மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1985 டிசம்பர் 16 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அதன் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சியை (WRP) இடைநீக்கம் செய்தது. தனது சர்வதேச கட்டுப்பாட்டு ஆணையத்தின் (International Control Commission) அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அது இந்த நடவடிக்கையை எடுத்தது. அந்த அறிக்கையானது, WRP-யை நீக்குவதற்கான தீர்மானத்தில் விளக்கியவாறு, “WRP அமைப்பானது, ICFI-க்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு வரலாற்று ரீதியான துரோகத்தைச் செய்துள்ளது” என்பதை வெளிப்படுத்தியது.
முன்பு அறியப்படாத ஏராளமான ஆவணங்களின் அடிப்படையில் கட்டுப்பாட்டு ஆணையம் நிரூபித்தபடி, WRP “நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை” முற்றிலுமாக கைவிட்டிருந்தது. இதன் விளைவாக, “பணத்திற்கு ஈடாக காலனித்துவ முதலாளித்துவத்தின் பிரிவுகளுடன் கொள்கையற்ற உறவுகளை அது பின்பற்றியது.”
பிரிட்டிஷ் பிரிவான WRP இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக, அதற்குள் ஆழமான நெருக்கடி நிலவியது. 1985 ஜூன் 30 அன்று, ஜெர்ரி ஹீலியின் (Gerry Healy) தனிச் செயலாளராக இருந்த ஐலீன் ஜென்னிங்ஸ், அரசியல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், நீண்டகால WRP யின் தலைவரான ஹீலி, பெண் காரியாளர்களை துஷ்பிரயோகம் செய்ததை பகிரங்கப்படுத்தினார். ஹீலி, கிளிஃப் சுலோட்டர் மற்றும் மைக் பண்டா ஆகியோர் ICFI மற்றும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து, இந்த துஷ்பிரயோகத்தை மூடிமறைக்க முயன்றனர். WRPயின் கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிய மத்திய குழு உறுப்பினர் டேவ் ஹைலேண்ட், பாரிய அழுத்தங்களுக்கு உள்ளானார்.
ஆனால், இந்த நெருக்கடி மேலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. ஹீலியின் ஆதரவாளர்கள் மற்றும் பண்டா, சுலோட்டர் ஆகியோரின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் இந்த நெருக்கடிக்கான அரசியல் காரணங்களைப் பற்றிய கலந்துரையாடல்களை தவிர்க்க முயன்றுவந்த நிலையில், WRP ஒரு கசப்பான போராட்டத்திற்குப் பிறகு இரண்டாகப் பிளவுபட்டது.
அக்டோபர் மாதத்தில்தான் இந்த நெருக்கடியைப் பற்றித் தெரிந்துகொண்ட அனைத்துலகக் குழு, சண்டையிடும் இரு தரப்பினரையும் ஆதரிக்க மறுத்துவிட்டது. ஹீலியின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டித்த அனைத்துலகக் குழு, அக்டோபர் 25 அன்று அவரை அதன் அணிகளில் இருந்து நீக்கியது. ஆனால், தொழிலாளர் புரட்சிக் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடிக்குக் காரணம், சுலோட்டரும் பண்டாவும் வாதிடுவது போல ஹீலியின் தனிப்பட்ட தவறான நடத்தை அல்ல. மாறாக, ஒட்டுமொத்த தலைமையின் நீண்டகால சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத சீரழிவுதான் என்பதில் அது உறுதியாக இருந்தது.
அனைத்துலகக் குழு (IC) தனது விமர்சனத்தை, அமெரிக்காவின் வேர்க்கர்ஸ் லீக் (Workers League) மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்த தெளிவான வேலைத்திட்டம் மற்றும் கோட்பாட்டு ரீதியான விவகாரங்களின் அடிப்படையில் அமைத்திருந்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் தேசியச் செயலாளர் டேவிட் நோர்த் (David North), 1982 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தத்துவக் கருத்துக்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஒரு விரிவான விமர்சனத்தை வழங்கியிருந்தார். 1950-கள் மற்றும் 1960-களில் தீவிரமாக எதிர்த்த பப்லோவாதத்தின் (Pabloism) தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கு நெருக்கமாக, 1970-களின் போது பிரிட்டிஷ் பிரிவு நகர்ந்து சென்றதை அவர் விமர்சித்திருந்தார்.
