ஈரானுக்கு எதிராக "கொடூரமான மரணப் படையை" பயன்படுத்தப் போவதாக வெள்ளை மாளிகை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஆஸ்திரேலியாவின் அம்பர்லியில் உள்ள ரோயல் ஆஸ்திரேலிய விமானப்படை தளத்திலிருந்து அமெரிக்க விமானப்படையின் B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் புறப்படுகிறது. ஆஸ்திரேலியா, செப்டம்பர் 11, 2024. [AP Photo]

வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஈரான் முழுவதும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை ஒரு சாக்குப்போக்காக வைத்துக்கொண்டு, அந்த நாடு மீது தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக அச்சுறுத்தி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட், ஜனாதிபதி ட்ரம்ப் தேவை என்று கருதினால், “அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான மரணப் படையை பயன்படுத்த தயங்கமாட்டார். இது ஈரானுக்கு மற்றவர்களை விட நன்றாகவே தெரியும்” என்று கூறினார்.

தலைமைத் தளபதியின் மேசையில் இருக்கும் பல விருப்பத் தேர்வுகளில் வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாக இருக்கும் என்று லெவிட் கூறினார்.

செவ்வாய்க்கிழமை ஈரான் குறித்த இராணுவ விளக்கத்தைப் பெறுவதுக்கு ட்ரம்ப் தயாராக உள்ளார். பென்டகன், ஈரான் மீதான பல்வேறு வகையான தாக்குதல் தேர்வுகளை ட்ரம்பிடம் சமர்ப்பிக்கிறது. இது குறித்து திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், “கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதல்களையும் தாண்டி, ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைப்பதும் இதில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2025-ல், இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய 12 நாள் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு அமெரிக்க B-2 ஸ்டெல்த் போர் விமானங்கள் போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் இருந்த அணுசக்தி நிலையங்கள் மீது பதுங்கு குழியை ஊடுருவித் தக்கும் 14 பஸ்டர் குண்டுகளை வீசின. இது ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் பெரும் பகுதியை தாக்கி அழித்தது.

கடந்த திங்கள்கிழமை மாலை, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் “உடனடியாக அமலுக்கு வரும் வகையில்” 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

ட்ரம்ப்பின் சமீபத்திய அச்சுறுத்தல்கள், கடந்த டிசம்பர் இறுதியில் மார்-ஏ-லாகோவில் (ட்ரம்பின் மாளிகை) இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவர் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு விடுத்த அச்சுறுத்தல்களைப் பிரதிபலிக்கின்றன. ஈரான் மீதான தாக்குதல்கள் அந்தச் சந்திப்பின் முக்கிய விவாதப் பொருளாக இருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. “ஈரான் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றால், அவர்களை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்குவோம்” என்று அந்தச் சந்திப்பில் ட்ரம்ப் கூறியிருந்தார்.

திங்களன்று லெவிட் மேலும் கூறுகையில்: “உண்மை என்னவென்றால், ஈரானைப் பொறுத்தவரை ஜனாதிபதி ட்ரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்றார்.

கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில், உலகம் முழுவதும் போர் தொடுக்க ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரம் இருப்பதாக ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அந்த நேர்காணலில் அவர், “எனக்கு சர்வதேச சட்டம் தேவையில்லை” என்று அறிவித்தார். தலைமைத் தளபதி என்ற முறையில் தனது அதிகாரத்திற்கு என்ன வரம்புகள் உள்ளன என்று கேட்கப்பட்டதற்கு, ட்ரம்ப்: “ஆம், ஒரு விஷயம் இருக்கிறது. என்னுடைய சொந்த அறநெறி. என்னுடைய சொந்த மனநிலை. அது மட்டும்தான் என்னைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம்” என்று பதிலளித்தார்.

புலனாய்வு பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ், தனது சப்ஸ்டாக் இணையத் தளத்தில், வெனிசுவேலா நடவடிக்கைக்கும் ஈரான் மீதான அச்சுறுத்தல்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறிப்பிட்டுள்ளார். “வெனிசுவேலா நடவடிக்கையின் நோக்கம், அமெரிக்காவின் பொருளாதாரப் போட்டியாளரான சீனா, வெனிசுவேலாவிலிருந்து மலிவான கச்சா எண்ணெயை வாங்குவதைத் தடுப்பதே ஆகும்” என்று ஹெர்ஷ் எழுதியுள்ளார். வெனிசுவேலா எண்ணெயை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது.

