லெபனானுடனான போர் அச்சுறுத்தல் அதிகரிக்கையில், காஸாவில் நடக்கும் போர் இஸ்ரேலுக்கு பெரும் நிதி இழப்பைக் கொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜோர்டான் நதியில் இருந்து மத்தியதரைக் கடல் வரையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அனைத்தின் மீதும் யூத மேலாதிக்க அதன் கொள்கையைப் பின்தொடர நாட்டை ஒரு போர் நிலைப்பாட்டில் நிறுத்தியுள்ள பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் பாசிச அரசாங்கம், பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த வாரம் தெற்குத் துறைமுகமான எய்லாட் (Eilat) அதன் செயற்பாடுகளை நிறுத்தி, 13.61 மில்லியன் டாலர்களை இழந்து, திவால்தன்மையை அறிவித்ததுடன், அதன் 120 ஊழியர்களில் பாதி பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. இஸ்ரேலுக்குச் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கும் யேமனின் ஹௌதி படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் செங்கடல் பாதையைத் தவிர்ப்பதற்காக கப்பல்கள் ஆபிரிக்காவைச் சுற்றி திருப்பி விடப்பட்டதால், போர் தொடங்கியதில் இருந்து இந்த துறைமுகம் பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ளது.

Eilat’s Harbor   [Photo by Adiel lo - Own work / CC BY-SA 3.0]

சில வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானின் தளவாட மற்றும் வர்த்தக ஆதரவு இஸ்ரேலின் சந்தைகளுக்கு தரைவழி வழியை வழங்கியிருப்பது இந்த மூடலின் முழு பாதிப்பில் இருந்து இஸ்ரேலை ஓரளவிற்கு பாதுகாத்துள்ளது. ஆனால் இந்த துறைமுகம் 46,000 இஸ்ரேலிய வணிகங்களில் ஒன்றாகும். இஸ்ரேலில் பெரும்பாலும் சிறு வணிகங்கள், திவாலாகியுள்ளன என்று மாரிவ் (Maariv) நாளிதழ் தெரிவித்துள்ளது, இது இஸ்ரேலை “திவாலான நாடு” என்று குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 60,000 சிறு வணிகங்கள் ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிய தகவல் சேவைகள் மற்றும் கடன் இடர் மேலாண்மை (credit risk management) நிறுவனமான கோஃபேஸ்பிடியின் (CofaceBdi) தலைமை நிர்வாக அதிகாரி யோயல் அமீர், மாரிவ்விடம், “மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழில்கள் கட்டுமானத் தொழிலாகும், இதன் விளைவாக அதைச் சுற்றி செயல்படும் முழு சுற்றுச்சூழல் அமைப்பும்: குறிப்பாக, மட்பாண்டங்கள், குளிரூட்டிகள், அலுமினியம், கட்டுமானப் பொருட்கள் போன்றவை அடங்குகின்றன.  இந்தத் துறைகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் 120,000 மேற்குக்கரை மற்றும் காஸாவிலுள்ள பாலஸ்தீனிய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதை தடுத்துள்ளதே இதற்கு காரணமாகும். அங்கு அவர்கள் கட்டுமானம், உற்பத்தி மற்றும் விவசாயத்தில் பணியாற்றி வந்தனர்.

முக்கியமாக வடக்கு மற்றும் தெற்கை தளமாகக் கொண்ட விவசாயம், காஸாவில் பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பை உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்த தொழிலாளர்கள், உரிமைகளோ அல்லது சுகாதார கவனிப்புக்கான அணுகலோ இல்லாமல், பாலஸ்தீனியர்களை விட கடுமையான சுரண்டல் நிலைமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதமாக இருந்த இஸ்ரேலின் சுற்றுலாத் துறை சரிந்துவிட்டது. போர் வெடித்தபோது, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அவை மீண்டும் தொடங்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் விலகி உள்ளனர். “போர் தொடங்கியபோது, எல்லாம் நிறுத்தப்பட்டது, ஏப்ரல் வரை, ஒரு சுற்றுலாப் பயணி கூட இஸ்ரேலுக்கு வரவில்லை” என்று சுற்றுலா நிபுணரும் ஆஜோ டிராவலின் (Aujo Travel) வழிகாட்டியுமான மோஷே பெனிஷு தி மீடியா லைனிடம்  (The Media Line) தெரிவித்தார். பார்வையாளர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியிருந்தாலும், அவை கடந்த ஆண்டு இதே நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் குறைவாகவே உள்ளன. காஸா மற்றும் லெபனான் எல்லைகளுக்கு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களால் பல ஹோட்டல்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

