மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் மினியாபோலிஸில், கூட்டாட்சி குடிவரவு முகவர்களால், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய (ICU) செவிலியர் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி அரச தரப்பினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொள்வதிற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பின்வாங்கல் என்பது அதன் எதேச்சதிகாரப் போக்கைக் கைவிடுவதற்காக அல்ல, மாறாக அது ஒரு மறுசீரமைப்பு ஆகும். சர்வாதிகார அச்சுறுத்தல் எப்போதும் போல தற்போதும் மிகத் தீவிரமாகவே உள்ளது.
பொதுமக்களின் சீற்றம் மற்றும் போராட்ட அலைகளை எதிர்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, பிரெட்டியின் படுகொலைக்குப் பிறகு ட்ரம்பின் உயர்மட்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்ட மிகவும் ஆத்திரமூட்டும் பொய்கள் மற்றும் தாக்குதல்களைத் திரும்பப் பெற முயன்றுள்ளது. திங்களன்று, ஸ்டீபன் மில்லர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் ஆகியோரின் கருத்துக்களை வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் ஆதரித்துப் பேசவில்லை. இவர்கள் பிரெட்டியை சட்ட அமலாக்க அதிகாரிகளைக் “கொலை செய்ய” முயன்ற ஒரு “உள்நாட்டு பயங்கரவாதி” என்று முத்திரை குத்தியிருந்தனர். அதற்குப் பதிலாக லெவிட், “உண்மைகள் வழிநடத்த நாங்கள் அனுமதிப்போம்” என்று வலியுறுத்தினார், மேலும் “ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட வெள்ளை மாளிகையில் யாரும் மக்கள் காயப்படுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ விரும்பவில்லை” என்று ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறினார்.
அதே நேரத்தில், பிரெட்டியைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை முதலில் பரப்பிய மூத்த எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கிரிகோரி போவினோவை மினியாபோலிஸிலிருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது. பல முகவர்கள் அங்கிருந்து திரும்பப் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ட்ரம்பின் தொனியும் மாறியுள்ளது. வன்முறையைத் தூண்டியதாக மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் மீது முதலில் குற்றம் சாட்டிய ட்ரம்ப், தற்போது அவருடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் தாங்கள் “ஒரே மாதிரியான சிந்தனையுடன்” இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.
இந்த மாற்றம் என்பது, தார்மீக ரீதியான மறுபரிசீலனை அல்லது ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் ஏற்பட்டதல்ல. இது நாடு முழுவதும் வெடித்துள்ள பாரிய போராட்டங்கள், அதிகரித்து வரும் மக்களின் கோபம் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்து வளர்ந்து வரும் போராட்ட இயக்கத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். இதே நகரத்தில், ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்ட இரண்டு வாரங்களிலேயே அலெக்ஸ் பிரெட்டி கொல்லப்பட்டது, ட்ரம்பின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மிகவும் தீவிரமான அரசியல் நெருக்கடியைத் தூண்டியுள்ளது என்பதை வெள்ளை மாளிகை புரிந்து கொண்டுள்ளது.
இந்த மட்டுப்படுத்தப்பட்ட பின்வாங்கல், ட்ரம்பின் வன்முறை வெறியாட்டத்திற்கு ஜனநாயகக் கட்சி எவ்வாறு துணையாக இருந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த ஓராண்டாக, ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் ட்ரம்பை யாராலும் தடுக்க முடியாத ஒரு சக்தியாகச் சித்தரித்து வந்தனர். அடுத்த தேர்தல் வரை காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்றும் கூறி வந்தனர். உண்மையில், அரசியலமைப்பிற்கு எதிராக ட்ரம்ப் இத்தகைய வெறியாட்டத்தை முன்னெடுக்கும் திறன் என்பது, அனைத்து மட்டங்களிலும் உள்ள ஜனநாயகக் கட்சி அதிகாரிகளின் உடந்தை, மௌனம் மற்றும் கோழைத்தனத்தையே முழுமையாகச் சார்ந்துள்ளது.
