இலங்கையின் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி புயல் பேரழிவு நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு உதவ முன்வந்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

டிட்வா புயல் இலங்கையை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவுக்கு உள்ளாக்கி, அதன் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியைத் தீவிரப்படுத்திய நிலையில், முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), பேரழிவுகரமான அரசியல் விளைவுகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த முன்மொழிவுகளை மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது.

அனுராதபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன், “பேரழிவின் மத்தியில் மனிதாபிமானம்” என்ற தங்களது பதாகையுடன் மு.சோ.க. உறுப்பினர்கள் காட்சி கொடுக்கின்றனர் [Photo: Facebook/Wasantha Mudalige]

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 639 பேர் உயிரிழந்ததாலும், மேலும் 203 பேர் காணாமல் போனதாலும் மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் —அவர்களில் பெரும்பாலோர் ஏழை கிராமவாசிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆவர். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனத் திட்டத்தை ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் நிலையில், அதனால் ஏற்பட்ட சமூகப் பேரழிவுக்கு மேலாக, மக்கள் தற்போதைய அழிவையும் எதிர்கொள்கின்றனர்.

முன்னதாக, அரசாங்கத்தை 'சரியான பாதைக்கு' கொண்டு வருவதாக கூறிக்கொண்டு, அதன் மீது மட்டுப்படுத்தப்பட்ட பகிரங்க விமர்சனங்களை மு.சோ.க. முன்வைத்து வந்தது. ஆனால் நவம்பர் 28 அன்று புயல் தாக்கியதிலிருந்து, அனைத்து விமர்சனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, மு.சோ.க. தனது உறுப்பினர்களை 'பேரழிவின் மத்தியில் மனிதாபிமானம்' என்ற கருப்பொருளின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை செய்வதற்காகத் திரட்டியுள்ளது. இந்தப் பிரச்சாரம், அதிகரித்து வரும் வெகுஜனக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

“அடுத்தடுத்து நிகழும் பேரழிவுகளைத் தடுக்க வழி இல்லையா? அரசாங்கம் ஏன் சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை?” என்று மக்கள் கேட்கத் தொடங்கினர். டிட்வா புயல் ஒரு தனிப்பட்ட பேரழிவு அல்ல; அது இதே போன்ற பேரழிவுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பின்னரே நிகழ்ந்தது.

அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்த போதிலும், இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும் கூட, பெரும்பாலான மக்கள் அடிப்படை நிவாரணத்தைப் பெறவில்லை, மேலும் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.

இந்தப் பேரழிவிற்கு, அதை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்பும் அரசாங்கமுமே பொறுப்பாளிகள் ஆகும். இந்த உண்மையை மூடிமறைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் அரசாங்கத்திற்கு அரசியல் ஆதரவை வழங்கவே மு.சோ.க. முன்வந்துள்ளது.

மு.சோ.க. தலைவர்கள் இதற்கு முன்னர், வலதுசாரி, அமெரிக்க-சார்பு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை “மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடு” என்று பொய்யாக சித்தரித்தனர். 1960களின் பிற்பகுதியில் அதன் தொடக்கத்திலிருந்தே சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கி இருந்த ஆளும் ஜே.வி.பி., கடந்த மூன்று தசாப்தங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. பாரம்பரிய உயரடுக்குக் கட்சிகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது தேர்தல் முன்னணியான தே.ம.ச. மூலம் அது கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த ஒரு பிரிவால் 2012ல் உருவாக்கப்பட்ட மு.சோ.க., தன்னை ஒரு சோசலிசக் கட்சியாகக் காட்டிக்கொள்கின்ற போதிலும், உண்மையில், அது ஜே.வி.பி.யின் இனவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு அரசியலிலிருந்து விலகவில்லை. அதற்கும் சோசலிசத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திங்கட்கிழமை அன்று, மு.சோ.க. கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, ஒரு செய்தியாளர் சந்திப்பில், நெருக்கடிக்கான கட்சியின் “குறுகிய கால முன்மொழிவுகளை” அறிவித்தார். எதிர்காலத்தில் “நிபுணர்களுடன்” கலந்தாலோசித்து கட்சி “நீண்ட கால முன்மொழிவுகளை” தயாரிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணமான புவி வெப்பமாதல் குறித்து “கலந்துரையாடல்” நடைபெற்றதாக ஜயகொட குறிப்பிட்டார். புவி வெப்பமாதலுக்குக் காரணமான கார்பன் டை ஒக்சைட் வெளியேற்றத்திற்கு செல்வந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதில் அமெரிக்கா 25 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், கட்சியின் நடைமுறைவாத மற்றும் தேசியவாத கண்ணோட்டத்திற்கு ஏற்ப, இலங்கையில் நிலைமையை எவ்வாறு ஒட்டுப் போட்டு சரிசெய்வது என்பது குறித்த முன்மொழிவுகளை ஜயகொட வழங்கினார்.

