இஸ்ரேல் ரஃபாவை அழிக்கத் தயாராகும்போது 200,000 பேர் லண்டனில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் இனப்படுகொலைகளுக்கு எதிராக கடந்த அக்டோபரில் இருந்து பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற பதினொன்றாவது தேசிய ஆர்ப்பாட்டத்தில், 200,000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்கார்கள் அணிவகுத்துச் சென்றனர்.

இந்த எதிர்ப்பு, பாரிஸ், பேர்லின், கோபன்ஹேகன், ஆம்ஸ்டர்டாம், மிலன், ஒஸ்லோ, ஹெல்சிங்போர்க், ஆர்ஹஸ் மற்றும் பிற நகரங்களில் நடைபெற்ற பேரணிகளுடன் சேர்ந்து ஐரோப்பா முழுவதிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது. இவை, பாலஸ்தீனிய நிலங்களை டெல் அவிவ் அபகரித்து ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆறு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 30 மார்ச் 1976 அன்றைய இரத்தக்களரி நிகழ்வுகளை நினைவு கூரும் நில ஆக்கிரமிப்பு தினத்துடன் (Land Day) இணைந்து நடத்தப்பட்டன.

திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக பிரிட்டனின் பெரும்பாலான ரயில் வலையமைப்பு மூடப்பட்டிருந்ததால் பயண நேரம் அதிகமாகியிருந்த நிலையிலும் ஈஸ்டர் வார இறுதியில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஏனைய சிறு நகரங்களிலும் மாநகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

லண்டனில், போராட்டக்காரர்கள் ரஸ்ஸல் சதுக்கத்தில் கூடி, அங்கிருந்து த ஸ்ட்ரண்ட் வழியாக அணிவகுத்துச் சென்று, இறுதியாக டிராஃபல்கர் சதுக்கத்தில் அணிவகுப்பை முடித்தனர். அங்கே ஒரு கூட்டம் நடைபெற்றது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கான தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் அது விரிவடைவதன் தாக்கங்கள் குறித்து ஆளும் வட்டாரங்களில் உணரப்பட்ட பதட்டம், ஊடக அறிக்கைகளில் பிரதிபலித்தது.

பிரிட்டனின் ஊடகங்கள் ஆளும் உயரடுக்கின் நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு பெரிய போராட்டங்களின் பருமனையும் இழிவான முறையில் குறைத்து மதிப்பிடுவனவாகும். இருப்பினும், சனிக்கிழமையன்று, கார்டியன், ITV நியூஸ் இரண்டும் அதன் பருமன் 200,000க்கும் அதிகமாக இருப்பதாகத் துல்லியமாக அறிவித்தன. இது, கடந்த நவம்பரில், இஸ்ரேலின் கொலைகாரப் படையெடுப்பின் நீட்டிப்புகளுக்கு ஏற்ப வெகுஜன சீற்றம் வெடித்தெழுந்து, 800,000 பேர் பங்கெடுத்து லண்டனை ஸ்தம்பிக்க செய்த ஆர்ப்பாட்டத்தை, “சுமார் 300,000” பேர் கலந்துகொண்டதாக கார்டியன் வெளியிட்ட செய்திக்கு நேர்மாறாக இருந்தது. காசா மீதான பிற தேசிய ஆர்ப்பாட்டங்களில் “ஆயிரக்கணக்கானோர்” கலந்துகொண்டதாகவும் அது அறிவித்தது.

கூட்ட மேடையில், “இஸ்ரேலுடனான ’பேரச்சமூட்டும், கோரமான ஆயுத வர்த்தகத்தை’ தொடர்வதற்காக இங்கிலாந்து அரசாங்கத்தை விமர்சித்த”முன்னாள் தொழில் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினை மையமாகக் கொண்டு தி கார்டியன் செய்தி வெளியிட்டது. “உயிர்கள் அழிக்கப்படுவதை, காஸாவில் பொறுப்பற்ற முறையில் உயிர்கள் அழிக்கப்படுவதை நாம் உடனுக்குடன் பூகோள தொலைக்காட்சியில் பார்க்கிறோம். அதேசமயம் நம் அரசாங்கங்களினால் இன்னும் நிரந்தர போர் நிறுத்தம் என்ற வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை, இஸ்ரேலுடனான‘பேரச்சமூட்டும், கோரமான ஆயுத வர்த்தகத்தையும், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இந்த நாட்டிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து காசாவில் மக்களைக் கொன்று குவிக்கின்ற ஆயுதங்கள் விநியோகம் செய்யப்படுவதையும் தடுக்க முடியவில்லை,” என அவர் தெரிவித்திருந்தார்.

