பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான கடுமையான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்டு, ஏகாதிபத்திய சார்பு இலங்கை ஆளும் உயரடுக்கிற்கு எதிராகப் போராடி பல தசாப்தங்களாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் இலவச பொது சுகாதார சேவை, இப்போது முற்றிலுமாக அகற்றப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பல தசாப்தங்களாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நிதி வெட்டுக்கள் மற்றும் இலாப வெறி கொண்ட தனியார் நலன்களுக்கு சுகாதார சேவையைத் திறந்து விட்ட பின்னர், தற்போதையை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்தி, இந்த இன்றியமையாத சமூக உரிமையில் எஞ்சியிருப்பதை அழிக்க முயற்சிக்கிறது.
ஜனவரி 23 முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கிய மருத்துவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் முழுமையாக நிராகரித்திருப்பதன் மூலம், இலவச பொது சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவை முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுப்பது மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலமே அரசாங்கம் பிரதிபலித்துள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அற்ப சம்பள உயர்வுகளை இழிவான முறையில் மேற்கோள் காட்டியும், டிட்வா சூறாவளி பொருளாதார நெருக்கடியை மோசமாக்கியுள்ளதாக கூறியும், சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளுக்கான மருத்துவர்களின் பல கோரிக்கைகள் நியாயமானவையாக உள்ள அதேநேரம், அவை, பொது சுகாதார அமைப்பின் மீதான பரந்த தாக்குதலின் பாகமாகும்.
சுகாதார சேவைகளை தனியார்மயமாக்குவதை நோக்கிய ஒரு தீர்க்கமான அடியெடுப்பைக் குறிக்கும வகையில், அமைச்சரவையானது பெப்ரவரி 6 அன்று, அரச மருத்துவமனைகளில் 'பெற்றுக்கொள்ள முடியாதது' என்று கருதப்படும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை பொது-தனியார் கூட்டாண்மை (PPPs) என்று அழைக்கப்படுவதன் மூலம் கொள்வனவு செய்வதற்கான சுகாதார அமைச்சரின் முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தது. இந்த முடிவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை சட்டப்பூர்வமாக்குகிறது: நோயாளிகள் -பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள்- தனியார் ஆய்வகங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தங்கள் சொந்த செலவில் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்கையின் கீழ், முறையான விரிவான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் திட்டமிட்டுக் கைவிடுகிறது. மருத்துவர்கள், அரச மருத்துவமனைகளில் இருந்து ஏழை நோயாளிகளை தனியார்துறைக்கு பரிந்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, வெகுஜனங்களின் நலன்கள் தனியார் இலாபங்களுக்கு அடிபணியச் செய்யப்படுகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக பிரச்சாரம் செய்யும் மருத்துவர்களை மட்டுமன்றி, அனைத்து அரச ஊழியர்களையும் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். பெப்ரவரி 6 அன்று கண்டியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், 'போராட்டங்கள் அல்லது தெரு ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும்', 'பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் வரை' தனது அரசாங்கம் சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்காது என்று அறிவித்தார். இது வலதுசாரி ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வர்க்கப் போரை அறிவிப்பதாகும்.
அவரது அரசாங்கம், வறுமையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்றி, மாறாக பெரிய வணிகர்கள் மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குபவர்களுக்காகவே 'பொருளாதாரத்தை மீட்டெடுக்க' முன்னுரிமை கொடுக்கின்றது.
3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பு கடனுக்காக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளால் அரசாங்க செலவினம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை, திசாநாயக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அரச செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன், 4 சதவீதம் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச சுகாதார அமைப்பு சரிவின் விளிம்பில் உள்ளது
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை ஊழியர்களின் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் முடங்கியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இலங்கையில் 10,000 பேருக்கு 37 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவிச்சிகள் மட்டுமே உள்ளனர். இது, பரிந்துரைக்கப்பட்டுள்ள 44.5 ஐ விட மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும். எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்கள் தொடர்ந்து பழுதடைகின்றன. மருந்து பற்றாக்குறை பரவலாக உள்ளது. உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் வரை, சுமார் 5,000 இதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். சிலர் நான்கு ஆண்டுகள் வரை காத்திருந்தனர் - பலர் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். ஊழியர்கள், உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்கள், பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இது ஒரு 'இயற்கை' நெருக்கடி அல்ல; இது வேண்டுமென்றே பின்பற்றப்படும் கொள்கையின் விளைவாகும். கடந்த சில தசாப்தங்களைப் போலவே, 2026 ஆம் ஆண்டிற்கான சுகாதாரத்திற்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதமாகும். சுகாதாரச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும். 1.6 சதவீத ஒதுக்கீடானது உயிர்வாழ சற்றே மூச்சுவிடுவது போன்றது.
