இந்தியாவின் தொழிலாளர் சட்ட "மறுசீரமைப்பு": தொழிலாளர் உரிமைகள் மீதான ஒரு கொடூரமான தாக்குதல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தால் இந்திய உழைக்கும் வர்க்கம் அதீதமாக சுரண்டப்படுவதை மேலும் தீவிரப்படுத்த, அதி-வலது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் பரந்த மாற்றங்களைச் செய்துள்ளது. நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடங்கிய, ஒழுங்கமைக்கப்பட்ட துறை, மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கான, குறைந்தபட்ச ஊதியம், வேலைத் தரநிலைகள் மற்றும் கூட்டுப் பேரம் பேசும் உரிமைகளை நிர்ணயிக்கும் 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டங்களால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன.

ஊதியச் சட்டம், 2019; தொழில்துறை உறவுகள் சட்டம், 2020; சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020; மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம், 2020, ஆகிய புதிய தொழிலாளர் சட்டங்கள், தசாப்தங்களிலேயே தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 'மிகவும் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு' என்று பெருநிறுவன இந்தியாவால் பாராட்டப்பட்டுள்ளன. தலைமுறை தலைமுறைகளாக தொழிலாளர்களால் நீண்ட மற்றும் அநேகமாக கசப்பான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகளை நிர்வகிக்கும் சட்டப் பாதுகாப்புகளை இவை அகற்றிவிடுகின்றன.

தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைக்கு இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள் விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளே அவற்றின் மிகவும் பிற்போக்கான அம்சம் என கருதப்படுகிறது. அவை, தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தடை விதிக்கும் 'அத்தியாவசிய சேவைகள்' விதிகளின் வரம்பை பெரிதும் விரிவுபடுத்துவதுடன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவதற்கு பல புதிய சட்டத் தடைகளை அறிமுகப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாஜகவும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையையும் தொழிலாளர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்க எதிர்ப்பையும் பாரதூரமான வகையில் குற்றமாக்குகின்றனர்.

மோடியும் அவரது பாஜகவும் இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சியைப் பிடித்த உடனேயே, 2019-20-ல் நாடாளுமன்றத்தால் இந்த நான்கு தொழிலாளர் சட்டப் பிரிவுகளும் நிறைவேற்றப்பட்டன. பெருநிறுவனங்களுக்கான பிரமாண்ட வரிக்குறைப்புகள், விவசாயிகளுக்கு எதிரான மற்றும் பெருநிறுவன விவசாயத்திற்கு ஆதரவான பல சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியமை மற்றும் இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாக கீழிறக்கியமை போன்று, அரசாங்கம் வலதுசாரிப் போக்கின் பக்கம் கூர்மையாக திரும்புவதன் பகுதியாக இவை இருந்தன.

இருப்பினும், புதிய மத்திய தொழிலாளர் சட்டங்கள் இப்போது அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்துவிட்டதாக தொழிலாளர் அமைச்சர் கடந்த ஆண்டு இறுதியிலேயே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் பெருவணிக எஜமானர்களால் நீண்ட காலமாகக் கோரப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் தாமதித்தமையை பல்வேறு காரணிகள் விளக்குகின்றன. இவற்றில், 2020-21 இல் ஓராண்டு காலமாக நடந்த விவசாயிகள் போராட்டம், மற்றும் பெரும்பாலான மாநில அரசுகள் அவ்வாறு செய்வதற்குத் தேவையான சட்ட வழிமுறைகளை நிறுவிக்கொள்ளவதற்கு முன்னதாகவே இந்த மறுசீரமைப்புகளை அமுல்படுத்தினால், அவை தடம் புரண்டுவிடக்கூடும் என்ற பாஜக அரசாங்கத்தின் அச்சங்களும் அடங்கும். (இந்திய அரசியலமைப்பின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒழுங்குபடுத்தும் வகிபாகங்களைக் கொண்டுள்ளதுடன் அமுலாக்கத்திற்கான பொறுப்பு பெரும்பாலும் மாநிலங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் சட்டமானது அவை இரண்டுக்குமான இணைப்புப் பட்டியலில் உள்ள விஷயமாகும்.)

புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் அனைத்து மாநிலங்களும் தனது புதிய தொழிலாளர் சட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மோடி அரசாங்கம் இப்போது வலியுறுத்துகிறது. இன்றுவரை, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் எதிர்க்கட்சியால் ஆளப்படும் தமிழ்நாடு, கர்நாடகம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களில் குறைந்தபட்சம் 17 மாநிலங்கள், புதிய தொழிலாளர் சட்டங்களைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

சென்னை மாநகராட்சி தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு வெளியே சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் முகாம் அமைத்திருந்த போது [Photo: People's Archive of Rural India]

தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதலும், தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை மீதான புதிய கட்டுப்பாடுகளின் பட்டியலும், உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் தீவிரமடைந்து வரும் புவிசார் மூலோபாய மோதலுக்குமான அரசாங்கத்தினதும் இந்திய ஆளும் வர்க்கத்தினதும் பிரதிபலிப்பின் பிரதான அங்கங்களாகும். அதன் போட்டியாளர்களைப் போலவே, இந்திய முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாளர்களை சுரண்டும் அளவை பிரமாண்டமாக அதிகரித்து, சமூகத்தின் வளங்களில் பெரும் பங்கை மறு ஆயுதமயமாக்கலுக்கும் போருக்கும் செலவிடுவதில் உறுதியாக உள்ளது. நான்கு தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, பாஜக அரசாங்கம் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கும் வெளிப்படையான நோக்கத்துடன், கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களுக்கு ஒரு பிரதான உயிர்நாடியாக இருந்து வருகின்ற இந்தியாவின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ரத்து செய்தது. பெப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின் கீழ், சமூக ஆதரவிற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வரும் பாஜக அரசாங்கம், கடன் செலுத்துகைகளுக்குப் பிறகு பட்ஜெட்டின் மிகப் பிரமாண்டமான செலவினமாக இராணுவச் செலவினங்களை மேலும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

மோடியும் அவரது பாஜகவும் இந்தியாவின் 'இலகுவாக வணிகம் செய்வதற்கான' நிலைமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்களின் தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பை, ஒரு எளிமைப்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சி என விளம்பரப்படுத்தியுள்ளனர். உண்மையில், அவை மூலதனத்தின் நலன்களுக்காக வர்க்க உறவுகளை மறுசீரமைப்பதற்காக, பணியமர்த்துவதையும் பணிநீக்கம் செய்வதையும் எளிதாக்குதல், பாதுகாப்பற்ற வேலைவாய்ப்புகளை பெருமளவில் விரிவுபடுத்துதல், பொதுத்துறைப் பாதுகாப்புகளை பலவீனப்படுத்துதல், மற்றும் வேலையின்மை, நோய் மற்றும் முதுமையின் சமூகச் செலவுகளைத் தொழிலாளர்களின் மீது சுமத்துவது உட்பட அரசு தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தாக்குதலின் பிரதான அங்கமாகும்.

மோடியின் செயல்திட்டம், முன்னாள் மத்திய தொழிலாளர் செயலாளரான சுமிதா டோரா என்பவரால், ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழில் டிசம்பர் 5 அன்று 'தொழிலாளர் சட்டங்கள்: இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு திருப்புமுனை' என்ற தலைப்பில் வெளிப்படையாகக் கூறப்பட்டது. தொழிலாளர் விதிமுறைகளும் இணக்கப்பாட்டுத் தேவைகளும், நீண்ட காலமாக முதலீட்டாளர்களால் ஒரு 'சுமையாக' கருதப்பட்டன என்று கூறிய டோரா, இந்த புதிய கட்டமைப்பனாது இந்திய வணிகத்தின் 'போட்டியிடும் ஆற்றலை' மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக எழுதினார்.

வேலைப்பாதுகாப்பு, உண்மையான ஊதியம் குறைதல் மற்றும் நிலைமைகள் மோசமடைந்து வருவதை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருவதால், பத்து மத்திய தொழிலாளர் சங்கங்கள் பிப்ரவரி 12, வியாழக்கிழமை அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிற்சங்கங்களின் கோரிக்கை 'பட்டியலானது' தனியார்மயமாக்கல் மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு உட்பட பல பிரச்சினைகளை எழுப்பியிருந்தாலும், இந்த வேலைநிறுத்தத்தின் மையப் பிரச்சினை, பாஜகவின் பெருவணிக ஆதரவு தொழிலாளர் சட்ட 'மறுசீரமைப்பை' ரத்து செய்வதே ஆகும்.

கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள் அல்லது மதிய உணவு இடைவேளையில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு பரவலாக உள்ளது. இருப்பினும், ஸ்டாலினிஸ்டுகள் தலைமையிலான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) உட்பட தொழிற்சங்கங்கள், தொழிலாளர் வர்க்கத்தை காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா எதிர்க்கட்சி அணியுடன் பிணைக்க முயற்சிக்கும் தங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த வேலைநிறுத்தத்தை முதலாளித்துவ அமைப்பிடம் வேண்டுகோள் விடுப்பதோடு மட்டும் கட்டுப்படுத்த முயல்கின்றன. சமீப காலம் வரை முதலாளி வர்க்கத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்து வந்துள்ள காங்கிரஸ் கட்சி, 'முதலீட்டாளர் ஆதரவு' கொள்கைகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் சீன-விரோத கூட்டணிக்கும் ஒரு தீவிர ஆதரவாளராக உள்ளது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கம், பாஜகவின் தொழிலாளர் சட்டங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் உள்ள மாநில அரசாங்கங்களில் ஒன்றாகும்.

புதிய தொழிலாளர் சட்டங்களை மேலோட்டமாக ஆய்வு செய்தால்கூட, அவற்றின் தொழிலாளர் விரோதத் தன்மை அப்பட்டமாகத் தெரிகிறது.

ஊதியம் சம்பந்தமான சட்டம் -2019 ஆனது, குறைந்தபட்ச ஊதியச் சட்டம்-1948, போனஸ் செலுத்துதல் சட்டம்-1965 உட்பட நான்கு பிரதனா தொழிலாளர் சட்டங்களை ஒரே கட்டமைப்பிற்குள் இணைக்கின்றது. இதன் மைய அம்சம், மத்திய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள தேசிய 'அடிப்படை ஊதியம்' ஆகும். தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானதாகக் காட்டப்பட்டாலும், இந்தச் சட்டம் 1992 ஆம் ஆண்டின் ராப்டாகோஸ் பிரட் தீர்ப்பில் அடிப்படை ஊட்டச்சத்து மற்றும் சமூகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் நிறுவிய வாழ்க்கைக்கேற்ற ஊதியத் தரங்களுடன் ஊதியத்தை இணைப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறது. இந்த அத்தியாவசியத் தரங்களிலிருந்து குறைந்தபட்ச ஊதியங்களைப் பிரிப்பதன் மூலம், இந்தச் சட்டம் நாடு தழுவிய அளவில் வறிய மட்ட ஊதியங்களுக்கு வழிவகுப்பதோடு மூலதனத்திற்குச் சாதகமாக ஊதியக் கட்டுப்பாட்டை மையப்படுத்துவதுடன் திட்டமிட்ட முறையில் தொழிலாளர்களை சுரண்டுவதை எளிதாக்குகிறது.

'ஊதியம்' என்பதற்கான ஒரு சீரான வரைவிலக்கணத்தையும் அறிமுகப்படுத்துகின்ற இந்தச் சட்டம், வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து போன்ற படிகளை மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக மட்டுப்படுத்துகிறது. எந்தவொரு மேலதிக தொகையும், வருங்கால வைப்பு நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவுகளை கணக்கிடுவதற்காக அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். இது சமூகப் பாதுகாப்பு நிதிகளை ஓரளவு அதிகரித்தாலும், குறிப்பாக குறைந்த ஊதியம் பெறும் துறைகளில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தைக் குறைக்கும்.

ஏற்கனவே பேர்போன அளவுக்குப் போதுமானதாக இல்லாத அமுலாக்க வழிமுறைகள், தொழிலாளர் ஆய்வாளர்களுக்குப் பதிலாக 'ஆய்வாளர்-இணை-உதவியாளரை' நியமித்தல், இணைய அடிப்படையிலான ஆய்வுகளை விரிவுபடுத்துதல், மற்றும் வழக்குகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக முதலாளிகளை அபராதம் செலுத்த அனுமதிக்கும் தீர்வு விதிகளை அறிமுகப்படுத்துதல் மூலம் மேலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர் உறவுகள் சட்டம் (IRC) வேலைப் பாதுகாப்பின் மீதான ஒரு நேரடிக் தாக்குதலைக் குறிக்கிறது. முந்தைய கட்டமைப்பின் கீழ், ஒப்பந்தத் தொழிலாளர் முறை உண்மையான தற்காலிக அல்லது பருவகாலப் பணிகளுக்கு மட்டுமேயானதாகக் கருதப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பே முறையான நெறியாக இருந்தது. இந்த விதிகள் பல ஆண்டுகளாக தனியார் மற்றும் பொதுத்துறை முதலாளிகளால் திட்டமிட்டு மீறப்பட்டு வருகின்றன. இருப்பினும், இப்போது IRC இந்த முழுமையான, சட்டப்பூர்வமான காலவரையறைக்கு உரிய வேலைவாய்ப்பை முழுமையாக அங்கீகரிக்கிறது. நிரந்தர ஊழியர்களால் செய்யப்படும் வேலைகளுக்கு, நிரந்தரமாக்க வேண்டிய கடமைப்பாடு இல்லாமல், ஆறு முதல் பதினொரு மாத ஒப்பந்தங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகள் இப்போது அனுமதிக்கப்படுவார்கள்.