கோர்பினைப் போலவே தொழிற்கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மரால் நாடாளுமன்றக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட டயான் அபோட்டின் பேச்சும் மேற்கோள் காட்டப்பட்டது. “பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் போர்நிறுத்தத்திற்கு ‘உதட்டளவில் சேவை செய்வதாக’ ஹேக்னி நோர்த் மற்றும் ஸ்டோக் நியூவிங்டனுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்” என்று அது தெரிவித்தது.

பாலஸ்தீனிய ஒற்றுமை பிரச்சாரத்தின் பிரதிநிதியான பென் ஜமாலின் கருத்துக்களும் உள்ளடங்கிய நிருபர் டொம் செஷயர் அனுப்பிய செய்தியை வெளியிட்டதில், லண்டன் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தனது வழக்கமான விரோதமான அறிக்கையிலிருந்து விலக வேண்டிய அவசியத்தை ஸ்கை நியூசும் உணர்ந்திருந்தது.

கடந்த நவம்பரில் இருந்து, “எதிர்ப்புகளின் சூழல் மாறிவிட்டது... நவம்பரில் நூறாயிரக்கணக்கானோர் பேரணி சென்றபோது, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கவில்லை. ஒரு பக்கம் ஆர்ப்பாட்டங்களுக்கு நன்றிபாராட்டி வாதிடக்கூடியவாறு, இப்போது அந்த நிலைப்பாடு இருக்கின்றது,” என்று செஷயர் எழுதினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட போலியான போர்நிறுத்த தீர்மானத்திற்கு உத்தியோகபூர்வ ஆதரவை மேற்கோள் காட்டிய செஷயர், “பிரிட்டிஷ் அரசாங்கம் ஏறக்குறைய அதையே (போர் நிறுத்தத்தையே) விரும்புகின்ற போது, இது போன்ற போராட்டங்கள் - அவற்றைக் கண்காணிக்கத் தேவையான பொலிஸ்- இன்னமும் தேவையா”, என்று [ஜமாலிடம்] கேட்டார்.

“அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு தற்காலிக போர் இடைநிறுத்தத்தை ஆதரிப்பதாகவும், மற்றும் தற்போதைய அரசாங்க நிலைப்பாடு இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்வதாகவும் உள்ளது” என்று ஜமால் தெளிவுபடுத்தினார்.

ஆர்ப்பாட்டங்களை “யூத எதிர்ப்பு வெறுப்பு ஊர்வலங்கள்” என்ற அரசாங்க விளக்கங்களை மேற்கோள் காட்டுவதிலிருந்து, வெளிப்படையான புறநிலைத்தன்மைக்கு வந்துள்ள, செய்தி வெளியிடுவதில் மாற்றமடைந்துள்ள தொனியுடன், மாநகர பொலிஸ் தடையை செயல்படுத்துவதற்கான அதன் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதையும் காண முடிந்தது. பொலிசாரால் குற்றமாகக் கருதப்படும் எந்தவொரு செயல் குறித்தும் “விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று நிகழ்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக துணை உதவி ஆணையர் ஆண்டி வாலண்டைன் கூறியிருந்தும், சனிக்கிழமையன்று நான்கு பேர் தான் கைது செய்யப்பட்டனர்.

