மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
திங்களன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) மூன்று மூத்த தலைவர்கள் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இது ஈரானுக்கு எதிரான ஒரு போர் நடவடிக்கையாகும். இதற்கு வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் அரசியல் பொறுப்பை ஏற்கின்றனர்.
இந்த குண்டு வீச்சானது, ஈரான் மீதான இஸ்ரேலிய போரில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. ஏனெனில், சர்வதேச சட்டத்தின்படி, ஈரானிய பிரதேசமாக கருதப்படும் அதன் தூதரகத்தை இஸ்ரேல் இலக்கு வைத்திருக்கிறது. இஸ்ரேலிய ஆட்சி நீண்டகாலமாக இலக்கு வைத்து சட்டத்துக்கு புறம்பான கொலைகளை செய்யும் அராஜக வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது. குறிப்பாக 2020 இல், ஈராக்கில் IRGC ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஈரானிய மற்றும் சிரிய அதிகாரிகள் மீது தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கையானது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும், அதே போல் இஸ்ரேலின் நேட்டோ ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் இடையே நேரடிப் போரைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது.
நேற்று, ஈரானிய அதிகாரிகள் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தனர். “[இஸ்ரேல்] இந்தக் குற்றத்திற்காகவும், அது செய்த பிற குற்றங்களுக்காகவும் அதனை வருத்தப்பட வைப்போம்” என்று ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறினார். ரஷ்ய, சீன மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சகங்களும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்த தாக்குதல் முடிந்த உடனேயே ஈரானிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட பைடென் நிர்வாகம், இதற்கான தமது பொறுப்பை மறுத்து, இஸ்ரேலிய அதிகாரிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் இதுபற்றி தமக்கு அறிவித்ததாகக் கூறினர். எவ்வாறாயினும், பைடெனுக்குத் தெரிவித்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், வாஷிங்டனும் அதன் நேட்டோ ஏகாதிபத்திய கூட்டாளிகளும் காஸாவிற்கு எதிரான ஆறு மாத இனப்படுகொலை முழுவதும் வெற்று காசோலையை கொடுத்ததால் தான் அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்று இஸ்ரேல் உணர்ந்தது.
வெள்ளை மாளிகையுடன் ஒருங்கிணைக்காமல் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் என்று நம்புவது கடினம். அப்படி இருந்திருந்தால், பைடென் நிர்வாகம் நவம்பர் தேர்தலுக்கு முன்னர் போரின் ஒரு பெரிய விரிவாக்கத்தைத் தூண்ட முற்படுகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
எவ்வாறாயினும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று இரவு இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மறுத்துவிட்டன. இத்தாக்குதலுக்கான இஸ்ரேலின் நியாயத்தை திறம்பட ஆமோதித்த ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் வுட், “பயங்கரவாதத் தலைவர்கள் மற்றும் அதன் கூறுகள், தாக்குதல் நடந்த இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் செய்திகளால் கவலைப்படுவதாகவும், பயங்கரவாதிகள் மற்றும் பிற வன்முறை தீவிரவாதிகளுக்கு ஈரானின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு, பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்குவதைக் கண்டிப்பதாகவும்” கூறினார்.
இந்த வாரம், காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் 400 பேரை இஸ்ரேலிய இராணுவம் படுகொலை செய்ததை அமெரிக்க அதிகாரிகள் வெட்கமின்றி ஆதரித்தனர். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியர் “ஹமாஸ் மருத்துவமனைகளில் செயல்படக் கூடாது” என்று அப்பட்டமாக அறிவித்தார். 1.5 மில்லியன் பாலஸ்தீனிய அகதிகள் கூடார நகரங்களில் வசிக்கும் ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தான் ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மைக் மேத்யூஸ் சுட்டிக்காட்டினார். “ரஃபாவில் தொடர்ந்து இருக்கும் ஹமாஸ் போராளிகள் பற்றி இஸ்ரேல் எதுவும் செய்யாத ஒரு சூழ்நிலை ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறினார்.
வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் 32,000ம் பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு பச்சை விளக்கு காட்டுகின்றன. ஏனெனில், அவர்கள் மத்திய கிழக்கு முழுவதும் இதே போன்ற குற்றங்களுக்குத் தயாராகி வருகின்றனர். காஸா இனப்படுகொலையின் தொடக்கத்தில், வாஷிங்டன் விமானம்தாங்கி போர்க் கப்பல் அணிகளையும், அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஈரானை வெளிப்படையாக குறிவைத்த பகுதிக்கு அனுப்பியது. இன்று, இஸ்ரேலிய அதிகாரிகள் ஹிஸ்புல்லா போராளிகளைத் தாக்க லெபனானை ஆக்கிரமிப்பது பற்றி விவாதித்து வருகையில், லெபனான், சிரியா மற்றும் அதற்கும் அப்பால் புதிய நவ-காலனித்துவப் போர்களில், இஸ்ரேலை ஒரு பினாமியாகப் பயன்படுத்த நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் திட்டங்கள் நன்கு முன்னேறியுள்ளன.
ஒரு தசாப்த காலமாக, ரஷ்ய, ஈரானிய மற்றும் ஹிஸ்புல்லா படைகள் சிரியாவில் அரசாங்கப் படைகளுடன் இணைந்து நேட்டோவால் ஆதரிக்கப்படும் “கிளர்ச்சி” இஸ்லாமிய அல்லது குர்திஷ் தேசியவாத ஆயுதக் குழுக்களுக்கு எதிராக போரிட்டு வருகின்றன. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் 13 ஆண்டுகால யுத்தம், நாட்டை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. அங்கு அரை மில்லியன் பேர் கொல்லப்பட்டதோடு, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
ஏகாதிபத்திய சக்திகள் யூரேசியாவின் மேலாதிக்கத்திற்காக நடத்தும் உலகளாவிய போருக்கு மத்தியில், கடந்த திங்களன்று சிரியா மற்றும் லெபனானின் ஈரானிய இராணுவ கட்டளை மையத்தின் தலைமையின் தலையை இஸ்ரேல் துண்டித்துள்ளது. வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் சண்டையிட்டு, அதிதீவிர வலதுசாரி உக்ரேனிய ஆட்சியை கியேவில் ஆயுதபாணியாக்கிவரும் அதே வேளை, அவர்கள் ரஷ்யாவையும் மத்திய கிழக்கில் அதன் நட்பு நாடுகளையும் தாக்கி வருகின்றனர். சிரியாவில் அமெரிக்கா மற்றும் ஈரானிய IRGC படைகளுக்கு இடையே நடந்த சண்டையை உள்ளடக்கி, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் தாமஸ் ஃபிரைட்மேன் சமீபத்தில் பின்வருமாறு எழுதினார்:
அமெரிக்கர்களுக்கு தாங்கள் ஈரானுடன் போரிடுவது தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஈரானின் புரட்சிகர காவலர்கள் தங்கள் பினாமிகள் மூலம் அமெரிக்காவுடன் நிழல் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகத் தெரியும். இந்த ஈரானிய பினாமிகளில் ஒருவர் “அதிர்ஷ்டம்” அடைந்து, ஒரு அமெரிக்க போர்க்கப்பலையோ அல்லது ஜோர்டான் அல்லது சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களில் ஒன்றின் முகாம்களையோ தாக்கி பெரும் உயிரிழப்பு நிகழ்வை உருவாக்கினால் ... [அது] உலகமே அதன் எண்ணெய்க்காக அதிகம் நம்பியிருக்கும் ஒரு பிராந்தியத்தில், ஒரு நேரடி துப்பாக்கிச் சூடு போராக மாறும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பேரழிவுகரமான இராணுவ விரிவாக்கத்தின் உடனடி ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ப்ரீட்மேன் விவாதிக்கும் போர், பாரசீக வளைகுடா எண்ணெய் வர்த்தகத்தின் தடையால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச் சரிவுக்கு அப்பாலும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும். உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருக்கு மத்தியில் மற்றும் 2017 இல், $400 பில்லியன் டொலர்கள் சீன-ஈரானிய வர்த்தகம் மற்றும் இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அது அனைத்து முக்கிய அணுவாயுத சக்திகளையும் உலகளாவிய மோதலுக்கு இழுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
உண்மையில், சீனாவுடனான மோதல் இப்போது அவர்களின் மையக் கவலையாக உள்ளது என்ற உண்மையை அமெரிக்க அதிகாரிகள் பெருகிய முறையில் மறைக்கவில்லை. கடந்த மாதம், அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா ஈரானிய, சீன மற்றும் ரஷ்ய ஆட்சிகளுக்கு இடையே நேட்டோவிற்கு எதிராக உருவாகி வரும் நிலையற்ற தற்காப்புக் கூட்டணியை கண்டனம் செய்தார்.
“ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட்டாக தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்கின்றன மற்றும் அவர்களின் சுரண்டலுக்கு சாதகமான ஒரு குழப்பமான நிலப்பரப்பை வளர்த்து வருகின்றன. இந்த கூட்டாண்மையின் தாக்கங்கள் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும்” என்று குரில்லா கூறினார். மேலும், உக்ரேன் போருக்காக ரஷ்யாவிற்கு ஈரானிய ட்ரோன் ஏற்றுமதிகள் மற்றும் சீனாவிற்கு ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் பற்றி குறிப்பிடுகையில், “ஈரான் அமெரிக்காவின் தடையை மீறி அதன் 90 சதவீத எண்ணெயை சீனாவிற்கு விற்கிறது” என்று அவர் புகார் கூறினார்.
காஸா இனப்படுகொலைக்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவு என்பது, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட ஒரு போரின் மூலம் உலகை அடிபணியச் செய்யும் அவர்களின் உந்துதலில் இருந்து உருவாகிறது. யப்பானின் “நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவைப் போல” காஸா மீது அணுகுண்டுகளை வீச வேண்டும் என்றும், “ரஷ்யப் படைகளை துடைத்தழிக்க உக்ரேனிலும்” அணுகுண்டுகளை வீச வேண்டும் என்றும் அழைப்பு விடுத்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் டிம் வால்பெர்க்கின் சமீபத்திய வெறிபிடித்த பேச்சில், இது தெளிவாக வெளிப்பட்டது. பல தசாப்த கால யுத்தம் மற்றும் கொள்ளையடிப்பினால் உருவாக்கப்பட்ட முரண்பாடுகளை தீர்க்க முடியாமல் இருக்கும் ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் பெருகிய முறையில், வழியில் நிற்பவர்களை படுகொலை செய்வதைத் தவிர வேறு வழியைக் காணவில்லை.
காஸா இனப்படுகொலைக்கான எதிர்ப்பு, அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும். அதன் புத்தாண்டு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தது:
ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், சமூகக் காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களை இயல்பாக்குவது என்பது முதலாளித்துவ வர்க்கம் ஒரு முட்டுச்சந்துக்கு வந்துவிட்டதைக் குறிக்கிறது. சமூகப் படுகொலையின் பல்வேறு வடிவங்களைக் கொண்ட, கொள்கைகளைக் கொண்ட ஒரு வர்க்கம், அதன் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சட்டப்பூர்வத் தன்மையை தெளிவாக இழந்து விட்டது.
இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் நேட்டோ நாடுகளில் இடம்பெற்றுவரும் பாரிய எதிர்ப்பு போராட்டங்களின் போது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே காஸா இனப்படுகொலைக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதுதான் தீர்க்கமான கேள்வியாகும். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளில் ஒரு ட்ரொட்ஸ்கிச தலைமையை கட்டியெழுப்புவது அவசியமாகும். இது மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளதால் முன்வைக்கப்படும் அடிப்படை மற்றும் அவசர பணியாகும்.
மேலும் படிக்க
- 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட ஷிஃபா மருத்துவமனை படுகொலையை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துகிறது
- சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
- காஸாவின் அழிவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலை உலகப் போரும்
- தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்