இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு தோட்டத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட துயரமான தொழில்துறை விபத்துகளைத் தொடர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (PWAC) டிசம்பர் 21 அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தை நடத்துகின்றன. உயிர்காக்கும் வசதிகள் இருந்தபோதிலும், மனித உயிர்களை அலட்சியம் செய்து, முதலாளித்துவ இலாபத்திற்காக தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள் மற்றும் அலுவலகங்களில் உழைக்கத் தள்ளப்பட்டுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் இந்தக் கூட்டத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நவம்பர் 3 அன்று, யட்டியந்தொட்டையில் உள்ள கிரிபோருவ தோட்டத்தில் இறப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில், 25 வயது திருமணமாகாத இளைஞரான ரஜினிகாந்த, தான் இயக்கி வந்த இயந்திரம் வெடித்து இறந்தார். நவம்பர் 5 அன்று, மஸ்கெலியாவில் உள்ள மவுசாக்கலை தேயிலை தொழிற்சாலையில், 49 வயதான கிருஷ்ணன் விஜயகுமார் என்ற தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்தபோது, தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் தலை சிக்கிக் கொண்டதில் மரணித்தார்.
இலங்கையில் இந்த இரட்டை மரணங்கள் உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களில் வேகமாக அதிகரித்து வரும் தொழிலாளர் இறப்புகளின் ஒரு பகுதியாகும். வேலைத்தள காயங்கள் மற்றும் மரணங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல, மாறாக உயிரை விட இலாபத்தை மதிக்கும் ஒரு சமூகத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.
இலங்கையில் நடந்த மரணங்கள் முதல் அமெரிக்கவில் அஞ்சல் சேவைகள், உருக்கு ஆலைகள் மற்றும் பிற வேலைத் தளங்களில் சமீபத்தில் நடந்த கொடூரமான தொழிலாளர் மரணங்கள் வரை, ஒருபுறம், நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து வேலையை விரைவுபடுத்தியிருப்பதையும், மறுபுறம், அரசாங்கங்கள், வேலைத்தள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த தாக்குதல்களை மூடிமறைத்து, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதையும் நாம் காணலாம். எனவே, இயற்கைத் துயரங்களைப் போலல்லாமல், இந்த மரணங்கள், அரசியல் சார்ந்தவை ஆகும் -அதாவது, தொழிலாளர்களைச் சுரண்டி, இலாபத்தை பிழிந்தெடுத்த பின் அவர்களை ஓரத்தில் வீசிவிடும் முதலாளித்துவ சமூக உறவுகளின் விளைவாகும்.
மவுசாக்கலை தேயிலை தொழிற்சாலை மற்றும் கிரிபோருவ இறப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நடந்த மரணங்கள், குறிப்பாக இதற்கு ஒரு துன்பகரமான எடுத்துக்காட்டு ஆகும். தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத்தள (WSWS) நிருபர்களுடனான உரையாடல்களில், பல தசாப்தங்கள் பழமையான பாதுகாப்பு கவசங்கள் இல்லாத அல்லது அவை பழுதடைந்த நிலையில் உள்ள இயந்திரங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதே போல், இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதையும், அதை இயக்குபவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க மேற்பார்வையாளர்கள் இல்லாத சூழ்நிலைகளிலேயே அவை பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், உயிரிழப்பு விபத்துகள் தவிர்க்க முடியாதவை. எனினும் அவற்றை அலட்சியம் செய்தே, இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும் முகாமையாளர்களும் தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தொடர்கின்றனர்; இதன் விளைவாக, விபத்துக்கள் ஒரு தொழிலாளியின் மரணத்தை அல்லது நிரந்தர ஊனத்தை விளைவிக்கும் போது, அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு வரையறுக்கப்பட்ட இழப்பீடு அல்லது வாய்மொழி வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அத்தகைய விபத்துகளுக்கான காரணங்கள் முறையாக விசாரிக்கப்படுவதில்லை அல்லது வேண்டுமென்றே மூடி மறைக்கப்படுகின்றன. இவை வெறும் விபத்துகள் அல்ல, மாறாக செலவுகளைக் குறைத்து உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளின் நேரடி விளைவுகளே என்பதை இது காட்டுகிறது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த பராமரிப்பு ஊழியர் ரொனால்ட் ஆடம்ஸ் மற்றும் அஞ்சல் விநியோக ஊழியர் நிக் அக்கரின் மரணங்கள் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் விரிவாக ஆராயப்படுகின்றன. நிறுவனங்கள் இலாபத்தை ஈட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆபத்தான வேலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதால், இயந்திரங்களை இயக்குவதற்கான இடைவிடாத அழுத்தம் மற்றும் தொழிலாளர்களின் பெரும் பற்றாக்குறை அவர்களின் மரணங்களுக்கு வழிவகுத்தது என்பது தெளிவாகியுள்ளது. இந்த இலாபம் தேடும் செயல்முறை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது.