போர் தொடங்கியதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இஸ்ரேலின் பொருளாதாரம் கிட்டத்தட்ட 22 சதவீதம் சுருங்கியது, மேலும் 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இன்னும் 7 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய இராணுவ தாக்குதல்கள் அல்லது கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு இஸ்ரேலிய பொருளாதாரம் மெதுவாக மீட்கும் என்று எதிர்பார்த்ததாக கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 0.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. மூடிஸ் முதலீட்டாளர் சேவை (Moody’s Investors Service) உடன் சேர்ந்து S&P, இஸ்ரேலின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. மேலும் இவை, போரால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத் துறைகளான சுற்றுலா, கட்டுமானம் மற்றும் விவசாயம் மற்றும் அதிகரித்து வரும் பிராந்திய மோதல்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை மீட்புக்கு இடையூறாக இருப்பதாக கருதுகின்றன. 

காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு முன்னரே கூட, மத அதிகாரிகள் அதிகரித்தளவில் அன்றாட வாழ்க்கையில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிலையில், அரசாங்கத்திற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் நெதன்யாகுவின் திட்டமிடப்பட்ட “நீதித்துறை மாற்றத்தின்” காரணமாக நிறுவனங்கள் நாட்டை விட்டு பணத்தை நகர்த்தத் தொடங்கின.

இஸ்ரேல் வங்கி மற்றும் இஸ்ரேலிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, போரின் முதல் ஆறு மாதங்களுக்கான செலவு மார்ச் இறுதிக்குள் 70 பில்லியன் ஷெக்கல்களுக்கும் (73 பில்லியன் டாலர்)  அதிகமாக இருந்தது. ஆயினும்கூட நெதன்யாகு, போர் பல மாதங்களுக்கு தொடரும் என்றும், இராணுவத் தாக்குதல் அச்சங்கள் இருந்தபோதிலும், வடக்கில் ஹெஸ்பொல்லா மற்றும் செங்கடலில் ஹௌதிகளுக்கு எதிரான ஒரு முழுமையான மோதலாக இது மாறும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன என்றும் கூறியுள்ளார். இது 2024 வரவுசெலவுத் திட்டத்தை $73 பில்லியனால் அதிகரிக்க நாடாளுமன்றத்தை (Knesset)  தூண்டியது. அதில், பெரும்பாலானவை இராணுவத்திற்கும் மீதமுள்ளவை பொதுமக்கள் போர்க்கால தேவைகளுக்கும் அவை நிதியளிக்கப் போகின்றன. மே 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட ஆரம்ப வரவு-செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதத்திற்கு சமமான பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, 2024 க்கு அரசாங்கம் நிர்ணயித்த 6.6 சதவீத இலக்கு வரம்பை மீறுகிறது.

இதன் பொருள் வரிகளில் பாரிய உயர்வு மற்றும் உயரும் பற்றாக்குறையை ஓரளவிற்கேனும் ஈடுகட்ட பொதுச் சேவைகளில் கடுமையான வெட்டுக்கள் என்பதாகும். ஆனால் உள்கட்டுமானம், கல்வி, நலன்புரி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற பொதுப் பணிகள் பொறிவின் விளிம்பில் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக நிதியுதவி குறைவாக இருந்த பொதுப் பணிகள் இப்பொழுது உடையும் கட்டத்தில் உள்ளன. Arlozorov Forum நடத்திய ஆய்வு ஒன்றின்படி, இஸ்ரேலிய அரசாங்கத்தின் சிவிலியன் செலவினங்கள் OECD சராசரி செலவின மட்டத்தை அடைவதற்கு 171 பில்லியன் ஷெக்கல்களால் (47 பில்லியன் டாலர்) அதிகரிக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில், நெதன்யாகுவின் அதி தீவிர வலதுசாரி கூட்டணி, நவம்பர் 2022 தேர்தல்களுக்குப் பிறகு இடம்பெற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, அடிப்படை பாடத்திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத மேற்குக் கரை குடியேற்றங்கள் மற்றும் அதிதீவிர ஆர்த்தடாக்ஸ் பள்ளிகள் மற்றும் மத மதரஸாக்கள் (religious seminaries) உட்பட அதன் அரசியல் கூட்டாளிகளுக்கு பில்லியன் கணக்கான ஷெக்கல்களைத் தொடர்ந்து செலுத்தி வருகிறது.

