இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சமீப வாரங்களாக, இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) அங்கத்தவர்கள் இணைந்து, “உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்” என்னும் தலைப்பிலான வரவிருக்கும் பகிரங்க கூட்டத்துக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். எதிர்வரும் ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, கொழும்பு 07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் உள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எமது வாசகர்களைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் முன்னணி உறுப்பினரான போக்டன், ஏப்ரல் 25 முதல் 'உயர் தேசத்துரோகம்', ரஷ்ய அரசாங்கத்திற்கு உதவி செய்தமை ஆகிய போலிக் குற்றச்சாட்டுகளின் கீழ், உக்ரேனின் பாசிச செலென்ஸ்கி ஆட்சியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரும் வை.ஜி.பி.எல். அமைப்பும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை எதிர்ப்பதோடு, இரு நாடுகளினதும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களுக்கு எதிராக ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்படுத்தப் போராடுவதாலேயே 25 வயதான உக்ரேனிய சோசலிசவாதிக்கு எதிராக இந்த மூர்க்கத்தனமான அடக்குமுறையும் கொச்சையான பொய் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றன. வை.ஜி.பி.எல்., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) பிணைந்துள்ள அமைப்பாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, போக்டனை எதேச்சதிகாரமாக கைது செய்து காவலில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 13 அன்று அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள உக்ரேனிய தூதரகங்களின் முன்னால், சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த மறியல் போராட்டங்களை நடத்தியது. 'உக்ரேனிய அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்க கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!” என்ற தலைப்பிலான கடிதத்தினை வழங்க முற்பட்டபோதிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள உக்ரேன் தூதரகங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டன.
இலங்கையில், உக்ரேனிய தூதரகம் எதுவும் இல்லை, அதனாலேயே போக்டனின் விடுதலையைக் கோரும் சர்வதேச நடவடிக்கையை தீவிரப்படுத்த சோ.ச.க. கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகிறது.
பிரச்சாரகர்கள், நாட்டின் வடக்கு யாழ்ப்பாணத்தில் பெறுமதியான ஆதரவைப் பெற்றனர். அங்கு, தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நடத்தப்பட்ட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால இனவாதப் போருக்கு தொடர்ச்சியான மற்றும் கொள்கை ரீதியிலான அதன் எதிர்ப்பின் காரணமாக, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் சக்திவாய்ந்த ஆதரவு தளத்தைக் கொண்டுள்ளது.
தீவு முழுவதிலும் உள்ள -கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை பிரதேசங்களை சேர்ந்த- தொழிலாளர்களும் மாணவர்களும், அத்தோடு சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும், போக்டனை உடனடியாக விடுவிக்க வேண்டும் மற்றும் அவர் மீதான போலி குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என்று கோரி வெளியிட்ட அறிக்கைகளை கீழே வெளியிடுகிறோம்.
இலங்கையில் சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு
இலங்கையில் உள்ள சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு, கடந்த வாரம் ஒரு விசேட கூட்டத்தைக் கூட்டி, செலென்ஸ்கி அரசாங்கத்தின் அதிகரித்துவரும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைப் பற்றி கலந்துரையாடி, போக்டனின் விடுதலையைக் கோரும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் போக்டன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்ததுடன், 'போக்டன் தனக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதைத் தடுக்கின்ற நாட்டில் [உக்ரேன்] நிலவும் படு மோசமான அடக்குமுறை நிலைமையை” சுட்டிக் காட்டியது.
மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களை உள்ளடக்கிய சுகாதார தொழிலாளர் நடவடிக்கைக் குழு, 'போரை நிறுத்துவதற்கான போராட்டமானது, சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்ட, தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டது. போக்டன் மற்றும் வை.ஜி.பி.எல். நடத்தும் அரசியல் போராட்டம் இந்த வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், 'போக்டனின் விடுதலை, போருக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் குறிப்பிடத்தக்க ஒரு படியாகும்' என்று கூறியது.
யாழ்ப்பாணத்தில் BCAS (British College of Applied Studies) இல் கற்கும் ஒரு மென்பொருள் பொறியல் மாணவனான கே. ரூபன்
அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக உக்ரேனிலும், உலகின் பிற இடங்களிலும் அப்பாவி தனிநபர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்யத் தள்ளப்படுகிறார்கள். காசாவில் நடக்கும் இனப்படுகொலை உட்பட இன்று போரினால் இறக்கும் மக்களுக்கு அவர்கள் ஏன் இறக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியுமா என்பது எனக்கு சந்தேகம்.
போருக்குக்கான தனது எதிர்ப்பில், போக்டன் ஏகாதிபத்திய நாடுகளின் கொள்ளையடிப்பு நோக்கங்களை அம்பலப்படுத்தினார். அவர் உக்ரேனிய இளைஞர்களின் எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, நம் அனைவருக்காகவும் போராடியுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும்.
யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்
இந்தத் தோழரைப் பற்றி எனக்கு முன்பு தெரியாது. போர்கள் மனிதகுலத்திற்கு மிக மோசமான விஷயமாகும், அத்தகைய போருக்கு எதிரான அவரது போராட்டம் உண்மையானது. அவர் உக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டதை ஏற்க முடியாது, அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
உக்ரேனிய அரசாங்கம் அவரது ஜனநாயக உரிமைகளை பறித்துள்ளது, இந்த கொடூரமான தாக்குதல்கள் உலகளாவிய நிகழ்வுகள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் எஸ். நிவாஷன்
போக்டன் போருக்குப் பின்னால் உள்ள உண்மையான நலன்களை அம்பலப்படுத்தியுள்ளார். அவர்கள் [ஜெலென்ஸ்கி அரசாங்கம்] அவரது பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்த அனுமதித்தால், அவர்களின் போர் முயற்சி அம்பலமாவதோடு அவர்களால் போருக்கு ஆதரவைத் திரட்ட முடியாது.
அவர் சொல்வதைக் கேட்கும் எவரும் அவருடன் உடன்படுவார்கள், அதனால்தான் அவர்கள் அவரை ஒரு ரஷ்ய முகவராக சித்தரிக்கின்றனர். இது பொய். போக்டன் புட்டினின் ஆட்சியையும், நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய அரசாங்கத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார். அவரது சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கும் போரை நிறுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட விலங்கியல் மாணவியான சந்துனி
எனக்கு எந்தப் போரும் பிடிக்காது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அனுபவத்தை நாம் மறக்கக் கூடாது. ஒரு அணுசக்தி யுத்தம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன், ஆனாலும் இந்த ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் இந்த விளைவுகளை புறக்கணிப்பதாகத் தெரிகிறது.
நாங்கள் ஒரு போரை எதிர்கொண்டதுடன் பல கடினமான விஷயங்களைச் சந்தித்துள்ளோம். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னர், ஏனைய பிரதேசங்களில் எம்மை விட தமிழ் மக்கள் மிக அதிகமான இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதை நான் இப்போது உணர்கிறேன்.
தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் பலரின் உயிர்களை இழந்தோம். அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக அல்ல, மாறாக முதலாளித்துவ அரசியல்வாதிகளால் ஒருவரையொருவர் எதிர்த்துப் மோதிக்கொண்டதால் அவர்கள் போராடி இறந்தனர். உக்ரேனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அவரது செயல்பாட்டின் காரணமாக. உக்ரைன் அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கைச் சிறையில் அடைத்துள்ளது அவர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் 'இது உங்கள் போர் அல்ல' என்று கூறுகிறார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளம் விவசாயி நெலும் சின்தக
முதலாளிகளுக்குத் அழுத்தம் கொடுப்பதில் தீர்வு கிடைக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். போக்டன் சோசலிசத்திற்காகவும் போருக்கு எதிராகவும் போராடினார். இந்த துணிச்சலான உக்ரேனிய சோசலிஸ்ட் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க போராடியுள்ளார். இந்த அநீதிக்கு எதிராக உலக மக்கள் குரல் எழுப்பி அவரை நிபந்தனையின்றி சிறையில் இருந்து விடுவிக்கக் கோர வேண்டும்.
எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கா தலையிட்டு உலகம் முழுவதும் போர் செய்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. மத்திய கிழக்கில் அதன் தலையீடு பேரழிவை ஏற்படுத்தியது. உக்ரேன் போரின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இலங்கையில் நடந்த போரில் கூட அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கை அரசுக்கு உதவின. அதனால்தான் முள்ளிவாய்க்காலில் [வட மாகாணத்தில்] ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
கொழும்பு புறநகர் மீதொட்டமுல்லவைச் சேர்ந்த இளம் தொழில்நுட்பவியலாளர் அஸ்லம்
போக்டன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போராடினார், அதனால்தான் செலென்ஸ்கி அரசாங்கம் அவரை வாயை மூடவைத்து அவரை அழிக்கக் கைது செய்துள்ளது.
அவர்கள் [நான்காம் அகிலத்தின் பகிரங்க கடிதத்தை ஏற்க மறுத்த உக்ரேனிய தூதரகங்கள்] அமெரிக்க மற்றும் செலென்ஸ்கி அரசாங்கத்தால் நிர்ப்பந்தப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு எதிர்ப்புக் கடிதத்தைக் கூட அவர்கள் ஏற்காத போது இது ஜனநாயகம் அல்ல. அவர்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். போக்டனை வெளியேற்ற ஒரு போராட்டம் வேண்டும்.
கொழும்பிற்கு வடக்கே ராகம பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கண்டம்பி
முன்னாள் சோவியத் யூனியனில் செயல்பட்ட ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலரின் முன்னணி அரசியல் செயற்பாட்டாளரான போக்டன் சிரோடியுக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்காக உக்ரேனில் உள்ள செலென்ஸ்கி அரசாங்கத்தை அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் வெளிப்படையான காரணி என்னவென்றால், இந்த இளம் சோசலிஸ்ட்டின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
போக்டன் போன்ற இளம் அரசியல் ஆர்வலர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். போக்டனின் விடுதலைக்கான இந்த சர்வதேச பிரச்சாரத்தில் இலங்கையில் உள்ள நாமும் இணைந்து கொள்ள வேண்டும். அவர் கைது செய்யப்பட்டதற்காக மற்றும் அவரது கருத்துச் சுதந்திரத்தை தடுப்பதற்காக உக்ரேனிய அரசாங்கத்தை நாம் கண்டிக்க வேண்டும். அதே நேரம், இந்த பிரச்சினையை உக்ரேன் அரசாங்கத்திடம் எழுப்புமாறு இந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை நாங்கள் கேட்க வேண்டும்.
போக்டனுக்கு உடனடி விடுதலை கிடைக்க வேண்டும். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும்! அவரது பேச்சுரிமையை தடுப்பதை எதிர்த்து போராடுவோம்! இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் இந்த எதிர்ப்புடன் எழுந்து நில்லுங்கள்! அரசியல் சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுத்து போராடுங்கள்!
மேலும் படிக்க
- இலங்கையில் சோ.ச.க./IYSSE நடத்தும் பொதுக்கூட்டம்: "உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!"
- உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
- நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரி சர்வதேச ரீதியில் மறியல் போராட்டங்களை நடத்துகிறது