ஹீலி, சுலோட்டர் மற்றும் தொடக்கத்தில் சில தயக்கங்களுக்குப் பிறகு பண்டா ஆகியோரும் டேவிட் நோர்த்தின் விமர்சனத்தை ஒடுக்கினர். இவர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முழுவதிலும் இதைப் பற்றிய கலந்துரையாடல் நடப்பதைத் தடுத்ததுடன், வேர்க்கர்ஸ் லீக் தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தால் அதை வெளியேற்றுவதாகவும் அச்சுறுத்தினர்.
பிரிட்டிஷ் பிரிவில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முதல் அறிக்கை அக்டோபர் 25, 1985 அன்று வெளியிடப்பட்டது. ஹீலியின் துஷ்பிரயோக நடைமுறைகள் அம்பலமானதன் மூலம், இந்த நெருக்கடி வெடித்திருந்தாலும், இதன் வேர் என்பது “தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டியெழுப்பும் மூலோபாயப் பணியிலிருந்து விலகி, ஒரு தேசியவாத முன்னோக்கு மற்றும் நடைமுறையை நோக்கி நீண்டகாலமாக நகர்ந்து சென்றதில் உள்ளது” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை வெளிப்படையாக அங்கீகரித்தல் மற்றும் பிரிட்டிஷ் பிரிவு அதன் முடிவுகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் WRP இன் உறுப்பினர் பதவியை மீண்டும் பதிவு செய்ய” அனைத்துலகக் குழு முன்மொழிந்தது. WRP இல் நடந்த நிகழ்வுகளை விசாரிக்க ஒரு சர்வதேச கட்டுப்பாட்டு ஆணையத்தையும் அது நிறுவியது.
இந்த நேரத்தில், ஹீலியும் அவரது ஆதரவாளர்களும், சாவாஸ் மிசேல் தலைமையிலான கிரேக்க பிரிவும், ஸ்பெயினில் இருந்த ஒரு சிறிய மற்றும் அனுபவமற்ற குழுவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டனர். ஹீலியால் கூட்டப்படாத எந்தவொரு கூட்டத்தின் அதிகாரத்தையும் ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். சாவாஸ் மிசேல், ஹீலியை ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்” என்றும், அவரது அதிகாரத்தை யாரும் சவால் செய்ய முடியாது என்றும் பிரகடனப்படுத்தினார்.
சுலோட்டரும், பண்டாவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்மொழிவுக்கு உடன்பட்டனர். ஏனெனில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உறுப்பினர்களுக்கு முன்னால் அனைத்துலகக் குழுவை பகிரங்கமாக எதிர்க்கும் அளவுக்கு அவர்கள் பலமாக இல்லை. அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஒரு அசாதாரண மாநாடு, அனைத்துலகக் குழுவின் முன்மொழிவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
ஆனால், சுலோட்டரோ பண்டாவோ இருவருமே அனைத்துலகக் குழுவின் அதிகாரத்திற்கு அடிபணிவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 1985 கோடையில், வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனங்களை ஒடுக்குவதில் தீர்க்கமான பங்கு வகித்தவரும், ஹீலியின் துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைக் குழுவைத் தடுக்க முயன்றவருமான சுலோட்டர், இப்போது அந்தப் பாலியல் துஷ்பிரயோகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, எழுப்பப்பட்ட அரசியல் விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதை தடுத்தார்.
நவம்பர் 26 அன்று, முன்னணி ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் திருத்தல்வாதிகள் (Revisionists) கலந்துகொண்ட லண்டன் பொதுக்கூட்டத்தில், ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு பின்னால் உள்ள பின்னணியைக் கண்டறிய அனைத்துலகக் குழு தொடங்கிய “பாதுகாப்பும் நான்காம் அகிலமும்” (Security and the Fourth International) என்ற விசாரணையை சுலோட்டர் பகிரங்கமாக கண்டனம் செய்தார். அவர் தொழிலாளர் புரட்சிக் கட்சியை, ஸ்டாலினிஸ்டுகள், பப்லோவாதிகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் ஏனைய கடும் எதிரிகளுடன் ஒத்துழைக்கும் பாதையில் திருப்பினார்.
டிசம்பர் 16 அன்று, சுலோட்டர் மற்றும் பண்டாவின் ஆரம்ப எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்ட சர்வதேசக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிக்கையை கலந்துரையாட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூடியது. இந்தச் சந்திப்பில் WRP சார்பாக சுலோட்டர், சைமன் பிரானி, டாம் கெம்ப் மற்றும் அனைத்துலகக் குழுவை ஆதரித்த சிறுபான்மையினரின் பிரதிநிதியாக டேவ் ஹைலேண்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைத்துலகக் குழுவின் சார்பாக டேவிட் நோர்த், பீட்டர் ஸ்வார்ட்ஸ் (மேற்கு ஜேர்மனியின் சோசலிச தொழிலாளர் கழகம்), கீர்த்தி பாலசூரிய (இலங்கையின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்), நிக் பீம்ஸ் (ஆஸ்திரேலியாவின் சோசலிச தொழிலாளர் கழகம்) மற்றும் பிற பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கட்டுப்பாட்டு ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. இரகசிய உள் ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அமைந்த அந்த அறிக்கை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தெரியாமல் முதுகுக்குப் பின்னால் மத்திய கிழக்கின் பல முதலாளித்துவ ஆட்சிகளுடன் WRPயின் தலைமை கொண்டிருந்த கொள்கையற்ற உறவுகளை மிக நுணுக்கமாக அம்பலப்படுத்தியது. அனைத்துலகக் குழு இந்த விசாரணையை வலியுறுத்தாமல் இருந்திருந்தால், அந்த ஆவணங்களும் அவை வெளிப்படுத்திய உறவுகளும் என்றென்றும் மறைக்கப்பட்டே இருந்திருக்கும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்த பெரும்பான்மையினர் இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியை இடைநீக்கம் செய்யக் கோரும் ஒரு தீர்மானத்தை முன்வைத்தனர். பிரிட்டிஷ் பிரிவின் இந்தத் துரோகத்திற்கு ஹீலி மட்டுமே முழுப் பொறுப்பு என்ற சுலோட்டரின் வாதத்தை பெரும்பான்மையினர் நிராகரித்தனர். “இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதித்த அந்தத் தேசியவாத சீரழிவிற்கான அரசியல் பொறுப்பு, WRP-யின் ஒட்டுமொத்த தலைமையையுமே சாரும்” என்று தீர்மானம் குறிப்பிட்டது.
மேலும் அந்தத் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிட்டது:
WRP யின் தலைவர்கள், கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய கலந்துரையாடல்களை பிரிட்டிஷ் பிரிவிலும் சரி, அனைத்துலகக் குழுவிலும் சரி, தடுத்து நிறுத்தினர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எந்தவொரு தனிப்பட்ட தலைவரையும் குற்றம் சாட்ட முயலவில்லை. மாறாக, ஒட்டுமொத்த தலைமையையும் இதற்கு பொறுப்பாக்குகிறது.
ஆகவே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் கொள்கைகளையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக, WRP-யின் 8 வது காங்கிரசைத் தொடர்ந்து, மார்ச் 1 க்கு முன்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அவசரகால காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படும் வரையில், WRP-யை அதன் பிரிட்டிஷ் பிரிவு என்ற தகுதியிலிருந்து இடைநீக்கம் செய்கிறது.
இந்தத் தீர்மானம் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் டேவ் ஹைலண்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சுலோட்டர், கெம்ப் மற்றும் பிரானி ஆகியோர் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூட்டம் அடுத்த நாள், டிசம்பர் 17 அன்று மீண்டும் தொடங்கியது. சுலோட்டரும் கெம்ப்பும் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டு கூட்டத்தைக் சீர்குலைக்க முயன்றனர். பொதுவாக ஒரு மறதி நிலைகொண்ட பேராசிரியரைப் போல நடந்துகொள்ளும் கெம்ப், தோழர் கீர்த்தி பாலசூரியாவுக்கு எதிராக, நேரடியான இனவெறி அவதூறுகளை வீசினார். தோழர் கீர்த்தி கெம்ப்பின் ஆத்திரமூட்டல்களை பொருட்படுத்தாமல் புறக்கணித்தார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதி எவ்வளவுதான் பெரியதாக இருந்தாலும், அதன் அரசியல் கொள்கைத் துரோகங்களை அது சகித்துக்கொள்ளாது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவே WRP-யின் இடைநீக்கம் அவசியம் என்று அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மையினர் விளக்கினர். இந்த இடைநீக்கத்தை பொருத்தமான வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் வைக்கும் ஒரு இரண்டாவது தீர்மானத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.
இந்தப் போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களை மீண்டும் வலியுறுத்துவது அடங்கியுள்ளது. இது, 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் ஒரே வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட தலைமையாக அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ளது. இதன் அடித்தளங்கள்: கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் நான்கு காங்கிரஸ்களின் முடிவுகள் (1919-1922); இடது எதிர்ப்பின் கொள்கை அறிக்கை (1927); இடைமருவு வேலைத்திட்டம் (1938); பகிரங்கக் கடிதம் (1953); மற்றும் 1961-63 காலப்பகுதியில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் பப்லோவாதிகளுக்கு இடையே நடந்த போலி மறு இணைப்பிற்கு எதிரான போராட்ட ஆவணங்கள்.
அந்தத் தீர்மானம் மேலும் பின்வருமாறு குறிப்பிட்டது:
பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று ரீதியான சரியான தன்மையை ICFI மற்றும் WRP மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. அதன் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் தொடர்ச்சி, அனைத்துலகக் குழுவில் பாதுகாக்கப்பட்டு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. 1961-ல் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தேசியக் குழு குறிப்பிட்டது போல, பப்லோவாத திருத்தல்வாதமானது “ட்ரொட்ஸ்கிசத்திற்குள் இருந்த ஒரு போக்கை” பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மேலும் அப்படிக் கருதவும் முடியாது. அதன் தோற்றத்தில், பப்லோவாதம் என்பது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது உலக ஏகாதிபத்தியம் செலுத்திய அழுத்தங்களுக்குப் பணிந்து போனதையே (சரணாகதியையே) குறித்தது. 1964 ஆம் ஆண்டில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) நுழைந்ததன் மூலம், அதன் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தின் முழு வரலாற்று முக்கியத்துவமும் நிறுவப்பட்டது. மேலும், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி, நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை பகிரங்கமாக நிராகரித்ததும், இரண்டு கட்டப் புரட்சி என்ற ஸ்டாலினிசக் கோட்பாட்டை அது பாதுகாத்ததும், 1963 ஆம் ஆண்டில் அனைத்துலகக் குழு ஏற்றுக்கொண்ட கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் ஊர்ஜிதம் செய்கிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது என்பது, ட்ரொட்ஸ்கிசத்தின் பப்லோவாத எதிரிகளுக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்துடன் பிணைந்துள்ளது.
இறுதியாக, WRP எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து கொள்ளலாம் என்பதை அந்தத் தீர்மானம் பின்வருமாறு முன்வைத்தது:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், மத்திய குழுவும் இப்போது ஒன்றிணைந்து செயல்பட்டு, ஹீலியின் தலைமையின் கீழ் WRP அடைந்த தேசியவாத சீரழிவின் மிச்சங்களாக இருக்கும் தற்போதைய சிக்கல்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்க வேண்டும். WRP-க்குள் சர்வதேசவாதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தி, அதன் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அதன் முழு உறுப்பினர் தகுதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். இந்த உறவின் நிறுவனக் கட்டமைப்பானது, நான்காம் அகிலத்தின் விதிகளில் விவரிக்கப்பட்டுள்ள லெனினிச ஜனநாயக மத்தியத்துவத்தின் கொள்கைகளின் அடிப்படையில் எப்போதும் அமைந்திருக்க வேண்டும்.
சுலோட்டர், கெம்ப் மற்றும் பிரானி ஆகியோர் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்ட அடித்தளங்களை உறுதிப்படுத்த அவர்கள் தயாராக இல்லை. ஏழு வாரங்களுக்கு முன்புதான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை அங்கீகரிப்பதன் அடிப்படையில், உறுப்பினர்களை மீண்டும் பதிவு செய்ய WRP யின் காங்கிரஸ் ஒருமனதாக முடிவெடுத்திருந்தது. ஆனால், இப்போது அவர்கள் அந்த அதிகாரத்தை திட்டவட்டமாக நிராகரித்தனர்.
WRP பிரதிநிதிகள் கலந்துகொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கடைசிக் கூட்டம் இதுவாகும். அடுத்தடுத்த வாரங்களில், WRP தீவிரமாக வலதுசாரிப் பக்கம் சாய்ந்ததுடன், அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தையும் நிராகரித்தது. பிப்ரவரி 7, 1986 அன்று, அதன் நாளிதழான வேர்க்கர்ஸ் பிரஸ், மைக் பண்டாவின் ட்ரொட்ஸ்கிய எதிர்ப்பு அவதூறு கட்டுரையான “அனைத்துலகக் குழு ஏன் உடனடியாகப் புதைக்கப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள்” என்பதை வெளியிட்டது. இதற்குப் பதிலடியாக டேவிட் நோர்த், நாம் பாதுகாக்கும் மரபுரிமை (The Heritage We Defend) என்ற புத்தகத்தை எழுதினார்.
பிப்ரவரி 8 அன்று, WRP-யின் எட்டாவது காங்கிரசில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் நுழைவதைத் தடுக்க சுலோட்டரும் பிரானியும் பொலிஸை அழைத்தனர். அக்டோபரில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களே அந்த காங்கிரஸில் பெரும்பான்மையைப் பெற்றிருப்பார்கள். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிட்டிஷ் பிரிவை ஸ்தாபித்தனர்.
ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக இருந்த WRP, இதனுடன் முடிவுக்கு வந்தது. அது பல குழுக்களாகப் பிளவுபட்டது, அவை அனைத்தும் அடுத்து வந்த ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விலகின. சுலோட்டர் ஒரு அராஜகவாதியாக (Anarchist) மாறினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் பிளவுபட்ட சில வாரங்களுக்குள் ட்ரொட்ஸ்கியையும், ட்ரொட்ஸ்கிசத்தையும் கண்டனம் செய்த பண்டா, ஸ்டாலின் மீதான தனது போற்றலை அறிவித்து, குர்திஷ் தேசியவாதத்தின் ஆதரவாளரானார். பிரானி ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டு, ஒரு கல்வியாளராகத் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
நான்காம் அகிலத்தைப் பொறுத்தவரை, WRP-யின் இடைநீக்கமானது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. இது, 1953 முதல் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த நீண்டகாலப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகும். இப்போது, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இறுதியாக நான்காம் அகிலத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டினர்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிசம் மலர்ந்தது. கட்சியின் காரியாளர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செழுமையான தத்துவ மற்றும் வரலாற்று மரபை மீண்டும் தமதாக்கிக் கொண்டனர். அவர்கள், WRP-யின் நெருக்கடிக்கு அடிப்படையாக இருந்த புறநிலை மாற்றங்களை ஆய்வு செய்தனர். அதன் மூலம், கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவத்தின் மீள்வருகையை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்த குட்டி முதலாளித்துவ “இடதுகளும்” சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பிறகு, சோசலிசம் தோல்வியடைந்துவிட்டது என்று கூறி சரணாகதி அடைந்த நிலையில், அனைத்துலகக் குழு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை எடுத்தது.
உலகப் பொருளாதாரத்தின் சர்வதேச தன்மைக்கும் தேசிய அரசுக்கும் இடையிலான சமரசமற்ற முரண்பாட்டின் கூர்மையான வெளிப்பாடே ஸ்டாலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியாகும். ஸ்டாலினிசம் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற முதலாளித்துவ முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டிருந்தது. இது வன்முறை நெருக்கடிகள், போர்கள் மற்றும் புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது, இதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பாதுகாக்கப்படும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கு தீர்க்கமான பாத்திரத்தை வகித்து வருகிறது.
அனைத்துலகக் குழு, தனது அனைத்துப் பணிகளையும் இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டது. 1990-களின் நடுப்பகுதியில், பழைய தேசிய அமைப்புகளின் பண்பு ரீதியான சீரழிவையும், தொழிலாள வர்க்கத்திற்கும் நான்காம் அகிலத்திற்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட மாற்றத்தையும் அங்கீகரித்து, தனது பிரிவுகளை “கழகம்” என்பதிலிருந்து “கட்சிகளாக” மாற்றியது. 1998-ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சர்வதேச சோசலிசத்தின் உண்மையான குரலாக, உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) ஸ்தாபித்தது. மேலும், டிசம்பர் 12 அன்று, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வி மற்றும் அணிதிரட்டலுக்காக அதிநவீன தொழில்நுட்பத்தின் ஒரு புரட்சிகரமான பயன்பாடாக சோசலிசம் AI-ஐ WSWS அறிமுகப்படுத்தியது.
இந்தப் பின்னணியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளின் வரலாற்று முக்கியத்துவம் தெளிவாகிறது. புரட்சிகரக் கட்சிக்குள் நடக்கும் இந்தத் தெளிவுபடுத்தும் செயல்முறையானது, பெரும் புரட்சிகரப் போராட்டங்களில் வெகுஜனங்களின் திசைவழியை முன்கூட்டியே தீர்மானிக்கிறது. WRP-யின் நெருக்கடியில் கொள்கை ரீதியாகத் தலையிட்டதன் விளைவாக, நவீன தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய தன்மைக்கு ஏற்ப, ஒரு உண்மையான சர்வதேச ட்ரொட்ஸ்கிச உலகக் கட்சியைக் கட்டியெழுப்பும் பாதையை 40 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துலகக் குழுவினால் அமைக்க முடிந்தது. உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி நிலைகளின் கீழ், அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலம், உலகம் முழுவதும் பாரிய புரட்சிகரப் போராட்டங்களின் தலைமையாக எழுச்சி பெற்று வருகிறது.
