மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
தென்கிழக்கு ஆசியப் பகுதி முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சமீபத்திய நாட்களில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயும் உள்ளனர். வானிலையைக் கட்டுப்படுத்த முடியாத போதிலும், இந்த சமீபத்திய பயங்கரமான பேரழிவின் பாதிப்புகளில் பெரும்பாலானவை சுற்றுச்சூழலை சீரழிப்பதன் மூலமும், பேரழிவு திட்டமிடலை சீர்குலைப்பதன் மூலமும் மனிதனால் உருவாக்கப்பட்டவையாகும்.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, இந்தோனேசியாவின் சுமத்ராவில் 836 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் நிச்சயமாக மாறும். ஆச்சே, வடக்கு சுமத்ரா மற்றும் மேற்கு சுமத்ரா ஆகிய மூன்று மாகாணங்கள் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 2,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், 3.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் மோசமாக சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான பிற கட்டிடங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் பாலங்கள் உட்பட உள்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
2004 சுனாமிக்குப் பின்னர் சுமத்ராவில் ஏற்பட்ட அழிவு மிகவும் மோசமானது. நாட்டின் பருவமழை காலத்தின் தொடக்கத்தில் தாக்கிய சென்யார் சூறாவளி மற்றும் கோட்டோ சூறாவளியின் விளைவாக நவம்பர் 25 ஆம் தேதி பலத்த மழை தொடங்கியது. வெள்ளம் தொடர்ந்து பல பகுதிகளை நீரில் மூழ்கடித்துள்ளது. உயிர் பிழைத்தவர்கள் உதவிகளைப் பெறுவதுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். மொத்த அழிவு, 68.67 டிரில்லியன் ரூபாய் (US$4.14 பில்லியன்) மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பேரழிவு, வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்திற்குப் பிறகு ஏற்பட்டது. தாய்லாந்தில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், டிசம்பர் 1 ஆம் தேதி பாங்காக் போஸ்ட் பத்திரிகை, உண்மையான இறந்தவர்களின் எண்ணிக்கை 500 அல்லது 1,000 க்கு அருகில் இருக்கலாம் என்று நம்புவதாக மீட்பு தொண்டர்களின் அறிக்கையை வெளியிட்டது. தெற்கில் உள்ள சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஹட் யே நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில், மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒன்பது மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இடம்தங்கல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள், பண்ணைகள் மற்றும் சிறு வணிகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு மூன்று பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கை பயங்கரமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இதுவரை 479 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளால் 25 மாவட்டங்களில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர் மற்றும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிர் தப்பிப்பிழைத்தவர்களில் பலர் இதேபோன்ற அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கடுமையான வானிலை முறைகள் பொதுவாகக் காணப்படும் ஒரு பகுதியில் மழை மற்றும் வெள்ளம், தாங்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு மோசமாக இருந்துள்ளது என்று விவரிக்கின்றனர்.
சுமத்ராவில் இடம்பெயர்ந்த 56 வயதான ஒருவர் ஊடகங்களுக்கு, “இது நான் அனுபவித்த மிக மோசமான சேதம். ஒரு அணை இடிந்து விழுந்ததால் எனது வீடு வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் எனது வீட்டைக் கட்டுவதற்கு எனக்கு பொருட்கள் மற்றும் அடிப்படை அன்றாடத் தேவைகள், தேவையாக உள்ளன” என்று தெரிவித்தார்.
இந்தோனேசிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது அதன் விளைவுகளைச் சமாளிக்க போராடி வருகின்றனர். கையிருப்புக்கள் விரைவாகக் குறைந்து வருவதால், அவர்கள் பஞ்சத்தையும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர். மக்கள் வெள்ள நீரைக் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சுகாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஆச்சே பகுதியிலுள்ள உள்ளூர் அதிகாரியான டெயுகு ராஜா கியூமங்கன், “மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்” என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த உள்ளூர் அதிகாரிகளில் பலர், ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவை தேசிய அவசரநிலையை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது சட்டப்படி பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் வளங்களை வாங்குவதுக்கு உதவும்.
உள்ளூர் அரசாங்கங்களும் மக்களுக்கு உதவிகளை விநியோகிக்க போராடி வருகின்றன. மேலும் பல சந்தர்ப்பங்களில், அவர்களின் பேரிடர் மேலாண்மை தீர்ந்து போயுள்ளன. இது ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் பிரசெட்யோ ஹாடி டிசம்பர் 3 அன்று தற்போதைய அவசர உதவி போதுமானது என்று கூறுவதைத் தடுக்கவில்லை. மத்திய அரசு மேலதிக நிதி உதவிக்கு விடுத்த அழைப்புகளை நிராகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் பலர் அரசாங்கத்தின் மெத்தனமான பதிலை கடுமையாக விமர்சித்துள்ளனர். 52 வயதான ரெய்னாரோ வாருவு, “சிலர் உதவி பெறுவதற்கு முன்பு இரவும் பகலும் காத்திருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை, நான் விரக்தியில் உள்ளேன், அவர்களுக்கு இரண்டு முறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை” என்று கூறினார்.
பிரபோவோ நிர்வாகம் பேரிடர் திட்டமிடலை வெறுமனே புறக்கணித்தது என்று கூறுவது என்பது ஒரு குறைத்து மதிப்பிடலாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபோவோ, அரசாங்கச் செலவினங்களை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குக் கடுமையாகக் குறைத்தார். இதில் பெரும்பகுதி, பிரபோவோவால் கட்டுப்படுத்தப்படும் புதிதாக தொடங்கப்பட்ட டனந்தாரா இறையாண்மை செல்வ நிதியத்துக்கு திருப்பி விடப்பட்டது. இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஆண்டை விட 50 சதவீதம் பாதியாக குறைக்கப்பட்டது. இந்த வெட்டுக்கள், பிப்ரவரியில் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்ததோடு, ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் நடந்த சமூக கோபத்தின் வெடிப்புக்கும் பங்களிப்பு செய்தன.
இது பிரபோவோ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். இதில் சிக்கன நடவடிக்கைகளை விதிப்பது மட்டுமல்லாமல், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இராணுவ விரிவாக்கமும் அடங்கும். இந்த ஆண்டு, 150 “பிராந்திய அபிவிருத்தி பட்டாலியன் படைப்பிரிவுகள்” உருவாக்கப்பட்டன, இந்தோனேசியாவின் 514 பிரதேசங்கள் மற்றும் நகரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு பட்டாலியன் படைப்பிரிவு இருக்கும் வரை, ஆண்டுதோறும் ஒரே எண்ணிக்கையில் இதை விரிவுபடுத்தும் திட்டங்களுடன் 150 “பிராந்திய மேம்பாட்டு பட்டாலியன்கள்” உருவாக்கப்பட்டுள்ளன.
பிரபோவோ அரசாங்கம் இயற்கைப் பேரழிவுகளின் கொடூரமான விளைவுகளைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஏற்படும் எதிர்ப்பைப் பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளது. வெள்ள மேலாண்மை மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்காணிக்கவும் அடக்கவும் இந்தப் பட்டாலியன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுப்புறச் சீரழிவு அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கிற்கு பங்களிப்பு செய்துள்ளது. நீர்வழிகளை ஒழுங்குபடுத்துவதில் காடுகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. மண் அரிப்பைத் தடுக்கவும், தண்ணீரை நிலத்தடிக்குள் செலுத்தவும் இவை உதவுகின்றன. மரங்களை அழிப்பது வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கிறது. வடக்கு சுமத்ராவின் தபனுலியில் உள்ள உள்ளூர் அதிகாரி கஸ் இரவன் பசரிபு ராய்ட்டர்ஸிடம், “நிச்சயமாக, சூறாவளிகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன, ஆனால் நமது காடுகள் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தால்... நிலைமை இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தியிருக்காது” என்று கூறினார்.
இந்தோனேசியாவில் நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான பாமாயிலை உற்பத்தி செய்வதற்காக, பனை தோட்டங்களுக்கு வழி வகுக்க, பல காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. குளோபல் ஃபாரஸ்ட் வாட்சின் கூற்றுப்படி, வடக்கு சுமத்ரா மட்டும் 2001 மற்றும் 2024 க்கு இடையில், அதன் மரங்கள் அடர்ந்து நிறைந்த பகுதியில் 28 சதவீதத்தை அல்லது 1.6 மில்லியன் ஹெக்டேர்களை இழந்துள்ளது.
இருப்பினும், இந்த தீவிர வானிலை நிகழ்வுகளை இயக்கும் மிக முக்கியமான காரணி காலநிலை மாற்றம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு, கடந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளது. தொழில்துறைக்கு முற்பட்ட காலங்களை விட, சராசரியாக உலகளாவிய மேற்பரப்பின் வெப்பநிலை 1.55 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், இப்பகுதியில் கடல்களின் வெப்பநிலையும் கிட்டத்தட்ட ஒரு டிகிரி செல்சியசால் உயர்ந்துள்ளது.
வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் ஒவ்வொரு டிகிரி செல்சியஸுக்கும், இந்தப் பகுதியில் உள்ள நீராவியின் அளவு ஏழு சதவீதம் அதிகரிக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இது மிகவும் கடுமையான புயல்கள் மற்றும் பலத்த கன மழைக்கு வழிவகுக்கிறது. ஆயினும்கூட, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தையோ அல்லது தற்போது தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் பேரழிவுகளுக்கு பங்களிக்கும் பிற வகையான சுற்றுச்சூழல் சீரழிவையோ நிவர்த்தி செய்வதுக்கு எந்த தீவிரமான நடவடிக்கைகளையும் எடுக்க இலாயக்கற்று உள்ளது.
