மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜேம்ஸ் வோன்டர்பில்ட்டின் புதிய திரைப்படமான நூரெம்பேர்க், 22 நாஜித் தலைவர்களை விசாரித்த சர்வதேச இராணுவ நீதிமன்றத்தை மையமாகக் கொண்டுள்ளது. இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உயர் பதவியில் இருந்த நாஜி அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளில் மிகவும் பிரபலமானது.
ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும், குறிப்பாக ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களை இனப்படுகொலை செய்ததற்கும், நாஜி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. சரியாக 80 ஆண்டுகளுக்கு முன்னர், நவம்பர் 20, 1945 அன்று தொடங்கிய நூரெம்பேர்க் நீதமன்ற விசாரணைகள், அக்டோபர் 1, 1946 வரை நீடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், நான்கு பேருக்கு குறைந்த தண்டனைகளும் வழங்கப்பட்டன.
இந்தப் புதிய திரைப்படம், பெரும்பாலும் ஜாக் எல்-ஹேயினால், 2013 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகமான “நாஜியும் மனநல மருத்துவரும்” என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்க இராணுவ மருத்துவர் டக்ளஸ் கெல்லி, அடால்ஃப் ஹிட்லருக்குப் பிறகு நாஜி ஆட்சியின் இரண்டாவது தலைவராக இருந்த ஹெர்மன் கோரிங் உட்பட, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உளவியல் நிலை மற்றும் விசாரணையை எதிர்கொள்ளும் தகுதி குறித்து நடத்திய விசாரணையை விவரிக்கும் புனைகதை அல்லாத படைப்பாகும்.
இனப்படுகொலை மற்றும் பாசிச சர்வாதிகாரம் மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்திவரும் ஒரு நேரத்தில், நூரெம்பேர்க், விசாரணைகளை சித்தரிக்க முயற்சிக்கும் ஒரு திரைப்படம் நிச்சயமாக வரவேற்கத்தக்கது. 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை சித்தரிப்பதில் நூரெம்பேர்க் திரைப்படம் மிகவும் சீரற்றதாக உள்ளது. அதன் கடுமையான பலவீனங்கள் இருந்தபோதிலும், பல முக்கியமான பலங்களை அங்கீகரிப்பது அவசியமாகும்.
இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளில், மிகவும் குறிப்பிடத்தக்கதாக, அதன் இறுதி நாட்கள் உட்பட விசாரணை தொடர்பான காட்சிகள் ஆகும். அரங்கேற்றப்பட்ட நீதிமன்றக் காட்சிகள் 80 ஆண்டு பழமையான கருப்பு-வெள்ளை திரைப்படக் காட்சிகளுடன் திறம்படவும், விரைவாகவும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட வதை முகாம்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் அடங்கும். பெர்கன்-பெல்சென், புச்சென்வால்ட் மற்றும் பிற பெயர்கள் திரையில் ஒளிரும் போது, நாம் பெரும் சடலங்களின் குவியல்களையும், மரணத்தை நெருங்கிய சில உயிர் பிழைத்தவர்களையும் காண்கிறோம். அசல் விசாரணையின் போது பார்வையாளர்கள் இருந்ததைப் போலவே, திரைப்பட பார்வையாளர்களும் திகைத்து நிற்கிறார்கள். மனிதகுலம் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை. நாஜி காட்டுமிராண்டித்தனத்தின் ஆழம், 1946 இல், பாரியளவில் வெகுஜன நனவில் ஊடுருவத் தொடங்கியது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் பற்றி உலகுக்குச் சொல்லும் கருவியாக நூரம்ப்பேர்க் விசாரணைகள் இருந்தன.
இந்த வரலாற்றை விளக்கமாக வெளிப்படுத்துவது ஒரு விஷயம். ஆனால், அதைப் புரிந்துகொள்வது என்பது வேறு விஷயம். நூரெம்பேர்க் திரைப்படத்திலுள்ள பிரதான பிரச்சனை என்னவென்றால், அது நாஜிக்கள் மேற்கொண்ட யூத இனப்படுகொலைக்கான உந்து சக்தியை பெரும்பாலும் தனிப்பட்ட தலைவர்களின் உளவியலில் தேடுகிறதே ஒழிய, முதலாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவை, குறிப்பாக ஜேர்மனியை உலுக்கிய கடுமையான சமூக முரண்பாடுகளில் அல்ல.