ஆல்ட்விச்சில் பிரதான அணிவகுப்பு அதன் முடிவை நெருங்கியபோது “எதிர்-ஆர்ப்பாட்டத்தில்” இஸ்ரேலியக் கொடிகளை அசைத்து சுமார் 100 சியோனிஸ்டுகள் நடத்திய ஆத்திரமூட்டல் மூலம், வெகுஜன கைதுகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

30 மார்ச் 2024 அன்று, சியோனிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் பொலீஸ் வரிசையில் நிற்கிறது

பொலிசால் பாதுகாக்கப்பட்ட சியோனிசப் பேரணி, போர்-எதிர்ப்புப் போராட்டங்கள் மீதான தடையை நியாயப்படுத்த அரசாங்கமும் பொலிசும் பயன்படுத்தக்கூடிய வன்முறையைத் தூண்டும் நோக்கத்தை அடையவில்லை. பொலிஸ் செயலாற்றத் தவறியது குறித்து பல்வேறு சியோனிஸ்டுகள் சமூக ஊடகங்களில் திட்டினர்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த வார நிகழ்வின் கூட்ட மேடை, கோர்பினைட் “இடது” களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது – அதில் கோர்பின் உட்பட அபோட், ஜாரா சுல்தானா, சோசலிச பிரச்சாரக் குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவரான ரிச்சர்ட் பர்கன் ஆகிய பிரமுகர்கள் அடங்குவர்.

போர்நிறுத்தம் கோரி பிரிட்டனில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் இஸ்ரேலை அதன் படுகொலையை நிறுத்த நிர்ப்பந்திக்க முடியும் என்ற கற்பனையை அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்து வந்தனர். இந்த ஊக்குவிப்புக்கு தேவைப்பட்டது எல்லாம் போருக்கு ஆதரவான தொழிற்கட்சியை இலக்கு வைத்த அதிக ஆர்ப்பாட்டங்களும் அழுத்தங்களும் தான்.

அத்தகைய “எதிர்ப்பின்” அடிமைத்தனமான தன்மையை வலியுறுத்தும் வகையில், தொழிற்கட்சிக்கு எதிராக வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து அனைத்து சமீபத்திய பேரணிகளிலும் மையமாக வைக்கப்பட்ட “போர்நிறுத்தம் இல்லையெனில், வாக்களிப்பு இல்லை” என்ற பதாகையை சனிக்கிழமையன்று எங்கும் காணமுடியவில்லை

போரை நிறுத்து கூட்டணியின் திவாலான முன்னோக்கை சுருக்கமாக கூறிய, போலி-இடது Counterfire (எதிர்த்தாக்குதல்) போக்கின் தலைவரான கிறிஸ் நைன்ஹாம், கூட்டத்தில் பேசியபோது, “நாங்கள் முன்னேறி வருகிறோம், தடைகளை மீறிவிட்டோம், நச்சுத்தனமான உள்நாட்டு செயலாளரை [Suella Braverman] அகற்றிவிட்டோம். நாங்கள் தொழிற்கட்சியில் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளோம், கடந்த வார ஐ.நா தீர்மானம் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மிகவும் தாமதமாக இருந்தாலும், அது பூகோள ரீதியில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறியாகும்,” என அறிவித்தார்.

30 மார்ச் 2024 அன்று டிராஃபல்கர் சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் கிறிஸ் நைன்ஹாம் உரையாற்றிய போது

நேர்மாறான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தங்களின் குற்றங்கள் குறித்து இன்னும் கூடுதலான பூகோள எதிர்ப்பைத் தூண்டிவிடாமல் எப்படி பாலஸ்தீனியர்களை நசுக்குவது என்பதில் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் மட்டுமே கொண்டுள்ள அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் இஸ்ரேலுடன் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றன.

காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசியமாவது, ஸ்டார்மர் மற்றும் சுனக் அரசாங்கம், அத்துடன் பைடென் நிர்வாகம் மற்றும் நெதன்யாகுவுடன் தொடர்புடைய குற்றவாளிகளின் கட்சிக்கு வேண்டுகோள் விடுப்பதல்ல. முற்றுகைகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் சோசலிசத்திற்கான வெகுஜன அரசியல் போராட்டத்தின் மூலமும் அவர்களின் கொலைகார சதியை முறியடிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு மாபெரும் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது தான் இதன் அர்த்தம் ஆகும்.

Loading