தொழிலாள வர்க்க நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புங்கள்!
பிஜேபி, காங்கிரஸ், திமுக முதல் ஸ்டாலினிஸ்ட் சிபிஎம் வரையிலான இந்திய முதலாளித்துவத்திற்கும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான ஒரு மாபெரும் எதிர்த்தாக்குதலில் கிராமப்புற உழைப்பாளிகளையும் அணிதிரட்டுங்கள்!
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) தொழில்கள், ஊதியங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் இடைவிடாத தாக்குதலுக்கும் பிரதானமாக முதலீட்டாளர்-சார்பு தொழிலாளர் சட்ட “மறுசீரமைப்புகளுக்கும்” எதிராக இன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களுக்கு தனது சகோதரத்துவ ஒருமைப்பாட்டை தெரிவித்துக்கொள்கின்றது.
இந்தியத் தொழிலாளர்கள் தனிமையில் இல்லை. உங்கள் போராட்டம் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களால் நீண்டகாலமாக அடக்கபட்டு வந்த, பரந்தளவில் எழுச்சிபெறும் உலகலாவிய வர்க்கப் போராட்டங்களின் ஒரு பாகம் ஆகும்.
பல தசாப்தங்களில் தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய மறுசீரமைப்பு என பெருநிறுவன உயரடுக்கினரால் பாராட்டப்பட்ட ஊதியம்(2019), தொழிற்துறை உறவுகள்(2020), சமூகப் பாதுகாப்பு (2020) மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் (2020) ஆகிய நான்கு புதிய சட்டங்களும், 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றீடாக வந்துள்ளன. பல தலைமுறைகளாக முன்னெடுக்கப்பட்ட கசப்பான போராட்டங்கள் ஊடாக பெறப்பட்ட குறைந்தபட்ச ஊதியங்கள், வேலைத்தள தரங்கள் மற்றும் விதிமுறைசார்ந்த மற்றும் விதிமுறைசாரா துறைகள் முழுவதிலும் கூட்டுப் பேரம்பேசுதல் உட்பட உரிமைகளும் இரக்கமின்றி கலைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மோடியின் “மறுசீரமைப்பு” எனப்படுபவை, முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்து, ஒழுங்கமைந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு இருக்கின்ற தொழிலாளர்களின் இயலுமையை தாக்கி வேலைநிறுத்தம் செய்யவதற்கான அடிப்படை உரிமையை குற்றமாக்குகின்றன.
மோடி அரசாங்கம் மிகச் சிறிய முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களுக்குச் சேவை செய்கின்றது. இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள், “வணிகம் செய்வதை இலகுவாக்க” உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் தொழிலாளர் படையை சுரண்டுவதற்கு முழு சுதந்திரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மறுபக்கம், அரசாங்கம் பெருநிறுவன வரிகளைக் குறைத்து, விவசாய வணிக-சார்பு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அரசாங்கம் இந்தச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு சகல மாநிலங்களுக்கும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள், பாஜக ஆளும் உத்தர பிரதேஷ், மத்தியப் பிரதேஷ் மற்றும் குஜராத், அதே போன்று எதிர்க் கட்சிகள் ஆளும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உட்டபட குறைந்தபட்சம் 17 மாநிலங்கள் அவற்றை அமுல்படுத்துவதை நோக்கி பாரிய நகர்வுகளை ஏற்கனவே எடுத்துள்ளன.