இதன் விளைவாக, நாஜித் தலைவர்களால் ஏன் இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்ய முடிந்தது என்பதை நூரெம்பேர்க் திரைப்படத்தால் விளக்க முடியவில்லை. இயக்குனர் வோண்டர்பில்ட் (பிரபல வோண்டர்பில்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர்) ஒரு நேர்காணலில், திரைப்படத்தின் முக்கிய கதைக்களம் குறித்து, டக்ளஸ் “கெல்லிக்கு உயிருடன் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் இருந்த நாஜி அதிகாரிகளை கண்கானிக்கும் பணி வழங்கப்பட்டது. இது அவருக்கு தீமையின் தன்மையை ஆராய இது ஒரு வாய்ப்பாக இருந்தது” என்று எளிமையாகக் கூறினார்.
நூரெம்பேர்க் சர்வதேச இராணுவ நீதிமன்றம் ஒரே நேரத்தில் ஒரு முக்கியமான நீதித்துறை கண்டுபிடிப்பாகவும், —அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் குற்றத்திற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வைக்கும் முதல் முறையான முயற்சி— வெற்றி பெற்ற ஏகாதிபத்திய சக்திகளின், குறிப்பாக அமெரிக்காவின், ஆழமாக சமரசம் செய்யப்பட்ட, பகுதியளவு கருவியாகவும் இருந்தது.
ஆக்கிரமிப்புப் போரைத் திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் தண்டிக்க முதல் முறையாக அனுமதித்ததன் மூலம் நீதிமன்றம் முந்தைய சட்ட நடைமுறையை முறியடித்தது. அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியும், நூரெம்பேர்க்கில் தலைமை வழக்கறிஞருமாக இருந்த ரொபர்ட் எச். ஜாக்சன் (மைக்கேல் ஷானன்) தனது தொடக்க அறிக்கையில், “இந்தக் குற்றவாளிகளுக்கு இன்று நாம் தீர்ப்பளிக்கும் பதிவு, நாளை வரலாறு நம்மைத் தீர்ப்பளிக்கும் பதிவு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று அறிவித்தார்.
ஆயினும்கூட, இந்த விசாரணைகள் வெற்றிபெற்ற நேச நாடுகளால் வடிவமைக்கப்பட்ட போருக்குப் பிந்தைய தீர்விலிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன. இந்த சக்திகளின் அரசியல் மற்றும் மூலோபாய நோக்கங்கள், குறிப்பாக அமெரிக்கா, எந்தக் குற்றங்கள் (மற்றும் குற்றவாளிகள்) தண்டிக்கப்பட வேண்டும், எந்த குற்றங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதை தீர்மானித்தது. உலக சோசலிச வலைத்தளம் சில ஆண்டுகளுக்கு முன்பு விளக்கியது போல, இந்த விசாரணைகள்
போருக்கான மூல காரணமான முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடி குறித்து மட்டுமல்லாமல், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் செய்யப்பட்ட ஏராளமான போர்க்குற்றங்கள் குறித்தும் நூரெம்பேர்க் நீதிமன்றம் மௌனமாக இருந்தது. குறிப்பாக, ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதை, ஒருபோதும் அது கண்டிக்கவில்லை, அல்லது அந்தப் பிரச்சினையை எழுப்பவில்லை.
நூரெம்பேர்க் பல உடனடி அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்தது: இது, போருக்குப் பிந்தைய தீர்வுகளை சட்டப்பூர்வமாக்குவதற்கும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மறுவாழ்வுக்கான நிலைமைகளை நிறுவுவதற்கும், முன்னாள் நாஜிக்களின் மறுவாழ்வு உட்பட, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான பனிப்போர் மற்றும் சோசலிச புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிரான ஏகாதிபத்திய உந்துதலின் ஒரு பகுதியாக இருந்தது.
வோன்டர்பில்ட்டின் திரைப்படம் ஹெர்மன் கோரிங் மற்றும் டக்ளஸ் கெல்லி இடையேயான தொடர்பு குறித்து கவனம் செலுத்துகிறது. திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, டக்ளஸ் கெல்லி (ராமி மாலெக்), அமெரிக்க படையினர்களிடையே இப்போது PTSD என்று அழைக்கப்படும், நோய்க்கு சிகிச்சையளிக்கும் மற்றொரு பணியில் இருந்து நூரெம்பேர்க்கிற்கு (நேச நாடுகள் குண்டுவீசித் தகர்த்தன) புதிதாக வந்துள்ளார். அவர் சார்ஜென்ட் ஹோவி ட்ரைஸ்ட்டை (லியோன் வுடால்) சந்திக்கிறார். அவர், அவரை சிறைச்சாலையின் தளபதியான கேர்னல் பர்டன் ஆண்ட்ரஸுக்கு (ஜோன் ஸ்லாட்டரி) அறிமுகப்படுத்துகிறார். பல முன்னணி நாஜிக்கள் மீதான விசாரணைக்கான உளவியல் ரீதியான தகுதியை மதிப்பிடுவதற்கு தான் பொறுப்பாவேன் என்றும், ட்ரைஸ்ட்டை அவரது மொழிபெயர்ப்பாளராகக் கொண்டிருப்பேன் என்றும் ஆண்ட்ரஸ், டக்ளஸ் கெல்லியிடம் தெரிவிக்கிறார்.
இத்திரைப்படம், ஹெர்மன் கோரிங் (ரஸ்ஸல் க்ரோவ்) அமெரிக்க துருப்புக்களிடம் சரணடைவதன் மூலம் தொடங்குகிறது. ஒரு தடிமனான மனிதரான இந்த நாஜித் தலைவர், மாசு படியாத வெள்ளை சீருடையில், தனது பீல்ட் மார்ஷலின் தடியை ஏந்தியபடி, ஒரு ஓட்டுநர் மற்றும் பல சாமான்களுடன், கந்தல் ஆடைகளுடன் இருந்த அகதிகளின் வரிசையில் இருந்து தெளிவாகத் தனித்து நிற்கிறார்.
ஹிட்லர், கோயபல்ஸ் மற்றும் ஹிம்லர் தற்கொலை செய்து கொண்ட பிறகு, நேச நாடுகளின் கைகளில் விழுந்த மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்தான் நாஜி ஹெர்மன் கோரிங் ஆவார். 1923 ஆம் ஆண்டு, தோல்வியடைந்த மூனிக் பீர் ஹால் சதியில், ஹிட்லர் மற்றும் அவரது உள் வட்டத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டருந்த இவர், 1933 இல் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு கெஸ்டபோவை [நாஜிக்களின் இரகசிய போலீஸ்] நிறுவினார். மேலும் இவர், நாஜிக்கள் மீதான எதிர்ப்புக்களை சட்டவிரோதமாக்குவதற்கும், நேரடியாக ஆவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லும் ஒரு கொடூரமான, ஒரு கட்சி சர்வாதிகாரத்தை அமைப்பதற்காக, பாராளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைத்ததுக்கும் பொறுப்பானவர் என்று நம்பப்படுகிறது.
ஹெர்மன் கோரிங்காக குரோவின் நடிப்பும், மாலெக் மற்றும் ஷானனின் நடிப்பும் மிகவும் வலுவானவை. கோரிங் ஒரு புத்திசாலித்தனமானவர், ஒரு கட்டத்தில் கவர்ச்சிகரமானவர், தன்மீது குற்றம் சுமத்தப்படாமல் இருக்க ஆர்வமாக இருந்தார். ஆனால், முதல் உலகப் போரிலும் வேர்சாய் ஒப்பந்தத்திலும் பேரழிவு தரும் தோல்விக்குப் பிறகு, ஜேர்மன் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாஜி ஆட்சி தேவை என்று அதனை பாதுகாத்தார்.
