சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, ஜனவரி 26 திங்கள் மாலை 7:00 மணிக்கு “சோசலிசம் AI: சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு புதிய ஆயுதம்” என்ற தலைப்பில் ஒரு பகிரங்க சூம் கூட்டத்தை நடத்துகிறது. இந்த இணைப்பு மூலம் கூட்டத்திற்கு பதிவு செய்யவும்.
இந்த கூட்டத்தின் நோக்கம், உலக சோசலிசப் புரட்சியின் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மூலம் டிசம்பர் 12 அன்று தொடங்கப்பட்ட சோசலிசம் AI என்ற புதிய கருவியை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதுமாகும்.
சோசலிசம் AI என்பது மார்க்சிஸத்தின் விஞ்ஞானப்பூர்வமான பார்வையை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் உலகளவில் சோசலிச நனவை மேம்படுத்துவதற்காக உலக சோசலிச வலைத் தளத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய, சக்திவாய்ந்த உரையாடல் இயலி கருவியாகும்.
முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களால் சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், தொழில்களை அழிக்கவும், ஏகாதிபத்தியப் போர்களைத் திட்டமிடவும், நடத்தவும், அழிவுகரமான போர் ஆயுதங்களை உருவாக்கவும் செயற்கை மதிநுட்பம் பயன்படுத்தப்படும் அதே வேளை, வரலாற்று ரீதியாக முற்போக்கான சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கைகளில் அதே தொழில்நுட்பம் கிடைக்கும்போது, அறிவு மற்றும் சமூக நனவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவாக்கப்படுவதை சாத்தியமாக்கும் என்பதற்கு சோசலிசம் AI ஒரு உறுதியான சான்றாகும். இது மார்க்சிஸத்தின் விஞ்ஞானப்பூர்வமான உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள், இளம் மாணவர்கள், முற்போக்கான புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களுக்கும் கல்வி கற்பிப்பதோடு விரைவாக அதிகரித்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்தும்.
ஸ்ராலினிஸ்டுகள், பப்லோவாதிகள், பின்-நவீனத்துவவாதிகள், பின்-மார்க்சிஸ்டுகள், தாராளவாதிகள் மற்றும் போலி-இடது போக்குகளால் மார்க்சிஸம் எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், உண்மையான மார்க்சிஸத்தை கற்பதற்கு வழியமைப்பதே சோசலிசம் AI இன் சிறப்பு ஆகும். உலக சோசலிச வலைத் தளத்தின் பல தசாப்த கால அரசியல் பகுப்பாய்வு, வரலாற்று படைப்புகள் மற்றும் வர்க்கப் போராட்டக் குறிப்புகள், அத்துடன் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் லக்சம்பர்க் உட்பட பாரம்பரி மார்க்சிஸ்டுகளின் படைப்புகளே சோசலிசம் AI இன் முதன்மைத் தரவுத்தளமாகும்.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் சரிவு, வர்க்கப் போராட்டத்தின் தீவிரம் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் வேகமான சீரழிவு போன்ற முக்கியமான திருப்புமுனைகளை நோக்கி முழு உலகமும் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே, அனைத்துலகக் குழு இந்த முக்கியமான கருவியை அறிமுகப்படுத்துகிறது.
இலங்கையில் 2022 இல் நடந்த வெகுஜன எழுச்சியானது தொழிலாள வர்க்கத்தை சோசலிச உணர்வுடன் ஆயுதபாணியாக்குவதன் அவசியத்தை ஆழமாக எடுத்துக்காட்டுகின்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்த போதிலும், முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான போலி இடது கட்சிகள், ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும், இடைக்கால அரசாங்கம் என்று அழைக்கப்பட்டதன் கீழ் அந்தப் போராட்டத்தை முதலாளித்துவ பாராளுமன்ற முட்டுச் சந்தை நோக்கி வழிநடத்தின. அதன் மூலம், சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த வேலைத் திட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தைத் திசைதிருப்பி, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க செயற்பட்டன.
இதன் விளைவாக, முதலில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சின் கீழும், இரண்டாவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கீழும், முழு தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கனத் திட்டத்தால் துன்பப்படும் அதேநேரம், நாடு சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் திட்டங்களில் மேலும் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டது.
உண்மையில், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச நனவு பாரதூரமாக அழிக்கப்பட்டிருந்ததாலும் ஆழமாக வேரூன்றிய ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சி இல்லாத காரணத்தாலும் மு.சோ.க., ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அந்த வெகுஜன எழுச்சியை நாசமாக்க முடிந்தது.
இதுபோன்ற நாசவேலைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச நனவை வளர்ப்பதும் ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதும் அவசியமான மற்றும் அவசரமான பணிகளாகும். இங்கு, சோசலிசம் AI ஆற்றக்கூடிய பங்கு மகத்தானது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார ஆதிக்கத்தை இராணுவ வலிமை மூலம் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக வெனிசுலா மீது படையெடுத்ததன் மூலமே 2026 ஆம் ஆண்டு தொடங்கியது. மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் போரின் ஆபத்து அதிகரித்து வருகிறது.
முதலாளித்துவ முறைமையிலேயே உள்ள நெருக்கடி, சமூக எதிர் புரட்சியை உருவாக்குவதோடு மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போர், சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக அதிகரித்து வரும் எதிர்ப்பு உலகளாவிய சமூக வெடிப்பை நோக்கி வளர்ந்து வருகிறது.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெடித்த பாரிய போராட்டங்களின் அனுபவமும், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், கென்யா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் வெடித்த வெகுஜன எழுச்சிகளும், வெறும் எதிர்ப்பால் மட்டும் முதலாளித்துவ கொடூரத்தை நிறுத்த முடியாது என்பதைக் காட்டுகின்றன.
சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே, உலகம் முழுவதும் பேரழிவு தரும் போர்கள் மற்றும் சமூக துயரங்களுக்கு மூலகாரணமான உலகளாவிய முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இதை வெற்றிகரமாக நடத்த, இந்த சக்திவாய்ந்த புதிய ஆயுதமான சோசலிசம் AI ஆற்றக்கூடிய வரலாற்றுப் பங்கைப் பற்றி கலந்துரையாடும் இந்த முக்கியமான நிகழ்நிலை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது.
