இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சாம்சங் இந்தியாவின் தமிழ்நாடு வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி ஆலையில் சுமார் 500 நிரந்தரத் தொழிலாளர்கள், நிர்வாகம் எதேச்சதிகாரமாக வேலை இடைநீக்கம் செய்த மூன்று தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி, பெப்ரவரி 5 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இடைநீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்கள், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சி.பி.எம். தலைமையிலான தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பான, இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (CITU) இணைந்து, புதிதாக உருவாக்கப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (SIWU) அலுவலக உறுப்பினர்கள் ஆவர்.
ஜனவரி 27 அன்று, மாநில தொழிலாளர் துறை, தொழிற்சங்கத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த சில நாட்களுக்குப் பிறகே, இந்த இடைநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாம்சங் நிறுவனமானது, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசாங்கம் மற்றும் தீவிர வலதுசாரி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் உடந்தையுடன், அந்தச் சங்கம் உருவாவதையே மிகக்கடுமையாக எதிர்த்தது.
பெப்ரவரி 20 அன்று, சாம்சங் நிர்வாகம் மேலும் 14 தொழிலாளர்களை வேலை இடைநீக்கம் செய்தது. முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவே அவ்வாறு செய்ததாக, தொழிலாளர் துறையின் வழிகாட்டுதலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிறுவனம் ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தது.
இந்தப் புதிய இடைநீக்கங்களைத் தொடர்ந்து, தொழிற்சாலையில் பதற்றம் தீவிரமடைந்ததுடன் வேலைநிறுத்தத்தின் போது தொடர்ந்து பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலரை, வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற சம்மதிக்க வைப்பதில் வேலை நிறுத்த தொழிலாளர்கள் வெற்றி பெற்றனர்.
தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள சுமார் 1,800 தொழிலாளர்கள் உள்ளனர். SIWU நிரந்தரத் தொழிலாளர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், மூன்று வார கால வேலைநிறுத்தத்தின் மத்தியில் சில உற்பத்திகளைத் தொடர்வதற்கு சாம்சங் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளகிறது.
பெப்ரவரி 21 அன்று மாலை, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரகடம்-காஞ்சிபுரம் தொழிற்பேட்டையில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் செய்யும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் அழுத்தத்தின் கீழ், சி.ஐ.டி.யு.வின் தலைமையானது 2025 மார்ச் 8 அன்று காஞ்சிபுரத்தில் அனுதாப வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.
முன்னதாக, பெப்ரவரி 17 அன்று, சுமார் 200 தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சாம்சங் ஆலைக்கு அருகில் கூடினர்.
சாம்சங் நிர்வாகத்திற்கும், தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் எதிராக தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே, SIWUக்கு அதிகாரப்பூர்வ தொழிலாளர் துறை அங்கீகாரம் கிடைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் SIWUவைப் பதிவு செய்யக் கோரி தொழிலாளர்கள் 37 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தொழிலாளர் சட்டங்களின் கீழ் தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு சட்டப்பூர்வ உரிமையாக இருக்கின்ற போதிலும், SIWU பதிவு செய்யப்படுவதற்கு 200 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்கள் தேவைப்பட்டன.
சாம்சங்கின் இடைநீக்க பிரச்சாரம் தெளிவுபடுத்துவது போல், தென் கொரியாவை தளமாகக் கொண்ட அந்நிறுவனம், சிறந்த ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்காகவும் அழுத்தம் கொடுக்கும் தொழிலாளர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதில் உறுதியாக உள்ளது. இந்த பிரச்சனைகள் பற்றிய நேர்மையான பேச்சுவார்த்தைகளை நடத்த அது தொடர்ந்து மறுத்து வருவதோடு, நிறுவனத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போலியான 'தொழிலாளர் குழுவிற்கு' ஆதரவாக SIWUஐ புறக்கணிக்குமாறு தொழிலாளர்களை மிரட்ட முயற்சிக்கிறது.
நிறுவனம் இணங்கிவராத நிலையில், சி.பி.எம். தலைமையிலான சி.ஐ.டி.யு., வலதுசாரி தி.மு.க. அரசாங்கத்துடனான ஸ்ராலினிஸ்டுகளின் இணக்கமான உறவுகளை பாதிக்காத வகையில், தொழிலாளர்களை குறுகிய கூட்டு பேரம் பேசும் வரம்பிற்குள் கட்டுப்படுத்த ஒவ்வொரு கட்டத்திலும் முயன்று வருகிறது. சி.பி.எம். கட்சியானது மாநில மற்றும் தேசிய அளவில் தி.மு.க.வுடன் அரசியல் கூட்டணியில் இருக்கின்றது.
தி.மு.க. அரசின் அழுத்தத்தை எதிர்கொண்ட சி.ஐ.டி.யு. தலைவர்கள், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி, கடந்த அக்டோபர் 15 அன்று சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை திடீரென முடித்துக் கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தம் இருந்த விதத்தைப் பொறுத்து, விரைவில் அது ஒரு மோசடி என்று நிரூபிக்கப்பட்டது.