இந்தத் தற்காலிகப் பின்வாங்கலை, அச்சுறுத்தல் நீங்கிவிட்டதற்கான ஆதாரமாகக் கருதுவது ஒரு பாரதூரமான, உயிருக்கே ஆபத்தான தவறாகும். ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தனது திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் கைவிடவில்லை. கிளர்ச்சிச் சட்டம் அமல்படுத்தப்படுவது இன்னும் பரிசீலனைக்காக மேசையில் உள்ளது. “முதல் நாளிலிருந்தே நான் ஒரு சர்வாதிகாரியாக இருப்பேன்” என்று பலமுறை கூறியிருந்த ட்ரம்ப், இப்போது அந்த அச்சுறுத்தலைச் செயல்படுத்தி வருகிறார். ஒரு கொடுங்கோலன், தன்னை மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, தனக்கு கீழுள்ள அதிகாரிகளில் சிலரை தற்காலிகமாக பலிகடா ஆக்குவது இது முதல் முறையல்ல. மேலும், ட்ரம்ப் இன்று செய்யும் எதையும் அடுத்த நாளே உடனடியாக அவரால் மாற்றியமைக்க முடியும்.
இது “ஜனநாயகத்தின்” வெற்றி என ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடகங்கள் ஆரம்பத்தில் கொண்டாடித் தீர்த்த நிலையில், இந்தப் பயங்கரவாத ஆட்சியைத் திட்டமிட்டு நடத்தும் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் பதவியில் இருக்கிறார் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை யாரும் பொறுப்பாக்கப்படவில்லை. அலெக்ஸ் பிரெட்டியைக் கொன்றவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர். இந்த குற்றத்தைத் தூண்டியவர்கள் —அனைவருக்கும் மேலாக ட்ரம்ப், அவருடன் வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) தற்காலிக இயக்குநர் டாட் லயன்ஸ் மற்றும் FBI இயக்குநர் காஷ் படேல் ஆகியோர்— இன்னும் அதிகாரத்திலேயே உள்ளனர்.
முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மக்கள் மத்தியில் மெத்தனத்தை பரப்பவும், பொதுமக்களின் கோபத்தைத் தணிக்கவும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் காட்டவும் வேகமாகச் செயல்பட்டு வருகின்றனர். திங்களன்று, மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ், ட்ரம்புடன் தனது தொலைபேசி உரையாடலை “பயனுள்ளது” என்று விவரித்தார். இதே டிம் வால்ஸ் தான், சரியாக 12 நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் “மினசோட்டா மக்களுக்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை நடத்துகிறார்” என்று துல்லியமாக விவரித்திருந்தார். இடையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
ட்ரம்பின் கூற்றுப்படி, வால்ஸ் அவரை “அழைத்துப் பேசி”, தாங்கள் “இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எல்லைப் பாதுகாப்பு அதிகாரி டொம் ஹோமனை மினசோட்டாவிற்கு அனுப்பவும், மாநிலக் காவலில் உள்ள “அனைத்துக் குற்றவாளிகளையும்” ICE அமைப்பிடம் ஒப்படைப்பதில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும் ட்ரம்ப் உறுதியளித்தார். இந்த அழைப்பு “மிகவும் நன்றாக” இருந்ததாகவும், தானும் வால்ஸும் “ஒரே மாதிரியான சிந்தனையில்” இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். மாநில மற்றும் உள்ளூர் பொலிஸின் முழு ஒத்துழைப்புடன், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அனைவரையும் வலுக்கட்டாயமாக ஒப்படைப்பதே தங்களது நிர்வாகத்தின் குறிக்கோள் என்பதை ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வால்ஸின் அலுவலகமும் தனது பங்கிற்கு, இதேபோன்றதொரு இணக்கமான தொனியையே எதிரொலித்தது. “வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்பாக, குடியேற்ற அமலாக்கத் துறையுடன் மிகவும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படவும்” மற்றும் “மினசோட்டாவில் உள்ள கூட்டாட்சி முகவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது” குறித்தும் பரிசீலிக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ நிக்கோல் குட் ஆகியோரின் படுகொலைகள் குறித்து “சுயாதீனமான விசாரணைகளை” உறுதி செய்ய ட்ரம்ப் உதவுவார் என்று கூட கவர்னர் அலுவலகம் உரிமை கோரியது.
இந்த அறிக்கை, பொதுமக்களின் அறிவாற்றலை அவமதிக்கிறது. இந்த அடக்குமுறையைத் தூண்டிய பிரதான சூத்திரதாரியான ட்ரம்ப், தனது நிர்வாகம் உத்தரவிட்டு தற்காத்துப் பேசிய குற்றங்கள் குறித்த முறையான விசாரணையை இப்போது மேற்கொள்வதற்கு உறுதி செய்வார் என்பதை இது குறிக்கிறது.