மோடி அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான இராணுவ மூலோபாய தாக்குதலின் ஒரு முக்கிய தூணாக இந்தியாவை நிலைநிறுத்த தீர்மானித்துள்ள ஆளும் வர்க்கத்தின் பூகோள இலட்சியங்களை முன்நகர்த்துவதற்கு, இந்தியத் தொழிலாள வர்க்கத்தை தியாகம் செய்யக் கோருகின்றது. இதை அடைவதற்கு, முதலாளித்துவ வர்க்கம் சுரண்டலைத் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கின்ற அதேவேளை, இராணுவத்துக்காக பாரிய வளங்களை திசைதிருப்புகின்றது. கோடிக் கணக்கானவர்களுக்கு தீர்க்கமான உயிர்நாடியாக இருந்த மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை அகற்றுவதானது வறிய கிராமப்புற வெகுஜனங்கள் மீதான ஒரு பாரிய தாக்குதலை குறிக்கின்றது. இந்த முன்னுரிமைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற பெப்ரவரி 1 முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம், இராணுவ செலவீனங்களை 15 சதவீதத்தல் அதிகரிக்கும் அதேவேளை சமூகச் செலவீனங்களை வெட்டித்தள்ளுகின்றது. இராணுவமயமாக்கத்துக்கும் போருக்கும் தாயாராகும் அதேவேளை, தொழிலாளர்களின் இழப்பில் மூலதனத்தை வளப்படுத்துவதே அதன் இலக்கு என்பது தெளிவாகிறது.
காங்கிரஸ்-ஸ்டாலினிச முதலாளித்துவக் கட்சிகளும் அதனுடன் இணைந்த தொழிற்சங்களும்
மோடியையும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவ தன்னலக்குழுக்கள், இந்து மேலாதிக்கவாதம், சர்வதிகாரம் மற்றும் இராணுவவாதத்தையும் தோற்கடிக்க, தொழிலாளர்களுக்கு அடிப்படையில் வேறுபட்ட ஒரு மூலோபாயம் அவசியம் என்பதை இன்று வீதிகளுக்கு வரும் தொழிலளார்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மூலோபாயம், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு, “முதலீட்டாளர்-சார்பு மறுசீரமைப்பு” மற்றும் அமெரிக்கா உடனான இந்திய முதலாளித்துவத்தின் சீன-விரோத கூட்டணியையும் முழுமையாக ஆதரிக்கும் பெருவணிக காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற ஏனைய வலது-சாரி முதலாளித்துவக் கட்சிகளுக்கு தொழிலாள வரக்கத்தை அடிபணிய வைக்கும் சகல முயற்சிகைளையும் நிராகரிக்க வேண்டும்.
ஸ்ராலினிஸ சிபிஎம் மற்றும் சிபிஐ உடன் இணைந்துள்ள CITU மற்றும் AITUC மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பு INTUC மற்றும் ஏனைய கூட்டமைப்புகள் அடங்கிய மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை இன்றைய வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது. இந்த முதலாளித்துவ அமைப்புகள், உண்மையான ஒவ்வொரு போராட்டத்தையும் திட்டமிட்டு முட்டுச் சந்துக்குள் தள்ளும் அதேவேளை, தொழிலாளர்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்கின்றன. அவை, எதிர்ப்புகளை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாள் போராட்டங்களுக்குள் மட்டுப்படுத்தி, பின்னர் தாக்குதலை செயல்படுத்தும் அதே அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கின்றன. 2025 மே மாதம், மோடியின் பாகிஸ்தான் விரோப் போர் வெறிக்கு மத்தியில், வர்க்கப் போராட்டத்தை விட தேசிய ஒற்றுமைக்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள ”தேசப்பற்றுள்ள குடிமக்கள்” என தம்மை அறிவித்துக் கொண்ட இந்த தொழிற்சங்கங்கள், திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தத்தை திடிரென இரத்து செய்தன.
ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்கங்களும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் பெப்ரவரி 12 வேலை நிறுத்தத்தை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா எதிர்ப்பு கூட்டணியின் கீழ் அடிபணிய வைக்க முயற்சிக்கின்றன. அவை காங்கிரசை மோடிக்கான ஒரு ”ஜனநாயக மாற்றீடாக” முன்வைக்கின்றன. இது ஒரு அரசியல் மோசடி ஆகும்.
