உக்ரைனுக்கு தரைப்படையை அனுப்ப பிரெஞ்சு இராணுவம் தயாராகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம். 

செவ்வாயன்று பிரெஞ்சு இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பியர் ஷில், Le Monde பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்ப பிரான்ஸ் தயார் என்று அறிவித்தார்.

பிப்ரவரி 16, 2024 அன்று பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இடது, மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் கைகுலுக்கிக்கொள்ளுகின்றனர் [AP Photo/Thibault Camus]

“சர்வதேச நிலைமை எப்படி அபிவிருத்தி அடைந்தாலும், பிரெஞ்சு மக்கள் உறுதியாக இருக்க முடியும்: அவர்களின் (பிரெஞ்சு) சிப்பாய்கள் இந்த அழைப்புக்கு விடையிறுப்பார்கள்,” என்று ஷில் அறிவித்தார். ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதன் நலன்களைப் பாதுகாக்கவும், பிரெஞ்சு இராணுவம் மிகவும் கடினமான சண்டைக்கு தயாரிப்பு செய்து வருகிறது, அந்த உண்மையை அறிய அனுமதித்து, அதைக் காட்டுகிறது,” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். பிரான்ஸ் “30 நாட்களுக்குள் 20,000 துருப்புகளை” நிலைநிறுத்த முடியும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

ஷில், உக்ரேன் போர் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை, ஆனால் அவருடைய இலக்கு என்ன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய தலையீட்டின் இலக்கு பற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு, உக்ரைனுக்கு ஐரோப்பிய துருப்புகளை அனுப்புவது “விலக்கப்படவில்லை” என்று மக்ரோன் கூறினார். அப்போதிருந்து, மக்ரோன் தெற்கு உக்ரேனில் உள்ள மூலோபாய துறைமுகமான ஒடெசாவுக்கு “ஆட்களை” அனுப்ப விரும்புவதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்களை வெளியிட்டார்.

மக்ரோனும் இராணுவ உயர்மட்டமும் போருக்கு தொழிலாளர்களின் பெருவாரியான எதிர்ப்பை நசுக்க விரும்புகிறார்கள் என்பதை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. மக்ரோன் ஒரு தரைப்படை தலையீட்டுக்கு அச்சுறுத்திய பின்னர் வெளிவந்த கருத்துக்கணிப்புகள், பிரெஞ்சு மக்களில் 68 சதவீதத்தினரும் ஜேர்மனியர்களில் 80 சதவீதத்தினரும் போர் விரிவாக்க எதிர்ப்பை காட்டினர். ஆயினும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், 1914 அல்லது 1939 இல் போலவே, முழுமையான போரில் முடிவடையும் ஒரு பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

செவ்வாயன்றும் ரஷ்ய இராணுவ வெளியுறவு உளவுத்துறையின் தலைவரான செர்ஜி நரிஷ்கின் TASS (ரஷ்ய செய்தி நிறுவனம்) இடம் பிரான்ஸானது உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது என்றார். “உக்ரேனுக்கு 2,000 பேர் கொண்ட ஒரு இராணுவப் படைப்பிரிவை அனுப்ப பிரான்ஸ் தயாரிப்பு செய்து வருகிறது என்பதைக் காட்டும் தகவல் ரஷ்யாவிடம் உள்ளது,” என்று நரிஷ்கினை மேற்கோளிட்டு TASS கீழ்வருமாறு எழுதியது: “நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் [அதாவது, பிரான்ஸ்] சாதாரண பிரெஞ்சு மக்களின் மரணங்களாலோ அல்லது தளபதிகளின் கவலைகளாலோ அசைக்கப்படவில்லை.”

பிரெஞ்சு தளபதிகள் “இத்தகையதொரு பெரிய இராணுவப் பிரிவை கண்டுபிடிக்கப்படாமல், உக்ரேனுக்குள் அனுப்ப முடியாது மற்றும் நிலைநிறுத்த முடியாது என்று அஞ்சுகிறார்கள்” என்று நரிஷ்கின் தெரிவித்தார். இந்தப் படைப்பிரிவு, “இவ்விதத்தில் ரஷ்ய ஆயுதப் படைகளின் தாக்குதல்களுக்கான ஒரு முன்னுரிமை மற்றும் சட்டபூர்வமான இலக்காக மாறும்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

நரிஷ்கினின் எச்சரிக்கைகளைக் கண்டித்து, அவற்றை மாஸ்கோவில் இருந்து வரும் “பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்கள்” என்று குறிப்பிட்டு பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் டெபெஷ் டு மிடி (Dépêche du Midi ) இல் பதிலளித்தது: அதாவது “ரஷ்ய வெளியுறவு உளவுத்துறையின் தலைவர் சேர்ஜி நரிஷ்கின் முடுக்கிவிட்ட சூழ்ச்சிகள், ரஷ்யா எவ்வாறு திட்டமிட்டு தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய ஆத்திரமூட்டல்கள் பொறுப்பற்றவை என்று நாங்கள் கருதுகிறோம்.”

