மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
எப்போதும் ஒரு பெரிய இடைவெளியானது, ஒலிம்பிக் விளையாட்டுகளில் கூறப்பட்ட இலக்குகளை யதார்த்தத்திலிருந்து பிரித்து வருகிறது. ஒரு “சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் சிறப்பான, மரியாதை மற்றும் நட்பை” பற்றிய அவர்களின் பிரகடனம் தவிர்க்க முடியாமல், தடகளத்தில் பணத்தை மகிமைப்படுத்துவதோடு, முதலாளித்துவ ஸ்தாபனம் ஒருவரின் சொந்த நாட்டின் விளையாட்டு வீரர்கள் மீது ஒரு தேசியவாத பிடிப்பை மேம்படுத்துவதன் மூலம் மோதுகிறது.
இருப்பினும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்கும், சமூகத்தின் பரந்த யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரத்தை அடைந்துள்ளது. ஆளும் வர்க்கம் ரஷ்யாவுடனான நேட்டோ போருக்கும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கும் மத்தியில் சரமாரியாக மனதைக் கவரும் தேசியவாத பிரச்சாரத்தினை அறிமுகப்படுத்துகிறது.
இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதுக்கு முன்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். இறுதியில், பாரிய படுகொலைக்கு அழைப்பு விடுத்ததுக்காக தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்பு மக்ரோனை எலிசே அரண்மனையில் சந்தித்தார்.
இதுவரை, 186,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற பாலஸ்தீன மக்களின் கூட்டுத் தண்டனைக்கு அழைப்பு விடுத்ததுக்காக ஹெர்சாக் மதிப்பிழந்த மனிதராக இருக்கிறார். “இதற்கு முழு மக்களுமே (பாலஸ்தீன மக்கள்) பொறுப்பு, பொதுமக்களைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை, அவர்கள் ஈடுபடவில்லை என்ற இந்த சொல்லாடல்கள் உண்மையல்ல, இது முற்றிலும் உண்மையல்ல” என்று அவர் அறிவித்தார். மேலும், பாலஸ்தீனிய குடிமக்களின் வீடுகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற உணவு விநியோகங்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்திய அவர், “துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் வீடுகளில், எங்களை சுடும் ஏவுகணைகள் உள்ளன ... “ என்று கூறியிருந்தார்.
மக்ரோன் ஹெர்சாக்கை அரவணைப்பது என்பது, தொடக்க விழாவிலிருந்து ரஷ்ய மற்றும் பெலாரூசிய விளையாட்டு வீரர்களை தடை செய்வதன் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. இது, ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவதற்காக உக்ரேனுக்கு தரைப்படை துருப்புக்களை அனுப்ப மக்ரோன் மற்றும் அவரது நேட்டோ நட்பு நாடுகளின் அழைப்புகளுக்கு, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில், பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பை இலக்காகக் கொண்ட பிரச்சாரமாகும்.
லு மொன்ட் பத்திரிகையில் நடந்த ஒரு நேர்காணலில், மக்ரோன் நிர்வாக அதிகாரிகளின சரமாரியான தேசியவாத பிரச்சாரம் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளின் அடிப்படையிலான கணக்கீடுகள் முன்வைக்கப்பட்டன. “மக்ரோன், எமது நாடு தனது விளையாட்டு வீரர்களைக் காதலிப்பதைக் காணவும், பின்னர் மக்களின் உற்சாகத்திலிருந்து லாபம் பெறவும் நம்புகிறார்” என்று லு மொன்ட் தெரிவித்துள்ளது. அதன் செய்தி அறிக்கையில், ஒலிம்பிக் தொடக்க விழா “தேசிய பெருமை அரசியல் சண்டைகளை முந்திக்கொள்ளும்,” “எலும்பு முறிந்த தேசத்தை” குணப்படுத்தும் மற்றும் “இந்த விழாவை ஒரு அரங்கத்திற்கு வெளியே நடக்க அனுமதித்த ஒரு தலைவரின் கவுரவத்தை” உயர்த்தும் என்று அது நம்புவதாக, தெரிவித்தது.
