காஸாவில் புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளதால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் அச்சுறுத்தல் அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

தெஹ்ரானால் “உடனடி” தாக்குதல் திட்டமிடப்படுவதாக அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகத்தின் மீது குண்டுவீசி ஈரானிய இராணுவத்தின் மூத்த உறுப்பினர்களைக் கொன்றதில் இருந்து, அது பதிலடி கொடுக்கும் என்று ஈரானிய ஆட்சி கூறி வந்திருக்கிறது.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் வியாழனன்று, “ஈரான் அதன் பிராந்தியத்தில் இருந்து தாக்கினால், இஸ்ரேல் பதிலடி கொடுத்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும்” என்று அச்சுறுத்தினார்.

ஏப்ரல் 9, 2024 அன்று தெற்கு இஸ்ரேலில் இருந்து எடுக்கப்பட்ட படம் காண்பிப்பது, இஸ்ரேல்-காஸா எல்லைக்கு அருகே ஒரு டாங்கியின் மேல் இருந்து இஸ்ரேலியப் படைகள் நகர்கின்றனர் [AP Photo/Leo Correa]

டெல் நோஃப் விமான தளத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானப்படை துருப்புகளிடம் இவ்வாறு கூறினார்: “நாம் சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம். முழு பலத்துடன் தொடரும் காஸாவில் ஒரு போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். இதைத்தவிர, பணயக் கைதிகளை திருப்பிப் பெறுவதற்கான இடைவிடாத முயற்சிகளை நாங்கள் தொடர்கிறோம், ஆனால் மற்ற முனைகளில் இருந்து வரும் சவால்களுக்கும் நாங்கள் தயாராகி வருகிறோம்.”

“நாங்கள் ஒரு எளிய கொள்கையை அமைத்துள்ளோம்: எங்களை யார் அடித்தாலும், நாங்கள் அவர்களை திருப்பி அடிப்போம். இஸ்ரேலின் பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் தாக்குதலில் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இஸ்ரேலிய செய்தி நிலையங்களின் தகவல்களின்படி, நாட்டின் விமானப்படை சமீபத்தில் “ஈரானில் ஒரு தாக்குதலை உருவகப்படுத்த” சைப்ரஸுடன் கூட்டு பயிற்சிகளை நடத்தியது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன, வார இறுதி விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் இராணுவம் வான்வழி பாதுகாப்பு அணிக்கு கூடுதல் இருப்புப் படையினரை அழைத்திருக்கிறது.

அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல் மைக்கேல் குரில்லா, பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலில் தரையிறங்கினார், ஈரானுடனான எந்தவொரு மோதலிலும் வாஷிங்டன் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் புதன்கிழமை மாலை ஒரு அழைப்பில் அவருக்கு உறுதியளித்தார். ஜனாதிபதி ஜோ பைடென் அன்றைய தினத்திற்கு முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், “நான் பிரதமர் நெதன்யாகுவிடம் கூறியது போல, ஈரான் மற்றும் அதன் பினாமிகளிடம் இருந்து வரும் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாடு உடைக்கமுடியாத இரும்பு உறை கொண்டது” என்றார்.

உளவுத்துறை குழுவின் ஒரு அங்கத்தவரும், குடியரசுக் கட்சி செனட்டருமான மார்கோ ரூபியோ, நிலைமையை “1973 க்குப் பிந்தைய மிக அபாயகரமான மத்திய கிழக்கு தருணம்” என்று விவரித்தார், அதாவது “ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக அதன் சொந்த பிராந்தியத்தில் இருந்து ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்க விரும்புகிறது. இஸ்ரேல் ஈரானுக்குள் இன்னும் கடுமையான எதிர்தாக்குதலைக் கொண்டு உடனடியாக விடையிறுக்கும்.”