இத் திரைப்படத்தில் வரும் மற்ற முன்னணி நாஜிக்களில், 1941 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு சமாதான ஒப்பந்தம் மற்றும் கூட்டணியை நாடுவதற்காக, ஹிட்லரின் அனுமதியின்றி இங்கிலாந்துக்கு பறந்த முன்னாள் துணை ஃபியூரர் ருடால்ஃப் ஹெஸ்சும் (ஆண்ட்ரியாஸ் பியட்ச்மேன்) அடங்குவர். ஹெஸ் தனக்கு நினைவாற்றல் இழப்பு இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், கோரிங்கைக் கண்டவுடன் உடனடியாக நாஜி வணக்கத்திற்காக தனது கையை உயர்த்துகிறார்.
இத்திரைப்படத்தில், டெர் ஸ்டூமர் என்ற மதிப்பிழந்த யூத-விரோத பத்திரிகையின் ஆசிரியரான ஜூலியஸ் ஸ்ட்ரைச்சரும் (டீட்டர் ரைஸ்லே) என்பவரும் இருக்கிறார். டெர் ஸ்டூமர் மிகவும் மோசமான, நாஜி உயர் அதிகாரிகள் பலராலும் படிக்க மறுக்கப்பட்ட ஒரு பத்திரிகையாகும். கோரிங் மற்றும் கெல்லி ஆகியோருக்கு இடையேயான உரையாடலில், உலகின் மிகப்பெரிய ஆபாசப் படங்களின் சேகரிப்பின் உரிமையாளரான ஸ்ட்ரைச்சரை, ஒரு அசிங்கமான முதியவர் என்றும், பொது பூங்காக்களில் மக்களை தொந்தரவு செய்யும் சமூக வகை என்றும் கோரிங் விவரிக்கிறார். இது ரெபேக்கா வெஸ்டின் A Train of Powder (1955 இல் வெளியிடப்பட்டது) என்ற நூலில் உள்ள நூரெம்பேர்க் விசாரணைகள் பற்றிய அறிக்கையிலிருந்து கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.
ஹெர்மன் கோரிங் மீது எந்த அரசியல் அல்லது தார்மீக அனுதாபத்தையும் கெல்லி வளர்த்துக் கொண்டதாக படத்தில் காட்டப்படவில்லை. இருந்தபோதிலும், இந்த நாஜிக்கும் அவரது மனைவிக்கும் அவரது இளம் மகளுக்கும் இடையேயான கடிதங்களை அனுப்ப கெல்லி ஒப்புக்கொள்கிறார். இந்தக் கட்டத்தில் கதை ஓரளவு அழகுபடுத்தப்படுகிறது. இந்தக் காட்சிகள், உண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், ஓரளவு உணர்ச்சிபூர்வமாக வளர்க்கப்படுகின்றன, அரவணைப்புகள் மற்றும் அனுதாபங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன.
இதன் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இந்த நாஜித் தலைவர் ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழ்ந்ததாகக் காட்ட அவரை மனிதாபிமானம் உள்ளவராக ஆக்குகிறார்களா? அல்லது ஹெர்மன் கோரிங், கெல்லியை ஏமாற்றுகிறாரா? நாஜித் தலைவர்களைப் புரிந்துகொள்வதிலும், அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதிலும் நம்மை அதிகம் அழைத்துச் செல்லாத சில “உளவியல் ரீதியான” தருணங்கள் இவை.
கெல்லி ஒரு பத்திரிகையாளரிடம் தகவல்களை கசியவிட்டதும், பின்னர் முக்கிய குறிப்புகளை வழக்குத் தொடரும் தரப்பினரிடம் ஒப்படைத்த பிறகு விசாரணையிலிருந்து அவர் நீக்கப்பட்டதும் தொடர்பான சதி இன்னும் கற்பனையானது.
உண்மையில், ஹெர்மன் கோரிங் மற்றும் பிறரை விசாரித்த பிறகு உண்மையான கெல்லி பதவி உயர்வு பெற்றார். கதையை மேலும் “வியத்தகு” ஆக்குவதும், வணிக ரீதியாக அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும் மாற்றுவதே இங்கு நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மாற்றங்கள் நாஜி ஆட்சியின் எந்தவொரு பரந்த ஆய்வையும் விலக்கி, தனிப்பட்ட மற்றும் உளவியல் காரணிகளில் கவனத்தை செலுத்துகின்றன.
முடிவில், ஜாக்சனும் அவரது பிரிட்டிஷ் சக வழக்கறிஞரும் கெல்லியின் குறிப்புகளைப் பயன்படுத்தி, ஹெர்மன் கோரிங்கை ஒப்புக் கொள்ளும்படி ஏமாற்றுகிறார்கள். ஹெர்மன் கோரிங் ஹிட்லருக்கு விசுவாசமாக இருந்திருப்பார் என்றும், இடம்பெற்ற அட்டூழியங்கள் பற்றி அவர் அறிந்திருந்தாலும் கூட, அந்த அறிவை அவர் தொடர்ந்து மறுத்ததாக அவர்கள் ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். ஹெர்மன் கோரிங் மற்றும் மற்றவர்கள் தண்டிக்கப்பட்டனர். கோரிங் சயனைடு குப்பியை உட்கொண்டு தூக்கில் தொங்குவதில் இருந்து தூக்குக் கயிற்றை ஏமாற்றினார்.
இத் திரைப்படத்தில் ஹெர்மன் கோரிங், கெல்லி மீது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய ஊகங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த திரைப்படத்தின் கடைசிக் காட்சி, குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கெல்லி, 1958 ஆம் ஆண்டில் சயனைடு குப்பியை உட்கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பதை எமக்குத் தெரிவிக்கிறது.
கெல்லி, நாஜிக்கள் வெறும் ஜேர்மன் கலாச்சாரத்தின் தயாரிப்புகள் அல்ல, அல்லது சில அருவமான “தீமைகளின்” படைப்புகள் அல்ல என்பதை வெளிப்படையாக உணர்ந்தார் என்பது அவருக்குப் பெருமை.
1947 ஆம் ஆண்டு, “நூரெம்பேர்க்கில் 22 சிறை அறைகள்” என்ற விசாரணை அனுபவத்தை கொண்ட ஒரு புத்தக வெளியீட்டு சுற்றுப்பயணத்தின்போது கெல்லி, “... அமெரிக்காவில் கூட, பாதி அமெரிக்க மக்களின் சடலங்கள் மீது ஏறிக் கொண்டு, மற்ற பாதி மக்களின் கட்டுப்பாட்டைப் பெறக்கூடிய மக்கள் இருக்கிறார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும் இவர்கள்தான்.... ஜனநாயகத்தின் உரிமைகளை ஜனநாயக விரோதமான முறையில் பயன்படுத்தி வருபவர்கள்” என்று அறிவித்தார்.
இந்த திரைப்படத்தின் இறுதியில், பாசிசத்தின் எழுச்சியிலிருந்து அமெரிக்கா தப்பிக்க முடியாது என்று ஒளிபரப்பில் அறிவித்த பின்னர், அமெரிக்காவை “இழிவுபடுத்தியதாக” குற்றம் சாட்டப்பட்டு, கெல்லி ஒரு வானொலி நிலையத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஒரு சிறிய காட்சியும் காட்டப்படுகிறது.
இது, விசாரணையின் காட்சிகளுடன் சேர்ந்து, இன்று ஆழமாக எதிரொலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக காஸாவில் இடம்பெற்றுவரும் காட்சிகள் பற்றி சிந்திக்காமல், இந்த வார்த்தைகளைக் கேட்பதும், அந்த முகாம்களின் காட்சிகளைப் பார்ப்பதும், வெள்ளை மாளிகையில் உள்ள பாசிச மோசடிக்காரரைப் பற்றி சிந்திக்காமல், ஹெர்மன் கோரிங் என்ற மோசடிக்காரன் வேடத்தில் குரோவ் நடிப்பதைப் பார்ப்பதும் பார்வையாளருக்கு கடினமாக இருக்கும்.