“அடுத்த இலக்கு ஈரான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு எண்ணெய் வழங்கும் மற்றொரு நாடு, மேலும் உலகின் நான்காவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளது” என்று ஹெர்ஷ் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை “சீனா மீதான அமெரிக்காவின் எரிசக்தி போரின் தொடக்கம்” என்று அவர் வர்ணித்துள்ளார்.

ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையுடன் பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி திங்களன்று கூறுகையில்: “நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போருக்குத் தயாராக இருக்கிறோம்—முந்தைய போரை விட அதிகத் தயார் நிலையில் உள்ளோம். அதே சமயம் பேச்சுவார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஈரானிய அரசு ஊடகங்கள், திங்களன்று பல நகரங்களில் நடைபெற்ற அரசு ஆதரவுப் பேரணிகள் மற்றும் கலவரத்தில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் இறுதிச் சடங்கு ஊர்வலங்களின் காட்சிகளை ஒளிபரப்பின. “அமெரிக்க-சியோனிச பயங்கரவாதத்திற்கு எதிரான ஈரானிய எழுச்சி” எனும் பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்காக, தெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் போராட்டங்கள் குறித்த செய்திகளை மிகக் கடுமையான தணிக்கையுடன் ஒளிபரப்பிய அரசுத் தொலைக்காட்சி, பின்னர் “தேசிய ஒற்றுமையை” மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறி, ஆட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை ஒளிபரப்பத் தொடங்கியது.

ட்ரம்ப்பின் உலகளாவிய இராணுவ விரிவாக்கத்திற்கு ஜனநாயகக் கட்சி எந்தவொரு தீவிரமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. பொக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய செனட்டர் மார்க் வார்னர், “ஈரானிய ஆட்சி மிகவும் மோசமானது, நான் ஈரானிய மக்களுடன் நிற்கிறேன்” என்று அறிவித்தார்.

கடந்த டிசம்பரில், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், விப் கேத்ரின் கிளார்க் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீட் அகுய்லர் உள்ளிட்ட 115 பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர், 901 பில்லியன் டாலர் பாதுகாப்பு அங்கீகார மசோதாவிற்கு வாக்களித்தனர். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய வருடாந்திர இராணுவச் செலவினத்தை அங்கீகரிக்கிறது.

ஈரானிய நாணயமான ரியாலின் வீழ்ச்சி மற்றும் விண்ணை முட்டும் பணவீக்கத்தால் தூண்டப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில், ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. பைனான்சியல் டைம்ஸ் பத்தரிகையின் அறிக்கையின்படி, கடந்த டிசம்பரில் வருடாந்திர பணவீக்கம் 42 சதவீதத்தை எட்டியது, அதே நேரத்தில் உணவுப் பணவீக்கம் 72 சதவீதமாக உயர்ந்தது. குறிப்பாக, ரொட்டியின் விலை 113 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான ரியாலின் மதிப்பு 45 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி, பல தசாப்த கால அமெரிக்கத் தடைகளின் நேரடி விளைவாக ஏற்பட்டதாகும். 2000 மற்றும் 2012-க்கு இடையில், ஈரானிய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 4.4 சதவீதம் வளர்ந்தது. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்ட பிறகு, வளர்ச்சி வெறும் 1.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் எண்ணெய் ஏற்றுமதி, ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு, மே 2018-ல் ஒரு நாளைக்கு 2.8 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவிலிருந்து 300,000 பீப்பாய்கள் வரை வீழ்ச்சி கண்டது.

கடந்த ஞாயிறு இரவு, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, “இஸ்லாமிய குடியரசின் அடக்குமுறை —இதுவே அந்த ஆட்சியின் சமூக அடித்தளம் சுருங்கி வருவதற்கான அறிகுறியாகும்— மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக அடிபணியாத ஈரான் மீது மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்கள் காட்டும் இடைவிடாத பகைமை ஆகியவற்றின் காரணமாக, ஈரானில் நடக்கும் போராட்டங்களைப் பற்றிய ஒரு துல்லியமான சித்திரத்தைப் பெறுவது கடினமாக உள்ளது.

“ஆனால், ஈரானில் உள்ள எந்தவொரு முற்போக்கான போக்கும் ட்ரம்ப்பின் இந்த போலி ‘ஆதரவை’ உடனடியாக நிராகரிக்க வேண்டும். வரவிருக்கும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தலைக் கண்டிக்க வேண்டும் மற்றும் ஈரானின் பொருளாதாரத்தை நெரிக்கும் தண்டனைக்குரிய தடைகளை உடனடியாக நீக்கக் கோர வேண்டும்” என்று WSWS ன் அறிக்கை கூறுகிறது.

Loading