போராடும் மருத்துவர்கள், நோயாளிகளை 'பணயக்கைதிகளாக' வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. சுகாதார ஊழியர்கள் -அல்லது வேறு எந்தப் பிரிவு தொழிலாளர்களும்- தொழில்துறை போராட்டத்தைத் தொடங்கும் போதெல்லாம் இந்தக் குற்றச்சாட்டு வழக்கமாகச் சுமத்தப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களின் சார்பாகச் செயல்படும் அரசாங்கம், நோயாளிகளை மட்டுமன்றி, முழு தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற ஏழைகளையும் பணயக்கைதிகளாக வைத்துள்ளது.
ஊதிய உயர்வு அல்லது நலத்திட்டங்களுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறும் அரசாங்கம், சமீபத்திய ஆண்டுகளில் டிரில்லியன் கணக்கான ரூபாய் வருவாயை வசூலிப்பதாக பெருமை பேசுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகரிக்கச் செய்த, பாரிய வரி உயர்வுகள் மூலம் இந்த வருவாய் பெருமளவில் திரட்டப்பட்டுள்ளது.
இந்த வருவாய் யாருக்காக குவிக்கப்படுகிறது?
பாதீட்டின் கடன் சேவை புள்ளிவிவரங்கள் உண்மையான முன்னுரிமைகளை வெளிப்படுத்துகின்றன. இலங்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் முறையே 1.7 பில்லியன் மற்றும் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கடன் சேவையில் செலுத்தியுள்ளதுடன், 2026 இல் 2.8 பில்லியன் டொலர்களை செலுத்த உள்ளது. இந்தப் பிரமாண்டத் தொகைகள் சிக்கன வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கல் மூலமே உறிஞ்சப்படுகின்றன.
அரசாங்கம் நலன்புரி செலவினங்களை -குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை- குறைத்து வருகின்ற அதேநேரம், பெரிய வணிகங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குதல், சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுதல், முதலீட்டு ஊக்கத்தொகைகளை வழங்குதல் ஆகியவற்றைத் தொடர்கிறது.
கீல்ஸ், ஹேலிஸ், ரிச்சர்ட் பீரிஸ், எல்.ஒ.எல்.சி. மற்றும் வங்கித்துறை போன்ற பெரிய நிறுவனங்களின் உயர்ந்து வரும் இலாபத்தை தினசரி ஊடக அறிக்கைகள் கொண்டாடுகின்றன. இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் 2024–2025 நிதியாண்டில் 751,627 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகமாகும்.
இலவச பொது சுகாதார சேவையை பாதுகாப்பது எப்படி?
இந்த அத்தியாவசிய உரிமையைப் பாதுகாப்பது பொதுமக்களின் வாழ்வா சாவா பிரச்சினை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். முதலாளித்துவ சார்பு அதிகாரத்துவத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் தொழிற்சங்கங்களின் கட்டமைப்பிற்குள் இதைச் செய்ய முடியாது.
வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர், பெப்ரவரி 6 அன்று ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டு, 'இலவச சுகாதார சேவை மற்றும் மருத்துவமனை அமைப்பைப் பாதுகாக்க... தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாக' அறிவித்தார்.
