இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
காசா மற்றும் ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிராக நடத்தப்படவுள்ள கூட்டங்களுக்கு ஆதரவை பெறுவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் முன்னெடுத்துள்ள பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கிடைக்கும் உற்சாகமான வரவேற்பு, சர்வதேச அளவில் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை பிரதிபலிக்கின்றது.
சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. முன்னெடுக்கும் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 'ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!' என்ற தலைப்பில் ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஒரு நிகழ்நிலை கூட்டமும், ஜூலை 8 அன்று மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டமும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் பல்கலைக்கழகங்கள், வேலைத் தளங்கள், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தி வரும் அதேநேரம், கூட்டம் பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான செய்தி அறிக்கை மற்றும் கட்டுரைகளின் ஆயிரக்கணக்கான பிரதிகளை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிட்டு, விநியோகித்து வருகின்றனர்.
ஜூன் 23 அன்று ஈரானில் உள்ள மூன்று சிவிலியன் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொலைக்காட்சியிலும் யூடியூப் உட்பட சமூக ஊடகங்களிலும் பார்த்த உலகெங்கிலும் உள்ள மக்களைப் போலவே, இலங்கையர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரானிய இறையாண்மையை அப்பட்டமாக மீறும் இந்த சட்டவிரோத தாக்குதல், மத்திய கிழக்கை முழு அளவிலான போரின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. மேலும் மேலும் பாசிச நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதற்காக தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் இலக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க காசா மீதான இஸ்ரேலின் கொடூரமான போருக்கு ஆயுதம் வழங்கி அதற்கு ஒத்துழைத்து பிராந்தியம் முழுவதும் அதன் மேலாதிக்கத்தை பலப்படுத்தி வரும் நிலையில், பேரழிவு தரும் பூகோள மோதலின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது.
அதிகரித்து வரும் பூகோள பதட்டங்களுக்கு மத்தியில், ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவை தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளது. அத்தகைய இயக்கத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தலைமைத்துவத்தை வழங்க முடியும். அனைத்து முதலாளித்துவ, 'தாராளவாத' மற்றும் போலி இடது சக்திகளும், ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்ந்துள்ள அதேநேரம், அவை தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்க நனவுடன் செயல்படுகின்றன. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், மத்திய கிழக்கில் நிலைமையை 'தணிப்பதற்கு' அழைப்பு விடுக்கும் ஒரு வஞ்சத்தனமான மற்றும் மலட்டுத்தனமான அறிக்கையை வெளியிட்டு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்காவின் நேரடிப் பங்கைப் பற்றி ஒரு வார்த்தையும் கூற திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
எதிர்வரும் கூட்டங்களை கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தின் போது, அதிகரித்து வரும் போர் ஆபத்து குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான விழிப்புணர்வு இருப்பதை சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் கண்டனர். கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அனைவரும் மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும், அதே நேரம், அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க குழப்பங்களும் மாயைகளும் இருப்பதையும் காண முடிந்தது. அதற்கு இத்தகையை குழப்பங்களை வேண்டுமென்றே விதைக்கும் முதலாளித்துவ ஊடகங்களும் போலி இடது கட்சிகளுமே பிராதன பொறுப்பாளிகளாகும். சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தெளிவான மற்றும் சுயாதீனமான சோசலிச முன்னோக்கின் அவசரத் தேவையை எடுத்துக் காட்டி, பரந்த மற்றும் பயனுள்ள அரசியல் கருத்துக்களின் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தன.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடந்த ஒரு பிரச்சாரத்தின் போது, ஏற்றுமதி சந்தைக்கான டொராய்டல் மின்மாற்றிகள், மின் விநியோக பாகங்கள் மற்றும் உருகிகளை உற்பத்தி செய்யும் நோர்டெல் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு பெண் தொழிலாளி, உலகளாவிய போர் நெருக்கடி பற்றிப் பேசினார். வலைத் தளங்கள் மூலம் மத்திய கிழக்கில் பேரழிவு தரும் போர் குறித்து ஓரளவு விழிப்புணர்வைக் கொண்டிருந்த அவர், அமெரிக்காவின் முழு ஆதரவுடன் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கடுமையாகக் கண்டித்தார். 'இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக ஒழித்து, அதை கையகப்படுத்த முயற்சிக்கிறது. இஸ்ரேல் அரசாங்கத்திற்கு உதவுவது அமெரிக்காதான்,' என்று அவர் கூறினார். வாஷிங்டனின் மூலோபாய நலன்களைப் பற்றிப் பேசுகையில், 'அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த நாடு. இஸ்ரேல் மூலம் பாலஸ்தீன பிரதேசத்தில் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது' என்று அவர் மேலும் கூறினார்.
