காஸா இனப்படுகொலை தொடர்கின்ற நிலையில், ஈரானிய தாக்குதல்களுக்கு "பதிலடி" கொடுப்பதாக இஸ்ரேல் சூளுரைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேல் மீது ஈரான் ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடங்கி நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குப் பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்க-தூண்டுதலால் தூண்டப்பட்ட போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருவதாக திங்களன்று இஸ்ரேலிய அதிகாரிகள் சமிக்ஞை செய்தனர். 

இஸ்ரேலிய விமானப்படையின் F-15 போர் விமானம் ஏப்ரல் 15, 2024 திங்கட்கிழமை, மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு விமான தளத்தில் தரையிறங்குவதற்கு முன்பு காணப்படுகிறது. [AP Photo/Ohad Zwigenberg]

“இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருப்பதற்கு பதிலடி கொடுக்கப்படும்” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தளபதி (IDF) லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி திங்களன்று தெரிவித்தார். 

என்பிசி நியூஸ் அதன் தலைமை வெளியுறவு நிருபர் ராஃப் சான்சேஸ், “ஈரானிய தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி ‘உடனடியாக’ இருக்கக்கூடும்” என்று தலைப்பிட்டு, “எந்தவொரு பதிலடி தாக்குதலும் அமெரிக்கர்களுடன் ஒருங்கிணைக்கப்படும்” என்று அறிவித்தது. 

வாஷிங்டன் போஸ்ட்டின் டேவிட் இக்னேஷியஸ் திங்களன்று ஒரு தலையங்கத்தில், “ஈரானைத் தடுக்க, இந்த வாரயிறுதியில் பாரிய ஏவுகணைத் தாக்குதலுக்கு அவர்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் வந்துள்ளனர்,” என்று அறிவித்தார். 

தங்கள் பங்கிற்கு அமெரிக்க அதிகாரிகள் பலமுறையும் திட்டவட்டமாகவும் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலை நிராகரிக்கவோ அல்லது எதிர்க்கவோ மறுத்துவிட்டனர். திங்களன்று வெள்ளை மாளிகையின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “சனிக்கிழமை ஈரான் செய்ததற்கு அவர்கள் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பது இஸ்ரேலின் முடிவாகும், நாங்கள் அதை அவர்களிடமே விட்டுவிடப் போகிறோம்” என்றார். 

ஈரான் “எந்த விளைவுகளையும் சந்திக்காமல் அமெரிக்காவிற்கு சவால் விட முடியுமா” என்று ஒரு நிருபர் கேட்டபோது, கிர்பி ஒரு அச்சுறுத்தலுடன் பதிலளித்தார், “நான் தெஹ்ரானில் இருந்தால், சனிக்கிழமை இரவு என்ன நடந்தது என்பதைப் பார்த்தால், அமெரிக்கா இங்கு ஈடுபட விரும்பவில்லை மற்றும் இஸ்ரேலைப் பாதுகாக்க உதவவில்லை என்று நான் பந்தயம் கட்ட மாட்டேன் என்று நான் நினைக்கவில்லை”.

அவர் தொடர்ந்து கூறினார், “அதாவது, இஸ்ரேலை நோக்கி சென்று கொண்டிருந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்க போர் விமானிகள் சுட்டு வீழ்த்தினர், அத்துடன் கடலில் அமெரிக்க கடற்படை நாசகாரி கப்பல்கள், அங்கிருந்து அவற்றை சுட்டு வீழ்த்தியது. எனவே செய்தி யாருக்கும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். பிராந்தியத்திற்கான எங்கள் கடமைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று ஜனாதிபதி கூறும்போது, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் உதவப் போகிறோம்... இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.” 

ஈராக்கிய துணைப் பிரதமர் முகமது அலி தமீமுடனான சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவை உறுதியளித்தார்.  “நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் பணியாளர்களைப் பாதுகாப்போம். இஸ்ரேல் தனியாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதையும், ஒரு தாக்குதலுக்கு பலியாகும்போது, அது தனியாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதையும் இந்த வார இறுதியில் நிரூபித்துள்ளது” என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல், ஏப்ரல் 1 அன்று சிரியாவில் ஈரானிய தூதரகத்தின் மீதான தாக்குதலால் தூண்டப்பட்டது, அதில் ஏழு மூத்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்று கூறிய அமெரிக்கா, தூதரகம் ஒரு பயங்கரவாத வளாகம் என்றும், இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டிக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் கூறியது. 

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய தாக்குதல், அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு அவற்றின் தெளிவான ஆதரவை உறுதிப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. 

காஸா குறித்த அதன் தினசரி அறிக்கையில், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (ஓசிஎச்ஏ), “காஸா பகுதியின் பெரும்பகுதி எங்கிலும் வான், நிலம் மற்றும் கடலில் இருந்து இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது, இதன் விளைவாக இன்னும் கூடுதலான அப்பாவி மக்கள் உயிரிழப்புகள், இடம்பெயர்தல், வீடுகள் மற்றும் பிற சிவிலியன் உள்கட்டமைப்புகள் அழிக்கப்படுகின்றன” என்று எழுதியது,

காஸா பகுதி முழுவதிலும் அகதிகள் முகாம்கள் மீது திட்டமிட்ட குண்டுவீச்சுக்கு மத்தியில், வாரயிறுதி வாக்கில், காஸாவில் 163 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா இனப்படுகொலையின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை திங்களன்று 33,797 ஐ எட்டியது, மேலும் 76,465 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பு எண்ணிக்கையுடன் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக இருக்கும். 

ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பதாக உறுதியளித்திருப்பது இன்னும் பெரிய அளவில் படுகொலைகளுக்கு இட்டுச் செல்லும். வெள்ளியன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில், பாலஸ்தீனத்தில் உள்ள முன்னாள் ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட்ரிக், இஸ்ரேலிய இராணுவம் ரபாவில் ஒரு தரைவழி ஊடுருவலை தொடங்குமானால் கிட்டத்தட்ட 800,000 மக்கள் வெளியேற நிர்பந்திக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். காஸாவுக்கு உணவு உதவி வினியோகிப்பதை திட்டமிட்டு தடுப்பதை சுட்டிக்காட்டிய அவர் “காஸாவின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக வடக்கில், உதவி வினியோகத்தை விரிவாக்க நமக்கு வாய்ப்பு இல்லையென்றால், பின்னர் நாம் ஒரு பேரழிவை முகங்கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று எச்சரித்தார். 

இஸ்ரேல் எல்லையில் காஸாவைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் அகலமுள்ள பகுதியை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலிய எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் 4,000 கட்டிடங்கள் - மொத்தத்தில் 90 சதவீதம் - அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. 

இதற்கிடையில், கடந்த மாதம் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய படுகொலைக்கான ஆதாரமாக மேலும் பாரிய புதைகுழிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. திங்களன்று, பாலஸ்தீனிய மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் குறைந்தது 10 உடல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். அதில் “இன்னும் மருத்துவ கட்டுகள் மற்றும் வடிகுழாய்கள் இணைக்கப்பட்டிருந்தன” என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. “மார்ச் மாதம் அல்-ஷிஃபா மருத்துவமனை தாக்கப்பட்டபோது அதன் பிரதான வாயிலுக்கு மிக அருகில் இந்த நபர்கள் உண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பதை மருத்துவமனைக்குள் இருந்த மருத்துவ ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்” என்று அல் ஜசீரா அறிவித்தது. 

Loading