வேலையிலிருந்து நீக்குவதற்கு கட்டாய அரசாங்க அனுமதியின் வரம்பை 100 தொழிலாளர்களிலிருந்து 300 தொழிலாளர்களாக உயர்த்துவதன் மூலம், பணிநீக்கப் பாதுகாப்புகள் மேலும் சிதைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அறிவிப்பு மூலம் இந்த வரம்பை மேலும் உயர்த்தும் அதிகாரத்தை அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள், குறைந்தபட்ச வேலைப் பாதுகாப்பு விதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட வேலைத் தளங்களின் எண்ணிக்கையை கூட பெருமளவில் குறைத்து, 'நியமித்து-நீக்கும்' நடைமுறைகளை வெகுவாக விரிவுபடுத்துகின்றன.

ஐஆர்சி, வேலைநிறுத்த உரிமைக்கு நேரடித் தாக்குதலாகவும் அமைகிறது. முந்தைய தொழில்துறை முரண்பாடுகள் சட்டம்-1947இன் கீழ், வேலைநிறுத்தத் தடைகள் முக்கியமாகப் பொதுப் பயன்பாட்டுச் சேவைகளுக்குப் பொருந்தின. புதிய சட்டமானது இந்தத் தடைகளை ஏறக்குறைய அனைத்துத் தொழில்துறை நிறுவனங்களுக்கும் நீட்டித்து, தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்பு பல நடைமுறைத் தடைகளை அறிமுகப்படுத்துகிறது.

இப்போது தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு 60 நாட்கள் முன்னதாக முன்னறிவிக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு, சமரசம், தீர்ப்பாயம் அல்லது நடுவர் நடவடிக்கைகளின் போதும், அதன் பின்னர் பல வாரங்களுக்கும் அவர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது. தொழில் கொடுப்போரோ அல்லது அரசோ அத்தகைய நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்பதால், வேலைநிறுத்தங்கள் காலவரையின்றி தாமதப்படுத்தப்படலாம் அல்லது விளைவுகளுடன் தடைசெய்யப்படலாம். இந்த நிபந்தனைகளை மீறும் எந்தவொரு வேலைநிறுத்தமும் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்வாறு, இந்தச் சட்டம் 'தொழில்துறை அமைதி' மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை என்ற பெயரில் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் குற்றமாக்கி, சுதந்திரமான தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளை அடக்கி, முதலாளிகளின் மற்றும் அரசாங்கத்தின் கைகளை வலுப்படுத்துகிறது.

சமூகப் பாதுகாப்புச் சட்டம் -2020 ஆனது, ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் மற்றும் ஊழியர் மாநிலக் காப்பீட்டுச் சட்டம் உட்பட ஏற்கனவே உள்ள ஒன்பது சட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இது பெயரளவில் ஒழுங்கமைக்கப்படாத, தற்காலிக மற்றும் இணையவழி விநியோக-சேவை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்தினாலும், இந்த அங்கீகாரம் வேண்டுமென்றே வெற்றுத்தனமானது. தற்காலிக மற்றும் இணையவழி விநியோக-சேவை ஊழியர்களுக்கு வெளிப்படையாகவே தொழிலாளர் என்ற தகுதி கொடுக்க மறுக்கப்படுவதனால், சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதற்கான கடமைகளிலிருந்து ஊபர், ஓலா, ஸ்விக்கி மற்றும் ஜோமாட்டோ போன்ற பெருநிறுவனங்களை விடுவிக்கின்றது.

அமுல்படுத்தக்கூடிய உரிமைகளுக்குப் பதிலாக, இந்த சட்டமானது நிறுவனங்களின் விற்பனைப் புழக்கத்தின் மீது ஒரு மிதமான வரி விதிப்பின் மூலம் நிதியளிக்கப்படும், ஒரு விருப்பத்தேர்வு நலத்திட்ட கட்டமைப்பை நிறுவுகிறது. சமூகப் பாதுகாப்பிற்கான பொறுப்பை முதலாளிகளிடமிருந்து மாநில அரசிற்கு மாற்றி, வேகமாக விரிவடைந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் இணையவழி விநியோக-சேவை பொருளாதாரத்தில் தொழிலாளர்களுக்கு தொழில் நிரந்தரமின்மையை ஸ்தாபிக்கின்றது.

சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டிட மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) சட்டத்தை ரத்து செய்வதானது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பேரழிவுத் தாக்கங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது. 11 வருடப் போராட்டத்திற்குப் பிறகு வென்றெடுக்கப்பட்ட கட்டிட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) சட்டமானது ஓய்வூதியங்கள், மகப்பேறு நலன்கள், கல்வி உதவித்தொகைகள், கடன்கள் மற்றும் செஸ் வரி (அல்லது விசேட தேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட வரி) மூலம் நிதியளிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வழங்குகிறது. அதை ரத்து செய்வதானது சுமார் 4 கோடி தொழிலாளர்களின் பதிவுகளை செல்லாததாக்கி, 36 மாநில நல வாரியங்களைக் கலைத்து விடுவதோடு, பலரால் செலுத்த முடியாத பங்களிப்பு நிபந்தனைகளை திணித்து, ஏனைய ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களுடன் புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் பதிவு செய்ய தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 142, பதிவுக்காக ஆதார் (தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை) அட்டையை கட்டாயமாக்குவதன் மூலம், ஆவணப் பற்றாக்குறை மற்றும் டிஜிட்டல் வசதியின்மையையும் எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்த மற்றும் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களுக்குத் தடங்கல்களை உருவாக்கி, மில்லியன் கணக்கானவர்களை மேலும் விலக்கி வைக்கிறது. சமூகப் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் விருப்பத்திற்கும் அரசியல் முன்னுரிமைகளுக்கும் உட்பட்ட நிபந்தனை நலத்திட்டமாகக் குறைக்கின்றது.

தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் -2020 ஆனது, தொழிற்சாலைகள் சட்டம் 1948 இன் கீழ் நிறுவப்பட்ட பாதுகாப்புகளுக்கு நேரடித் தாக்குதலாக அமைந்துள்ளது. மின்சார இயந்திரங்கள் உள்ள அலகுகளில் பாதுகாப்புகளைப் பெறுவதற்கு இருக்கவேண்டிய குறைந்தபட்ச தொழிலாளர்களின் எண்ணிக்கை வரம்புகளை 10 இலிருந்து 20 ஆகவும், மின்சாரம் இல்லாத நிறுவனங்களில் 20 இலிருந்து 40 ஆகவும் இரட்டிப்பாக்குவதன் மூலம், இந்தச் சட்டம் சட்டப்பூர்வமாக அமல்படுத்த வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளிலிருந்து மில்லியன் கணக்கானவர்களை விலக்குகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் பாதுகாப்பு விதிகளும், உரிமம் பெறுவதற்கான வரம்பை 20 தொழிலாளர்களிலிருந்து 50 தொழிலாளர்களாக உயர்த்துவதன் மூலம் அதேபோல் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. மேற்பார்வையைக் கடுமையாகக் குறைத்து, ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் முறையை ஊக்குவித்து, பணியிட அபாயங்களை முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களுக்கு மாற்றுகிறது.

இந்தச் சட்டம் பெயரளவில் எட்டு மணிநேர வேலை நாளைத் தக்கவைத்துக் கொண்டாலும், 12 மணி நேரம் வரை வேலை நேரங்களையும், ஒரு காலாண்டிற்கு 125 மணி நேரம் கூடுதல் நேர வேலையையும் அனுமதிக்கிறது. தற்காலிக மற்றும் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்கள், சட்டப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதோடு, நிச்சயமற்ற நலத்திட்டங்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 40 கோடி வலுவான தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் சட்டப்பூர்வ பாதுகாப்புகளிலிருந்து விலக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்படாத துறையில் இணைக்கப்படுவதுடன், ஊதியம் முதலாளியின் விருப்பப்படி நிர்ணயிக்கப்படுவதுடன் வேலை நேரத்திற்கு சட்டப்பூர்வ அளவுகள் அல்லது வரம்புகள் எதுவும் இல்லை. இந்தத் தாக்குதல்கள் கோடிக்கணக்கான மக்களைப் பெரும் துயரத்திற்குள் தள்ள அச்சுறுத்துகின்றன.

Loading