இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நவம்பர் 2 அன்று, யட்டியந்தொட்டை கிரிபோருவ தோட்டத்தில் உள்ள ஒரு இறப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில், ரஜினிகாந்த என்ற தொழிலாளி ஒரு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த தொழிற்சாலை கொழும்பிலிருந்து 75 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது.
ரஜினிகாந்திற்கு இயக்குவதற்காக போதுமான பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாத ஒரு பழைய இயந்திரத்தை ஒதுக்கியதாகவும், சம்பவத்தை மூடிமறைத்து வழக்கம் போல் தொழிலை மீண்டும் தொடங்க தோட்ட நிர்வாகம் முயற்சிப்பதாகவும் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினர். தொழிலாளியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வேலைத்தள பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
நவம்பர் 16 அன்று, உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் கிரிபோருவ தோட்டத்திற்குத் சென்று, தொழிலாளர்களை அவர்களின் லயின் அறைகளில் சந்தித்தனர். லயின் அறை என்பது பல தோட்டத் தொழிலாளர்கள் வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள வரிசை குடியிருப்புகளாகும்.
“இலங்கையில் ஒரே வாரத்தில் 2 தொழிலாளர்கள் தொழில்துறை விபத்தில் உயிரிழந்தனர்” என்ற WSWS கட்டுரை, ரஜினிகாந்தின் மரணத்தையும், மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றொரு தொழிலாளி விஜயகுமாரின் மரணத்தையும் எடுத்துக்காட்டி இருந்தது. விஜயகுமார், இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள மவுசாக்கலை தேயிலை தொழிற்சாலையில் தேயிலை அரைக்கும் இயந்திரத்தை இயக்கி வந்தார்.
ரஜினிகாந்தவின் தாயார் முத்துக்குமார் சுபலட்சுமி, தனது மகனைப் பற்றி WSWS நிருபர்களிடம் கண்ணீருடன் பேசினார். தனது மகன் 'மிகவும் கடின உழைப்பாளி' என்றும், 'தொழிற்சாலையில் சக ஊழியர்களுடன் நட்பாக இருப்பான்' என்றும் அவர் கூறினார்.
'எங்களை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் மகனை நாங்கள் இழந்துவிட்டோம். தொழிற்சாலையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. பொலிஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது, ஆனால் அதனால் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
'ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணை கூட இல்லாமல் அதிகாரிகள் தொழிற்சாலையை மீண்டும் திறக்கத் தயாராகி வருகின்றனர். என் மகனுக்கு எதிராக நடந்த குற்றத்தால் மக்கள் கோபமடைந்துள்ளனர். என் மகனுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரிய வேண்டும்,' என்று அவர் கூறினார்.
ரஜினிகாந்தவின் மரணத்திற்கு இழப்பீடு வழங்குவதாக தொழிற்சாலை முகாமையாளர் வாய்மொழியாக மட்டுமே உறுதியளித்ததாக சுபலட்சுமி கூறினார். மரணத்தைத் தொடர்ந்து தொழிற்சாலை மூன்று நாட்கள் மூடப்பட்டதுடன் சில பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், நவம்பர் 25 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
ரஜினிகாந்தவின் 21 வயது தங்கை, இயந்திரம் ஏன் பழுதடைந்தது என்பதை தொழிலாளர்கள் சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார். 'எங்களுக்கு இனி எங்கள் அண்ணன் இல்லை. தொழிற்சாலையில் அவருக்கு பதிலாக வேறொரு நபர் நியமிக்கப்படுவார். அவருக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?' என்று அவர் கேட்டார். 'தொழிற்சாலை தொழிலாளர்களின் பாதுகாப்பை விட இலாபத்தை முதன்மைப்படுத்துவதாலேயே இந்த சோகம் நடந்ததுள்ளது, இல்லையா?' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரஜினிந்தவின் மாமா கே. விஜயகுமார், இன்னும் ஆபத்தான விபத்துக்கள் நடந்துள்ளதாக விளக்கினார். தோட்டத்தில் ஒரு மரம் ஒரு அறையின் மீது விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். தோட்ட அதிகாரிகள் குடும்பத்திற்கு வேறு இடத்தில் ஒரு வீட்டைக் கொடுத்துவிட்டு, இந்த விஷயத்தை கைவிட்டனர்.
