இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது குண்டு வீசினால் "பாரிய மற்றும் கடுமையான" பதிலடி கொடுக்கப்படும் என்று தெஹ்ரான் எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

தெஹ்ரானில் நேற்று ஒரு இராணுவ அணிவகுப்பில் பேசிய ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் மீதான புதிய இஸ்ரேலிய தாக்குதல்கள் “பாரிய மற்றும் கடுமையான பதிலடியைத்” தூண்டும் என்று எச்சரித்தார். காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலால் பிராந்தியப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இலக்குகள் மீது மீண்டும் குண்டுவீசுவதற்கான இஸ்ரேலிய அச்சுறுத்தல்களுக்கு அவர் விடையிறுத்தார்.

ஏப்ரல் 1ம் தேதி சிரியத் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தில் இஸ்ரேல் குண்டு வீசியதில் மூன்று உயர்மட்ட ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, ஈரானின் சட்டப்பூர்வ பிராந்தியத்தின் மீதான இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு எதிராக ஒரு எதிர் தாக்குதல் மூலம் ஈரான் பதிலடி கொடுத்தது. உண்மையான வாக்குறுதி நடவடிக்கை (Operation True Promise) என்று குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரான் 185 டிரோன்களை ஏவியதுடன், 36 க்ரூஸ் மற்றும் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இஸ்ரேலுக்குள் இருக்கும் இராணுவ இலக்குகள் மீது குண்டுகளை ஏவியது.

இஸ்ரேலின் நெவாடிம் மற்றும் ரமோன் விமான தளங்களின் ஓடுபாதைகள் மற்றும் ஒரு போக்குவரத்து விமானத்தைத் தாக்கிய இத்தாக்குதலில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், இஸ்ரேலின் அதிவலது அரசாங்கம் பாரிய பதிலடிக்கு அழைப்பு விடுத்தது. இதுகுறித்து இஸ்ரேலின் கலாச்சாரத்துறை அமைச்சர் மிக்கி ஜோஹர் கூறுகையில், “ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஈரான் “அதன் கையுறைகளைக் கழற்றிவிட்டது” என்று கூறிய ஜோஹர், “இஸ்ரேலை அழிக்க வேலை செய்யும் பாம்பின் தலையை” தாக்குமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

நேற்றைய அணிவகுப்பில், தெஹ்ரான் உண்மையில் ஈரான் மீதான எதிர்கால இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இன்னும் பேரழிவு தரும் தாக்குதல்களைக் கொண்டு பதிலடி கொடுக்கக்கூடும் என்று ரைசி எச்சரித்தார். “உண்மையான வாக்குறுதி நடவடிக்கையானது (Operation True Promise) ஒரு வரையறுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் ஒரு விரிவான நடவடிக்கை அல்ல. நாங்கள் ஒரு வலுவான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், இஸ்ரேலில் எதுவும் எஞ்சியிருக்காது” என்று அவர் கூறினார்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையும் நேட்டோ சக்திகளின் ஆதரவுடன் ஈரான், சிரியா மற்றும் லெபனான் மீதான அதன் தாக்குதல்களும், மத்திய கிழக்கையும் உலகையும் முழுமையான போரின் விளிம்பில் நிறுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்புகள் போன்ற முந்தைய போர்களைப் போலல்லாமல், அதுபோன்றவொரு போரில், இஸ்ரேலும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் விரைவில் பெரும் இழப்புகளால் பாதிக்கப்படலாம்.

ஜெருசலேம் மீதான வெடிப்புச் சத்தங்களையும், நாடு முழுவதும் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகளையும் செவிமடுத்த இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரானிய இலக்குகளில் 99 சதவீதம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறி இஸ்ரேலிய மக்களுக்கு உறுதியளிக்க முயன்றனர். ஈரானிய தாக்குதலை தாங்கள் “முறியடித்ததாக” இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறியது. ஏனென்றால் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையானது தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்திருந்தது, மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈரானிய இலக்குகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு அவர்களுக்கு உதவின.

இஸ்ரேலில் உள்ள அதன் இலக்குகளின் பட்டியலை ஈரான் கொடுத்தது என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஆரம்பத்தில் மறுத்தாலும், துருக்கிய அதிகாரிகள் தாக்குதலுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு, தெஹ்ரானானது அவர்களையும், அமெரிக்க மற்றும் பிற நேட்டோ அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு வரவிருக்கும் ஈரானிய தாக்குதல் குறித்து எச்சரித்ததை உறுதிப்படுத்தினர்.

தாக்குதலின் பெரும்பகுதியை முறியடிக்க இஸ்ரேல் அதன் நேட்டோ மற்றும் பிராந்திய நட்பு நாடுகளை நம்பியிருந்தது. அமெரிக்க இராணுவ ஆதாரங்களை மேற்கோளிட்டு, தி இன்டெர்செப்ட் எழுதியது: “அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் பரப்பளவு அமெரிக்க மக்களுக்கு தெரியாது, ஆனால் பென்டகன் சனிக்கிழமையன்று வடக்கு ஈராக்கில் இருந்து தெற்கு பாரசீக வளைகுடா வரை நீண்டிருந்த ஒரு பன்முக, பிராந்தியம் தழுவிய பாதுகாப்பை ஒருங்கிணைத்தது. இந்த நடவடிக்கையின் போது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் அனைத்தும் பெரும்பாலான ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தின.”

இந்த நடவடிக்கையின் நிதிச் செலவு ஈரானை விட இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிக அதிகம் ஆகும். ஈரானிய இலக்குகளைத் தாக்க இஸ்ரேல் சனிக்கிழமை 4-5 பில்லியன் இஸ்ரேலிய ஷெக்கல்ஸ் (1.08-1.35 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய ஜெனரல் ராம் அமினாக் தெரிவித்தார். செவ்வாயன்று, அமெரிக்க கடற்படையானது ஈரானிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த செலவிட்ட வெடிகுண்டுகளை நிரப்ப 1 பில்லியன் டாலர்கள் கேட்டது. பெரும்பாலும் மலிவான, பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்களால் நடத்தப்பட்ட சனிக்கிழமை தாக்குதலால் ஈரானுக்கு ஏற்பட்ட செலவு சுமார் 100 மில்லியன் டாலர்கள் ஆகும்.

மேலும், ஈரானும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலிய பாதுகாப்பை மூழ்கடிக்கக்கூடிய பெரிய தாக்குதல்களை நடத்த முடியும். நூற்றுக்கணக்கான நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு மற்றும் நிலத்தைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கி, 150,000 முதல் 200,000 ஏவுகணைகளைக் கொண்டுள்ள லெபனானில் உள்ள ஈரானிய ஆதரவு போராளிகளான ஹிஸ்புல்லா சனிக்கிழமையன்று இஸ்ரேலைத் தாக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா, லெபனானுடன் இஸ்ரேல் போர் தொடுத்தால் நாள் ஒன்றுக்கு 1,000 ஏவுகணைகளை ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளில்லா விமானங்களின் ஒரு பிரதான சர்வதேச உற்பத்தியாளரான ஈரானைப் பொறுத்த வரையில், அதன் பரந்த ஏவுகணை தளவாடங்களில் 3,000 க்கும் மேற்பட்ட நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன.

ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகம்மது பக்கேரி, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிடவில்லை என்றாலும், அதனால் பெரிய தாக்குதல்களை நடத்த முடியும் என்றார். “எங்கள் பார்வையில் இந்த நடவடிக்கை முடிந்துவிட்டது, ஆனால் ஆயுதப்படைகள் தயாராக உள்ளன, தேவைப்பட்டால் நாங்கள் செயல்படுவோம்,” என்று அவர் கூறினார். “இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிராக இதை விட பத்து மடங்கு பெரிய நடவடிக்கையை நடத்தும் திறன் எங்களிடம் இருந்தது, ஆனால் நாங்கள் அதை தண்டனை மட்டத்தில் வைத்திருக்க முயற்சித்தோம், மக்கள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைக்கவில்லை.”

ஈரானுக்கு எதிரான மேலதிக இஸ்ரேலிய தாக்குதல்களில் அமெரிக்கா பங்கு பெறுவதற்கு தெஹ்ரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குண்டுவீசுவதன் மூலம் விடையிறுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் பிராந்திய மற்றும் பூகோளரீதியான போரைத் தூண்டுவதற்கு நெருக்கமாக உள்ளது. வாஷிங்டனும் நேட்டோ சக்திகளும் ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக தலையிட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும், ஈரான் மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள அதன் கூட்டாளிகளுடன் ஒரு நேட்டோ போருக்கான சாத்தியக்கூறு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு ஏற்கவியலாத அச்சுறுத்தல்களை முன்னிறுத்தும், மேலும் அவற்றை போருக்குள் இழுக்கும் அபாயமும் உள்ளது.

சிரியாவில் ரஷ்யா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது, அங்கு அவர்கள் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்தி வரும் நேட்டோ-ஆதரவிலான படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். சமீபத்தில் மாஸ்கோ அவர்களை இஸ்ரேல் எல்லையில் உள்ள கோலன் குன்றுகளுக்கு அனுப்பியது. இது லெபனான் அல்லது சிரியா மீது இஸ்ரேலியத் தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெளிப்படையாக அஞ்சியது.

சீனா அதன் பொருளாதாரத்திற்கு சக்தியளிக்க ஈரானிய எண்ணெயைச் சார்ந்துள்ளதுடன், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் சுமார் 90 சதவீதத்தை வாங்குகிறது, ஈரானிய எண்ணெய் வர்த்தகத்திற்கு டாலர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அமெரிக்க தடையாணைகளால் அவை இப்போதும் பாதிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், ஈரானிய எண்ணெய், போக்குவரத்து மற்றும் உற்பத்தி உள்கட்டமைப்பில் 400 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய சீனா ஈரானுடன் 25 ஆண்டு நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் விதிகள் பகிரங்கமாக இல்லை என்றாலும், ஈரானின் பாதுகாப்பிற்கு சீன இராணுவ உத்தரவாதங்களும் இதில் உள்ளடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீதான சனிக்கிழமை ஈரானிய தாக்குதலை மீளாய்வு செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனைக் குழாம் சத்தாம் ஹவுஸ், மேலதிக இராணுவ தீவிரப்பாட்டின் சாத்தியமான பின்விளைவுகளைத் தெளிவுபடுத்துவதன் மூலமாக இஸ்ரேலை மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதில் இருந்து தடுத்து நிறுத்த நோக்கம் கொண்டிருப்பதாக முடிவுக்கு வந்தது. இஸ்ரேலிய மற்றும் நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்புகளின் விடையிறுப்பு மற்றும் செயல்திறனை ஈரானிய படைகள் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த தாக்குதல் அனுமதிக்கிறது. அது பின்வருமாறு எழுதியது:

ஈரானின் நோக்கம் இஸ்ரேலை சேதப்படுத்துவதாக இருந்திருந்தால், அது இராணுவ நடவடிக்கைகளின் ஒரு முக்கிய கோட்பாட்டை மீறியிருக்காது –ஆச்சரியத்தின் கூறுபாடு (அதாவது எதிர்பாராத தாக்குதல்). ஆனால் அது நடந்தது. அது அதன் நோக்கங்களை வாஷிங்டனுக்கும் பல அரபு மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் தந்தி மூலம் தெரிவித்ததுடன், அதன் தாக்குதல் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் உறுதியளித்தது.

இஸ்ரேலிய பாதுகாப்பை கணிசமாக சவாலுக்கு உட்படுத்தக்கூடிய மற்றும் சாத்தியமான வகையில் தாக்குதல் தந்திரோபாயங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, அது எதிர்மாறாக செய்தது. உண்மையில், ஈரான் இஸ்ரேலுக்கு கடுமையான வலியை கொடுக்க முற்பட்டிருந்தால், அது கனமான வேகத்தில் பறக்கும் மற்றும் துல்லியமாக வழிநடத்தப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இணைத்திருக்கும், இது இஸ்ரேல் தன்னை தயார் செய்வதற்கு மிகக் குறைந்த நேரத்தையே கொடுத்திருக்கும்...

கூடுதலாக, இது ஈரானுக்கு மிகவும் பயனுள்ள தகவல் சேகரிப்பு பயிற்சியாக இருந்தது. உறுதியாக கூற முடியாவிட்டாலும், இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளின் பாதுகாப்பு பற்றிய ஈரானின் மதிப்பீடு மிகவும் மேம்பட்டுள்ளது. ... ஈரான் தனது தாக்குதலில் அதன் எதிர்ப்பாளர்கள் ஒப்புக்கொள்ள விரும்புவதைக் காட்டிலும் கூடுதலான திறனைக் காட்டியது.

ஆனால் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள், ஈரான் உடனான பதட்டங்களைத் தணிப்பதிலோ அல்லது இஸ்ரேலின் அதிவலது அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த முயலுவதிலோ அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை சமிக்ஞை செய்து கொண்டிருக்கின்றன. குறுகிய காலத்தில் ஈரானுக்கு எதிரான மிக விரைவான இராணுவ தீவிரப்பாட்டிற்கு எதிராக இஸ்ரேலை எச்சரிக்கும் அதேவேளையில், காஸாவில் உள்ள பாலஸ்தீனிய அப்பாவி மக்கள் மீது குண்டுவீசுவது உட்பட அவை இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதமளித்து வருகின்றன. மேலும் பொறுப்பற்ற முறையில் தடையாணைகளை அதிகரிக்கவும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடரவும் அழைப்பு விடுத்து வருகின்றன.

ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு மந்திரி டேவிட் காமெரோன் இஸ்ரேலுக்குப் பயணித்து பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து, ஈரான் மீது இன்னும் தாக்குதல்கள் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்தை வரவேற்றார். “இஸ்ரேலியர்கள் செயல்பட ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்பது தெளிவாக உள்ளது. இதை முடிந்தவரை தீவிரப்படுத்த [மேலும்] புத்திசாலித்தனமாகவும் கடினமாகவும் இருக்கும் ஒரு வழியில் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

கேமரூனும் வாஷிங்டனுடன் இணைந்து ஈரானின் பொருளாதாரத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்தார். இது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் “கடமை” என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேற்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனையை அவர் நிராகரித்ததாக நெத்தன்யாகு சமிக்ஞை செய்தார், அதேவேளையில் அவர் “அனைத்து வகையான ஆலோசனைகளையும்” பெற்று வருகின்ற அதேவேளையில், இஸ்ரேல் “நமது சொந்த முடிவுகளை எடுக்கும், இஸ்ரேல் அரசு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவசியமான அனைத்தையும் செய்யும்” என்றார்.

Loading