ஆயுதப்படை அமைச்சகத்தின் இந்த மறுப்புகள் அப்பட்டமான பொய்களாகும். மக்ரோனின் அறிக்கைக்குப் பின்னர், உக்ரேனுக்கு கணிசமான படைகளை அனுப்ப பாரிஸ் திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாக உள்ளது. மாஸ்கோவால் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட ஜேர்மன் அதிகாரிகளுக்கு இடையிலான ஒரு விவாதம் உட்பட பல செய்திகள், வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸ் ஏற்கனவே களத்தில் துருப்புகளைக் கொண்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

மார்ச் 14 அன்று, போலந்து நேட்டோவில் இணைந்ததன் 25 ஆம் ஆண்டு நிறைவில், போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி நேட்டோ ஏற்கனவே உக்ரேனில் படைகளைக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டார்: அதாவது “நேட்டோ நாடுகளின் சிப்பாய்கள் ஏற்கனவே உக்ரேனில் உள்ளனர், இதுபோன்றவொரு அபாயத்தை எடுத்துள்ள நாடுகளின் தூதுவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.” உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாத அவர், சம்பந்தப்பட்ட “வேறு எவரையும் விட உக்ரேனியர்களுக்கு நன்கு தெரியும்” என்று அறிவித்தார்.

ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சகம் ஏன் இந்த பொறுப்பற்ற மறுப்புகளை வெளியிடுகிறது? நரிஷ்கின் போன்றவர்களின் அறிக்கைகள் மக்களிடையே பெருகிய கவலைகளையும் முழு போர் ஆபத்து பற்றிய விழிப்புணர்வையும் உயர்த்தும் என்று உள்நாட்டில் அது சந்தேகத்திற்கு இடமின்றி அஞ்சுகிறது.

ரஷ்ய மற்றும் நேட்டோ துருப்புகளுக்கு இடையிலான நேரடிப் போரால் முன்னிறுத்தப்படும் அபாயங்களை பிரெஞ்சு அரசாங்கம், பிரம்மாண்டமான பொறுப்பற்ற தன்மையுடன் புறக்கணித்து வருகிறது. ஜெனரல் ஷில் அவரது லு மொன்ட் (Le Monde)  கட்டுரையில், பிரான்சைப் பொறுத்த வரையில், “அணுவாயுத தடுப்பு அதன் இன்றியமையாத நலன்களைப் பாதுகாக்கிறது” என்று வெற்றுத்தனமாக எழுதுகிறார். யதார்த்தத்தில், உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் ஒரு போர்வெறி முடிவு இரத்தந்தோய்ந்த சண்டைக்கும் அனேகமாக அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் இட்டுச் செல்லும் என்பதையே ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தத் தீவிரப்படுத்தல் எங்கே போய் முடியும் என்ற கேள்விக்கு ஆளும் வட்டாரங்களில் எவரும் ஸ்தூலமாக பதிலளிக்கவில்லை. உக்ரேனில் உள்ள பல நூறாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்களுக்கும் அதிகபட்சம் ஒரு சில பத்தாயிரக்கணக்கான பிரெஞ்சு துருப்புக்களுக்கும் இடையே உள்ள விகிதாச்சார வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, பிரெஞ்சுப் படைப்பிரிவு கண்டுபிடிக்கப்பட்டு, இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. அதன்பின் மக்ரோன் கூடுதல் துருப்புகளை அனுப்புவாரா அல்லது அவரது படைகள் மீதான ரஷ்ய தாக்குதல்களை நிறுத்த அணுஆயுதங்களை நிலைநிறுத்துவாரா?

சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய ஊடகங்களில் காதைச் செவிடாக்கும் ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்கு இடையே, இந்தப் போரானது நேட்டோ-ஆதரவிலான உக்ரேனிய இராணுவத்திற்கு ஒரு படுதோல்வியாக மாறி வருகிறது என்பது தெளிவாக உள்ளது. ஆனால் மனித நாகரீகத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு போர் அபாயம் இருந்தபோதிலும், பிரெஞ்சு அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் கண்களை மூடிக்கொண்டு இன்னும் பேரழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சு அச்சுறுத்தல்கள் ரஷ்ய தலைமையிடம் இருந்து பலமான எதிர்வினைகளைத் தூண்டின. ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அவர் 87 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாலையில், விளாடிமிர் புட்டின் “பிரெஞ்சு உட்பட நேட்டோ நாடுகளின் பல சிப்பாய்கள் ஏற்கனவே உக்ரேனில் உள்ளனர்” என்று உறுதியளித்தார். அவர் தொடர்ந்து கூறினார், “நேட்டோ துருப்புகள் உக்ரேனில் உள்ளன, அது எங்களுக்குத் தெரியும். அங்கு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசப்படுவதை நீங்கள் கேட்கலாம், அதில் நல்லது எதுவும் இல்லை. முதலாவதாக, அவர்களுக்கு, ஏனென்றால் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், மற்றும் பெரும் எண்ணிக்கையிலாகும்.”

உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்துவதை நிராகரிக்க மறுத்த மக்ரோனின் கருத்துக்கள் குறித்து வினவிய போது, புட்டின் கூறினார்: “ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போருக்கு முந்தைய கடைசி படியாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெளிவாக உள்ளது. கிட்டத்தட்ட யாரும் அதை விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்.”

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், முதலாளித்துவ அரசாங்கங்கள் அனைத்தும் மாஸ்கோ தலைமையில் அல்ல, மாறாக நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் தலைமையில் ஒரு இராணுவத் தீவிரப்பாட்டைப் பின்தொடர்கின்றன. முன்னாள் வலதுசாரி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஒரு ஆலோசகரான ஹென்றி குவைனோ கடந்த வாரம் ஐரோப்பா1 தொலைக்காட்சியில் வழங்கிய கருத்துக்கள், குறிப்பாக மக்ரோன் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்ப அழைப்பு விடுத்ததில் இருந்து, பிரெஞ்சு ஆளும் வட்டாரங்களைப் பீடித்துள்ள போர் வெறியை ஓரளவுக்கு நன்றாக தொகுத்தளித்தது.

“ஒரு சிலுவைப் போர் உணர்வு ஆதிக்கம் செலுத்துகிறது,” என்று குவைனோ கூறினார்: “நாம் போருடன் விளையாடுகிறோம், பயங்கரமான ஒன்றுடன். இது [மக்ரோன்] மட்டுமல்ல. பாராளுமன்றத்தில், தொலைக்காட்சியில், வானொலியில் போர் விளையாடும் புத்திசாலித்தனமான நபர்களை நான் வழக்கமாகக் காண்கிறேன். ஏதோ தவறு நடக்கிறது, அவர்கள் போரை ஒரு சம்பவப் பிரச்சினை போல் நடத்துகிறார்கள் ... ஆனால் பணயத்தில் இருப்பது நாடுகளின் வாழ்வா சாவா என்பதுதான். அணு ஆயுதங்களின் பின்னணியில் நாங்கள் விளையாடுகிறோம்” என்றார்.

உக்ரேனிய போருக்கும் அதற்கு தலைமை கொடுத்த நேட்டோ ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கும் எதிரான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு வெடிப்பதே அவரது பிரதான அச்சம் என்று குவைனோ வலியுறுத்தினார்.

அவர் இவ்வாறு கூறினார், “இவை அனைத்திலும் உள்ள ஆபத்து என்னவென்றால், பொதுமக்கள் கருத்து நமக்கு எதிராகத் திரும்பும், மக்கள் சோர்வடைந்து பிளவுபட்டுள்ளனர். நமது சமூகங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதைப் பாருங்கள், நமது முந்தைய சிலுவைப் போர்கள் அனைத்தும் இன்று நாம் சொன்னதையே சொன்ன இடத்தில் எவ்வாறு முடிந்தன என்பதைப் பாருங்கள். நாங்கள் வியட்நாம் குறித்து கூறினோம், நாங்கள் அதைச் செய்யவில்லை என்றால், அது ஒரு ஆசிய முனிச் ஆகும், பின்னர் நாங்கள் ஆப்கானிஸ்தான் குறித்து கூறினோம்,” என்றார்.

யதார்த்தத்தில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களைப் போலவே, முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு மரண நெருக்கடியாகும். ரஷ்யாவையும் உக்ரேனையும் பிளவுபடுத்தி ஐரோப்பா எங்கிலும் நேட்டோ கூட்டணி விரிவடைவதற்கு பாதை அமைத்துக் கொடுத்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் நாசகரமான விளைவுகள் வெளிப்படையாகி வருகின்றன. தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுவதும், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அழைப்புவிடுக்குவதுமே இப்போதைய முன்னோக்கிய பாதையாகும்.

Loading