'எனது மருமகன் இறந்த பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் யாருக்குத் தெரியும். தொழிலாளர்களை மீண்டும் தொழிற்சாலைக்கு அழைத்து வர விரும்புகிறார்கள்.' இந்த மரணம் ஒரு தொழில்துறை குற்றம் என்றும், தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற தொழிலாளியான எஸ். மைல்வாகனம், தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை என்று மதிப்பிட்டார். 'ஆபத்துக்கள் இருந்தபோதிலும், தோட்டத்தில் வாழ்க்கை நடத்துவதற்கு, தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நிர்வாகம் ஒரு தொழிலாளியை இரண்டு தொழிலாளிகளின் வேலையைச் செய்ய வைக்க முயற்சிக்கிறது.'
ஓய்வுபெற்ற பெண் தொழிலாளியான பத்மாவதி, தனது வீட்டில் கூரை ஒழுகிய போதிலும் தோட்ட முகாமையாளர்கள் அதை சரிசெய்ய அனுமதிக்கவில்லை என்று கூறினார். அவர்கள் கழிப்பறை கட்டவும் அனுமதிக்கவில்லை. அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பெரிய புளிய மரம் விழும் அபாயத்தில் உள்ளது, ஆனால் அதிகாரிகள் அதை வெட்ட அனுமதிக்க மறுக்கிறார்கள்.
தகுதியான குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே புதுப்பித்தல் அனுமதிக்கப்படுகிறது. இது ஓய்வு பெறும் வரை தோட்டத்தில் வேலை செய்தவர்களை வெளியேற்றுவதற்கான ஒரு வழியாகும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல வீட்டில் வசிப்பதற்கான உரிமை இருக்க வேண்டும் என்று பத்மாவதி கூறினார்.
அவர் தொடர்ந்தார்: “வீடுகளுக்கு ஒரே ஒரு அறை மட்டுமே இருப்பதால், ஒரு இளம் பெண்ணுக்கு தனி இடம் கொடுக்க வழி இல்லை. யுவதிகளும் சிறுவர்களும் ஒரே அறையில் தூங்க வேண்டும். பெருந்தோட்டங்கள் மில்லியன் கணக்கான ரூபாய் லாபம் ஈட்டுகின்றன; நாங்கள் விலங்குகளைப் போல வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
“மழை நாட்களில், தொழிற்சாலையின் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது; வறண்ட நாட்களில், அது சாலைகளில் கொட்டப்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இது எங்கள் உடல்நலத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக மற்றொரு பெண் தொழிலாளி கூறினார். அவர்கள் உறுப்பினர்களாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தலைவர்கள், ஒரு தொழிலாளியின் மரணம் சம்பந்தமாக பார்க்கக்கூட வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 'தொழிலாளர்கள் பிரச்சினைகளை எழுப்பினால், தொழிற்சங்கத் தலைவர்கள் தோட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துவிடுகிறாரகள். அதன் விளைவுகளைத் தொழிலாளர்களே தாங்கிக் கொள்ள வேண்டும்.'
வெடிவிபத்தில் காயமடைந்து மூன்று விரல்களை இழந்த ஒரு தொழிலாளி, அவரது உறவினர் ஆவார். 'தொழிற்சாலையில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாங்கள் பாதுகாப்பு இல்லாததை எதிர்கொள்கிறோம். குழந்தைகள் பாடசாலைக்கு மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சென்றால், அவர்கள் ஒரு நாள் வேலையை இழப்பார்கள்.'
அங்கமுத்து ஜெயக்கொடி என்ற பெண் தொழிலாளி, ஒரு வருடத்திற்கு முன்பு தனது கணவர் தொழிற்சாலை தொட்டிகளில் வேலை செய்யும் போது அமோனியா தெறித்ததால் இரு கண்களும் குருடானார் என்று விளக்கினார். தனது குடும்பத்திற்கு நிறுவனத்திடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். ரஜினிகாந்தவின் மரணம் குறித்து பேசுகையில், தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு அமைப்பை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலையை விட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவர், இந்த சமீபத்திய வெடிப்புக்கு முன்பு, மற்றொரு தொழிலாளி இறப்பர் பால் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாகக் கூறினார். தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளி குடிபோதையில் இருந்ததால் இது நடந்ததாகக் கூறி, சரியான விசாரணை இல்லாமல் அதை நிராகரித்துவிட்டது.