அக்டோபர் 7ல் இருந்து கிட்டத்தட்ட 700 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு இஸ்ரேலிய நகரங்களில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 350 பேர் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும். காஸாவில் கொல்லப்பட்ட 326 சிப்பாய்கள், ஹமாஸுக்கு எதிரான 2014 போரின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும். மூலோபாயத் தோல்வி உணர்வு இஸ்ரேலில் மேலும் மேலும் காணப்படுகிறது.

நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்திருப்பது நிலவும் விரக்தியின் அடையாளம் ஆகும். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் (Times of Israel) கூற்றுப்படி, அக்டோபர் 7 க்குப் பிறகு அந்த எண்ணிக்கை 285 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போர் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளை உறுதிப்படுத்துகிறது, இது கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அநேகமாக இரண்டாவது குடியுரிமை மற்றும்/அல்லது வெளிநாட்டில் ஒரு வீட்டைப் பெறும் அதிர்ஷ்டசாலிகளாக அவர்கள் இருக்கலாம்.

இஸ்ரேலுக்கு வரும் யூத குடியேறிகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகம் மார்ச் மாதம் நடத்திய இரண்டாவது கணக்கெடுப்பில், வெளிநாட்டில் வசிப்பவர்களில் 80 சதவிகிதத்தினர் தாங்கள் நாட்டுக்கு திரும்பி வருவதுக்கு விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து யூதர்கள் தலைகீழாக இடம்பெயர்வது ஒரு ஆழமான அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது சியோனிச அரசு பராமரிக்க முனைந்துள்ள “மக்கள்தொகை சமநிலையை” மேலும் அரித்துவிடும். இது அதிவலது முன்னாள் பிரதம மந்திரி நஃப்டாலி பென்னட்டை (Naftali Bennett) இஸ்ரேலியர்களை இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டாம் என்று அழைப்புவிடுக்க தூண்டியது, “இது 1948 க்குப் பின்னர் அதன் மிகவும் கடினமான காலங்களை கடந்து வருகிறது.”

“நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசப்படுகிறது. இது நடக்கக் கூடாது” என்றும், அவர் வலியுறுத்தினார். “படுகுழியிலிருந்து வெளியேறி இஸ்ரேலை புதுப்பிக்க இஸ்ரேல் மக்களின் அனைத்து திறமையும் அர்ப்பணிப்பும் நமக்கு தேவை” என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களுக்கு மறுஉத்தரவாதம் அளிக்கும் முயற்சியில், “ஆனால் ஐயத்திற்கிடமின்றி, நாங்கள் திறமையானவர்கள், நாங்கள் இந்த படுகுழியில் இருந்து வெளியேறுவோம்”  என்று அவர் மேலும் கூறினார்.

பெரும் திகைப்பிற்கு எரியூட்டுவது ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக முழு அளவு போர் வரக்கூடும் என்பதுதான்; இச்சூழ்நிலையில் இஸ்ரேல் தயாராக இல்லை என்ற கவலைகள் வெளிப்படையாக குரல் கொடுக்கப்படுகின்றன. ஹெஸ்புல்லாவிடம் ஹமாஸை விட இரண்டு மடங்கு போர் வீரர்களும், நவீன வழிகாட்டும் ஏவுகணைகள் உட்பட நான்கு மடங்கிற்கும் அதிகமான வெடிமருந்துகளும் உள்ளன.

இஸ்ரேலிய தொழிற் கட்சியின் தலைவரும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் முன்னாள் துணைத் தலைவருமான யாயிர் கோலன், ஒரு இஸ்ரேலிய வானொலிக்கு கூறுகையில், “இருப்புக்களும் வழமையான இராணுவ அமைப்புமுறையும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன,” என்றார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தலைமையானது, நீதிமன்றத்தில் இம்மாதம் முன்னதாக தாக்கல் செய்த ஆவணங்களில் வெடிமருந்துகள், டாங்கிகள் தீர்ந்துவிட்டதாகவும், அவற்றில் பல சேதமடைந்துவிட்டன என்றும் ஒப்புக் கொண்டுள்ளது.

Loading