மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜூலை 7-ம் தேதி நடந்த திடீர்த் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, புதிய பிரதமரை நியமித்து ஆட்சி அமைப்பதற்கான புதிய மக்கள் முன்னணியின் (NFP) முயற்சி செவ்வாய்க்கிழமை மாலை இழிவான முறையில் வீழ்ச்சியடைந்தது. பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஜோன்-லூக் மெலன்சோனுடைய நடுத்தர வர்க்க ஜனரஞ்சக அடிபணியாத பிரான்ஸ் கட்சி (LFI) ஆகியவை, பிரதம மந்திரி பதவிக்கு ஒருவரையொருவர் முன்மொழிந்த வேட்பாளர்களை நிராகரித்த பின்னர் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொண்டன.
இந்த வீழ்ச்சியானது, “பணக்காரர்களின் ஜனாதிபதி” மக்ரோனுக்கும், அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணிக்கும் (RN) எதிராக ஒரு அரசாங்கத்தை அமைக்கும் என்று எதிர்பார்த்து NFP க்கு வாக்களித்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையை காட்டிக் கொடுக்கிறது. பிரதம மந்திரி கேப்ரியல் அட்டலின் ராஜினாமாவை மக்ரோன் கேட்டு பெற்றுக்கொண்டாலும், NFP கடுமையான உள் கன்னைப் போராட்டங்களில் விழுந்தது. உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின் வலதுசாரி குடியரசுக் கட்சியுடன் (LR) இணைந்து செயல்பட முன்மொழிவது போல, ஆளும் வர்க்கம் இன்னும் வலதுசாரி அரசாங்கங்களை அமைக்க முயற்சிப்பதற்கான ஒரு பாதையை இது திறந்து விடுகிறது.
இந்த நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சி (PES) விடுத்த எச்சரிக்கைகளை வேகமாக உறுதிப்படுத்துகின்றன. சோசலிசக் கட்சி (PS) மற்றும் அதன் கூட்டாளிகளான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமைவாதிகளுடன் NFP ஐக் கட்டியெழுப்புவதன் மூலம், மெலன்சோனுடைய LFI தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் பொறியை அமைத்தது. அது முதலில், மக்ரோன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய PS உடன் பகிரங்கமாக கூட்டணி வைத்தது, அதற்குப் பின்னர் தேசிய பேரணிக்கு (RN) வாக்குகள் கிடைப்பதை தடுப்பதுக்காக மக்ரோனின் குழுமக் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்தது.
மெலன்சோன் முதலில் PS மற்றும் மக்ரோனுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட பாராளுமன்ற கணக்கீடுகளின் திவால்நிலையை NFP இன் பாத்திரம் இப்போது அம்பலப்படுத்திக் காட்டுகிறது. NFP இலுள்ள பாரிய பிரிவுகள், அதன் சொந்த தேர்தல் வேலைத்திட்டத்தை கைவிட்டு, பிரெஞ்சு மக்களால் பெருமளவில் நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை மற்றும் போர்க் கொள்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மக்ரோன் தலைமையிலான அரசாங்கத்தில் இளைய பங்குதாரர் பதவியை ஏற்க வேண்டும் என்று கோரி வருகின்றன.
கடந்த வார இறுதியில் PCF, பின்னர் LFI ஆகியவை ரீயூனியனின் பிராந்திய கவுன்சிலின் ஸ்ராலினிச தலைவரான ஹுகெட் பெல்லோவை (Huguett Bello) பிரதம மந்திரியாக முன்மொழிந்தன. PS பெல்லோவை வீட்டோ செய்து நிராகரித்ததோடு, அதற்கு பதிலாக பேராசிரியர் லாரன்ஸ் டுபியானாவை முன் நிறுத்தியது. அவருடைய வேட்புமனு விரைவில் PCF மற்றும் பசுமைவாதிகளின் ஆதரவைப் பெற்றது. நடுத்தர வர்க்க பப்லோவாத புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக்கின் (LCR) முன்னாள் உறுப்பினரான துபியானா, 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களை உருவாக்க உதவினார், மேலும் 2018 இல் மக்ரோனால் சாத்தியமான சூழலியல் அமைச்சராக கருதப்பட்டார்.
PS இன் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பு, மக்ரோனுடன் NFP ஒரு அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுக்கும் Le Monde இல் வெளியிடப்பட்ட ஒரு பகிரங்கக் கடிதத்தில் லாரன்ஸ் டுபியானா இணைந்து கையெழுத்திட்டார். “சமூக அமைதியை மீட்டெடுக்க” அழைப்பு விடுத்து, “உண்மையான அரசாங்கம் இல்லாமல் பிரான்ஸ் சில காலம் இருக்கக்கூடும்” என்ற அச்சத்தில் அந்தக் கடிதமானது, “இதனால்தான், அவசரகால ஜனநாயக வேலைத்திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும், அதற்கான அரசாங்கத்தை அமைக்கவும், ஜனநாயக முன்னணியில் உள்ள மற்ற அனைத்து தரப்பினரையும் NFP உடனடியாக அணுக வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தது.
பெரும்பாலான தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் NFPயை ஆதரிக்கும் அரசு நிதியுதவி பெறும் சங்கங்கள் மக்ரோனுடன் ஒரு கூட்டணியை விரும்புவதாகக் குறிப்பிட்டு, மக்ரோனுடன் நெருங்கிய உறவுகளில் இடையூறு விளைவிக்கும் எவரையும் எதிர்ப்பதாக அந்தக் கடிதம் மிரட்டுகிறது. மேலும், அந்தக் கடிதம் பின்வருமாறு அறிவித்தது:
நாட்டின் பெரும் பகுதியினரின் ஆதரவைப் பெறும் திறன் கொண்ட அவசரகாலத் வேலைத் திட்டத்தை உருவாக்குவதுக்கு NFPக்கு உதவ சிவில் சமூகம் (சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சிந்தனைக் குழுக்கள் போன்றவை) தயாராக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் ஏதோ ஒரு வகையில், சிலர் தேசத்தின் உயர்ந்த நலன்களை விட தங்கள் குறுகிய பாகுபாடான நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பினால், இந்த சிவில் சமூகம் அவர்களை மீண்டும் தங்கள் உணர்வுகளுக்கு கொண்டு வருவதற்கு தன்னை எவ்வாறு அணிதிரட்டுவது என்பது தெரியும்.
மக்ரோனுடன் ஒரு கூட்டணியை அமைப்பதற்காக, NFPயின் தேர்தல் வேலைத் திட்டத்தில், அது பிரச்சாரம் செய்து 7 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற லேசான சமூக வாக்குறுதிகளை இரவோடு இரவாகக் கைவிட வேண்டும் என்று பகிரங்கக் கடிதம் இழிந்த முறையில் ஒப்புக்கொண்டது. எனினும், NFP தனது தேர்தல் வாக்குறுதிகளை காட்டிக் கொடுத்தால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வருத்தப்பட மாட்டார்கள் என்ற வாதத்துடன் அது இதை வெறித்தனமாக நிராகரித்தது. NFP, மக்ரோனுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து, பின்வருமாறு கூறியது:
அத்தகைய பேச்சுக்களின் தொடக்கப் புள்ளி நிச்சயமாக, NFP யின் பக்கத்தில் அதன் வேலைத்திட்டமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு பிரச்சினையிலும் நாம் முடிவடையும் இடம் இதுவல்ல என்பது அனைவருக்கும் தெரியும் மற்றும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். பிரான்ஸை ஒரு நிலையான மற்றும் அமைதியான முறையில் ஆட்சி செய்ய முடிந்தால், நம் நாட்டில், இந்த திட்டத்திலிருந்து ஏதாவது அல்லது வேறு விஷயத்தில் விலகியதற்காக NFP உடன் வருத்தப்படுபவர்கள் மிகச் சிலரே.
பிரெஞ்சு ஜனாதிபதியுடனான கூட்டணிக்காக டுபியானாவின் முன்மொழிவு என்பது பொய் மூட்டைகளாகும். மக்ரோன் தலைமையிலான அரசாங்கம், அது NFP ஐ உள்ளடக்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிலாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு நிலையான ஆட்சியாக இருக்காது. மாறாக, வெளிநாட்டில் ஏகாதிபத்திய போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நடத்தும் ஒரு பாசிச பொலிஸ் அரசாக இருக்கும். இது பெரும்பான்மையான மக்களின் “உயர்ந்த நலன்களை” பாதுகாக்காது. மாறாக, பிரெஞ்சு வங்கிகள் மற்றும் நேட்டோ கூட்டணியின் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும்.
ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்த உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புமாறு மக்ரோனின் அழைப்பு பற்றியோ, அல்லது கடந்த ஆண்டு அதிகரித்த இராணுவ செலவினங்களுக்கு நிதியளித்த அவரது ஓய்வூதிய வெட்டுக்கள் பற்றியோ கடிதம் குறிப்பிடவில்லை. மேலும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை பற்றியோ அல்லது இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மக்ரோனின் ஆதரவைப் பற்றியோ கடிதத்தில் எந்த வார்த்தையும் இல்லை. மௌனம் என்பது சம்மதத்தைக் குறிக்கிறது. இந்தக் கொள்கைகள் பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களால், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டாலும் கூட, துபியானாவும் NFPயில் உள்ள அவரது ஆதரவாளர்களும் மக்ரோனுடனான ஒரு கூட்டணிக்கு, தெளிவாக ஆதரவாக இருப்பார்கள்.
துபியானாவை பிரதம மந்திரியாக முன்மொழிந்ததற்காக பல LFI தலைவர்கள் PS ஐ கண்டித்தனர். LFI தேசிய அமைப்பாளர் மானுவல் பொம்பார்ட் இது “சீரியஸாக இல்லை” என்று கூறினார்.
LFI இன் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் போல் வனியே பின்வருமாறு ட்வீட் செய்துள்ளார்: “ஹுகெட் பெல்லோவின் வேட்புமனுவை வீட்டோ செய்த பிறகு, [PS முதல் செயலாளர்] ஒலிவியர் ஃபாரே புதிய மக்கள் முன்னணி மீது மக்ரோனுக்கு இணக்கமான வேட்பாளரை பிரதம மந்திரியாக திணிக்க முயற்சிக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது மில்லியன் கணக்கான வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏமாற்றுவதாகவே அமையும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
காட்டிக்கொடுப்பை துல்லியமாக PS, PCF மற்றும் பசுமைவாதிகள் செய்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு “இடது” என்று பொய்யாகக் காட்டிவரும் மெலன்சோன் மற்றும் LFI இன் பாத்திரத்தையும் இது அம்பலப்படுத்துகிறது. சோசலிசக் கட்சி (2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ், அவரது கடைசி ஆணையின் போது பொலிஸ் அடக்குமுறை மற்றும் ஆழமான சிக்கன நடவடிக்கைகள், சிரியா மற்றும் மாலியில் போர்க் கொள்கைகளை வழிநடத்தியவர்) தன்னை வங்கிகளின் கூட்டாளியாகவும் தொழிலாளர்களின் எதிரியாகவும் வெளிப்படுத்தும் என்று கணிப்பது கடினமாக விடயமாக இருக்கவில்லை.
