மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், புலம்பெயர்ந்தோர் மீது முன்னெப்போதும் கண்டிராத ஒரு தாக்குதலை 2025 ஆம் ஆண்டு கண்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உடந்தையோடு, ட்ரம்ப் நிர்வாகம் பாரிய தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தலுக்கான நாடு தழுவிய வேட்டையைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும், கனரக ஆயுதங்கள் ஏந்திய மற்றும் பெரும்பாலும் முகமூடி அணிந்த மத்திய கூட்டாட்சி முகவர்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளுக்குள் ஊடுருவி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு) தற்போது வாரத்திற்கு சுமார் 2,600 பாரிய கைதுகளை மேற்கொண்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் முதல் தவணை காலத்தில், வாராந்திர கைதுகள் சராசரியாக 640 ஆக இருந்தன. ட்ரம்பின் முதல் தவணையில், அவை சராசரியாக 569 ஆக இருந்தன. பெரும் உயர்வை எட்டிய பைடென் காலத்தில்கூட, கைதுகள் வாரத்திற்கு சராசரியாக 1,100 ஆக இருந்தன. ட்ரம்ப் சில மாதங்களிலேயே அந்த எண்ணிக்கையை இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு 10 லட்சம் பேரை நாடுகடத்துவதே தனது இலக்கு என்றும் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை “குற்றவாளிகளை” இலக்கு வைக்கிறது என்ற கூற்று ஒரு பொய்யாகும். இதற்கு முன்பு, வேறு ஏதேனும் குற்றங்களுக்காக உள்ளூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோரை மட்டுமே ICE கைது செய்து வந்தத. ஆனால், இப்போது அந்த முறையிலிருந்து ICE விலகி, வாகனம் கழுவும் இடங்கள், கட்டுமானத் தளங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் பாரிய பணியிட சோதனைகளை நோக்கி நகர்ந்துள்ளது. வேலை தேடுவது மட்டுமே “குற்றம்” என்று கருதப்படும் புலம்பெயர்ந்தோரே ICE ஆல் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
அரசியல் எதிர்ப்பும் குற்றமாக்கப்பட்டு வருகிறது. டல்லாஸில் நீண்டகாலமாக வசிப்பவரும், DACA (குழந்தைப்பருவ வருகைக்கான ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கை) திட்டத்தின் பயனாளியுமான யாகூப் விஜாண்ட்ரே கடந்த மூன்று மாதங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறுவயதிலிருந்து வசிக்காத ஒரு நாட்டிற்கு நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்கிறார். FBIயின் உளவாளியாக மாற மறுத்ததும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுமே அவர் செய்த “குற்றமாகும்”. இதுவே தடுப்புக்காவலுக்கு அடிப்படை என்றால், இது எவரையும் துன்புறுத்துவதற்கு அடிப்படையாக அமையும்.
பிடிபட்டவர்களுக்கு அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. சமீபத்தில் ஒளிபரப்பப்படாமல் நிறுத்தப்பட்ட CBS ’60 மினிட்ஸ்’ புலனாய்வு அறிக்கை, அன்னிய எதிரிகள் சட்டத்தின் (Alien Enemies Act) கீழ் சுமார் 300 புலம்பெயர்ந்தோர் எல் சால்வடோரின் CECOT பாரிய-சிறைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ளது. அவர்கள் சித்திரவதைக்கு இணையான சூழலில் வழக்கறிஞர்கள் இன்றி பல மாதங்களாக வைக்கப்பட்டிருந்தனர். புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா, நியூ ஜெர்சி மற்றும் லூசியானா ஆகிய மாநிலங்களில் உள்ள தடுப்பு முகாம்களிலும் இதே போன்ற சூழல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய அளவில் மக்களை நாடுகடத்துவதற்கான ஒரு இயந்திரம் உருவாக்கப்பட்டு வருகிறது. ICE இன் தற்காலிக இயக்குனர் டாட் லியோன்ஸ், ட்ரம்ப் நிர்வாகத்தின் இலக்கு, “அமேசான்” நிறுவனம் போன்ற வேகத்தில் நாடுகடத்தல் நடவடிக்கையை மேற்கொள்வது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். “வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அதிவேகமாக அனுப்புவதுபோல, ஆனால் இங்கு மனிதர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பு முகாம்களில் நிலவும் நெரிசல் மற்றும் அலட்சியம் ஏற்கனவே கைதிகளின் இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த ஆண்டு ICE காவலில் குறைந்தது 30 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். இதில் பலர் மிகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் 4 நாட்களுக்குள், தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற, இலாப நோக்கிலான தரம் குறைந்த ICE-ன் சிறைச்சாலைகளில் நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்த நடவடிக்கை, ஒரு பரந்த சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வின் முன்னெடுப்பாகும். ஜனவரி 6 அன்று நடந்த சதி முயற்சி என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. அது, ட்ரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் கீழ் கொள்கை வடிவில் தொடர்கிறது. குடிவரவு ஒடுக்குமுறை என்பது, பிறப்புரிமை குடியுரிமை மற்றும் உரிய சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட அரசியலமைப்பு உரிமைகளை சிதைப்பதற்கான ஒரு சோதனைக் களமாகும்.
ட்ரம்பின் இந்த நாடுகடத்தல் நடவடிக்கை ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று நோக்கங்களுக்காக சேவை செய்கிறது.
முதலாவதாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்த நடவடிக்கை தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட நிலைமைகளான தேக்கமடைந்த ஊதியங்கள், வேலையின்மை, சீர்குலைந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் சரிந்து வரும் சமூக சேவைகளுக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். பல தசாப்த காலத் தொழில்துறை அழிவு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்குக் காரணமான பெருநிறுவனங்கள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு எதிராகத் தொழிலாளர்களின் கோபத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, அவர்களைப் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகத் திருப்புவதன் மூலம் ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கம் உருவாவதைத் தடுக்க அரசியல் அதிகார வர்க்கம் முயல்கிறது. பிளவுபட்ட தொழிலாள வர்க்கத்தால் எதிர்த்துப் போராட முடியாது.
இரண்டாவதாக, இது அரசியல் நெருக்கடி மற்றும் ஆளும் வர்க்கத்தின் குற்றச் செயல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப உதவுகிறது. எப்ஸ்டீன் (Epstein) வலையமைப்புடன் தொடர்பான புதிய வெளிப்பாடுகள், ட்ரம்பைத் தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்க வைக்கின்றன. அதே வேளையில், அவரது நிர்வாகம் சமூகத் திட்டங்களைக் வெட்டிக் குறைக்கிறது, வெளிநாடுகளில் இராணுவத் தாக்குதல்களை நடத்துகிறது மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களைத் தாக்குகிறது.
மூன்றாவதாக, புலம்பெயர்ந்தோர் மீதான ஒடுக்குமுறையானது, ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக பொலிஸ் அரசு அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கான சட்டபூர்வ மற்றும் அரசியல் கட்டமைப்பை வழங்குகிறது. நகரங்களில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கும், முறையான நடைமுறையின்றி குடியிருப்பாளர்களை நாடு கடத்துவதற்கும் பயன்படுத்தப்படும் அதே காரணங்கள், புலம்பெயர்ந்த அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.
இந்தத் தாக்குதல்கள் குறித்த மிக முக்கியமான அரசியல் உண்மை என்னவென்றால், இதில் ஜனநாயகக் கட்சியின் உடந்தை இருப்பதாகும். டிசம்பர் 8-ஆம் தேதியிட்ட வாஷிங்டன் போஸ்ட் தலைப்புச் செய்தி இதைத் தெளிவாகக் கூறியது: “ஒரு காலத்தில் குடிவரவு விவகாரத்தில் ட்ரம்பை கடுமையாக விமர்சித்த ஜனநாயகக் கட்சியினர் இப்போது மௌனமாகிவிட்டனர்.” செனட்டர் சக் ஷுமர் மற்றும் ஹக்கீம் ஜெப்ரிஸ் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சித் தலைமை ICE-ஐ ஒழிக்கக் கோர மறுத்துவிட்டது. ஏனெனில், அவர்கள் ட்ரம்பின் கொள்கைகளுடன் உடன்படுகிறார்கள்.
பெர்னி சாண்டர்ஸ் ஒரு படி மேலே சென்று, ட்ரம்பின் எல்லைக் கொள்கைகளை “பைடெனை விட ஒரு முன்னேற்றம்” என்று பாராட்டியதோடு, “நாடென்று இருந்தால் எல்லைகள் இருக்க வேண்டும்” என்ற (அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு) MAGAவின் முழக்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நீண்டகாலமாக வசிப்பவர்கள் உரிய சட்ட நடைமுறையின்றி காணாமல் ஆக்கப்படும் சூழலில், தன்னை ஒரு “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று அழைத்துக்கொள்ளும் சாண்டர்ஸ், முதலாளித்துவ பிற்போக்குவாதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஒரு காலத்தில் “ICE-ஐ ஒழியுங்கள்” என்று அழைப்பு விடுத்த அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், “முதலாளித்துவ எதிர்ப்பு” மற்றும் “அமெரிக்கவாதம் எதிர்ப்பு” ஆகியவற்றை உள்நாட்டு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தும் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஜனாதிபதி குறிப்பாணை-7 (NSPM-7) குறித்து மௌனம் காத்து வருகிறார்.
ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்தனர். ஒபாமா பாரிய நாடுகடத்தல்களையும், குழந்தைகளை குடும்பங்களிலிருந்து பிரிக்கும் முறையையும் முன்னெடுத்தார். பைடென் தஞ்சம் கோரும் உரிமையை சீர்குலைத்தார். இப்போது ட்ரம்ப் இந்தக் கொள்கைகளைத் தடுப்புக்காவல், ஆட்கடத்தல் மற்றும் ஒடுக்குமுறைக்கான ஒரு நாடு தழுவிய அமைப்பாக விரிவுபடுத்துகிறார்.
தொழிற்சங்க அதிகாரத்துவமும் இதற்கு உடந்தையாக உள்ளது. ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷான் ஃபைன் ட்ரம்பின் சுங்கவரிகள் மற்றும் வர்த்தகப் போர்க் கொள்கைகளை ஆதரிக்கிறார். டீம்ஸ்டர்ஸ் தலைவர் சீன் ஓ பிரையன் பாரிய நாடுகடத்தல்களை ஆதரித்துள்ளதோடு, சிக்காகோவில் முகமூடி அணிந்த மத்திய கூட்டாட்சி முகவர்களால் துன்புறுத்தப்பட்ட டீம்ஸ்டர்ஸ் தொழிலாளர்களை பாதுகாக்க மறுத்துவிட்டார். பொருளாதார தேசியவாதம் என்பதுதான் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் ட்ரம்பிற்கும் இடையிலான பொதுவான புள்ளியாக உள்ளது.
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் அமெரிக்காவிற்கு மட்டும் தனித்துவமானது அல்ல. ஐரோப்பா முழுவதும், எல்லா அரசியல் பிரிவுகளையும் சேர்ந்த அரசாங்கங்கள் சுவர்களை எழுப்புகின்றன, எல்லைகளை இராணுவமயமாக்குகின்றன, மேலும் அதே ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட போர்களிலிருந்து உயிர்தப்பி வெளியேறும் அகதிகளைக் குற்றவாளிகளாகச் சித்திரிக்கின்றன. “தாயகத்தைப் பாதுகாப்பது” என்பது வெளிநாடுகளில் போருக்குத் தயாராவதன் உள்நாட்டுப் பிரதிபலிப்பாகும்.
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் என்பது வெறும் ஒரு பகுதி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான ஒரு பொலிஸ் அரசு நோக்கிய நகர்வின் முன்னெடுப்பாகும். “சட்டவிரோத குடியேறிகள்” நாட்டை விட்டு வெளியேறியவுடன், நகர வீதிகளில் இருக்கும் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த முகவர்கள் மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் நிறுத்தப்படப் போவதில்லை. சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் போரை எதிர்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எதிராக இதே இயந்திரம் பயன்படுத்தப்படும்.
புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பிரிக்க முடியாதது. புலம்பெயர்ந்தவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாக்க தொழிலாளர்களும் இளைஞர்களும் அண்டை பகுதிகளிலும் வேலையிடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.
அனைத்து மக்களும் தாங்கள் விரும்பும் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் உள்ள உரிமையைத் தொழிலாளர்கள் நிலைநாட்ட வேண்டும். ட்ரம்பைப் போலவே, “உங்களுக்கு எல்லைகள் இல்லையென்றால், உங்களுக்கு நாடே கிடையாது” என்று சாண்டர்ஸ் அறிவிக்கிறார். இந்த தேசியவாத நச்சுக்கு எதிராக தொழிலாளர்கள், “தொழிலாளர்களுக்கு நாடு கிடையாது” மற்றும் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” என்று பிரகடனம் செய்ய வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலுக்கு கணிசமான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. சிக்காகோ மற்றும் பிற நகரங்களில், ICE முகவர்கள் வரும்போது தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்கத் தொழிலாளர்கள் தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேறி போராட்டம் நடத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், வளர்ந்து வரும் இந்த எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியிடமோ அல்லது நீதிமன்றங்களிடமோ அடகு வைக்க முடியாது. அவை நிதிய பிரபுத்துவத்தின் கருவிகள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாகும்.
நாடுகடத்தல்களை உடனடியாக நிறுத்தவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும், சோதனைகள் மற்றும் ஆட்கடத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முழு சட்ட உரிமைகளை வழங்கவும் தொழிலாள வர்க்கம் கோர வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த பொலிஸ்-எல்லை-உளவு இயந்திரத்திற்கும் மற்றும் அவை பாதுகாக்கும் தேசிய-அரசு முறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கான போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு மையப் போராட்டமாகும். நாடுகடத்தல் எந்திரத்தை கட்டியெழுப்பும் அதே ஆளும் வர்க்கம்தான் வேலைகளை அழித்து வருகிறது, சமூக வேலைத்திட்டங்களை வெட்டி வருகிறது மற்றும் புதிய போர்களுக்குத் தயாராகிறது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னெடுத்துச் செல்லப்பட முடியும்.