நிர்வாகம் தொடர்ந்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததுடன், போலியான 'தொழிலாளர் குழுவில்' சேருவதற்காக தொழிலாளர்களை தூண்டுவதற்கு 'பயிற்சி அமர்வுகளை' பயன்படுத்தியது. மிரட்டல் பிரச்சாரத்தின் மூலம் ஒரு சில தொழிலாளர்களை மட்டுமே பெற முடிந்ததால், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த நிர்வாகம், தொழிலாளர்கள் போலிக் குழுவில் சேர்ந்தால் 300,000 ரூபாய் ($US3,455) வட்டியில்லா கடன்களை வழங்குவதாக கூறியது.
கடந்த நவம்பரில், WSWS எழுதியதாவது:
சி.ஐ.டி.யு., சாம்சங் நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தி.மு.க. அரசாங்கத்திற்கும் செய்த அழுகிய துரோகத்தை வரலாற்று 'வெற்றியாக' கொண்டாடியுள்ளது. நீண்ட கால சி.ஐ.டி.யு. செயல்பாட்டாளரும் SIWU தலைவருமான முத்துக்குமாரின் கூற்றுப்படி, இந்த வெற்றியை, 'உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது' மற்றும் அது 'தொழிலாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது'.
முத்துக்குமார் வரைந்திருக்கும் இந்த வெற்றியின் முற்றிலும் போலியான சித்திரத்திற்கு மாறாக, சாம்சங் தொழிலாளர்கள் WSWS நிருபர்களுடனான கலந்துரையாடல்களில் சி.ஐ.டி.யு. முதுகில் குத்தியது குறித்து தங்கள் கோபத்தையும் கசப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனவரி 31 அன்று, மதிய உணவு இடைவேளையின் போது மோகன்ராஜ், குணசேகரன், தேவநேசன் ஆகிய மூன்று SIWU அதிகாரிகள், தொழிலாளர்கள் தவறாக நடத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாம்சங் நிர்வாக இயக்குனரை சந்திக்க வேண்டும் என, மனிதவள துறையிடம் (HR) அனுமதி கோரினர். எச்.ஆர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததினால், ஒரு மணிநேர வாக்குவாதம் நடந்தது. பின்னர், ஜனவரி 31 அன்று அவர்கள் நிர்வாக இயக்குனரை சந்திக்க முயன்றபோது அரை மணி நேரம் உற்பத்தியை நிறுத்தியதாக குற்றம் சாட்டி, பெப்ரவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், சாம்சங் நிறுவனம் மூன்று பேரையும் இடைநீக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தது, பதிலுக்கு, இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இது மற்ற நிரந்தர ஊழியர்களிடமிருந்து விரைவாக ஆதரவைப் பெற்றது.
இதற்கு பழிவாங்கும் விதமாக சாம்சங் நிர்வாகம் கழிவறைகளை மூடிவிட்டு மின்சாரத்தை துண்டித்தது. இருந்த போதிலும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைத் தொடர்ந்து கோரி வந்ததோடு, கழிவறைகளை திறக்க நிர்வாகத்தை கட்டாயப்படுத்தினர். அதன்பிறகு, தொழிற்சங்க ஆதரவாளர்கள் தங்கள் வழக்கமான தொழிலாளர் முறைமாற்றீடின் போது, உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை நடத்தி வருவதுடன் இந்த எதிர்ப்பு போராட்டம் தொடர்கின்ற போதிலும், நிரந்தரமற்ற தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தியைத் தொடரும் நிர்வாகத்தின் முயற்சிகளை அவர்கள் சீர்குலைக்கவில்லை.
இதே நேரம், சாம்சங் விநியோக நிறுவனமான எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட 93 நிரந்தர தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. சி.ஐ.டி.யு.வுடன் இணைந்த ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்காக பரிந்துரைத்ததால், சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெப்ரவரி 17 நடந்த சாம்சங் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.ஐ.டி.யு. தலைவர் முத்துக்குமார், சாம்சங் மற்றும் எஸ்.எச். எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள், இந்தியத் தொழிலாளர் சட்டங்களை அவமதிப்பதாக தேசியவாத வார்த்தைகளில் விமர்சித்து, இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை விட இலாபத்தை முதன்மைப்படுத்துகின்றன என்று கூறினார். முத்துக்குமார், இலாபக் கொள்ளையடிப்பில் தமிழ் முதலாளித்துவ உயரடுக்கு உட்பட இந்திய முதலாளித்துவத்தின் வகிபாகம் பற்றி எதுவும் கூறவில்லை. அனைத்துத் தொழில்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்த நிறுவனங்களை அனுமதிக்கின்ற, அரசாங்க அனுமதியின்றி முதலாளிகள் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய அனுமதிக்கின்ற புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க. அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுத்து வருவது பற்றியும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
பல தசாப்தங்களாக அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு, வர்க்கப் போராட்டத்தை நசுக்கி, தொழிலாளர்களை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி போன்ற வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுக்குப் பின்னால் கட்டிவைத்துவரும் சி.ஐ.டி.யு., ஸ்ராலினிச சி.பி.எம். ஆகியவற்றின் உண்மையான பாத்திரத்தைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநில-அரசாங்கங்களை சி.பி.எம். வழிநடத்திய போது, அம்மாநிலங்களில் 'முதலீட்டாளர் சார்பு' கொள்கைகளையே செயல்படுத்தியுள்ளது.
இலாப வெறி கொண்ட பல்தேசிய நிறுவனங்களின் 'பங்காளியாக' தொழிற்சங்கத்தால் இருக்க முடியும் என்பதையும், தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தொழிற்சங்கம் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்பதையும் புரிந்துகொள்ளுமாறு சாம்சங் நிர்வாகத்திடம் சி.ஐ.டி.யு. பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சி.ஐ.டி.யு., இரண்டு வாரங்கள் கடந்து காஞ்சிபுரத்தில் உள்ள தொழிற்துறை அலகுகள் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தேதியை நிர்ணயித்திருப்பதானது அது எவ்வாறு தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் சூட்சுமத்தைக் கையாண்டு, தொழிலாளர்களின் கோபம் கொதித்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
தி.மு.க. தலைமையிலான தொழிலாளர் அமைச்சகம் மற்றும் முதலாளித்துவ நீதிமன்றங்களையும் தங்கள் சார்பாக தலையிடுமாறு கோரி தொழிலாளர்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சி.ஐ.டி.யு. தொடர்ந்து அறிவுறுத்துகிறது. அதே நேரம், சி.ஐ.டி.யு. தலைவர்கள், WSWS நிருபர்கள் போன்ற 'வெளியாட்களிடம்' பேச வேண்டாமென தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், 'தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளையும் சி.ஐ.டி.யு. தலைமை தீர்க்கும்' என்றும் உறுதியளித்துள்ளனர்.
சி.ஐ.டி.யு.வின் செயலற்ற தன்மையால் தைரியம்கொண்ட சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களை இரட்டிப்பாக்குகிறது. இன்னும் 14 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்த அதே நாளில் ஒரு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்ட நிர்வாகம், 'தொழில்துறை ஸ்திரத்தன்மை மற்றும் வேலைத் தளத்தில் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர்களின் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் நாங்கள் கொஞ்சமும் சகித்துக்கொள்ள மாட்டோம்,' என அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதன் கொடூரமான வேலை விதிமுறை மற்றும் அற்ப ஊதிய நிலைமையை சவால் செய்யும் எந்தவொரு தொழிலாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்க முற்படும்.
சாம்சங் மற்றும் எஸ்.எச். எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள நடவடிக்கைகள், அனைவருக்கும் பாதுகாப்பான, நல்ல ஊதியத்துடன் கூடிய தொழில்களுக்கான பொதுவான போராட்டத்தில். நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான போராட்டத்தின் அவசரத்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்குச் சவால்விடும்போது, தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தடைகளை திட்டமிட்டு மீறுவதையும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் அவசியமாக்குவதன் காரணமாக, இந்திய தொழிற்சங்கங்கள், இப்போது தனியார் மற்றும் பொதுத் துறைகள் முழுவதும் வேரூன்றி உள்ள ஒப்பந்தத் தொழிலாளர் முறையின் பரவலுக்கு எந்தவொரு கறாரான சவாலையும் விடுக்கத் தவறிவிட்டன,
சாம்சங் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. எந்திரத்தில் இருந்து சுயாதீனமான ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதன் மூலம், போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குழுவானது நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றிணைக்க வேண்டும். வட இந்தியாவில் நொய்டா, தென் கொரியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள சாம்சங்கின் பிற ஆலைகளில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்தும் ஒருமைப்பாட்டைப் பெற அவர்கள் முயற்சிப்பதோடு, தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களின் உலகளாவிய வலையமைப்பை உருவாக்க வேண்டும்.
வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிச சர்வதேசவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய இயக்கத்தால், சாம்சங் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்கள் தொழிலாளர்கள் மீது சுமத்தும் கொடூரமான சுரண்டலை திறம்பட சவால் செய்ய முடியும். முதலாளித்துவ முறைமைக்கும் சமூகத் தேவைகளுக்கு மேலாக முதலீட்டாளர்களின் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் எதிராக, தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துகின்ற பரந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்த இயக்கம் இருக்கும்.
மேலும் படிக்க
- இந்திய சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பெருகிவரும் அரசு அடக்குமுறைக்கு மத்தியில் தொடர்கின்றது
- சாம்சங் தொழிலாளர்களுக்கான முன்னோக்கிய பாதை
- திமுக அரசின் உத்தரவின் பேரில் சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை ஸ்ராலினிச CITU நிறுத்தியது
- சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் ஒரு மாத வேலைநிறுத்தத்தை வன்முறையில் கலைக்க தமிழக அரசாங்கம் முயற்சிக்கிறது
- சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தமது 37 நாள் வேலைநிறுத்தத்தை CITU காட்டிக்கொடுத்தது பற்றி பேசுகின்றனர்