இலங்கையில், ரஜினிகாந்த மற்றும் விஜயகுமாரின் மரணங்களுக்கான காரணம், அமெரிக்காவில் உள்ள அவர்களின் சக தொழிலாளர்களின் மரணங்களுக்குப் பின்னால் உள்ளதைப் போன்ற அதே காரணங்களாகும். இலாப வெறி கொண்ட தொழிற்சாலை உரிமையாளர்களால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாத காலாவதியான இயந்திரங்களுடன் அவர்கள் ஆபத்தான நிலைமையில் உயிரைப் பணையம் வைத்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் அவற்றைத் தடுக்கத் தவறியமை தற்செயலானது அல்ல. மாறாக, அது ஒரு அரசியல் காரணமாகும். தொழிற்சங்கங்கள், பல தசாப்தங்களாக, ஜனநாயக தொழிலாளர் அமைப்புகள் என்ற நிலையில் இருந்து, தொழில்துறை நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பிணைந்த ஒரு அடுக்காக, அல்லது முதலாளிகள் மற்றும் அரசிடமிருந்து சலுகைகளைப் பெறும் தொழிலறிஞர்களாக ஆகி, ஊழல் நிறைந்த அதிகாரத்துவத்தைக் கொண்ட அமைப்பாக மாற்றம்பெற்றுள்ளன.
இந்த அதிகாரத்துவம், தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால், நிர்வாக சபை அறைகளில் ஊதியக் குறைப்புகள், வேலை துரிதப்படுத்தல் மற்றும் கூட்டு ஒப்பந்தங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறது; வேலைத் தளத்தில் உள்ள குறைபாடுகளை ஏனைய தொழிலாளர்களிடமிருந்து மறைத்து தனிமைப்படுத்துகிறது; அதேபோல், மாறுபட்ட கருத்துக்களை எழுப்பும் தொழிலாளர்களைத் தண்டிக்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் நன்கு அறிந்திருக்கும் வகையில், தொழிற்சங்கத் தலைவர்கள் பெரும்பாலும் தோட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தொழிலாளர்களைப் பற்றி அறிக்கை அளிக்கிறார்கள், இதனால் தொழிலாளர்கள் பணக்கார முதலாளிகள் மற்றும் அரசின் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.
மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் 26 தொழிலாளர்கள் மீது பொய்யான குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட வழக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களின் தலைவர்களின் துரோகப் பாத்திரத்தை பற்றிய தெளிவான எடுத்துக்காட்டு ஆகும். இந்த சங்கங்கள், தொழிலாளர்களைப் பாதுகாப்பதைக் கைவிட்டு, அவர்களை முழுமையாக அரசின் தாக்குதல்களுக்கு ஆளாக்கியுள்ளன.
விஜயகுமார் மற்றும் ரஜினிகாந்தவின் மரணம் தொடர்பாக இந்த தொழிற்சங்கங்கள் கடைப்பிடிக்கும் தந்திரமான மௌனத்திற்கும் இதுவே காரணம் ஆகும். இந்த வழியில், முதலாளிகளின் இலாப நலன்களைப் பாதுகாக்கவும், அந்த நோக்கத்திற்காக தொழிலாளர்களின் உயிரைத் தியாகம் செய்யவும் உதவும் அதேநேரம், தொழிற்சங்கத் தலைவர்களாக தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஒரு சமூக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.
தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைத்து இலாபம் ஈட்டுவதற்காக இலங்கையில் சமீப காலமாக ஏராளமான உயிரிழப்புகளும் பேரழிவுகளும் ஏற்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் வெளியான செய்திகள் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் குறிக்கின்றன. முந்தைய அரசாங்கங்களும் தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமும் இந்த சம்பவங்கள் குறித்து மௌனம் காக்கின்றன. தொழில் திணைக்கள அதிகாரத்துவமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு சுரண்டலுக்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதறக்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சுரண்டலுக்கான சிறந்த நிலைமைகளுடன் டசின் கணக்கான தொழில்துறை வலயங்கள் திறக்கப்படுகின்றன. பசி, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் மற்றும் கல்வியறிவின்மையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்கள் ஒருபுறம் இருக்க, திசாநாயக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அது எதற்காக? அது, கொலைகார வெளிநாட்டுக் கடன் கொடுப்பாளர்களுக்கு கடன்களை அடைக்கவும், முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்குமே ஆகும்.
பொதுமக்களின் வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் செயல்படும் தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ், அனைத்து தனியார் மற்றும் அரச வேலைத் தளங்கள், நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். இந்த சூழ்நிலையைத் தடுக்க ஒரு வேலைத்திட்டத்தை வகுப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அவசர மற்றும் முக்கியமான பணியாகும்.
தொழிலாள வர்க்கம் தனது வாழ்க்கையையும் தொழில்முறை கண்ணியத்தையும் பாதுகாத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டுமானால், அதற்கான நிலைமைகளை உருவாக்க ஒரு போராட்டத்தைத் தொடங்கி, அந்தப் போராட்டங்களைத் தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத்தளம், பெருந்தோட்டம் மற்றும் குடியிருப்புப் பகுதியிலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இதை முன்னெடுக்க வேண்டும்.
இந்தக் குழுக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாகவும், தொழிலாளர்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடியதாகவும், நேரடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்: பாதுகாப்பற்ற உற்பத்தியை நிறுத்துதல், தொழில்துறை ரீதியாக குறைபாடுள்ள இயந்திரங்களை பழுதுபார்த்தல் மற்றும் நவீனமயமாக்குதலையும் கோருதல், பாதுகாப்புத் தரவுகளை வெளியிடுதல் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுத்த நிர்வாக முடிவுகளுக்கு குற்றவியல் பொறுப்பேற்கக் கோருதல் போன்றவை இந்த நடவடிக்கை குழுக்களின் கடமைகளாக இருக்க வேண்டும்.
மவுசாக்கலை மற்றும் கிரிபோருவவில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பிரதிபலிக்கும் விதமாக, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுத்து, அத்தகைய வேலைத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைப் பற்றி கலந்துரையாட டிசம்பர் 21 அன்று பகிரங்க கூட்டமொன்றை நடத்துகின்றன.
தொழிற்சங்க பதவி படிநிலை மற்றும் முதலாளித்துவ அமைப்புடன் பிணைக்கப்பட்ட கட்சிகள் மற்றும் குழுக்களிடமிருந்து சுயாதீனமாக செயல்படும் இந்தக் குழுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களில் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவுகின்றன. இந்த சர்வதேச ஒருங்கிணைப்புக்கு, இலங்கைத் தொழிலாளர்கள் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் சேர வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.
இப்போது தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
- மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், ஒவ்வொரு தொழிற்சாலை பிரிவிலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்.
- இயந்திரங்களில் மற்றும் வேலைத் தளங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை ஆவணப்படுத்தி அம்பலப்படுத்துங்கள். மோசடியான ஆய்வுகளை அம்பலப்படுத்தவும், தொழில் மற்றும் வேலை செய்யும் செயல்முறையை விரைவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த தொழிலாளர் விசாரணைகளை முன்னெடுக்கவும்.
- தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணி மூலம் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைவதன் மூலம் போராட்டத்தை வலுப்படுத்துங்கள்.
- தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இறப்புகளுக்குப் பொறுப்பான முகாமையாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மீது குற்றவியல் விசாரணைகள் நடத்துமாறும், அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி மற்றும் முழுமையான இழப்பீடு வழங்குமாறும் கோருங்கள்.
முதலாளித்துவ சிறுபான்மையினரின் இலாபங்களுக்காக அல்லாமல், பெரும்பான்மையான சமூகத்தின் நலன்களுக்காக உற்பத்தியை மறுசீரமைக்கும் ஒரு சோசலிச அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்துடன் தொழிலாளர்களின் போராட்டத்தை இணைக்க வேண்டும். அதாவது, அனைத்து வங்கிகள், பெருந்தோட்டங்கள், பெரிய வணிகங்கள் மற்றும் தொழில்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இதில், வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதை நிராகரிப்பது என்பது போராட வேண்டிய ஒரு அடிப்படை நடவடிக்கையாகும்.