2017 இல் PSன் தேர்தல் வீழ்ச்சிக்கு பின்பு மக்ரோன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மெலன்சோன் முதலாளித்துவ ஆட்சியின் இந்த மதிப்பிழந்த பகுதிகளை ஊக்குவிக்க முயன்றார். 2022 இல், மெலன்சோன் அவர்களுடன் இணைந்து புதிய மக்கள் யூனியனை உருவாக்கினார், ஜூலை 7, 2024 தேர்தல்களில் அதி தீவிர வலதுசாரி வெற்றியின் அபாயத்தை எதிர்கொண்டு அதை புதிய மக்கள் முன்னணி என்று மறுபெயரிட்டார். NFP இன் வேலைத் திட்டம் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கும் இராணுவ பொலிஸ் மற்றும் உளவுப் படைகளை வலுப்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்தது மற்றும் அதன் கொள்கைகள் மக்ரோன் அரசாங்கத்துடன் முற்றிலும் இணக்கமானது.
மெலன்சோன் இந்த மாதம் தனது தேர்தல் ஒப்பந்தங்களில் மக்ரோன், PS, பசுமைக் கட்சி அல்லது PCF வேட்பாளர்களுக்கு பல இடங்களை வழங்கினார். LFIக்கு பாராளுமன்றத்தில் 72 இடங்கள் மட்டுமே உள்ளன. NFP க்குள் இருக்கும் சிறுபான்மையினரே அதனைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். மேலும், பிரான்சுவா ரஃபின் மற்றும் க்ளெமெண்டைன் ஆடெய்ன் உட்பட LFI இன் கணிசமான பிரிவுகள் பசுமைக் கட்சியில் சேர LFI யை விட்டு வெளியேறி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் LFI இன் முழு நடவடிக்கையும், தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிசத்திற்கும் விரோதமான PS போன்ற வலதுசாரிக் கட்சிகளை கட்டமைத்து வந்துள்ளது.
பல தசாப்தங்களாக முதலாளித்துவ ஊடகங்கள் “இடது” அரசியலாக முன்னிறுத்தியதை வடிவமைத்த செல்வந்த நடுத்தர வர்க்க கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரத்தில் இது ஒரு பேரழிவு தரும் அனுபவம் ஆகும். அவர்கள், துபியானாவின் கடிதம் போன்ற ஆவணங்கள் மூலம், மக்ரோனின் பாதுகாவலர்களாகவும், தொழிலாள வர்க்கத்தின் வெடிக்கும் கோபத்திற்கு எதிராக “சமூக அமைதி”க்காகவும் வெளிவருகின்றனர். மக்ரோனுடன் கூட்டணி வைப்பதன் மூலம், மரின் லு பென்னின் பாசிச தேசிய பேரணி (RN) மக்ரோனுக்கு மட்டுமே உண்மையான எதிர்ப்பாக பொய்யாகக் காட்டிக் கொள்வதற்கான அரசியல் வழியை அவர்கள் திறந்து விடுகின்றனர்.
இந்தத் தேர்தல்களில் இருந்து எந்த அரசாங்கம் தோன்றினாலும் தொழிலாள வர்க்கம் தவிர்க்க முடியாமல் வெடிக்கும் மோதலில் நுழையும். ரஷ்யாவுக்கு எதிரான போர், இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கை, பொலிஸ் அரசு ஆட்சி, குடியேற்ற எதிர்ப்பு வெறி மற்றும் நவ-பாசிசம் ஆகியவற்றுக்கு எதிராக, பரந்த அளவிலான கோரிக்கைகளைச் சுற்றி வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும். மேலும் அவை மேக்ரோன் மற்றும் நவ-பாசிசத்திற்கு எதிரான ஒரு பரந்த இயக்கமாக உருவாக வேண்டும். எவ்வாறாயினும், இதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு புரட்சிகர மார்க்சிச தலைமையை வளர்த்து மக்ரோனை எதிர்ப்பது மட்டுமல்ல, அவரது போலி-இடது பாதுகாவலர்களையும் எதிர்ப்பது அவசியமாகும்.