மினசோட்டாவில் நடக்கும் போராட்டங்களை முடக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் ஒருமித்த கருத்து, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையில் மினசோட்டா கவர்னர் வால்ஸின் கட்டுரை வெளியானதன் மூலம் வெளிப்பட்டது. பில்லியனர் ரூபேர்ட் முர்டோக்கிற்குச் சொந்தமான இந்தத் தீவிர வலதுசாரி பத்திரிகை, குடியேற்றம் தொடர்பான ட்ரம்பின் கையாளுதல் தேவையற்ற ஆத்திரமூட்டலாக இருப்பதாக விமர்சித்துள்ளது. மேலும், அலெக்ஸ் பிரெட்டியின் படுகொலை, “குறிப்பாக மினசோட்டாவில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ICE தன்னை எப்படி வழிநடத்திக் கொள்கிறது என்பதை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது” என்று தலையங்கம் எழுதியுள்ளது.
தனது கட்டுரையில், ட்ரம்பின் வழிமுறைகள் குறித்த சில விமர்சனங்களை மீண்டும் குறிப்பிட்டாலும், உண்மையில் மினசோட்டா, கைதுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக ICE முகவர்களிடம் ஒப்படைப்பதுக்கு ஒத்துழைத்து வருகிறது என்று வால்ஸ் வாதிட்டார். மேலும், “எமது குடியேற்றச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதையே அனைவரும் விரும்புகிறார்கள்” என்றும் அவர் அறிவித்தார்.
ஜனநாயகக் கட்சியை சூழ்ந்துள்ள மிகப்பெரிய பயம் சர்வாதிகாரம் அல்ல, மாறாக தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடாகும். கீழிருந்து எழும் ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பது, திசைதிருப்புவது மற்றும் ஒடுக்குவதுமே அவர்களின் முக்கிய அரசியல் நோக்கமாக உள்ளது. அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்கவும், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும், குறிப்பாக எவ்வித இடையூறுமின்றி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் பிரம்மாண்டமான இயந்திரத்திற்கு தொடர்ந்து நிதி வழங்கவும் தேவையான அனைத்து நிதி மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்குச் சாதகமான அரசியல் சூழலை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
ஜனவரி 23 அன்று மினசோட்டாவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான மக்களைத் திரட்டிய போராட்டங்கள், அரசியல் ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல. அவை தொழிலாளர் வர்க்கம் மற்றும் இளைஞர்களிடமிருந்து உருவானவை. ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கை வேகம் பெற்று வருகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்களில், எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து தொழிலாளர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
அமெரிக்க அரசியல் வாழ்வில் இதுவே மிக முக்கியமான வளர்ச்சியாகும். ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துவது, வெறுமனே ஒரு குற்றம் அம்பலப்பட்டது மட்டுமல்ல, ஒரு பாரிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் எழுச்சியே அவர்களைப் பயமுறுத்துகிறது. இது, சர்வாதிகாரத்தை அதன் வடிவத்தில் மட்டுமல்லாமல், அதன் சாராம்சத்திலும்—அதாவது மூலதனத்தின் சர்வாதிகாரத்தையே அச்சுறுத்துகிறது.
தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் நின்றுவிடக் கூடாது. ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அணிதிரட்டல்கள் தொடர வேண்டும், மேலும் தீவிரமடைய வேண்டும். நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட பாரிய நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களை வீதிக்குக் கொண்டு வந்த அனைத்துச் சூழல்களும் இப்போதும் நீடிக்கின்றன: ICE யின் படுகொலைகள் மற்றும் சோதனைகள், பாரிய தடுப்புக்காவல் மற்றும் நாடு கடத்தல்கள், உலகப் போர் தீவிரமடைதல், பாசிசத்தின் வளர்ச்சி, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாத ஒரு நிதிய தன்னலக்குழுவின் சமூக மேலாதிக்கம் ஆகியவை அப்படியே உள்ளன.
இந்த ஆட்சி பின்வாங்கவில்லை. அது மீண்டும் ஒன்று இணைகிறது. அதன் செயல்திட்டம் மாறவில்லை: உள்நாட்டில் ஒரு போலீஸ் அரசு, வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் வன்முறை மூலம் அருவெறுப்பான செல்வம் மற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதே அதன் நோக்கமாக உள்ளது. அமைப்பு ரீதியான ஐக்கியம் மற்றும் ஒரு புரட்சிகர சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதன் மூலம், தொழிலாள வர்க்கம் இன்னும் கூடுதலான உறுதிப்பாட்டுடனும், தெளிவான நோக்கத்துடனும் இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும்.