“ஒரு இயந்திரம் அதன் ஒலியால் சரியாக வேலை செய்கிறதா என்பதை நாங்கள் அறிய முடியும், மேலும் ஏதேனும் சிக்கல்களை சரிசெய்ய அதை நிறுத்த முடியும். இந்த இயந்திரங்களில் அசாதாரண அதிர்வுகளைக் கண்டறிய உயர் தொழில்நுட்ப சென்சார்கள் இல்லை. ஒரு ஃபோர்மேன் ஒரு இயந்திரத்தின் நிலையைச் சரிபார்க்கலாம், ஆனால் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படவில்லை - அவர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.
“நான் தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது, சுமார் 65 ஊழியர்கள் இருந்தனர்; இப்போது எண்ணிக்கை 20–25 ஆகக் குறைந்துள்ளது. இருந்த போதிலும், தொழிலாளர்களை விளிம்பிற்குத் தள்ளுவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மிகவும் பரவலாக புறக்கணிக்கப்படுகிறது, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் - ஹெல்மெட், பூட்ஸ், கையுறைகள் - அரசாங்க அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டுமே வழங்கப்படுகின்றன. அவர்கள் சென்ற பிறகு, அது அலுவலகத்திற்குத் திரும்ப எடுத்துச் செல்லப்படுகிறது.
'தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை. அமோனியாவை சுவாசிப்பதால் மூக்கில் இரத்தக்கசிவு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். பயன்படுத்தப்படும் அமிலமும் மிகவும் ஆபத்தானது. இந்த இரசாயனம் பார்வை இழப்பை கூட ஏற்படுத்தக்கூடும் - நான் நான்கு ஜோடி கண்ணாடிகளை வாங்க வேண்டியிருந்தது. இது இங்கே வேலை செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது.'
ஒரு இயந்திரத்தை வேகப்படுத்த சுமார் 15 நிமிடங்கள் ஆகும் என்று அவர் விளக்கினார். பின்னர் சூடான உட்பாகங்கள் ஓடும் நீரில் குளிர்விக்கப்படுகின்றன, பின்னர் இறப்பர் பால் இயந்திரத்தில் செலுத்தப்படுகிறது. பால் மற்றும் கழிவுநீர் இயந்திரத்தில் பிரிக்கப்பட்டு தனித்தனி தொட்டிகளில் சேகரிக்கப்படுகின்றன. கழிவுநீரில் அசிட் சேர்க்கப்படுகிறது, மீதமுள்ள ரப்பர் மீட்கப்படுகிறது.
முன்னர், கழிவுநீர் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படுவதற்கு முன்பு உயிரியல் சுத்திகரிப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்டது என்று அவர் கூறினார். 'இப்போது, அது நேரடியாக வெளியேற்றப்படுகிறது. வெறுமனே, அத்தகைய செயல்முறைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகள் போன்ற குறுகிய காலத்திற்கு மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் இப்போது, ஒரு நபர் இறக்கும் வரை இங்கு வேலை செய்கிறார்.'
மவுசாக்கலை தேயிலை தொழிற்சாலையில் விஜயகுமாரின் மரணம் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அவர், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (PWAC) தலைமையிலான பிரச்சாரத்திற்கும் இந்த தொழிற்துறை மரணங்கள் தொடர்பாக டிசம்பர் 21 மஸ்கெலியாவில் நடக்கவுள்ள கூட்டத்துக்கும் ஆதரவைத் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், அவர்களின் உடல்நலம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு உண்மையான அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இந்தக் கூட்டம் மிக முக்கியமானது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் கலந்து கொள்ள முயற்சிப்பதாகக் கூறினர்.
மவுசாக்கலையில் விஜயகுமார், கிரிபோருவவில் ரஜினிகாந்த் ஆகியோரின் மரணம் - இலாபத்திற்காக உயிர்களைப் பறிக்காதே! என்ற தலைப்பில் டிசம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியாவில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனையோரையும் அழைக்கிறோம்.
கூட்டம் முகநூலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும் படிக்க
- இலங்கையில் ஒரே வாரத்தில் 2 தொழிலாளர்கள் தொழில்துறை விபத்துக்களில் உயிரிழந்தனர்
- "தொழிற்சாலையிலும் தோட்டத்திலும் லயத்திலும் எங்கள் உயிர் எப்போதும் ஆபத்திலேயே உள்ளது": இலங்கை மவுசாக்கலை தோட்டத் தொழிலாளி கூறுகிறார்
- இலங்கை: மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் டிட்வா சூறாவளியில் இருந்து தப்பியவர்கள் நிரந்தர வீடுகளைக் கோருவதோடு தோட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கின்றனர்.