இதுபோன்ற ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுக்க ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அதேவேளையில், தெஹ்ரானை அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் அவற்றின் கூட்டாளி இஸ்ரேலிடம் இருந்து ஒருபோதும் எதிர்பார்க்காத ஒரு “நிதானத்தை” காட்ட வேண்டுமென கோரியுள்ளன. அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் பிரெட் மெக்கர்க், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் ஈராக் ஆகியவற்றின் வெளியுறவு மந்திரிகளை தெஹ்ரானுடன் பேசுமாறும் அதன் அரசாங்கத்தை பின்வாங்குமாறு வலியுறுத்துமாறும் உத்தரவிட்டார்.

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேயர்பொக் “மேலதிக பிராந்திய தீவிரமான விரிவாக்கத்தைத் தவிர்ப்பது” என்ற பெயரில் “அதிகபட்ச கட்டுப்பாட்டை” வலியுறுத்தினார்.

ஆனால் ஏகாதிபத்திய சக்திகள்தான் இடைவிடாது, வேண்டுமென்றே தீவிரமான உந்துதல் கொடுத்து, காஸாவில் ஒரு இனப்படுகொலையை நடத்தவும், லெபனானிலும் சிரியாவிலும் அதன் எதிர்ப்பாளர்களை திமிர்த்தனமாக தாக்கவும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவையும் வழங்கி வந்துள்ளன. கடந்த டிசம்பரில், இஸ்ரேல் “ஏழு போர் அரங்குகளில்” “பல முனைப் போரில்” ஈடுபட்டுள்ளதாக கேலண்ட் விவரித்தார்.

இஸ்ரேலின் போரின் தொடக்கத்தில், அமெரிக்கா இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு யாரும் பதிலடி கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அனுப்பியது. ஏமனில் ஈரான் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் புதன்கிழமை ஏவிய 11 ஆளில்லா விமானங்களை இந்தப் படைகள் இடைமறித்தன.

இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள மிகவும் வெட்கக்கேடான கழுகுக் குரல்கள் இஸ்ரேலை நேரடியாக ஈரானைத் தாக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்காவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் டானி அயலோன் கருத்து தெரிவிக்கையில், “இந்த அதிகரித்த பதட்டத்துடன், இங்கே ஒரு புதுமை உள்ளது. ஈரான், முதன்முறையாக, பினாமிகள் மூலமாக அல்லாமல், நேரடியாக இஸ்ரேலை தாக்க அச்சுறுத்தி வருகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்ட அவர், “ஈரானிலும் தெஹ்ரானிலும் பாம்பின் தலையைத் தாக்குவதன் மூலமாக, ஈரானை மீண்டும் வழிக்குக் கொண்டு வருவதற்கு, அதைத் தடுத்து நிறுத்துவதற்கு, அநேகமாக இதுவே மிகவும் நடைமுறையளவிலான வழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இங்கிலாந்து டெய்லி டெலிகிராப் பத்திரிகையின் ஒரு முன்னாள் கேர்ணலுமான ரிச்சர்ட் கெம்ப், “ஈரானுக்கு எதிராக நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து தயாராக இருக்க வேண்டும்” அல்லது “அவர்களுக்கு [இஸ்ரேல்] திருப்பித் தாக்க உதவுவதற்கு என்ன தேவைப்படுகிறதோ அதற்கு தயாராக வேண்டும்” என்று வாதிட்டார்.

அதே பத்திரிகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜோன் போல்டன், “இஸ்ரேல் ரஃபா தாக்குதலை நீண்டகாலமாக தாமதப்படுத்தி வந்துள்ளது...

“எஞ்சியிருக்கும் ஹமாஸ் கெரில்லா / பயங்கரவாத நடவடிக்கைகளை அழிப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும், ஆனால் அதை அகற்றுவது என்பது இஸ்ரேலின் சுதந்திரமானது மற்றும் ஹிஸ்புல்லாவை முழுமையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தால் குறைந்த ஆபத்தில் உள்ளது என்பதாகும். அல்லது ஈரான் ஒரு நம்பகமான விநியோக திறனைப் பெறுவதற்கு முன்பு, ஈரான் மற்றும் அதன் அணு ஆயுதத் திட்டத்தை இப்போதே எதிர்கொள்வது” என்று தெரிவித்தார்.

இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே காஸாவில் நடவடிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளன, மத்திய பகுதியில் நுசைராட் அகதிகள் முகாமை மையமாகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அருகிலுள்ள டெய்ர் எல்-பலாவில் வசிக்கும் ரவூப் அபெத், அல் ஜசீரா விடம், “ஆக்கிரமிப்பு இராணுவம் ஒரு புதிய போரைத் தொடங்குவது போல் இருக்கிறது” என்று கூறினார்.

வான் மற்றும் கடலில் இருந்து ஏவப்பட்ட தாக்குதல்களைக் குறிப்பிட்டு, “குண்டு வெடிப்புகள் இடைவிடாமல் இருந்தன, சத்தங்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்தன. போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நம்பும் ஒவ்வொரு முறையும், பொதுமக்களான எங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது போல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்துகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

அல் ஜசீரா பத்திரிகையாளர் தாரிக் அபு அஸ்ஸூம் கூறுகையில், “இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதல்களை அதிகரித்து வருகின்ற நிலையில், கள நிலைமை பயங்கரமாகவும் குழப்பமாகவும் உள்ளது... நுசைராட் அகதிகள் முகாமை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் மோதல்கள் உக்கிரமாக நடந்து வருகின்றன” என்றார்.

“இஸ்ரேலிய இராணுவம் போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களின் துணையுடன் தரையில் உள்ள பீரங்கி பிரிவுகளின் கனரக சுடுசக்தியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த சுற்றுப்புறங்களையும் அழிப்பதை நாம் காண முடிகிறது.”

அஸ்ஸூமின் சக ஊழியர் ஹனி மஹ்மூத் பின்வருமாறு விளக்கினார், “மக்கள் கடுமையான குண்டுவீச்சின் கீழ் சிக்கியிருப்பதைக் காண்கிறார்கள். இது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மக்கள் நுசிராட் முகாம் மற்றும் மத்திய பகுதியின் பிற பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். மணித்தியாலத்திற்கு மணித்தியாலயம் நிலைமை மேலும் கடினமாகி வருகிறது.”

ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் ஸ்ட்ரிப்பின் வடக்கில் உள்ள காஸா நகரம் மற்றும் காஸாவின் பெரும்பான்மையான மக்கள் தப்பியோடியுள்ள தெற்கு நகரமான ரஃபாவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ரபாவில், ஈத் பெருநாளுக்காக குடும்பத்தைப் பார்க்கச் சென்ற ஆறு பேர் கொண்ட ஒரு குழு இஸ்ரேலிய போர் விமானத்த தாக்குதலால் கொல்லப்பட்டனர். காஸா நகரத்தில் மற்றும் ஒரு ஆறு பேர் ஃபிராஸ் சந்தை மீது குண்டு வீசப்பட்டபோது கொல்லப்பட்டனர்.

வடக்கில் நுழைய முயன்ற யுனிசெப் உதவி வாகனம் பாலஸ்தீனியர்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டது. செய்தித் தொடர்பாளர் டெஸ் இங்க்ராம் கூறுகையில், “பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, பின்னர் அவர்கள் வேறு திசையில் ஓடினர்” மற்றும் பலர் காரைத் தாக்கினர். “ஒரு தெரிவுசெய்யப்பட்ட இருப்புப் பகுதியில் ஒருங்கிணைந்த பணியில் இது எங்களுக்கு நடக்கிறது என்பது அதிர்ச்சியாக இருந்தது. வாகனத்திற்கு வெளியே எங்களது சக ஊழியர்கள் இருந்தனர், அவர்கள் மிக எளிதாக காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

லெபனானுடனான போர்முனையில், இஸ்ரேலிய விமானங்கள் எல்லை நகரமான அல்-தாஹிராவுக்கு அருகே உள்ள ஹெஸ்புல்லா இராணுவ வளாகத்தின் மீதும், தெற்கு நகரமான Tayr Harfa மீதும் தாக்குதல்களை நடத்தின.

Loading