இலங்கை அரசாங்கம் அடக்குமுறை பொலிஸ் இயந்திரத்தை விரிவுபடுத்தவுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், 45 வயதுக்குட்பட்ட, சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 10,000 இராணுவ வீரர்களை ஐந்து ஆண்டுகாலத்திற்கு துணைப் படையாக பொலிசில் பணியமர்த்தும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூட்டத்தில் உரையாற்றிய போது [Photo: Facebook/Sri Lanka Police]

பொலிசில் உள்ள 'பற்றாக்குறைகளை' நிவர்த்தி செய்தல் மற்றும் 'பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்' என்ற போர்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வட மத்திய மாகாணத்தின் தம்புள்ளையில் உள்ள பொலிசில் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் திறப்பு விழாவின் போது ஜூன் 9 அன்று இந்தத் திட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு அமைச்சரவைக் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

பொலிசின் கீழ்நிலை பதவிகளுக்கு 5,000 புதிய அதிகாரிகளை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்துவதற்கும், சேவையை வலுப்படுத்த பல்வேறு தரநிலைகளில் பதவி உயர்வுகளை வழங்குவதற்குமான திட்டங்களை அமைச்சர் மேலும் கோடிட்டுக் காட்டினார்.

பதில் பொலிஸ் மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய, 22,000 காலியிடங்கள் இருப்பதாகக் அறிவித்து, 'கடுமையான பற்றாக்குறை' நிலவுவதாக கூறுகிறார். பொலிஸ் இணையதளத்தின்படி, ஏற்கனவே 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட பொலிஸ் திணைக்களத்தில், துணைப் படையும் புதிய ஆட்சேர்ப்புகளும் சேர்க்கப்பட உள்ளன.

இது வெறும் எண்களின் விஷயம் மட்டுமல்ல —ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் ஒரு பெரிய அரச அடக்குமுறைக் கருவியை வலுப்படுத்தி வருகிறது.

1983 முதல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டு கால தமிழர் விரோத இனப்படுகொலைப் போரில் போரிட்ட அனுபவம் கொண்ட பல ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்கள் உள்ளனர். அவர்களை பொலிசில் இணைப்பது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் வன்முறையாக அடக்குவதை நோக்கமாகக் கொண்டு, அரச இயந்திரத்தை இராணுவமயமாக்குவதன் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதாகவும், அவை ஜூன் 20 ஆம் திகதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மே 24 அன்று வெளியான ஊடக செய்திகள், அமைச்சர் விஜேபாலவின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அந்தக் குழுக்கள் 'பொலிஸ்-சமூக உறவுகளை வலுப்படுத்துதல், அமைதி மற்றும் உள்ளூர் பாதுகாப்பை மேம்படுத்துதல், குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல், மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் ஊக்குவித்தல்' ஆகியவற்றிற்காகச் செயல்படும் என்று விளக்கின.

இந்தக் குழுக்களில் ஒரு நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியும் பொதுமக்களான உறுப்பினர்களும் இருப்பார்கள். பொதுமக்களான உறுப்பினர்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், முன்னாள் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் அடங்குவர். அவர்கள் மூன்று ஆண்டுகாலப் பதவிக்காலத்திற்கு நியமனக் கடிதங்களைப் பெறுவார்கள். அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

உள்ளூர் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகளுக்கு மாதாந்திர முன்னேற்ற மதிப்பாய்வுகள் செய்யும் பணி வழங்கப்படும். உயர் அதிகாரிகள்—அதாவது, பிரதேச பொலிஸ் பிரிவுகளை மேற்பார்வையிடும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்—இரு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வுகளை நடத்துவார்கள்.

இதன் பொருள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் எனப்படும் இவை, பொலிசின் கீழ் செயல்படும் ஒரு படையாக நிறுவனமயமாக்கப்பட உள்ளன என்பதாகும்.

போரின் போது, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இராஜபக்ஷ, 2008 இல் இதேபோன்ற குழுக்களை அமைத்தார். அவை பொலிசுக்கு உளவுத் தகவல்களை வழங்கின. 2009 மே மாதம் போர் முடிந்த பிறகு, இந்தக் குழுக்கள் கலைக்கப்பட்ட போதிலும், இராஜபக்ஷ 2011இல் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்ற போதிலும், அது பெரிதாக வெற்றி பெறவில்லை. அடுத்து வந்த அரசாங்கங்களும் இதேபோன்ற குறுகிய கால முயற்சிகளை மேற்கொண்டன.

இப்போது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பொதுப் பாதுகாப்புக் குழுக்களின் ஒரு வடிவத்தை மீண்டும் நிறுவி, அவற்றை ஒரு நிறுவனமாக்குவதன் மூலம் அவை முறையாகச் செயல்படுவதை உறுதிசெய்ய ஆர்வமாக உள்ளது.