இந்தியாவில் முதலீட்டாளர் சார்பு “மறுசீரமைப்புகளின்” பிரதான வடிவமைப்பாளர்களில் ஒன்றாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகின்றது. இது 1990களில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் கட்டுபாடு நீக்கத்தைத் தொடங்கியதுடன் இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்தின் நலன்களை உறுதியாகப் பாதுகாத்தது. இன்று, காங்கிரஸ்-தலைமயிலான மாநில அரசாங்கங்கள், தாம் பகிரங்கமாகக் கண்டிக்கும் அதே தொழிலாளர் சட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்திவருகின்றன.
இந்தச் சட்டத்திற்கு எதிராக அதனுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் வெற்று சுலோகங்களை எழுப்பும் அதேவேளை, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், பாஜகயின் தொழிலாளர் சட்டங்களை ஏற்னவே செயல்படுத்திவருகின்றன. இது நாடாளுமன்ற எதிர்க்கட்சியும் தொழிற்சங்க எந்திரமும் வேலையை பங்குபோட்டுக்கொண்டுள்ளதை அம்பலப்படுத்துகின்றது. ஒரு புறம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர்களாக பாசாங்கு செய்கிறார்கள்.
காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள, பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இன-வகுப்புவாத கட்சியான தமிழ் நாட்டை ஆளும் திமுக, இந்த தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்துவதை நோக்கி குறிப்பிடத்தக்களவு முன்நகர்ந்துள்ளது. இந்தியா முழுவதிலும், மாநில அரசாங்கத்தை பாஜகவோ அல்லது காங்கிரஸோ வழிநடத்தினாலும், அதன் விளைவு ஒன்றுதான்: அது தொழிலாளர் சட்ட “மறுசீரமைப்பு”, தனியார்மயமாக்கம், வேலைநிறுத்தங்களை அடக்குதல் மற்றும் சுரண்டலை உக்கிரமாக்குதல் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ(எம்) கட்சியின் பங்கு குறிப்பாக பிற்போக்கானது. அது அரசியல் ஆதரவுக்காக தேர்தல் கூட்டணிகள் மற்றும் பிரச்சார வளங்களை வர்த்தகம் செய்து ஆளும் திமுகவை ஆதரிக்கிறது. திமுக, பாஜகவின் தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர் எதிர்ப்பை அடக்கினாலும், பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சாக்குப்போக்கின் கீழ் சிபிஎம்-சிஐடியு எந்திரம் திமுக உடன் ஒத்துழைக்கிறது. இந்த தேசியவாத ஏமாற்று வேலை, தொழிலாளர்களை இனவாத மற்றும் பிராந்திய வழிகளில் பிரிக்கும் அதேநேரம், அதீத சுரண்டலின் மீது கட்டமைக்கப்பட்ட பெருநிறுவனங்களால் உந்தப்படும் தொழில்துறை விரிவாக்கத்தை எளிதாக்குகிறது.
பல தசாப்தங்களாக, சி.எம்.ஐ.(எம்) உட்பட ஸ்ராலினிசக் கட்சிகள், மோடியின் இந்து மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் சாக்கில், காங்கிரஸ் கட்சியை பாஜகவிற்கு ஒரு 'மதச்சார்பற்ற' மாற்றீடாக சித்தரித்து முட்டுக் கொடுத்து வருகின்றன. அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம், சமூக சமத்துவமின்மை, இனவாத பிளவுகள் மற்றும் சந்தை சார்பு 'மறுசீரமைப்புகளுக்கு' பொறுப்பான அதே முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு பிரிவுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்துள்ளனர்.
இந்து மேலாதிக்கவாதத்தையும் அதை விதைக்கும் முதலாளித்துவ அமைப்பையும் தோற்கடிக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலைத் தடுப்பதன் மூலம், அவர்கள் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியுள்ளனர். இது பாஜக மற்றும் இந்து வகுப்புவாத சக்திகள் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தவும் அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளவும் உதவியது. சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே, வகுப்புவாத பிற்போக்கையும் முதலாளித்துவ சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள்
மோடி அரசாங்கத்தின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு நாள் வேலைநிறுத்தம் / போராட்டத்துடன் மட்டுப்படுத்தக்கூடாது. தொழிலாள வர்க்கம் அவசரமாக முன்முயற்சி எடுத்து, அதன் கோபத்தை சுயாதீனமான அரசியல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும்.
இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து தீர்க்கமாக முறித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு தொழிற்சாலை, அலுவலகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் சுற்றுப்புறத்திலும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்தும் சுயாதீனமான, தொழிலாளர்கள் தங்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் குழுக்கள் தொழிற்சாலைகள், மாநிலங்கள் மற்றும் வகுப்புவாத பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைந்து, நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்த வேண்டும்.
அத்தகைய குழுக்களாலேயே உண்மையான வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், காட்டிக்கொடுப்புகளைத் தடுக்கவும், பெருநிறுவன இலாபத்தை அன்றி தொழிலாளர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை வகுக்கவும் முடியும். தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராடும் துப்புரவுத் தொழிலாளர்களையும் பணிநீக்கங்களை எதிர்க்கும் தொழில்துறை தொழிலாளர்களையும், பசி மற்றும் வறுமையை எதிர்கொள்ளும் கிராமப்புற தொழிலாளர்களையும் அவற்றால் ஒன்றிணைக்க முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, போராட்டம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டம் மோடியின் கொள்கைகளுக்கு எதிராக மட்டுமன்றி, அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரானதாகும். தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வேலைகள், பணவீக்கத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட வாழ்க்கைக்கேற்ற ஊதியம், வேலைநிறுத்தம் செய்யும் உரிமை வேண்டும், தனியார்மயமாக்கலை நிறுத்துவதோடு இராணுவ செலவினங்களை சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கோர வேண்டும். பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பொது உடைமையின் கீழும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழும் வைக்கப்பட வேண்டும்.
சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் இந்திய தொழிலாள வர்க்கம் தெற்காசியா மற்றும் உலகளவில் உள்ள தொழிலாளர்களுடன் கைகோர்க்க வேண்டும். இந்திய தொழிலாளர்களை சுரண்டும் அதே உலகளாவிய நிறுவனங்களே எல்லா இடங்களிலும் தொழிலாளர்களை சுரண்டுகின்றன. வெளிப்புற போட்டியாளர்களுக்கு எதிராக போருக்குத் தயாராகும் அதே அரசாங்கங்களே தங்கள் சொந்த உழைக்கும் மக்கள் மீது போரை நடத்துகின்றன.
சுயாதீனமான சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதானது ஜனநாயக உரிமைகள், சமூக சமத்துவம் மற்றும் உண்மையான சுதந்திரமும் சோசலிச மாற்றத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்ற புரிதலைத் தரும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், புரட்சிகரத் தலைமையை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும்.
ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக, அதாவது இந்தியாவில் ICFI இன் ஒரு பகுதியைக் கட்டியெழுப்புவதற்காகப் போராடுகிறது. இந்தியாவில் உள்ள தொழிலாளர்களை அந்தப் போராட்டத்தில் அனைத்துலகக் குழு / சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்த தினசரி மார்க்சிய அரசியல் பகுப்பாய்வை வழங்கும் உலக சோசலிச வலைத் தளத்துக்குள் (wsws.org) பிரவேசித்து வாசிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
தொடர்புகளுக்கு:E-mail: wswscmb@sltnet.lkWhatsApp: +94773562327
மேலும் படிக்க
- இந்தியாவின் தொழிலாளர் சட்ட "மறுசீரமைப்பு": தொழிலாளர் உரிமைகள் மீதான ஒரு கொடூரமான தாக்குதல்
- தனியார்மயமாக்கலுக்கு எதிரான சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு தமிழகத்தின் திமுக அரசு பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்துகிறது
- தமிழ்நாட்டில் MRF டயர் தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் திடீரென முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது
