பாரிஸ் உச்சிமாநாடு: ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் போரின் விளிம்பில் ஐரோப்பா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இடதுபுறம், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர், செவ்வாய், ஜனவரி 6, 2026. [AP Photo/Ludovic Marin]

ஜனவரி 6 அன்று, பாரிஸில் நடைபெற்ற போர் உச்சிமாநாட்டில் ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தனர். இவர்களுடன் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ரஷ்ய விவகாரப் பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு குழுமியிருந்த நேட்டோ அதிகாரிகள், போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், ரஷ்யாவின் எல்லையிலுள்ள ஒரு இராணுவத் தளமாக உக்ரேனை மாற்றுவதற்கும், அங்கு படைகளை நிலைநிறுத்தி ஆயுதங்களை வழங்குவதற்கும் முழுமையான உறுதிமொழியை எடுத்தனர். இத்தகையச் சூழலைத் தடுக்கவே கிரெம்ளின் (ரஷ்யா) போரில் ஈடுபட்டது என்பதாலும், உக்ரேனுக்கு வரும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அது எச்சரித்துள்ளதாலும், போரை முடிக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கூறுவது ஒரு கேலிக்கூத்தாகவே உள்ளது. மாறாக, பாரிஸ் பிரகடனம் ரஷ்யாவைத் தொடர்ந்து போரிடத் தூண்டுகிறது. இது, ஐரோப்பா முழுவதும் ஒரு முழுமையான போராக வெடிப்பதற்கான களத்தை அமைக்கிறது.

இருப்பினும், இந்தச் சந்திப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த முக்கிய விஷயம், ட்ரம்பின் வெனிசுவேலா மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பும், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதாக ட்ரம்ப் மிரட்டியதால் வாஷிங்டனுக்கும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள வெடிக்கும் நிலையிலான மோதல்களுமே ஆகும். விட்காஃப் மற்றும் குஷ்னர் ஆகியோருக்கு எதிரே டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் அமர்ந்திருந்தபோது, உச்சிமாநாட்டின் “அடிப்படைச் சூழல் மிகவும் பதற்றமாக இருந்தது” என்று பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. “உக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு பாதிக்கப்படக்கூடும் என்பதால், கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவைத் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஐரோப்பிய சக தலைவர்களிடமிருந்து பிரடெரிக்சனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்றும் பிபிசி மேலும் குறிப்பிட்டது.

20-ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை நடந்தது போல, முதலாளித்துவம் மீண்டும் ஒரு உலகப் போருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். கிரீன்லாந்து விவகாரத்தில் வாஷிங்டனுக்கு எச்சரிக்கை விடுத்த ஏழு ஐரோப்பிய நாடுகளின் அறிக்கை போன்ற, நேட்டோ வல்லரசுகளின் பெயரளவிலான இராஜதந்திர முயற்சிகூட, அவர்களால் தடுத்து நிறுத்த முடியாத ஒரு போர் தங்களுக்குள்ளேயே (நேட்டோ நட்பு நாடுகளுக்குள்ளேயே) மூண்டுவிடுமோ என்ற அச்சத்தையே பிரதிபலிக்கிறது. ஒரு பேரழிவு தரும் போர்த் தீவிரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும், முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதிகளிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கும், கிளர்ந்தெழுந்து போராடுவதற்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.

இந்த உச்சிமாநாட்டின் வெளிப்படையான நோக்கம் ‘பாரிஸ் பிரகடனத்தை’ வெளியிடுவதாகும். இது, நேட்டோ நாடுகள் உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கவும், வாஷிங்டனுடன் ஒருங்கிணைந்து ஐரோப்பிய படைகளை உக்ரேனுக்கு அனுப்பவும் அழைப்பு விடுக்கிறது. இது, ரஷ்யாவுடன் ஒரு முழுமையான போரைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

“போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தவுடன், அரசியல் மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உத்தரவாதங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அந்தப் பிரகடனம் கூறுகிறது. இருப்பினும், பாரிஸ் பிரகடனம் எந்தவொரு காலக்கெடுவையோ அல்லது குறிப்பிட்ட திட்டங்களையோ வழங்கவில்லை. அல்லது அவ்வாறு செய்வதற்கான எந்த உறுதிப்பாட்டையும் செய்யவில்லை. போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் இதனைச் செய்வதற்குத் தாங்கள் தயாராக இருக்க முடியும் என்றும், அது “தங்களது அந்தந்த நாட்டு சட்ட மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்க” செய்யப்பட வேண்டும் என்றும் கையெழுத்திட்ட நாடுகள் அதில் குறிப்பிட்டுள்ளன.

“நம்பகமான முறையில் போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன்... உக்ரேனுக்கான ஒரு பன்னாட்டுப் படையை” அனுப்ப இந்தப் பிரகடனம் அழைப்பு விடுக்கிறது. மேலும், பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்கத் தலைமையிலான “போர் நிறுத்தக் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு பொறிமுறையை” நிறுவவும் இது முன்மொழிகிறது. அத்துடன், “எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் ஆயுதமேந்தியத் தாக்குதலை நடத்தினால் உக்ரேனை ஆதரிப்பதற்கான பிணைப்புறுதிமிக்க கடப்பாடுகள்” மற்றும் “உக்ரேனுடன் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான” திட்டங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக இத்தகைய மிரட்டல்களை விடுத்த அதே வேளையில், உச்சிமாநாட்டில் பங்கேற்ற ஏழு ஐரோப்பிய வல்லரசுகள்—பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் டென்மார்க்—கிரீன்லாந்து குறித்த ஒரு “கூட்டு அறிக்கையையும்” வெளியிட்டன. ட்ரம்ப் நிர்வாகம் சட்டவிரோதமாக வெனிசுவேலாவை ஆக்கிரமித்து, அந்நாட்டை ஆளப்போவதாகவும் அதன் எண்ணெயைச் சூறையாடப்போவதாகவும் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்த அறிக்கை வாஷிங்டனை ஒரு “அவசியமான கூட்டாளி” என்று புகழ்ந்து தள்ளியது. இருப்பினும், இது டென்மார்க்கிற்கு எதிரான அமெரிக்காவின் போர் மிரட்டல்களை நோக்கமாகக் கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“கிரீன்லாந்து உள்ளிட்ட டென்மார்க் இராச்சியம் நேட்டோவின் ஒரு பகுதியாகும்” என்பதை நினைவுபடுத்தியதோடு, “இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எல்லைகளின் மீறத்தகாத தன்மை உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சாசனக் கோட்பாடுகளை நிலைநிறுத்த” அழைப்பு விடுத்த அந்த அறிக்கை பின்வருமாறு அறிவித்தது: “கிரீன்லாந்து அதன் மக்களுக்குச் சொந்தமானது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான விஷயங்களில் முடிவெடுப்பது, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கே மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகும்” என்று அது குறிப்பிட்டது.

இந்த அறிக்கை ஒரு தெளிவான மற்றும் பலவீனமான அம்சத்தைக் கொண்டுள்ளது. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதிலிருந்து வாஷிங்டனைத் தடுக்க, இது சர்வதேச சட்டம் மற்றும் நேட்டோ ஒற்றுமையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தின் வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பும், டென்மார்க்கிற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவோம் என்ற மிரட்டலும், சர்வதேச சட்டம் மற்றும் நேட்டோ கூட்டணி ஆகிய இரண்டின் மீதும் அமெரிக்காவிற்கு இருக்கும் அலட்சியத்தையே வெளிப்படுத்துகின்றன.

இருப்பினும், பாரிஸ் உச்சிமாநாட்டிற்குப் பிந்தைய கருத்துக்களில் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைத் தொடர் மிரட்டல்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தின. இத்தாலியின் தீவிர வலதுசாரி அரசாங்கம் உக்ரேனுக்குப் படைகளை அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தாலும், ஐரோப்பாவின் பிற முக்கிய வல்லரசுகளின் தலைவர்கள், ஒருவேளை போர் நிறுத்தம் எட்டப்பட்டால் ரஷ்யாவிற்கு எதிராக எதிர்காலத்தில் படைகளை நிலைநிறுத்துவதற்கான தங்களது திட்டங்களை விவரித்தனர்.

உச்சிமாநாடு முடிவடைந்ததும் பிரான்ஸ் 2 தொலைக்காட்சியின் மாலை நேரச் செய்திகளில் பேசிய மக்ரோன், “உக்ரேனிய இராணுவத்தை மறுசீரமைப்பதில் நாங்கள் பங்கேற்போம்” என்று கூறினார். “போர் நிறுத்தத்திற்குப் பிறகு உக்ரேனில் அமைதியைப் பேணுவதற்காக ஆயிரக்கணக்கான படையினர்கள் அங்கு நிலைநிறுத்தப்படலாம். இது எங்களது வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கும், மேலும் இது முறையாகத் திட்டமிடப்படும்,” என்று அவர் அறிவித்தார். 2024-ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடும் மக்கள் எதிர்ப்பையும் மீறி, உக்ரேனுக்குப் படைகளை அனுப்புவது குறித்து அவர் மீண்டும் மீண்டும் அளித்து வரும் உறுதிமொழியை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராக இருக்கும் வகையில், ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் படைகளை உக்ரேன் மண்ணில் நிலைநிறுத்துவது குறித்த இன்னும் விரிவான வாக்குறுதிகளை முன்வைத்தார்.

