அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிக்க தெற்காசிய அரசாங்கங்கள் விரைகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தெற்காசியா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை வாழ்த்த விரைந்துள்ளன. அவை அதிகாரத்திற்கு வரவுள்ள அவரது நிர்வாகத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலில் தங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 19 ஆகஸ்ட் 2024 அன்று [ [Photo by Prime Minister’s Office (Government Open Data License - India)]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ட்ரம்புடன் பேசிய பின்னர், X/ட்விட்டர் செய்தியில் “எனது நண்பர், ஜனாதிபதி @realடொனால்ட் ட்ரம்ப் உடன் ஒரு சிறந்த உரையாடலைக் மேற்கொண்டிருந்தேன், அவரது அற்புதமான வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன். தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளில் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்:

மோடியின் அறிக்கை, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் அவரது அரசாங்கம் அதன் தலையீட்டை தீவிரமாக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் இந்தியாவை களமுனை நாடாக மாற்றியுள்ளது. இதற்கு பிரதியுபகாரமாக அமெரிக்கா இந்தியாவிற்கு மூலோபாய 'உதவிகளை' நீட்டித்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கான அணுகல் மற்றும் அமெரிக்க ஆயுதத் தொழிற்துறையின் மலிவு-கூலி துணை ஒப்பந்தக்காரராக வளர்ந்து வரும் அதன் வகிபாகமும் அடங்கும்.

புதுடெல்லி அமெரிக்க இராணுவத்திற்கு இந்திய துறைமுகங்கள் மற்றும் தளங்களை, மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்புக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன் பெய்ஜிங்கிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தொடர்ந்து வளர்ந்து வரும் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர கூட்டணிகளின் வலைப்பின்னலில் இணைந்துள்ளது. தெற்காசியா முழுவதும் சீனச் செல்வாக்கை எதிர்கொள்வதற்கும், இந்தோ-பசிபிக் முழுவதும் உள்ள நாடுகளை உத்தியோகபூர்வமற்ற சீன எதிர்ப்பு கூட்டுக்களுள் இழுப்பதற்கும் வாஷிங்டனுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டும் இந்திய-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளன. பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ் இது ஒரு பண்புரீதியாக புதிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆகஸ்ட் 2023 இல், தாய்வான் சம்பந்தமாக சீனாவுடன் போர் ஏற்பட்டால், இந்தியா என்ன வகையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவிக்குமாறு கேட்டு பைடென் நிர்வாகம் விடுத்த உத்தரவுக்கு தாங்கள் அவசரமாக பதிலளித்ததாக சிரேஷ்ட இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயினும்கூட, மோடியும் மற்ற சிரேஷ்ட இந்திய அரசாங்கத் தலைவர்களும் ட்ரம்பின் வெற்றியில் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் ட்ரம்புக்கும் வெளியேறும் நிர்வாகத்திற்கும் இடையிலான தந்திரோபாய வேறுபாடுகளிலிருந்து இந்திய முதலாளித்துவம் இலாபம் ஈட்ட முடியும் என்று கணக்கிட்டுள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவுடனான அதன் நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய உறவுகளை குறைக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதில் பைடெனை விட இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் கடுமை குறைவாக நடந்துகொள்ளும் என்றும், அதற்கு பதிலாக சீனாவுடனான அமெரிக்காவின் மூலோபாய மோதலுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் மோடி அரசாங்கம் நம்புகிறது.

வியாழக்கிழமை சிட்னியில் ஆஸ்திரேலிய வணிகத் தலைவர்களின் கூட்டத்தில், ட்ரம்பின் வெற்றியால் இந்தியா எவ்வாறு பயனடைய முடியும் என்பதை விளக்கிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அவரது தேர்வானது சீனாவில் உள்ள, அமெரிக்க மற்றும் பிற மேற்கத்திய நாடுகளை தளமாகக் கொண்ட நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்றுவதை துரிதப்படுத்தும் என்று கூறினார்.

'ஏற்கனவே விநியோகச் சங்கிலிகளின் மறு-மறுசீரமைப்பு நடைபெற்று வந்தது. தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, இது துரிதப்படுத்தப்படும் என்பது மிகவும் சாத்தியம். அதில் சில இடையூறுகள் இருந்தாலும், இந்தியாவில் நாங்கள் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறோம்,' என்று ஜெய்சங்கர் கூறினார்.

ட்ரம்புடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கத்தின் ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவதற்கான ட்ரம்பின் திட்டங்களுக்கு ஆதரவை சுட்டிக்காட்டினார். டெக்கான் குரோனிக்கிள் செய்தியின்படி, அமெரிக்காவில் உள்ள ஆவணமற்ற இந்தியர்கள் 'திரும்பி வர வேண்டும்' என்று புது டெல்லி ஒப்புக்கொள்கிறது என்று அவர் கூறினார்.

ட்ரம்ப்புடனான மோடியின் அன்பான உறவு என்பது இந்திய-அமெரிக்க மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பகிர்வதை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மோடி ட்ரம்ப்பை முன்மாதிரியாகக்கொண்ட ஒரு தீவிர வலதுசாரி அரசியல் தலைவராவார். ஒரு இந்து சர்வாதிகார வலிமையானவராக இருக்கவிரும்பும் அவர், வகுப்புவாத தூண்டுதல், சமூக செலவினங்களில் கொடூரமான வெட்டுக்கள் மற்றும் இந்திய தொழிலாள வர்க்கத்தின் மீதான வணிக சார்பு தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவது ஆகியவற்றின் நீண்ட மற்றும் இரத்தக்களரியான வரலாற்றைக் கொண்டவராவார்.