ஆற்று மணல் அகழ்வு மற்றும் தாழ்வான நிலங்களை நிரப்புதல் போன்ற திட்டமிடப்படாத நடவடிக்கைகள் உட்பட, கடந்தகால அரசாங்கங்களின் “பொருளாதார அபிவிருத்தி” கொள்கைகளே சூழலியல் அமைப்பைச் சேதப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். 2019ல் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவால் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கிட்டத்தட்ட முடக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

திசாநாயகவும், தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுக்கும் வகையில், அதே கொள்கைகளையும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது ஏன், என்றும் ஜயகொட கேள்வி எழுப்பினார்.

உண்மையில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இத்தகைய முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்பற்றி, தற்போதைய பேரழிவு உட்பட, மீண்டும் மீண்டும் நிகழும் பேரிடர்களுக்குப் பெருமளவில் பங்களித்துள்ளன.

இருப்பினும், மு.சோ.க. கல்விச் செயலாளரைப் பொறுத்தவரை, இவை வெறும் “தவறான கொள்கைகளின்” விளைவுகளே. அவர்கள் “சரியான” கொள்கைகளைப் பின்பற்றியிருந்தால், இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்த்திருக்க முடியும் என்பதே அதன் அர்த்தம். இவ்வாறு, இலங்கை மற்றும் பூகோள முதலாளித்துவத்தின் பொறுப்பை அவர் மூடிமறைக்கின்றார்.

ஜயகொடவின் “குறுகிய கால முன்மொழிவுகளில்” பின்வருவன அடங்கும்: அத்தியாவசியப் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரியை நீக்குதல்; மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்ற வழிமுறைகளை இடைநிறுத்துதல்; அதிக வருமானம் பெற்ற நிறுவனங்கள் மீது ஒருமுறை மீலாப வரி விதித்தல்; அரச முதலீடுகளை அதிகரித்தல்; மற்றும் அரசிற்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை கூட்டுத்தாபனங்களாக மாற்ற முன்மொழிந்த மின்சாரம் மற்றும் பெட்ரோலியச் சட்டங்களை இரத்து செய்தல்.

இவை, தொழிலாள வர்க்கத்தையும் ஏழை மக்களையும் அவர்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க அணிதிரட்டுவதற்கான முன்மொழிவுகள் அல்ல, மாறாக இந்த நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை விதைப்பவையே ஆகும். மேலும், இந்த முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன் பொருந்தாதவை.

தித்வா புயல் நாட்டைத் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, டிசம்பர் 5 அன்று, திசாநாயக நாடாளுமன்றத்தில், தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து விலகப் போவதில்லை என்றும், மாறாக அது விதித்துள்ள 'பரிமாணங்களின்' படி செயல்படும் என்றும் திட்டவட்டமாக உறுதியளித்தார். அதாவது, சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்வது, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, நிதிச் செலவினங்களைக் குறைப்பது மற்றும் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதுமே ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் விரைவு விநியோகத் திட்டத்தின் மூலம் மேலதிகமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கோரும் என்றும் அவர் மேலும் கூறினார்.

திசாநாயக பல்வேறு நிவாரணப் பொதிகளை அறிவித்துள்ளார்—அவற்றில் பல எதிர்காலத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன—அவை செயல்வடிவம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த கால அனுபவம் என்னவென்றால், மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, பின்னர் மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே மீண்டும் கட்டியெழுப்பத் தனியாக விடப்பட்டனர். 2004 ஆசிய சுனாமி இலங்கையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றபோது, ​​பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் போதுமான அல்லது எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

இலங்கையின் கொழும்பில் 30 நவம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, மக்கள் நீரில் மூழ்கிய பகுதி வழியாக நடந்து செல்கின்றனர். [AP Photo/Eranga Jayawardena]

சூறாவளிகளால் ஏற்படும் இதுபோன்ற பேரழிவுகளுக்கு, முதலாளித்துவ முறைமைக்குள்ளும் தேசியக் கட்டமைப்பிற்குளும் தொழிலாள வர்க்கத்தினராலும் கிராமப்புற ஏழைகளாலும் தீர்வு காண முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வலியுறுத்துகிறது.

உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல், 'பிரதானமாக புவி வெப்பமயமாதலை இயக்கும் காலநிலை மாற்றத்தின் ஒருங்கிணைந்த தாக்கமும், அடுத்தடுத்த அரசாங்கங்களால் விஞ்ஞான மற்றும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புகளைத் திட்டமிட்டு அகற்றுவதும்' இதுபோன்ற பேரழிவுகளை உருவாக்குகின்றன.

பேரிடருக்கும் மற்றும் தங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு சர்வதேச மற்றும் சோசலிசத் தீர்வு அவசியம் என்பதை தற்போதைய பேரழிவு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது.

அரச அதிகாரிகள் மற்றும் நாட்டின் பெரும் பணக்கார (நிறுவனங்களின்) பிரதம நிறைவேற்று அதிகாரிகளாலும் நிரப்பப்பட்டுள்ள அதன் 'பேரிடர் முகாமைத்துவக் குழுவைக்' கலைக்குமாறு ஜயகொட அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். தொழிற்சங்க அதிகாரிகள், சிவில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சிறு, நடுத்தர வணிகர்களைக் கொண்ட 'மக்கள் பங்கேற்பு' குழுக்களை அவர் முன்மொழிந்தார். இத்தகைய சர்வதேச நாணய நிதிய-சார்பு மற்றும் முதலாளித்துவ-சார்பு சக்திகள் 'மக்களை' பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை, மாறாக அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு மட்டுமே உதவும்.

மு.சோ.க.யின் தலையீடு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை 'அவரை விடவும் சிறப்பாக' முன்னெடுக்கின்றது என்ற வெளிப்படையான உண்மையை அது ஒப்புக்கொள்கிறது.

இருப்பினும், ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியை ஒரு 'மக்கள் அரசாங்கம்' என்று மு.சோ.க. தொடர்ந்து வகைப்படுத்துகிறது. நவம்பர் 7 அன்று ஒரு யூடியூப் சேவையில் பேசிய மு.சோ.க. தலைவர் குமார் குணரட்னம், 'இது ஒரு மக்கள் அரசாங்கம்... பழைய ஊழல் அரசியல்வாதிகளை நாம் மீண்டும் அனுமதிக்கக் கூடாது' என்று அறிவித்தார்.

இது, வெகுஜன எதிர்ப்பைத் தடம் புரளச் செய்வதற்கு உதவும் வகையில் பலவீனமான விமர்சனங்களை முன்வைக்கும் அதேநேரம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை அப்பட்டமாகப் பாதுகாப்பதாகும். முதலாளித்துவ ஆட்சிக்கு மு.சோ.க.யின் சேவை, ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச.யைப் பாதுகாப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆளும் வர்க்கத்திற்கு என்ன அரசியல் நெருக்கடி ஏற்பட்டாலும், மு.சோ.க. தனது சேவைகளை வழங்கியது.

2020ல் பூகோள கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் நெருக்கடி தீவிரமடைந்தபோது, ​​மு.சோ.க. தலைவர் குணரட்னம் 2020 மார்ச் 24 அன்று பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதினார். அரசாங்கத்தின் 'குறைபாடுகள்' இருந்தபோதிலும், 'கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில்' அதன் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

மு.சோ.க., 2022 ஏப்ரல்-ஜூலையில் நடந்த மாபெரும் வெகுஜன எழுச்சியின் போது,​​ தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ கட்சிகளுடன் கைகோர்த்து, முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதில் தனது பங்கை ஆற்றியது. 'விரைவில் ஒரு தேர்தல் நடத்தப்படும் வரை, பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள போராட்டக் குழுக்களுடன்' இணைந்து செயல்பட, 'பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு இடைக்கால ஆட்சியை அமைப்பதே [அரசியல் நெருக்கடிக்கு] யதார்த்தமான தீர்வு' என்று அது வலியுறுத்தியது. பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்த இந்தப் போராட்டக் குழுக்கள் மத்தியில் மு.சோ.க. முன்னணியில் இருந்தது.