ஜூன் 1 அன்று, 'த ஐலன்ட்' பத்திரிகையில் வெளியான முதன்மைக் கட்டுரை, இதுபோன்ற குழுக்களை நிறுவுவதற்கான வழக்கமான நடைமுறை கணிசமாக மாறியுள்ளதாக விளக்கியது. முன்னதாக நியமனங்கள் செய்யப்படுவதற்கு முன்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டன என்று ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.

'ஆனால் இப்போது, 'தூய்மையான இலங்கை' (கிளீன் ஸ்ரீலங்கா) திட்டத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஒவ்வொரு குழுவிலும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒரு புதிய வழிகாட்டுதல் கூறுகிறது. இந்த நியமனங்கள் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஜே.வி.பி. உறுப்பினர்களாகவே அமைந்துள்ளன,' என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். தூய்மை இலங்கை என்பது அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்றாகும்.

இருப்பினும், இந்த புதிய குழுக்கள், கண்காணிப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் அரசியல் எதிராளிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் எதிரான அடக்குமுறைக்கான கருவிகளாக மாறும்.

பாதுகாப்புப் படையினரைக் கொண்டும் பிற நடவடிக்கைகள் மூலமும் அரசாங்கம் பொலிசை பலப்படுத்துவதை, உழைக்கும் வர்க்கமும் இளைஞர்களும் ஒரு தீவிரமான எச்சரிக்கையாகக் கருத வேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக மற்றும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது. இவற்றில் அரச நிறுவனங்கள் மற்றும் பொதுச் சேவையை மறுசீரமைப்பதும் அடங்கும். அத்தகைய நடவடிக்கை இலட்சக்கணக்கான தொழில்களை அழித்து, வேலை நிலைமைகளை வெட்டிச் சரிக்கும். ஏனைய சிக்கன நடவடிக்கைகளுடன், இலவச சுகாதாரம் மற்றும் கல்வியில் ஆழமான வெட்டுக்கள் தினிக்கப்படுவதோடு அவை தனியார் துறைக்குத் திறந்துவிடப்படும்.

மாணவர்கள் உட்பட இளைஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. கடந்த ஆறு மாதங்களில், ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச., ஆசிரியர்களின் போராட்டங்களையும் மாணவர் பேரணிகளையும் வன்முறையாக அடக்க பொலிசைப் பயன்படுத்தியுள்ளது.

டிசம்பர் 2 அன்று, ஆசிரியர் சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளக் கோரிப் போராடிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களைக் கலைப்பதற்காக, கலவரத் தடுப்புப் படை உட்பட பொலிசார் நிறுத்தப்பட்டனர். ஒரு பொலிஸ் அதிகாரியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நான்கு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்—இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டது.

மார்ச் 28 அன்று, கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் முன் துணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். இந்த நடவடிக்கை பொலிசால் வன்முறையாக அடக்கப்பட்டதுடன் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 6 அன்று, அதே இடத்தில் துணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளின் மற்றொரு போராட்டத்தின் மீதான கடுமையான நடவடிக்கையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, ஜே.வி.பி./தே.ம.ச., வெறுக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்தச் சட்டம், மக்களை எதேச்சதிகாரமாக கைது செய்யவும், அவர்களை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்கவும், மற்றும் சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சான்றாகப் பயன்படுத்தவும் பொலிசுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது.

அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்த வாக்குறுதியைக் கைவிட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை எவ்வாறு வரைவு செய்வது என்பது குறித்த கருத்துக்களைச் சேகரிக்க அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியதோடு அவை அவசியமானவை என்றும் தெரிவித்தார். இந்தக் குழு மக்களை ஏமாற்றுவதற்கான மற்றொரு தந்திரம் மட்டுமே.

ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியாக செயல்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்திருக்கிறது. 2022 இல் இலங்கையில் நடந்த ஏப்ரல்-ஜூலை மக்கள் இயக்கத்தால் ஆளும் வர்க்கம் பீதியில் பீடிக்கப்பட்டுள்ளது. அப்போது இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் முந்தைய அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாங்க முடியாத சுமைக்கு எதிராக எழுச்சி பெற்று, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லவும் பதவி விலகவும் நிர்ப்பந்தித்தனர்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் ஆதரிக்கின்றன. அரசாங்கம் விரைவாகக் பொலிஸ் ஆட்சி வழிமுறைகளை நோக்கி நகரும்போது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மௌனம் அதன் உடந்தையைக் காட்டுகிறது.

தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அதேபோல், கிராமப்புற மக்கள் தங்கள் பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது அவசர அவசியமாகும்.

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கவும், சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்த ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கவும், நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர் மற்றும் கிராமப்புற மக்களின் மாநாட்டை கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

Loading