பங்காளதேஷில், அந்த நாட்டின் இடைக்கால நிர்வாகத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார். 'உங்களை இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருப்பதானது உங்கள் தலைமையும் தொலைநோக்குப் பார்வையும் அமெரிக்க மக்களுடன் ஒருங்கிணைந்துபோவதை பிரதிபலிக்கிறது. உங்கள் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்கா செழித்து வளரும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்,' என்று அவர் அறிவித்தார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஹசானி மற்றும் அவரது சர்வாதிகார ஆட்சியை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய வெகுஜன போராட்டங்களைத் தொடர்ந்து, யூனுஸ் ஆட்சிக்கு வந்தார். ஹசீனா நடைமுறைப்படுத்திய கடுமையான சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கொள்கைகளை தானும் அமுல்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க [Photo: Facebook]

இலங்கையின் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, ட்ரம்பின் வெற்றியைப் பாராட்டிய தெற்காசிய தலைவர்களில் முதன்மையானவர் ஆவார்.

அவரது X/ட்விட்டர் செய்தி அறிவித்ததாவது: 'அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக வலுவான ஒப்புதலைப் பெற்ற ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பிற்கு அன்பான வாழ்த்துக்கள். இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமது உறவுகளின் பொதுவான நோக்கங்களை அடைவதில் உங்களின் நிர்வாகத்துடன் இணைந்து இயங்குவதற்கு தயராக உள்ளேன்.

திசாநாயக்கவின் வாழ்த்துக்கள், அவரது ஆட்சி தனது முன்னோடி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளை தொடர்ந்தும் பராமரிப்பதோடு சீனாவுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இந்திய புவிசார் மூலோபாய தாக்குதலில் தீவை மேலும் ஒருங்கிணைக்கும் என்று வாஷிங்டனுக்கு வழங்கும் மற்றொரு உறுதிமொழியாகும்.

இந்து சமத்திரத்தில் சீனாவுக்கான இன்றியமையாத மத்திய கிழக்கு எண்ணெய்க்கான அணுகல் உட்பட, மூலோபாய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள இலங்கையின் அதிகரித்த ஈடுபாடு, வாஷிங்டனின் புவிசார் மூலோபாய திட்டமிடலுக்கு முக்கியமானதாகும். கடந்த இரண்டு வருடங்களாக திசாநாயக்க, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்குடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டதுடன், கடந்த மாதம் அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லருடன் கொழும்பில் மூடிய கதவுகளுக்குள் சந்திப்புகளை நடத்தினார்.

இந்த வாரம் ஜே.வி.பியின் லங்கா ட்ரூத் வலைத் தளம் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் முன்னாள் அமைச்சரவை உறுப்பினரான கலாநிதி அமுனுகமவின் கருத்துக்களை மேற்கோள்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது. ட்ரம்பின் நிகழ்ச்சி நிரல் 'இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு' நன்மை பயக்கும் என்ற திசாநாயக்கவின் கேலிக்கூத்தான கூற்றை அமுனுகம எதிரொலிக்கிறார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவும் திசாநாயக்கவுடன் இணைந்து ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர். ட்ரம்பின் வரவிருக்கும் நிர்வாகத்தின் போது 'சமாதானம், நல்லெண்ணம் மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்புக்கு' பிரேமதாசா தனது விருப்பத்தை தெரிவித்தார். ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை ஒரு 'வரலாற்று சாதனை' என்றும், 'அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்' என்ற ட்ரம்பின் பிற்போக்கு வாய்வீச்சு உறுதிமொழியை அமெரிக்க மக்களின் 'நம்பிக்கைக்கான' அறிகுறி என்றும் விக்கிரமசிங்க விவரித்தார்.

தெற்காசிய அரசியல் தலைவர்கள் பாசிச ட்ரம்பைப் புகழ்வது தற்செயலானது அல்ல.

மோடி, திசாநாயக்கா, யூனுஸ் மற்றும் தெற்காசியாவின் ஆளும் உயரடுக்கின் ஏனைய உறுப்பினர்கள் தங்கள் சொந்த நாடுகளில் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெடிக்கும் தவிர்க்க முடியாத போராட்டங்களை அடக்குவதற்காக, குடியேறியவர்கள் மீதான ட்ரம்பின் இனவெறி தாக்குதல்களைப் போன்று, சொந்த வடிவங்களிலான வகுப்புவாதத்தை தூண்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் ட்ரம்பைப் போலவே அவர்கள் பெருவணிகங்கள், வங்கிகள் மற்றும் பில்லியனர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்த உடனடியாக சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவார்கள்.

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகமும், இராஜபக்ஷ ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 2022 இல் தலைதூக்கிய, அதை பதவியில் இருந்து தூக்கி எறிந்த பல மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலமான இயக்கம் மீண்டும் வெடித்துவிடும் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். ட்ரம்பை ஆதரிப்பதில் அவர்களின் ஆர்வம், உலகின் முதன்மையான ஏகாதிபத்திய சக்தியுடன் தங்கள் உறவுகளை வலுப்படுத்தவும் அதன் மூலம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு எதிராக தமது கரத்தை வலுப்படுத்துவதற்குமான ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள் உலகெங்கிலும் ஏகாதிபத்தியப் போர் தீவிரமடைவதற்கும் சர்வாதிகார வடிவங்களைத் திணிப்பதற்கும் எதிராக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தில் இணைய வேண்டும். அத்தகைய இயக்கம் சோசலிச சர்வதேசவாதத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு முதலாளித்துவ இலாப நோக்கு முறைமையை தூக்கியெறிவதை அடிப்படை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

இவைதான் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) போராடும் வேலைத்திட்டத்தின் அடித்தளமாகும். சோசலிச சமத்துவக் கட்சி நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள நாட்டின் பொதுத் தேர்தலில் தலையிட்டு, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தலைநகர் கொழும்பு, வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading