கிரீன்லாந்து மீது அமெரிக்க-ஐரோப்பிய மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ட்ரம்ப்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சுங்கவரிப் போர் தீவிரமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரோயல் டென்மார்க் கடற்படையைச் சேர்ந்த இராணுவக் கப்பலான HDMS Knud Rasmussen, கிரீன்லாந்தின் நூக் அருகே ரோந்து செல்கிறது, வியாழக்கிழமை, ஜனவரி 15, 2026. [AP Photo/Evgeniy Maloletka]

பெரும் அரசியல் நெருக்கடிகள் தவிர்க்க முடியாமல் திருப்புமுனைகளை உருவாக்குகின்றன. அதில் நீண்டகாலமாக மறைக்கப்பட்டிருக்கும் அத்தியாவசிய மோதல்கள் மற்றும் பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டின் மீதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான ட்ரம்ப் நிர்வாகத்தின் மோதல் தற்போது இந்தக் கட்டத்தை எட்டியுள்ளது.

ட்ரம்பின் முதல் பதவிக்காலம் மற்றும் அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் தொடங்கிய உலகளாவிய வர்த்தகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கிய கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில், வாஷிங்டனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய வல்லரசுகள் தங்களது இராணுவ வலிமையை அதிகரித்து வந்துள்ளன. ஐரோப்பிய இராணுவங்கள் மற்றும் உக்ரேன்-ரஷ்ய போருக்கு நிதி திரட்டுவதற்காக, அவர்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் சமூகச் செலவினங்களைக் குறைத்து, தொழிலாளர்களை வறுமையில் தள்ளி வருகின்றனர். நேட்டோ கூட்டணியில் ஐரோப்பா தனது நியாயமான பங்கைச் செலவிடுவதை உறுதி செய்வதன் மூலம், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த முடியும் என்று ஐரோப்பிய அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கை —ஜனவரி 3 அன்று ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்துவதற்காக அவர் வெனிசுவேலா மீது நடத்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆட்சி மாற்றத்திற்காக ஈரான் மீது குண்டு வீசுவதாக அவர் விடுத்த மிரட்டல்களுக்குப் பிறகு—மேற்கூறிய நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது. நேட்டோ நாடுகளுக்கு இடையே வன்முறை மோதலாக மாறக்கூடிய அளவுக்குத் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் முறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருப்பது இப்போது இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

கடந்த வாரம், ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து கிரீன்லாந்தின் மூலோபாய இடங்களையும், கனிமங்களையும் பாதுகாப்பதற்காக அதன் மீது அமெரிக்கக் கட்டுப்பாடு வேண்டும் என்று ட்ரம்ப் கோரினார். இதற்குப் பதிலடியாக, ஏழு ஐரோப்பிய நாடுகள் (பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து) சில டசின்கணக்கான படையினர்களை அந்தத் தீவுக்கு அனுப்பின. இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மேலும், “ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பு” மற்றும் நேட்டோ மீதான விசுவாச உறுதிமொழிகளுடனேயே இது மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதியை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக ஆத்திரமடையச் செய்தது. ஏனெனில் அவர் ஒரு கூட்டணியை அல்ல, மாறாக உலக மேலாதிக்கத்தையே எதிர்பார்க்கிறார்.

கடந்த சனிக்கிழமையன்று, ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) வலைத் தளத்தில் இந்த இராணுவப் படைப்பிரிவை விமர்சித்து இவ்வாறு பதிவிட்டார்: “இது எமது பூமியின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்விற்கே மிகவும் ஆபத்தான சூழலாகும். இந்த மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடும் நாடுகள், தாங்க முடியாத அல்லது நீடிக்க முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.”

வாஷிங்டனுக்கு கிரீன்லாந்தை விற்பனை செய்வதை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால், இந்த வரி 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயரும். ஏற்கனவே பிரிட்டிஷ் பொருட்கள் மீது 10 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியப் பொருட்கள் மீது 15 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை உலகின் இரு மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்புகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகத்தைச் சிதைக்கக்கூடும். இது உலகப் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளன. இந்த இராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற ஏழு அரசாங்கங்களும் டென்மார்க்குடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் அவர்கள் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் வீழ்ச்சி ஏற்படும் என ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

“நேட்டோ உறுப்பினர்களாக, அட்லாண்டிக் கடந்த நாடுகளின் பொதுவான நலனாக, ஆர்க்டிக் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னரே ஒருங்கிணைக்கப்பட்ட டென்மார்க்கின் ‘ஆர்க்டிக் உறுதிப்பாடு’ என்ற பயிற்சி, இந்தத் தேவையை நிவர்த்தி செய்கிறது. இது யாருக்கும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது,” என்று அந்த அறிக்கை கூறியது. மேலும் அந்த அறிக்கை, “சுங்கவரி அச்சுறுத்தல்கள் அட்லாண்டிக் கடந்த உறவுகளைச் சிதைக்கின்றன மற்றும் ஒரு ஆபத்தான சரிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயத்தைக் கொண்டுள்ளன. எங்களது எதிர்வினையில் நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் நிற்போம்,” என்றும் சேர்த்துக் கொண்டது.