“இது, ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படும் பட்சத்தில், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு நோக்கப் பிரகடனமாகும். உக்ரேனுடன் நீண்டகாலம் துணை நிற்போம் என்ற எங்களது உறுதியான கடப்பாட்டின் ஒரு முக்கியப் பகுதி இது,” என்று அவர் கூறினார். மேலும், “இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பது, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் உக்ரேன் மண்ணில் செயல்படுவதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது. ... எங்களது ஒருங்கிணைப்பு மையத் திட்டங்களுடன் இணைந்து, போர் நிறுத்தத்திற்குப் பிறகு பிரிட்டனும் பிரான்சும் உக்ரேன் முழுவதும் ‘இராணுவ மையங்களை’ அமைக்கும். இது படைகளை நிலைநிறுத்தவும், உக்ரேனின் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களுக்கான பாதுகாக்கப்பட்ட வசதிகளை உருவாக்கவும் உதவும்,” என்றார்.

ஜேர்மன் சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேர்லினின் திட்டங்களில் “உதாரணமாக, ஒரு போர் நிறுத்தத்திற்குப் பிறகு அண்டை நேட்டோ பகுதிகளில் உக்ரேனுக்கான படைகளை நிலைநிறுத்துவதும் அடங்கும்” என்றார். ஒரு கற்பனையான ரஷ்ய-உக்ரேனிய போர் நிறுத்தத்தின் நிபந்தனைகள் தெரிந்தவுடன், ஜேர்மன் இராணுவ நடவடிக்கையின் அளவு குறித்து ஜேர்மன் அரசாங்கமும் நாடாளுமன்றமும் முடிவெடுக்கும் என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். “நாங்கள் கொள்கை ரீதியாக எதையும் நிராகரிக்கவில்லை,” என்று மெர்ஸ் கூறினார்.

கிரீன்லாந்து அறிக்கையைப் போலவே, இந்த ரஷ்யக் கொள்கையும் அதிரடியான முரண்பாடுகளால் சிதைந்துள்ளது. ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும், இவர்களது திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு போர் நிறுத்தம் எப்படி அல்லது எப்போது பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் என்பதையோ, அல்லது ரஷ்யாவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே உக்ரேன் ஒரு நடுநிலை நாடாக இருக்க வேண்டும் என்ற மாஸ்கோவின் கோரிக்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையோ விளக்கவில்லை.

அவர்கள் ஒருவேளை இவ்வாறு சொல்லக்கூடும்: “உக்ரேன் வெற்றி பெறும் என்று நம்பி, ரஷ்யாவுடன் போரிட நாங்கள் உக்ரேனை வற்புறுத்தினோம். ட்ரம்ப் எப்படி வெனிசுவேலாவைச் சூறையாட விரும்புகிறாரோ, அதேபோல ரஷ்யாவைச் சூறையாட அந்த வெற்றியைப் பயன்படுத்த நாங்கள் விரும்பினோம். ஆனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, உக்ரேன் லட்சக்கணக்கான உயிர்ச்சேதங்களைச் சந்தித்துத் தோல்வியடைந்து வருகிறது. ஆனால், இதைப் பற்றி உங்களிடம் பொய் சொல்வதே எங்களுக்கு எளிதாக இருந்தது. சமூக செலவினங்களை வெட்டிக் குறைப்பதற்கும் மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கும் மாஸ்கோவை அரக்கத்தனமாக சித்தரிப்பது ஒரு சிறந்த சாக்குப்போக்காக இருந்தது. மிகவும் நேர்மையாகச் சொன்னால், எத்தனை உக்ரேனியர்கள் இறந்தார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இப்போது எப்படியோ அமெரிக்கா எங்கள் மீது போர் பிரகடனம் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எங்களை நம்புங்கள், எங்களிடம் இன்னும் பல சிறந்த யோசனைகள் உள்ளன.”

இருப்பினும், ஐரோப்பிய அரசாங்கங்களிடமிருந்து இவ்வளவு நேர்மையை எதிர்பார்ப்பது கடினம். ட்ரம்ப் நேட்டோ கூட்டணியைப் பிளவுபடுத்தப் போவதாகவும், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டுவதால் அமெரிக்கா-ஐரோப்பா இடையே வெடிக்கும் நிலையிலான பதற்றம் நிலவுகிறது. இருப்பினும், அவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவத் தீவிரத்தைத் திட்டமிடுவதைத் தொடர்கின்றனர் மற்றும் ஐரோப்பாவில் தங்களது போர் திட்டங்களின் மையத்தில் வாஷிங்டனை வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

போரை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் அவசியமானது: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும், முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் நிதிய தன்னலக்குழுக்களின் கைகளிலிருந்து அதிகாரத்தைப் பறிப்பதை நோக்கமாகக் கொள்வதும் அவசியம். இதன் பொருள், சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஐரோப்பா, உக்ரேன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடுவது அவசியமாகும்.

Loading