இந்த தொழிற்சங்கம், ஏனைய மருத்துவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஏனைய சுகாதார ஊழியர்களின் பக்கம் திரும்புகின்ற அல்லது பரவலான வர்க்க நடவடிக்கையை ஏற்பாடு செய்கின்ற எந்த அறிகுறியும் தெரியவில்லை. சமீபத்திய ஆண்டுகளில், விலையுயர்ந்த மருந்துகள் மற்றும் பரிசோதனைகளை வெளியில் பெற பரிந்துரைக்கும் அரசாங்கத்தின் பரிந்துரைகளை அரசாங்க மருத்துவ அதிகரிகள் சங்கத் தலைவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மருத்துவ சேவையை தனியாக யாப்புமயப்படுத்த, அதாவது, அதை ஒரு பிரத்தியேக சேவையாக மாற்றுவதற்கான கோரிக்கையை அரசாங்க மருத்துவ அதிகரிகள் சங்கம் எழுப்பியுள்ளது. இத்தகைய பிளவுவாத கோரிக்கைகளை அல்லது வர்க்க அடிப்படையிலான பிரிவுகளை சுகாதார ஊழியர் நடவடிக்கை குழு ஆதரிக்கவில்லை. தேவைப்படுவது சுகாதார ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஆகும்.
ஜனவரி 29 அன்று சுகாதார தொழிலறிஞர்கள் கூட்டமைப்பு (HPF), அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை இலவச சுகாதார சேவை சங்கம் மற்றும் அரசு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர்களைச் சந்தித்தன.
கூட்டத்திற்குப் பிறகு, சுகாதார தொழிலறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் ரவி குமுதேஷ், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை ஆதரிப்பது மற்றும் இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது குறித்து கலந்துரையாடியதாக கூறினார். இதுபோன்ற அறிக்கைகள் ஒரு தந்திரம் ஆகும். இந்தத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அரசாங்கங்களின் கட்டளைகளைப் பின்பற்றியுள்ளனர் என்பதை கடந்த கால அனுபவம் காட்டுகின்றது. இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கின்றனர்.
இந்தத் தலைவர்கள், உறுப்பினர்களிடையே கோபம் அதிகரிக்கும் போது, ஜனநாயக ரீதியான கலந்துரையாடல் இன்றி மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு பொது உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் திடீரென அவற்றை நிறுத்துகிறார்கள். சுகாதாரத் தொழிலாளர்கள் தாங்களாகவே முன்முயற்சி எடுத்து, தொழிற்சங்கத் தலைவர்களால் முட்டுச்சந்தில் தள்ளப்படுவதை நிராகரிக்க வேண்டும்.
சுகாதார ஊழியர்கள் நடவடிக்கைக் குழுவானது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையையும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கக் கொள்கைகள் மற்றும் முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடாமல், இலவச பொது சுகாதாரப் பராமரிப்பைப் பாதுகாக்க முடியாது என்று வலியுறுத்துகிறது.
அனைத்து பொது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுப்பதோடு தனியார் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களையும் அத்தகைய குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இலவச பொது சுகாதாரப் பராமரிப்பைப் பாதுகாக்க, இந்தக் குழுக்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஆதரவை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.
நவீன, முழு நிர்வாகக் கட்டமைப்புடனான, உயர்தர பொது சுகாதார அமைப்புக்கு நிதியளிக்க பணம் உள்ளது.
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்து! இந்த மகத்தான நிதி வளங்களை சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத் திட்டங்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கு!
சுகாதாரப் பராமரிப்பை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் அனைத்து தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கு!
முதலாளித்துவத்தின் கீழ் இந்தக் கோரிக்கைகள் எதையும் அடைய முடியாது. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டம் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராக, சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் போராட்டத்தை எங்கள் நடவடிக்கைக் குழு ஆதரிக்கின்றது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து, பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய அறிவு மற்றும் வளங்களைக் கொண்டு, சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டியது அவசியமாகும். இலங்கையின் நடவடிக்கைக் குழுக்கள் சர்வதேச தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பில் இணைந்து முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடும் ஒரு உலகளாவிய தொழிலாளர் மையத்தைக் கட்டியெழுப்புவதை ஆதரிக்க வேண்டும்.
மேலும் படிக்க
- பகிரங்க நிகழ்நிலை கூட்டம்: இலங்கை மருத்துவர்களின் எதிர்ப்பும் இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்கான போராட்டமும்
- அரச மருத்துவ அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்! இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க சுகாதார ஊழியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!
- நோயாளிகள் மருந்தை கொள்வனவுசெய்ய நிர்ப்பந்திக்கும் இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைகள் பொது சுகாதார சேவைகளுக்கு ஒரு மரண அடி