இதன் பொருள் தெளிவாக இருந்தது: மு.சோ.க., மதிப்பிழந்த முதலாளித்துவ கட்சிகளுடன் ஒரு 'இடைக்கால ஆட்சியில்' கூட்டாளியாக இருக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவையும் இதே பிரேரணையையே முன்வைத்தன.

மு.சோ.க.யின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சூழ்ச்சி, மக்கள் ஆதரவே இல்லாத, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட ரணில் விக்கிரமசிங்கவை, அவப்பேறுபெற்ற பாராளுமன்றம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வழிவகுத்தது.

இந்த வாரம் தனது கருத்துக்களில், சர்வதேச கடன் வழங்குநர்களுடனான தற்போதைய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மறுபேச்சுவார்த்தை செய்வதற்கு புயல் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜயகொட முன்மொழிந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கடுமையாகப் பேரம் பேசுவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

 “சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வெளியேறும்” தனது வேலைத்திட்டத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக மு.சோ.க. கூறியுள்ளது. இத்திட்டம், கடன் வழங்குநர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர்ப்பதை முன்மொழிகிறது. எந்தவொரு “சட்டவிரோதக் கடன்களும்” திருப்பிச் செலுத்தப்படக்கூடாது என்று அது வலியுறுத்துவதோடு, “நியாயமான கடன் தள்ளுபடி” மற்றும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடு நீட்டிப்புக்காக மன்றாடவும் முன்மொழிகிறது.

கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் என்று சர்வதேச நிதி மூலதனத்திற்கு உறுதியளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். மு.சோ.க.யின் முன்மொழிவுகள் அதன் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சார்பு நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றன.

மு.சோ.க.யின் கோழைத்தனமான கொள்கைகளுக்கு மாறாக, சோசலிச சமத்துவக் கட்சியானது 'சட்டப்பூர்வமான' மற்றும் 'சட்டவிரோதமான' அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை எதிர்க்கிறது. முதலாளித்துவ உயர்மட்டத்தினரின் நலனுக்காகவும், 26 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாதப் போருக்காகவும் பல தசாப்தங்களாக வாங்கப்பட்ட இந்த மாபெரும் கடன்களுக்குத் தொழிலாளர்களும் ஏழைகளும் பொறுப்பல்ல.

கடன் திருப்பிச் செலுத்துதலைத் தொடர்வதற்காக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை சீரழிக்கும் ஜே.வி.பி./தே.ம.ச.யின் கொள்கையையும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். புயல் பேரழிவைத் தொடர்ந்து, வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுப்பதன் மூலம் சேமிக்கப்படும் பில்லியன் கணக்கான டொலர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் சமூக நலனை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

மு.சோ.க.யின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தை நிராகரித்து, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாகத் தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவதற்கான எமது போராட்டத்தில் இணையுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது. தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதை நோக்கிய ஒரு பிரதான படி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனக் கட்சிகளிடமிருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைப்பதாகும். கிராமப்புற மக்கள் தத்தமது பகுதிகளில் தங்களது சொந்தச் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்க்கைத்தரத்தைப் பாதுகாக்கவும், இன்னும் பல நன்மைகளை முன்னெடுக்கவும் தொழிலாளர்களையும் ஏழைகளையும் பொது முயற்சிகளில் அணிதிரட்டுவதில் நடவடிக்கை குழுக்களின் முக்கியத்துவத்தை இந்தப் புயல் பேரழிவு வெளிப்படுத்தியுள்ளது.

இந்தச் நடவடிக்கை குழுக்களை அடிப்படையாகக் கொண்டு, இன வேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்பட்டு, சர்வதேச சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் போராடுவதற்கான ஒரு போராட்ட மையமாக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

சர்வதேச ரீதியில் சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பதன் மூலம் மட்டுமே, புவி வெப்பமாதலை எதிர்கொள்ளவும் மனித உயிர்களைப் பாதுகாக்கவும் தேவையான தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் பொருள் வளங்களைத் திரட்ட முடியும்.

Loading