போரின் உண்மைகளை மறைப்பதில் ஊடகங்களின் இழிவான பங்கையும் அவர் விமர்சித்தார். ஊடகங்கள் எப்போதாவது பரபரப்பான அறிக்கைகளைக் கொண்டு வருகின்ற போதிலும், அர்த்தமுள்ள தகவல்களை வழங்கத் தவறிவிடுகின்றன என்று அவர் கூறினார். 'இது ஒருவருக்கு விளக்க போதுமான அறிவை வழங்குவதில்லை. இதைப் பற்றி நாமே கண்டுபிடிக்க வேண்டும். எனினும் ஊடகங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாது,' என்று அவர் கூறினார்.
'அமெரிக்காதான் நிறைய இராணுவ உபகரணங்களை உருவாக்குகிறது. அவர்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கவே இதுபோன்ற நாடுகளை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,' என்று நோர்டெல் ஊழியர் கூறிய போது, சக்திவாய்ந்த நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போரை ஊக்குவிக்கின்றன என்று போலி இடதுகள் பரப்பும் போலிக் கருத்துக்களின் தாக்கத்தை அது வெளிப்படுத்தியது. இந்தக் கருத்தை விளக்கிய ஒரு சோ.ச.க. உறுப்பினர், போர்களுக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டாலும், ஆயுதங்களை உற்பத்தி செய்வதால் மட்டும் போர் வெடிப்பதில்லை, என்று அவருக்கு விளக்கினார். பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி அதன் எண்ணெய் மற்றும் பிற கனிம வளங்களை கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்களின் குறிக்கோளே ஈரான் போருக்கான மூல காரணம், என்பதை விளக்கியபோது அவர் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா என்பது முதலாளித்துவவாதிகளின் அமெரிக்கா மட்டுமல்ல, அங்கு ஒரு சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கம் இருப்பதாகவும், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை தீவிரமாக எதிர்க்கின்றனர் என்றும் பிரச்சாரகர்கள் விளக்கினர். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆற்றும் வகிபாகத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ட்ரம்பின் உத்தரவுகளுக்கு எதிராக ஜூன் 14 அன்று நடந்த மிகப்பெரிய போராட்டங்கள் உட்பட, கடந்த பல மாதங்களாக அமெரிக்க தொழிலாள வர்க்கம் பாரிய போராட்டங்களை நடத்தி வருவதாக பிரச்சாரகர்கள் உலக சோசலிச வலைத் தள கட்டுரைகளை மேற்கோள் காட்டி அவரிடம் சுட்டிக்காட்டினர். பின்னர் அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள் குறித்து அவர் உற்சாகமாக கருத்து தெரிவிக்கையில், 'மற்றவர்கள் (அமெரிக்க மக்கள்) எழுந்து நின்றிருந்தால், (2022 இல் இலங்கையில் நடந்த மக்கள் எழுச்சியில்) கோட்டாபய (இராஜபக்ச) வெளியேற்றப்பட்டதைப் போல், ட்ரம்பை வெளியேற்றியிருக்க முடியும்' என்றும் கூறினார்.
இந்த விளக்கங்களுக்காக அவர் சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்களைப் பாராட்டியதுடன், அவற்றை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் கட்சிக்கு நிதி உதவியையும் வழங்கினார்.
