுத்துச் சென்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து விவசாயிகள் தப்பி ஓடுகின்றனர். [AP Photo/Rajesh Sachar]

BJP மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படும் மோடி, இந்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக பதவிக்கு வருவதற்கான முயற்சி தடம் புரளாமல் இருக்க, 2020-21 போரட்ட அணிதிரட்டலின் மறுபிரவேசத்தைத் தடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.

திங்களன்று, போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள், விவசாயிகளின் போராட்டம் மையம் கொண்டிருக்கும் டெல்லி மற்றும் பஞ்சாப் இடையே அமைந்துள்ள வடமேற்கு இந்திய மாநிலமான ஹரியானாவில் பாஜக மாநில அரசாங்கம் ஒரு தொடரான அடக்குமுறை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. பஞ்சாபை ஒட்டிய மாவட்டங்களுக்கு 114 கம்பெனி துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில பொலிஸ் படையை அனுப்புதல், முக்கிய சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தல் மற்றும் மாநிலத்தின் பெரும்பகுதியை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 144 இன் கீழ் வைப்பது ஆகியவை அடங்கும். இது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அனைத்து பொதுக் கூட்டங்களையும் தடை செய்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பகுதி முழுவதும் மொபைல் மற்றும் இணைய சேவைகளையும் அரசாங்கம் நிறுத்தி வைத்தது.

பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று ஹரியானா எல்லையை அடைந்தபோது, பெரிய கான்கிரீட் தடைகள், கொள்கலன்கள் மற்றும் முள்கம்பிகள் ஆகியவற்றைக் கொண்ட தடுப்புகளை அவர்கள் எதிர்கொண்டனர். போராட்டக்காரர்கள் கடந்து செல்லும் போது டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களின் டயர்களை குத்திக்கிழிக்கும் ஆணிகளும் போடப்பட்டன. ஹரியானாவிற்கும் டெல்லிக்கும் இடையிலான எல்லையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போல, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க சுமார் 50,000ம் போலீசார் நிறுத்தப்பட்டனர். டெல்லியில் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்தாலும், டெல்லி பொலிஸ் மத்திய பாஜக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப் போராட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன. பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு எல்லையை அடைந்த விவசாயிகள் மீது அரியானா மாநில போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஹரியானாவிலிருந்து டெல்லிக்குள் நுழையும் போது, ஒரு கடவையில் பொலிசின் சிறப்பு ஆணையர் ரவீந்திர யாதவ், “நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டும், லத்திகளை (குண்டாந் தடிகளை) பயன்படுத்த வேண்டும், நம்மை நாமே காப்பாற்ற வேண்டும்” என்று ஒலிபெருக்கி மூலம் போலிசைத் தூண்டியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாள் முடிவில், விவசாயிகள்/விவசாயி பிரதிநிதிகள் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “எங்களில் சுமார் 60 பேர் காயம் அடைந்துள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்கள் மூலம் எங்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கம் எங்களை ஆத்திரமூட்டுகிறது” என்றனர். விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பாந்தர், செவ்வாய்க்கிழமையை “இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்” என்று அழைத்தார். ”விவசாயிகள் மற்றும் விவசாயத் தலைவர்களை மோடி அரசாங்கம் தாக்கிய விதம் வெட்கக்கேடானது.” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதில் வெற்றி பெற்றால், அவர்களைக் காவலில் தடுத்து வைப்பதற்காக, டெல்லியில் ஒரு மைதானத்தை பயன்படுத்த BJP அரசாங்கம் திட்டமிட்டது. இருப்பினும், உள்ளூர் ஆம் ஆத்மி அரசாங்கம் அதை வழங்க மறுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும் பிரச்சனைகள் நியாயமானவை என்று அறிவித்தது.

செவ்வாய்கிழமை போராட்டத்திற்கு முன்னதாக, பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு போபால் ரயில் நிலையம் மற்றும் பல இடங்களில் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த விவசாயிகளை மத்தியப் பிரதேச போலீஸார் தடுத்து நிறுத்தினர். மத்திய பிரதேச விவசாயிகளின் தலைவர் அனில் யாதவ் மற்றும் மற்றொரு தலைவர் சிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை போலீசார் கொடூரமாக தாக்கினர்.

டெல்லி போலீசார், தங்கள் பங்கிற்கு, டிராக்டர்கள், டிரக்குகள் அல்லது பிற வாகனங்கள் ஊர்வலம் செல்ல ஒரு மாதத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொலிஸ் ஆணையர் சஞ்சய் அரோர் பிறப்பித்த உத்தரவில், “மக்கள் கூட்டம், பேரணிகள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர் தள்ளுவண்டிகள் நுழைவதற்கு முழுத் தடை விதிக்கப்படும்” என்று பிரகடனப்படுத்தியதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை முறையாகத் தொடங்கவுள்ள நிலையில், வெகுஜன எதிர்ப்பிற்கு அது ஒரு அணிதிரட்டல் புள்ளியாக மாறும் என்ற அச்சத்தில், விவசாயி போராட்ட இயக்கத்தை ஆரம்பத்திலேயே நசுக்குவதில் மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இந்திய முதலாளித்துவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவுடன் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள் அதன் எதிரிகளின் முதுகெலும்பற்ற மற்றும் வலதுசாரித் தன்மையை சுரண்டிக் கொண்டு, மோடி அரசாங்கம் அதற்கு வெகுஜன ஆதரவு உள்ளதாக கூறிக்கொள்ளும் அடிப்படையில், அரசியலில் வெல்ல முடியாத ஒரு பிம்பத்தை முன்வைக்க முயல்கிறது.

இந்தியாவின் தலைநகரில் நடந்து வரும் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டம் இந்த தவறான கதைக்கும், மோடியின் கீழ் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வருவதாகவும் மற்றும் விரைவில் “நடுத்தர வருமானம்” கொண்ட நாடாக மாறிவிடும் என்ற கற்பனையையும் பொய்யாக்கி உள்ளது. உண்மையில், இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சியின் பலன்கள் இந்திய சமூகத்தின் மிகவும் சலுகை பெற்ற அடுக்குகளின் மெல்லிய தட்டினால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. இன்று இந்திய பணக்காரர்களில் 1 சதவீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகவும், கீழ்மட்டத்தில் உள்ள 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

2020-21 களில் வெடித்த விவசாயிகள் போராட்டங்களின் போது மோடி அரசாங்கம் மிருகத்தனமான அடக்குமுறையை கையாண்டது. இருப்பினும், தொழிலாள வர்க்கத்தினரிடையேயும் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற உழைப்பாளர்களிடையேயும் பெரும் ஆதரவை விவசாயிகள் பெற்றுள்ள நிலைமைகளின் கீழ், விவசாயிகளுடனான ஒட்டுமொத்த மோதல் மிகவும் அரசியல்ரீதியாக அபாயகரமானது என்ற முடிவுக்கு இறுதியாக வந்துள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் மீது BJP அரசாங்கம் பல வழக்குகளைத் தொடுத்தது. அதே நேரத்தில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆர்வலர்களை துன்புறுத்தி கைது செய்தது. மாரடைப்பு, குளிர், கோவிட்-19 மற்றும் பிற நோய்களால் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் இறந்தனர். போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளில் 4 பேர், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி கொல்லப்பட்டனர்.

2024ல், விவசாயிகளின் போராட்டம் தொடங்கும் முன்பே அதை நசுக்குவதற்கு, மோடி மற்றும் பாஜக மாநில அரசாங்கங்கள் உறுதியாக உள்ளன. அதே சமயம், 2021ல் செய்தது போல், பல்வேறு விவசாய அமைப்புகளை பிளவுபடுத்த அவை முயல்கின்றன. எதிர்க் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ள அவற்றில் பெரும்பாலானவை, பொதுவாக வசதியான நிலையில் உள்ள விவசாயிகளால் பொய்யான வாக்குறுதிகளுடன் வழிநடத்தப்படுகின்றன.