வர்க்க ரீதியாக பிளவுண்டுள்ள ஒரு சமுதாயத்தின் முரண்பாடுகளை ஒலிம்பிக் போட்டிகள் ஒருபோதும் தீர்த்து வைக்காது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்ட போர் மற்றும் சிக்கனக் கொள்கைகளை மக்ரோன் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு எதிராக ஆட்சி செய்வதற்காக அவர் வெறுக்கப்படுகிறார். உக்ரேனில் இராணுவ விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, பாரிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான போருக்கான மக்ரோனின் அழைப்புகளையும், கடந்த ஆண்டு வாக்களிப்புக்கு விடாமல் அவர் அமுல்படுத்திய ஓய்வூதிய வெட்டுக்களையும் பிரெஞ்சு மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் எதிர்க்கிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
இடதுசாரி மற்றும் பாசிச எதிர்ப்பு உணர்வுகளின் எழுச்சிக்கு மத்தியில் ஜூலை 7 தேர்தல்களில் அவரது கட்சி தோல்வியடைந்த பிறகு, ஒலிம்பிக் போட்டிகள் ஒரு “அரசியல் போர்நிறுத்தமாக” இருக்கும் என்று மக்ரோன் பகிரங்கமாக தனது நம்பிக்கையை அறிவித்தார். ஆனால் உண்மையில், தொழிலாளர்களுக்கு எதிராக, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பாசிச பொலிஸ் அரசைக் கட்டியெழுப்பும் மக்ரோன் நிர்வாகம் மற்றும் முழு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளில் எந்த இடைநிறுத்தமும் இல்லை.
வரவிருக்கின்ற புதிய அரசாங்கம் குறித்து அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணியுடன் அவர் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகையில், மக்ரோன் தனது ஆட்சியை நேரடியாக நவ-பாசிசவாதத்திற்கு வாக்களிக்கின்ற பொலிஸ் படைகள் மீது கூச்சமின்றி அடித்தளத்தைக் கொண்டுள்ளார்.
பிரான்சின் பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது ஒரு மில்லியன் பின்னணி சோதனைகளை மேற்கொண்டுள்ளன. இந்த சோதனைகள், 20 மில்லியன் பொலிஸ் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை, அல்லது பிரெஞ்சு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். அவர்கள் 5,000 பேர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்வதைத் தடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளின் போது ரஷ்யா பிரான்சை சீர்குலைக்க முற்படுகிறது என்ற தெளிவற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் பலமுறை அறிமுகப்படுத்திய உள்துறை மந்திரி ஜால்ட் டர்மனின், இந்த வரலாற்று சோதனைகள் 1,000 உளவாளிகளைக் கண்டுபிடிப்பதை சாத்தியமாக்கியுள்ளன என்று குறிப்பிட்டார்.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை போலீசார் தடை செய்தனர், அதே நேரத்தில் ட்ரோன்கள், குறைந்த உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களுடன், இராணுவ பொலிஸ் துறையின் பிரிவுகள் பாரிஸ் பிரதேசத்திலும், வானத்திலும் பல பாதுகாப்பு மண்டலங்களை நிறுவியுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளைத் தயார் செய்வதற்கு, பொலிசார் பாரிஸில் 12,000 பேர்களை இடம்பெயர வைத்தனர், இவர்களில் பெரும்பாலும் வீடற்றவர்கள் ஆவர். இராணுவம், தேசிய மற்றும் பிராந்திய பொலிஸ் படைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், சுரங்கப்பாதை பாதுகாப்புக் காவலர்கள் கூட இப்போது நெரிசலான சுரங்கப்பாதைகளில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் கைவிலங்கிடுவதற்கும் சாதாரணமாக தலையிடுகின்றனர்.
இந்த பொலிஸ் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவது, ஊடகங்களில் இடதுசாரி கொள்கைகளை இடைவிடாது கண்டனம் செய்வதோடு கைகோர்த்து செல்கிறது.
விளையாட்டு போட்டிகளுக்கு மத்தியில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் இணையத்தை இலக்காகக் கொண்ட பல தீ விபத்துகளுக்கு பிறகு, “இடதுசாரிகளின் செயல்பாட்டை” பின்தொடர்வதாக போலீசார் அறிவித்தனர். தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அழிவுக் கிளர்ச்சி சூழலியல் குழுவின் (Extinction Rebellion ecological group) 45 உறுப்பினர்களை, பொறுப்பேற்க வைப்பதில் வர்ணனையாளர்கள் “விவேகத்துடன்” இருக்குமாறு டர்மானின் அழைப்பு விடுத்தாலும், தீவிரவாதத்திற்கு “தீவிர இடதுசாரிகள்” பொறுப்பு என்று கண்டிக்கும் பிரச்சாரம் தடையின்றி தொடர்கிறது.
உண்மையில், தற்போதுள்ள முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை பொலிஸ் அரசுகள் மற்றும் அவர்களது அரசியல் கூட்டாளிகளால் ஒடுக்கப்பட்டுவரும் நிலைமைகளின் கீழ், குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்பட முடியாது என்பதை ஒலிம்பிக் போட்டிகள் எடுத்துக் காட்டுகின்றன.
புதிய மக்கள் முன்னணி (NFP) உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சிகளால் முறையாக மறைக்கப்பட்ட கோவிட்-19 இன் கோடை அலையை பிரான்ஸ் தற்போது அனுபவித்து வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் பெருந்தொற்றுநோயை வேகமாகப் பரவவிடும் நிகழ்வாகத் தோன்றுகிறது. ஆஸ்திரேலிய வாட்டர் போலோ வீரர்கள், பிரிட்டிஷ் நீச்சல் வீரர்கள் மற்றும் பெல்ஜிய விளையாட்டு வீரர்கள் அனைவரும் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வைரஸ் பரவுவதைத் தடுக்க விரிவான நெறிமுறைகள் எதுவும் நிறுவப்படவில்லை. பிரான்சின் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ராஜினாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ள ஒலிம்பிக் தன்னார்வலர் குழுக்களை தனிமைப்படுத்தி, “கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மறுப்பு என்பது மாசுபாட்டிற்கான மாற்று மருந்தல்ல” என்று அறிவித்தது.
பாரிசை ஊடறுத்துச் செல்லும் செயின் ஆற்றிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தனது புதுமையான திட்டத்தின் பெயரில், மூலக் கழிவுநீரால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீரில், நீச்சல் வீரர்களை போட்டியிட கட்டாயப்படுத்தும் மக்ரோனின் முயற்சி, எல்லாவற்றையும் விட மிகவும் சீரழிந்ததாக இருக்கிறது.
COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பிரெஞ்சு நிறுவனங்களும் பெரிய முதலீட்டாளர்களும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வங்கி பிணையெடுப்புகளில் பெற்றுள்ளனர், இது பிரெஞ்சு பில்லியனர் பெர்னார்ட் அர்னோல்ட்டை உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஆக்கியுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், பல திறந்த கழிவுநீர் குழாய்களைக் கொண்டுள்ள உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான பிரான்சில் அதிக மழைப்பொழிவானது, ஈ.கோலி (E.coli) மற்றும் பிற பாக்டீரியாக்களுடன் செயின் ஆற்றை பெருமளவில் மாசுபடுத்துகிறது. இவை, இப்போது டிரையத்லான் (triathlon) போட்டி நிகழ்வைத் தடுக்கும் அல்லது அது தொடர்ந்தால், பல விளையாட்டு வீரர்களுக்கு பேரழிவு தரும் நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும்.
புகழ்பெற்ற ஜேர்மன் டிரையத்லான் (triathlon) வீரரான ஜோன் ஃப்ரோடெனோ, 2014 ஆம் ஆண்டு, அசுத்தமான நீரில் நடந்த நீச்சல் நிகழ்வில், அவரது மனைவி எம்மா நெய்ஜஸ் ஃப்ரோடெனோக்கு நீடித்த உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தியதால், அவரது வாழ்க்கை எப்படி முடிவுக்கு வந்தது என்பதை நினைவுகூர்ந்து ஒரு பொது எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
எப்போதும் பெரிய சீற்றங்களை இடைவிடாமல் இயல்பாக்கிவரும் முதலாளித்துவ வர்க்கமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஆழமான, வரலாற்று ரீதியாக வேரூன்றிய எதிர்ப்பை எதிர்கொள்கிறது. உண்மையில், பிரெஞ்சு உளவுத்துறை, ஒலிம்பிக்கின் போது கட்டுப்படுத்த முடியாத பாரிய கலவரங்களைப் பற்றி கவலைப்படும் ஒரு குறிப்பை தயாரித்தது, மேலும் மூன்று பில்லியன் மக்களைக் கொண்ட உலகளாவிய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு சமூக எதிர்ப்பின் பின்னணியில் செய்யப்பட்ட பல்வேறு செயல்களையும் காண்பித்தது.
பலம்வாய்ந்த சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டல் மற்றும் ஐக்கியப்படுத்தல் மட்டுமே முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பின் மரண நெருக்கடியால் உருவாக்கப்பட்ட தேசியவாதம் மற்றும் பொலிஸ்-அரசு பிற்போக்குத்தனத்தை தோற்கடிக்க முடியும். இன்று தீர்க்கமான கேள்வி என்னவென்றால், ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக, வெளிப்படையான பாசிச அல்லது பெயரளவில் “ஜனநாயக” முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து முழு சுயாதீனமாக, தொழிலாளர் அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும்.