***
சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட மிச்செலின் ஊழியரான செனவிரத்ன, காசா மற்றும் ஈரானை இலக்காகக் கொண்ட அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பேசினார். தெற்கு மாகாணத்தில் உள்ள மிதிகமவில் உள்ள மிச்செலின் டயர் தொழிற்சாலையை இந்தியாவின் CEAT நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களில் பங்கேற்ற பின்னர் அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார். ஆளும் கட்சியுடன் இணைந்த அனைத்து நிறுவன ஊழியர் சங்கம், தொழிலாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் அல்லது அவர்களின் வேலைகள், ஊதியங்கள் அல்லது தொழில் நிலைமைகள் குறித்து எந்த உத்தரவாதமும் பெறாமல் இரு நிறுவனங்களுடனும் ஒரு இரகசிய 'புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டதால் தொழிலாளர்கள் கோபமடைந்துள்ளனர்.
நான்கு குழந்தைகளின் தந்தையான செனவிரத்ன, பகுதி நேரமாக சுற்றுலாத் துறையில் வேலை செய்யும்போது, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். 'இந்தப் போர் தீவிரமடைந்து பரவினால், அது நம்மை மோசமாகப் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் ஒருபுறம் போரை நிறுத்துவது முக்கியம்,' என்று செனவிரத்ன கூறினார். போரின் பாரதூரமான தாக்கத்தை ஒப்புக்கொண்ட அவர், சோ.ச.க.யின் பகுப்பாய்வோடு உடன்பட்டதோடு, மிச்செலின் தொழிலாளர் போராட்டத்தில் சோ.ச.க.யின் வகிபாகத்தைப் பாராட்டியதுடன் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்.
***
ரத்மலானா தொழிற்சாலையில் பணியாற்றும் ரயில் தொழிலாளியான ஜானகா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகத்தால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து கூறியதாவது: 'உலக வல்லரசாக அமெரிக்கா இந்தத் தாக்குதல்களைத் தூண்டிவிடுகிறது. அதேபோல், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, தங்கள் பிரதான போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யாவை மிரட்டுகின்றது. இந்த சக்திகள், தங்கள் பொருளாதார மற்றும் பிற நோக்கங்களுக்காக, மனித உயிர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.'
தற்போதைய சூழ்நிலையில் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படும் ஆபத்தை அவர் எவ்வாறு மதிப்பிடுகிறார் என்று கேட்டபோது, 'இது உண்மையில் ஆபத்தானது. தங்கள் நாட்டிற்கு செய்யப்பட்ட அநீதிக்கு பழிவாங்கும் விதமாக ஈரான் இஸ்ரேலையும் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தையும் தாக்கினால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று நான் பீதியடைந்துள்ளேன்' என்று ஜானக தெரிவித்தார்.
இந்த போர் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அமெரிக்காவிடம் அது சரணடைந்திருப்பது குறித்து அவரது கருத்தை வினவியபோது, போருக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் எந்த தலையீட்டையும் தான் காணவில்லை என்றாலும், இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வெட்டுக்களை திணிப்பதன் மூலம் இந்த நாட்டு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்து வருவதைக் காண்பதாக அவர் கூறினார். 'அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடுவதுடன் தேர்தல்களின் போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறுகிறார்கள்.'
போரை எவ்வாறு நிறுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் பொது மக்களுக்கும் உள்ள தீர்வுகள் என்ன என்பது பற்றிய பிரச்சினையை கலந்துரையாடும் போது, ஜானக இந்த கேள்வியில் தனக்குள்ள குழப்பத்தை சோ.ச.க. பிரச்சாரகர்களிடம் வெளிப்படுத்தினார்: 'இந்த அரசாங்கம் மக்கள் சார்பு அரசாங்கம் என்று கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், இப்போது அது முந்தைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டது அல்ல. எனவே, நாம் என்ன செய்ய வேண்டும், வேறு முகம் கொண்ட மற்றொரு அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா?' 'சர்வதேச நாணய நிதியம் இல்லாமல் அரசாங்கத்தால் முன்னேற முடியுமா?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முழு முதலாளித்துவ ஆட்சியையும் தூக்கியெறிவதற்கு மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏகாதிபத்தியப் போரையும் இனப்படுகொலையையும் நிறுத்த, புரட்சிகர வலிமையின் அடிப்படையில் வர்க்க சக்தியை அணிதிரட்டும் தொழிலாள வர்க்க மூலோபாயத்தைப் பற்றி விளக்கிய பின்னர், இது ஒரு தெளிவான வேலைத் திட்டம் என்று அவர் கூறினார். போர் நெருக்கடி பற்றி நடக்கவுள்ள சூம் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
கலந்துரையாடலில் பங்குபற்றிய ரயில் தொழிலாளி கபில குமார கூறுகையில், “போர் நம்மைப் போன்ற வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் முழு உலகிற்கும் ஒரு பெரிய தொந்தரவாக இருக்கிறது. இந்த உலக சக்திகள் மத்திய கிழக்கில் மக்களை எந்த இரக்கமும் இல்லாமல் கொல்கின்றன. எண்ணெய் வளங்களை வெறித்தனமாக கட்டுப்படுத்த அமெரிக்கா இந்த வழியில் தாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். இந்த சக்திகள் மற்ற நாடுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பொருளாதாரங்களை கவிழ்ப்பதன் மூலம் அவர்கள் நம்மை பலிகடாக்களாக மாற்றுகிறார்கள்,” என்றார்.
தான் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளை விவரித்த அவர், உலகளவில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த நேரமில்லாத அளவுக்கு தான் நெருக்கடியில் மிகவும் மூழ்கி இருப்பதாக கவலை தெரிவித்தார். 'எனது பிரச்சினைகள் என்னவென்றால், என் குழந்தைகளுக்கு முறையான கல்வியை எவ்வாறு வழங்குவது, தொலைதூரத்தில் வசிக்கும் என் அம்மாவுக்கு மருத்துவத்திற்காக எவ்வாறு பணம் அனுப்புவது என்பதுதான். இந்த சொற்ப சம்பளத்தில் இதையெல்லாம் எப்படிச் செய்வது? நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றால், தற்போதைய வாழ்க்கைச் செலவு காரணமாக எனக்கு நிறைய பணம் செலவாகும். அதற்கு மேல், அரசாங்கம் இப்போது மேலதிக நேர ஊதியத்தைக் குறைக்க முயற்சிக்கிறது. இதை எதிர்த்து நாம் போராட வேண்டும்,' என்று அந்த ரயில் தொழிலாளி கூறினார்.
இந்தப் பிரச்சினைகள், பரந்த அரசியல் சவால்கள் மற்றும் ஏகாதிபத்தியப் போருடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் அவருக்கு விளக்கியபோது, நமது அனைத்து நாடுகளும் இந்த உலக சக்திகளால் சுரண்டப்படுகின்றன என்றும், எந்த நாடும் அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் பதிலளித்தார். சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தைப் பற்றி அவர் அவதானம் செலுத்தினார்.
ரத்மலானா ரயில் தொழிற்சாலையில் மின்சார வல்லுநரான சுரங்க, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான சோ.ச.க.யின் அழைப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை 'அபத்தமானது' என்று அவர் விமர்சித்தார். 'எனது வாசிப்பின்படி, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால் உலக வல்லரசுகள் தங்கள் உண்மையான போர் நோக்கங்களை மூடி மறைக்க ஈரானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக தூக்கிப் பிடிக்கின்றன. உண்மையான குற்றவாளிகள் வேறு யாருமல்ல, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்த சக்திகள்தான். ஜப்பானின் நகரங்களில் அவற்றை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும்,' என்று சுரங்க கூறினார்.
சீனாவும் ரஷ்யாவும் போரில் தலையிட்டால், இப்போது தொடங்கியுள்ள போர் அணு ஆயுதங்களுடன் கூடிய உலகப் போராக விரிவடையக்கூடும் என்றும், ஈரான் ஒரு பிற்போக்கு மத ஆட்சியின் கீழ் இருந்தாலும், அந்த நாட்டையும் அதன் மக்களையும் ஏகாதிபத்திய சக்திகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிய அவர், சோ.ச.க.யின் நிலைப்பாட்டுடன் உடன்பட்டார்.
மேலும் படிக்க
- இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி/IYSSE பகிரங்கக் கூட்டங்கள்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!
- ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போரை நிறுத்து!
- இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை கண்டிக்க மறுத்துவிட்டது
- இந்தியாவின் மோடி அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை மறைமுகமாக ஆதரிக்கிறது
- இலங்கையின் தமிழ் கட்சிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை ஆதரிக்கின்றன
- இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டிக்கின்றனர்