விவசாயிகள் சங்கங்களுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக மோடி அரசாங்கம் செவ்வாய்கிழமை பிற்பகுதியில் உறுதி செய்தது. இது புதன்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், சர்ச்சையின் சாராம்சத்தில், MSP ஐ நிறுவுவதில் உள்ள “சிரமங்களை” மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலம், எந்த இடத்தையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

“நாங்கள் விவாதங்களுக்கு தயங்கவில்லை” என்று கே.வி. பிஜு, சம்யுக்த் கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி)-அரசியல் அல்லாத அல்லது SKM-NP இன் மூத்த தலைவர் கூறினார். “நாங்கள் (பேச்சுவார்த்தை) முடிவுக்காக காத்திருப்போம். அவை தோல்வியுற்றால், விவசாயிகள் தடைகளை மீறி டெல்லிக்கு அணிவகுத்துச் செல்வார்கள்.” 2020-21 விவசாயிகள் இயக்க போராட்டத்தின் போது உருவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் இருந்து பிரிந்து உருவாகிய SKM-NP என்பது தற்போதைய போராட்டத்தை வழிநடத்தும் இரண்டு முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும். மற்றொன்று கிசான் மஸ்தூர் மோர்ச்சா அல்லது KMM ஆகும்.

சில மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் ஒரு கூட்டு நடவடிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குழுக்கள், பிப்ரவரி 16-ம் தேதியன்று கிராமீன் பாரத் பந்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதன் போது காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் விநியோகிப்பதையும் மற்றும் வாங்குவதையும் நிறுத்தி வைப்பார்கள். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் தனியார் தொழில் துறைகளை மூடுவார்கள்.

எதிர்பார்த்தது போலவே, எதிர்கட்சிகள் தங்களது கொடிய தேர்தல் நம்பிக்கையைக் காப்பாற்ற விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன. செவ்வாயன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய கூட்டணி ஆட்சி அமைத்தால், MSP களுக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்போம்” என்று கூறினார்.

சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்கத்தின் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையில், இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A) என்பது ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உட்பட சுமார் இரண்டு டசின் கட்சிகளை உள்ளடக்கிய வலதுசாரி தேர்தல் கூட்டணி ஆகும். “மதச்சார்பின்மைக்கு” துரோகம் இழைத்ததற்காக இந்து மேலாதிக்க பிஜேபியை அது கண்டிக்கும் அதே வேளையில், I.N.D.I.A அதுவாகவே இந்து வலதுசாரிகளுடன் ஒத்துழைக்கிறது, மேலும் பிஜேபியைப் போலவே “முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தம்” மற்றும் சீனாவிற்கு எதிரான இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியை ஆதரிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், விவசாயிகளின் செய்தித் தொடர்பாளர் சர்வான் சிங் பாந்தர், MSPக்கான போராட்டத்தை ஆதரிப்பதான காங்கிரஸின் கூற்றுக்களை நிராகரித்துள்ளார். “காங்கிரஸ் கட்சி”, “எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை” என்று செவ்வாயன்று அறிவித்தார். பல விவசாயிகளின் உணர்வுகளை அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை, இந்திய அரசாங்கத்தை வழிநடத்திய அனைத்து ஆண்டுகளிலும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் MSP ஐ அறிமுகப்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டார். “பிஜேபியைப் போலவே காங்கிரஸையும் சமமாக நாங்கள் கருதுகிறோம். இந்த சட்டங்கள் காங்கிரஸாலேயே கொண்டு வரப்பட்டது. நாங்கள் யாருக்கும் ஆதரவாக இல்லை. விவசாயிகளுக்காக குரல் எழுப்புகிறோம்“ என்று குறிப்பிட்டார்.

Loading