வாஷிங்டன் உடனான இலண்டனின் “சிறப்பு உறவு” மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக வெளியேறியதிலிருந்து அதன் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத அந்தஸ்து இருந்தபோதிலும், பிரித்தானியா பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் ட்ரம்பை விமர்சித்து தனது சொந்த அறிக்கையை வெளியிட்டார். “நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பைப் பின்பற்றுவதற்காக, அவர்கள் மீது சுங்கவரி விதிப்பது முற்றிலும் தவறானது,” என்று அவர் கூறினார். “கிரீன்லாந்து குறித்த எங்களது நிலைப்பாடு மிகத் தெளிவானது: அது டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதி, அதன் எதிர்காலம் கிரீன்லாந்து மக்கள் மற்றும் டென்மார்க் மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பல அவசர முடிவுகளை எடுத்தனர். ஐரோப்பிய நாடாளுமன்றம், திட்டமிடப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தது. 18ம் திகதி இரவு பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய தூதர்களின் கூட்டத்தில், அமெரிக்க தயாரிப்புகள் மீது 93 பில்லியன் யூரோ மதிப்பிலான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பழிவாங்கும் சுங்கவரி தொகுப்பு விதிக்கப்பட்டது. மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உச்சிமாநாட்டை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா அறிவித்துள்ளார்.

“ட்ரம்பின் அமெரிக்க தயாரிப்புகள், ஐரோப்பிய சந்தைக்குள் வரி இல்லாத பரிமாற்றத்தை செய்ய முடியாது,” என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள வலதுசாரி ஐரோப்பிய மக்கள் கட்சி கூட்டணியின் தலைவர் மான்பிரெட் வெபர் கூறினார். அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தை தான் “முடக்கி” வைத்திருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்ட வெபர், “இனிமேல், நாங்கள் பலமற்றவர்கள் அல்ல,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டாய எதிர்ப்புக் கருவியை (ACI) பயன்படுத்துமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விடுத்த அழைப்பை பேர்லின் (ஜேர்மனி) ஆதரிக்கக்கூடும் என்று வெபர் மேலும் கூறினார். “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. அது நமக்கிருக்கும் ஒரு வாய்ப்பு,” என்று அவர் கூறினார். “வர்த்தக பசூக்கா” (Trade bazooka) என்று அழைக்கப்படும் இந்த ACI, ஐரோப்பிய அரசாங்க ஒப்பந்தங்களில் (பாதுகாப்புத் துறை உட்பட) இருந்து அமெரிக்க நிறுவனங்களைத் தடை செய்யவும், ஐரோப்பாவில் அமெரிக்க நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்தவும் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

பல தசாப்தங்களாக பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை முன்னர் தீர்மானித்த மரபுகள் மற்றும் அமைப்புக்கள் சரிந்து வருகின்ற நிலையில், உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையில், ஒரு மரண நெருக்கடி நிலவி வருகிறது. மீண்டும் ஒரு சுங்கவரிப் போர் வெடிப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் நிதி நெருக்கடிகள் ஏற்படும் அபாயத்தை சர்வதேச அளவில் தொழிலாளர்கள் எதிர் கொள்கின்றனர். மேலும், வாஷிங்டனின் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கை மற்றும் ஐரோப்பாவின் வேகமான மீள்ஆயுதமயமாக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது முக்கிய நேட்டோ நாடுகளுக்கு இடையே இராணுவ மோதலாக மாறக்கூடும்.

வாஷிங்டன், தனது ஐரோப்பிய “நட்பு நாடுகளை” விட மிகச் சிறந்த ஆயுத பலத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார ரீதியாகத் தற்கொலைக்குச் சமமான வெளியுறவுக் கொள்கையை அது சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 2022-ல் உக்ரேனில் ரஷ்யாவுடனான போரைத் தூண்டிய பைடென் நிர்வாகத்துடன் இந்த நாடுகள் உற்சாகமாக இணைந்து கொண்டன. இதன் மூலம், ரஷ்யா மற்றும் யூரேசிய எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களுக்கான தங்களின் அணுகலை இவர்கள் துண்டித்து கொண்டனர். ட்ரம்ப், இவர்கள் மீது வர்த்தகப் போரைத் தொடுத்த போதிலும், அதிக விலை கொண்ட அமெரிக்க எரிசக்தி இறக்குமதியையே அவர்கள் சார்ந்திருக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய பலவீனங்களை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் நன்கு அறிவர்: அதன் தொழில் துறை பலவீனம்; டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கக் கருவூலக் கடனாக வழங்கும் அமெரிக்க அரசாங்கத்தின் கடன் சுமை; மற்றும் தனது பங்குச் சந்தையைத் தாங்கிப் பிடிக்க அமெரிக்க டாலரின் உலகளாவிய பங்களிப்பைச் சார்ந்திருக்கும் நிலை ஆகியவை அவையாகும்.

உண்மையில், பெய்ஜிங் (சீனா) டாலரிலிருந்து விலகி, அமெரிக்கக் கடன் பத்திரங்களை வைத்திருப்பதை படிப்படியாகக் குறைத்து வரும் வேளையில், ஐரோப்பா தனது கையிருப்பில் அமெரிக்கக் கடன் பத்திரங்களைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஐரோப்பாவில் உள்ள நிதி நிறுவனங்கள் 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்கக் கடன் பத்திரங்களை வைத்துள்ளன. இதில் பிரிட்டன் (865 பில்லியன் டாலர்), பெல்ஜியம் (466 பில்லியன் டாலர்), லக்சம்பர்க் (421 பில்லியன் டாலர்), பிரான்ஸ் (376 பில்லியன் டாலர்) மற்றும் அயர்லாந்து (340 பில்லியன் டாலர்) ஆகியவை முன்னணியில் உள்ளன. இதன் மூலம், தங்களுக்கு எதிராக வர்த்தகப் போர் தொடுக்கும் மற்றும் தங்களது நிலப்பகுதியைக் கைப்பற்ற அச்சுறுத்தும் ஒரு அரசாங்கத்திற்கு நிதி வழங்கும் அபத்தமான சூழ்நிலையில் அவை உள்ளன.

இருப்பினும், கடந்த ஆண்டு, HSBC, Standard Chartered மற்றும் BNP Paribas போன்ற முக்கிய ஐரோப்பிய வங்கிகள் சீனாவின் எல்லை தாண்டிய வங்கிகளுக்கு இடையிலான கட்டண முறையான CIPS-இல் இணைந்தன. இது SWIFT அமைப்பு மற்றும் அமெரிக்க டாலரைத் தவிர்த்து, நாணயப் பரிமாற்றம் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு நிதி வழங்க அவர்களுக்கு வழிவகை செய்கிறது. அமெரிக்காவில் அரசாங்கக் கடன் நெருக்கடி மற்றும் நிதிச் சரிவைத் தூண்டும் வகையில், டாலரைக் கைவிடுவதன் மூலம் ட்ரம்பிற்கு எதிராகப் பழிவாங்கும் ஐரோப்பிய அச்சுறுத்தல்கள் குறித்த வதந்திகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த டிசம்பரில், “தூண்டுதலை இழுக்க ஐரோப்பா தயாராக இருக்கிறதா?” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தியாவின் எகனாமிக் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “ஐரோப்பியத் தலைமையிலுள்ள சிலர் ‘அணு ஆயுத விருப்பம்’ என்று விவரிக்கும் ஒரு முடிவைப்பற்றி தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர்: அதாவது, ஐரோப்பிய அரசாங்கங்களின் வசம் உள்ள அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை பெருமளவில் விற்பனை செய்து பணமாக்குவதாகும்.” பிரிட்டனின் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இந்த “அணு ஆயுத விருப்பத்தை” பின்வருமாறு விளக்கியது:

அமெரிக்காவில் பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஐரோப்பியத் தலைவர்கள் தீவிரமான எதிர் நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் வசம் உள்ள டிரில்லியன் கணக்கான அமெரிக்க அரசு கடன் பத்திரங்களைச் சந்தையில் கொட்டுவதுதான் அந்தத் திட்டம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு விரைவாக அவற்றை விற்பனை செய்வது, அமெரிக்க டாலரின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும், வங்கித் துறை முழுவதும் பணப்புழக்க நெருக்கடியை உருவாக்கும் மற்றும் கடன் வாங்குவதற்கான செலவை (வட்டி விகிதங்களை) பெருமளவில் உயர்த்தும். இது அமெரிக்க நிதித் துறையை 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியை விடக் கடுமையான ஒரு முடக்க நிலைக்குள் தள்ளிவிடும்.

எவ்வாறிருப்பினும், ட்ரம்பின் உலகளாவிய மேலாதிக்கம் மற்றும் ஆதிக்கத்திற்கான திட்டங்களோ அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் உலகளாவிய நிதிப் போர் திட்டங்களோ தொழிலாள வர்க்கத்திற்கு எதனையும் வழங்கப்போவதில்லை. அட்லாண்டிக் கடலின் இருபுறமும் உள்ள அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இராணுவவாதம், சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை முன்னெடுத்து வருகின்றன. அனைத்து நேட்டோ நாடுகளிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைத்து, ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுப்பதே இப்போதைக்கு உள்ள தீர்மானகரமான கேள்வியாக உள்ளது.

Loading